தமிழர் தெய்வம் - சிவன் யார்?

தமிழர் பண்பாட்டில் தொல்காப்பியம் முதல் அனைத்து மறைநூல்களும் கடவுள் என்னும் கருப்பொருளை பேசாமல் இருந்ததில்லை. தமிழுலகில் இறுதியில் வந்த சைவ சமயம், "சிவன்" என்கிற பெயரில் இறைவனை குறிப்பிட்டது. சைவ சமய மறைநூல்கள் கூறும் சிவன் யார்? இன்று நாம் கருதும் சிவன் யார்? என்று இந்த கட்டுரையில் பார்ப்போம். 

சிவன் என்று கருதும் பொழுது, அவன் 
  • பார்வதியின் கணவன் 
  • முருகன் & கணேசனின் அப்பன் 
  • பிரம்மா, விஷ்ணுவின் உறவினன் 
  • சுடுகாட்டில் நடனமாடுபவன் - ஆதி பறையன் 
  • கறுப்பானவன், நீலமானவன் 
  • ஆதி யோகி
  • சித்தர் அல்லது தீர்க்கதரிசி 
  • ஆஜானுபாகுவான உருவம் கொண்டவன் 
  • லிங்கம் அவனது  குறியீடு 
  • அவன் அழிக்கும் வேலையை மட்டும் செய்பவன் 

போன்ற ஆதாரமற்ற பல கருத்துருவாக்கங்கள் திருமந்திர உரைகள், புராணங்கள், சிலைகள், நாவல்கள், நாடகங்கள் திரைப்படங்கள், இசைப் பாடல்கள் போன்ற ஊடகங்கள் மூலம் நமது அறிவில் திணிக்கப்பட்டுள்ளது 

ஆனால் கடவுளை பற்றி கடவுளே சொன்ன நூல்கள் மறைநூல்கள் ஆகும், அதில் ஒன்றான திருமந்திரம், சிவனின் வரைவிலக்கணமாக கூறுவது,
  • சிவன் தனித்தவன் - ஈடு இணையற்றவன் 
  • மனிதனல்ல, ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல 
  • யாரும் படைக்காமல், உருவாக்காமல், பெற்றெடுக்காமல், தானாய் உள்ளவன்  
  • அநாதி - மனைவி மக்கள் உறவினர் கிடையாது 
  • தனக்கே உரிய உருவுடன் வானத்தில் உள்ளான் 
  • உலகில் யாரும் கண்டதில்லை, அவனை கற்பனை செய்யவும் வரையறுக்கவும் முடியாது 
  • லிங்கத்திலும் கோயிலிலும் இல்லை 
  • அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டுள்ளான்  
  • ஆதியும் அந்தமும் அற்றவன், படைப்புகளின் ஆதியும் அந்தமுமாய் இருப்பவன் 
  • பிறப்புமில்லை இறப்புமில்லை 
  • அவனே படைத்தவன், காப்பவன், அழிப்பவன் (முத்தொழில் செய்வோன்)

சிவன் ஒருவனே கடவுள்  


ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

சிவன் ஈடு இணையற்றவன்


சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

அவன் தானாக தோன்றியவன்


ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1) 
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பொருள்: அவன் தானாக உருவான ஒருவன்

ஆதியும் அந்தமும் 

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

 பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை  

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான்


ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1) 
 
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான். 

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது 

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ 
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915) 
 
பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன். 

பதவுரைபுரை - ஒத்திரு, போன்றிரு; திரை - அலை; புரி - மிகுந்திரு; சடை - படர்ந்த, விரிந்த; 

குறிப்பு: உரையே செய்ய முடியாத பொழுது வரைந்தும் செதுக்கியும் சிவனுக்கு உருவம் கொடுத்தவரின் நிலையை சிந்தித்தால் பரிதாபமாக உள்ளது. அதைவிட பரிதாபத்துக்கு உரியவர்கள் சிவனை புராணக் கதைகளில் திணித்து அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத கதாபாத்திரத்தையும் குணங்களையும் கற்பனை செய்ததுடன் அதுதான் உண்மை சிவன் என்று மக்கள் மத்தியில் நிலைபெறச் செய்தவர்கள். 

சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல


பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

குறிப்பு: ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்பதே அவன் தாய் தந்தை, மனைவி, மக்களை பெறாதவன் என்பதற்கு போதுமானதல்லவா?

சிவனே முத்தொழிலையும் செய்பவன்


நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

பொருள்: நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு இறைவன் ஏற்பாடு அல்ல.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே.

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
 - சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற 
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள் - ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்   
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று - நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று 
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே 

பதவுரை: சோதித்த பேரொளி - படைத்து காத்து அழித்து சோதிக்கும் பேரொளியான தெய்வம்; கண் - அருள், பெருமை, ஆதர்கள் - அறிவில்லாதவர்கள்; பேதி - பிரி;  

பொழிப்புரை: சோதித்த பேரொளி மூன்று ஐந்து என கூறும் அறிவில்லாதவர்கள் ஆதி நாதன் அருளை அறிவதில்லை, நீதி செய்பவன் சிவன், பெருமாள், பிரம்மன் என்று பிரித்து உளறிக் கொண்டு உள்ளனர்.  

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14) 

குறிப்பு: சிவன் அழிக்கும் தெய்வம், பிரம்மன் படைக்கும் தெய்வம், விஷ்ணு காக்கும் தெய்வம் என்ற முக்கடவுள் கொள்கையை இப்பாடல்கள் மறுக்கிறது. முத்தொழிலையும் செய்யும் அறிவும் ஆற்றலும் ஒரே தெய்வத்துக்கு உள்ளது. 


சிவன் லிங்கத்தில் இல்லை 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் 
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் 
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. 
- (திருமந்திரம் - 7ம் தந்திரம் - 11 சிவபூசை 1)

பதவுரை 
உள்ளம் - மனம், எண்ணம், இதயம் 
பெரும் கோவில் - பெரிய + கோ + இல்லம் = மிகப் பெரிய "இறைவனின் இல்லம்"
ஊனுடம்பு - சதை நிறைந்த உடல் 
ஆலயம் -  தங்குமிடம்,  நகரம் (பிங்.) 
வள்ளல் -  வண்-மை, திறம்  
பிரானார்க்கு - தலைவர்க்கு 
வாய் கோபுரவாசல் - ஆலயத்துக்குள் செல்ல வகை செய்யும் கோபுர வாசல், அது போல உள்ளத்தில் உள்ளன வாய் வாசல் சொல்லும்  
தெள்ளத் தெளிந்தார்க்கு - ஞானம் பெற்றோர்க்கு - தெள்ளிய அறிவுடையவர்க்கு 
சீவன் - உயிர் (பிங்.), ஆத்மா 
சிவஇலிங்கம் -  மக்கள் கூறும் சிவலிங்கம் (அது உயிரில் உள்ளது, கல்லில் இல்லை) - லிங்கம் என்பதன் பொருள் "அடையாளக் குறி" (பிங்.) 
கள்ளப் புலனைந்தும் கள்ளத்தனம் செய்ய பயன்படும் அதே ஐந்து புலன்கள்
காளா - காளம் என்றால் இருட்டு, காளா என்றால் இருட்டு இல்லாத
மணிவிளக்கே -  மணி+விளக்கு - மணி (முத்து,பவளம் உள்ளிட்ட ஒளிதரும் மணிகள்) ஒளியுடையதாயினும் சூரியன் முதலிய பிறிதொரு ஒளிப்பொருளின் முன்பே ஒளிதரும் மேலும் இந்த மணிகள் அழியாமல் நீடித்து நிற்க கூடியவை. விளக்கோ இருளைப் போக்க கூடியது.  

பொருள்: ஆலயம் என்பது இதுவரை நீங்கள் வெறும் சதை என்று எண்ணியிருந்த உடம்பு ஆகும். உள்ளமே கருவறை எனப்படும் கோயில். ஆலயத்தில் உள்ளன அறிய கோபுர வாசல் வழி செல்லுதல் வேண்டும் அது வாய் எனும் வாசல் ஆகும். இறைவனின் அடையாளக் குறி எது என்றால் உங்கள் ஆத்மா தான், லிங்கம் இல்லை. தீமை செய்ய தூண்டும் அதே ஐந்து புலன்கள்தான் (வாய், கண், மெய், செவி, மூக்கு) இருள் போக்கும் அழியா ஒளிதரும் விளக்கு.  

குறிப்பு: கற்சிலையோ லிங்கமோ சிவன் அல்ல என்று ஆணித்தரமாக கூறிய இந்த பாடலை ஆலையம் கட்டும் முறையாக திரித்து எழுதி இருப்பது அறிவீனம் அல்லது நயவஞ்சகம்.  

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடல் ஆகுமோ? - (சிவவாக்கியம் 35)


சிவனின் மறுபெயர் அரி


அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - (சிவவாக்கியம் 224)

பொழிப்புரை தானாக அறியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே! 
 

அரியும் சிவனும் ஒன்னுதான், ஆனால் படத்தில் உள்ள இந்த சிவனும் அரியும் நமது கடவுள் இல்லை. இவைகள் மேற்சொன்ன வரையறைகளுக்கு முரணான மனிதனின் கற்பனை கதாப்பாத்திரங்கள்.
சிவன் என்பவன் சக்தி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற வார்த்தை பிரயோகத்தை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)

பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி; 

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம். 

முடிவுரை   


மறைநூல்கள் மாறலாம், கடவுளின் பெயர் மாறலாம், ஆனால் கடவுளின் இலக்கணம் மாறாது. கடவுள், சொர்க நரகம் போன்ற மனித புலன்களுக்கு எட்டாத தகவல்களை நம் கடவுளிடமிருந்தே பெறவேண்டும். நாமாக கற்பனை செய்ய முடியாது.  சிவனின் இலக்கணமாக தமிழர் சமய மறைநூல் திருமந்திரம் கூறுவது இதுதான். இந்த வரையறையை தாண்டி நாம் கற்பனை செய்யும் உருவம் சிவனாக இருக்க முடியாது என்று திருமந்திரம் கூறுகிறது. மேலும் 
 
அரியும் சிவனும் ஒன்னு என்பதை மக்கள் எப்படி புரிகிறார்கள் என்று தெரிய வில்லை. ஒருவேளை ஒன்னுக்குள்ள ஒன்னு, உறவினர்கள் என்கிற அமைப்பில் புரிகிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இதன் பொருள் சிவனும் அரியும் ஒருவனையே குறிக்கிறது என்பதாகும். இதை புரிந்தால் நான் உங்களுக்கு தைரியமாக அதைவிட கனமான உண்மையைச் சொல்லுகிறேன். அரியும், சிவனும், அல்லாஹ்வும், கர்த்தரும் ஒருவரே குறிக்கிறது. அப்பெயர்களும், அதன் மறைநூல்களும், அதன் சமயங்களும், அவற்றின் அடியார்களும் பிரிந்து பிளந்து இருக்கும் காரணத்தை கற்று தெளிவதுதான் கல்வி என்று நம்புகிறேன். 

வேத வியாசர் என்ற தனி நபரால் எழுதப்பட்ட சிவ புராணம், விஷ்ணு புராணம் உட்பட 18 புராணங்கள் எழுதப் பட்டுள்ளது. இந்த புராணங்கள் முழுவதும் கற்பனையாக எழுத முடியாது, அப்படி எழுதினால் அது சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.எனவே இவைகளின் மூலத்தை ஆய்வு செய்தால், திருமந்திரம் உட்பட பல நூல்களுக்கான பொருள்களை திரித்து எழுதியதாக உள்ளது. 

திருமந்திரத்தை வாசித்து புரிந்துகொள்வதாக இருந்தால், புராணங்களை கொண்டுபுரிந்து கொள்ள முயல்வதை விடுத்து, உலகில் உள்ள நான்மறைகளில் உள்ள பொருளோடு இணைத்து இதை வாசித்தால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். இது எனது வழிமுறை அல்ல, மாறாக தொல்காப்பியம் கூறும் முதல்நூல் வழிநூல் வழிமுறை, திருமந்திரம் கூறும் குரு பாரம்பரியம் கூறும் வழிமுறை.

உதாரணமாக, திருமந்திரத்தின் அனைத்து பாடல்களையும் திருமூலரின் கோணத்திலேயே வாசித்தல் கூடாது. சிலபாடல்களை சிவனின் கோணத்திலிருந்து வாசித்தல் வேண்டும், சில நேரங்களில் நந்தியின் கோணத்திலிருந்து வாசித்தல் வேண்டும். ஏனென்றால் திருமந்திரம் என்பது சிவன் நந்திக்கு உபதேசித்து, நந்தி திருமூலருக்கு உபதேசித்து, திருமூலர் மக்களுக்கு உபதேசித்தது. இந்த அமைப்பில் தான் உலக வேதங்கள் அனைத்தும் அமைந்து உள்ளது. 

தெய்வம்: அரி, சிவன், கர்த்தர், அல்லாஹ்
வானவர்: நந்தி, கேபிரியேல், ஜிபிரியேல்
நாதர்: திருமூலர், இயேசு, மோசஸ், முகமது

சிவனும் அல்லாஹ்வும் ஒருவனா? முரனென்று கருத வேண்டியதில்லை.

காரணங்கள்:

1)  தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – (திருவாசகம் 170) : "என் நாட்டவர்க்கும் இறைவன்" என்பதில் அரபு தேசம் விடுபடுவதில்லை.

2) மட்டுமல்லாமல், மேலே பட்டியலிட்ட பண்புகளோடு உள்ள ஒருவனைத்தான் அரேபியர்கள் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். (இன்று அறியப்படும் உருவமும் லிங்க குறியிடும் சிவனை குறிப்பவைகள் அல்ல என்று மேலே நிறுவப்பட்டுள்ளது)

6 கருத்துகள்:

  1. வேதங்களை ஒப்பிடுபவர் சிவனை ஆதம் நபி என்றும், தீர்க்க தரிசி என்றும் கூறுவர். அதற்கு ஆதாரமாக சிவ புராணத்தை கொள்வர். ஆனால் சிவபுராணம் திருமந்திரத்தை தவறாக வாசித்ததால் அல்லது அதை திட்டமிட்டு திரிக்க விரும்பியவர்கள் உருவாக்கிய புராணம் அது. அதை அடிப்படையாக கொண்டு உணமையை கண்டறிய முயல்வது பிழை. சிவன் தான் கடவுள் அவன் நாமக்கு சொல்லப்பட புறானமோ லிங்கமோ அல்ல.

    பதிலளிநீக்கு
  2. கிருஷ்ணா த்வாய்பயனா ( சமஸ்கிருதம் : कृष , ரோமானியப்படுத்தப்பட்ட : Kṛadvaipāyana ) , வியாசா ( / ˈ v j ː s ə / ; சமஸ்கிருதம் : व , ரோமானியஸ் : Vyāsaasaḥ , ' vedayasaḥ  , ' வேதங்களை வகைப்படுத்தியவர் "), ஒரு மைய மற்றும் மதிப்பிற்குரிய முனிவர் [ மேற்கோள் தேவை ]பெரும்பாலான இந்து மரபுகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் பாரம்பரியமாக மகாபாரதத்தின் ஆசிரியராகக் கருதப்படுகிறார் . அவர் பல இந்துக்களால் குறிப்பிடத்தக்க பல நூல்களின் தொகுப்பாளராகவும் கருதப்படுகிறார். ஒரு பகுதி அவதாரமாக, விஷ்ணுவின் அம்ச அவதாரம் (aṃśa-avatāra) , அவர் வேதங்களின் மந்திரங்களை நான்கு வேதங்களாகத் தொகுத்தவராகவும், பதினெட்டு புராணங்கள் மற்றும் பிரம்ம சூத்திரங்களின் ஆசிரியராகவும் பாரம்பரியத்தால் கருதப்படுகிறார் . ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர் .

    https://en.m.wikipedia.org/wiki/Vyasa

    பதிலளிநீக்கு
  3. சைவ சித்தாந்த நூல்களை தமிழல்லாத மொழியில் தேடினால் சிவ புராணம் மட்டுமே கிடைக்கும். தமிழில் மட்டுமே திருமந்திரம் போன்ற வேதம் கிடைக்கும். சைவம் தமிழுக்கு உரியது, சிவன் தென்னாட்டுடையவன்.

    பதிலளிநீக்கு
  4. 1) ஆதிப் பிரானும்
    2) அணிமணி வண்ணனும்
    3) ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
    சோதிக்கில் - சோதனை செய்தால்
    மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் - மூன்றுமே ஒன்றுதான்
    பேதித் துலகம் - அறிவற்ற உலகம்
    பிணங்குகின் றார்களே. - முரண் படுகிறார்கள்

    சோதித்தால் மூன்று பெயரும் ஒரே தெய்வத்தை குறிக்கிறது அறிவில்லாமல் மக்கள் இதில் முரண்படுகிறார்கள்.
    https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/323/thirumoolar-nayanar-thirumandiram-payiram-mummoorthikalin-muraimai

    பதிலளிநீக்கு
  5. படைத்தவன் அவனே ஆழ்பவனும் அவனே

    https://blog.scribblers.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/page/30/?ak_action=reject_mobile

    பதிலளிநீக்கு
  6. காலை சென்று கலந்துநீர் மூழ்கில்என்?

    வேலை தோறும் விதிவழி நிற்கில்என்?

    ஆலை வேள்வி அடைந்துஅது வேட்கில்என்?

    ஏல ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே!

    (தேவாரம், 5:99:5)

    -என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். காலையில் எழுந்ததும் நீராடி விட்டால் சரியாகிவிடுமா? செய்ய வேண்டிய கருமங்கள் எல்லாவற்றையும் விதிப்படிச் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஒரு வேள்விச் சாலைக்கு உரிமை பெற்று வேள்விகள் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஈசனே இறைவன் என்று அறிந்து ஒழுகாமல் எதுவும் சரியாகாது.

    பதிலளிநீக்கு