ஊழ் எனபது விதியா? அல்லது முன் ஜென்மமா?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - குறள் 380

மு. வரதராசன் உரை: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

இக்குறளில் "ஊழ்" என்பதற்கு "முன் ஜென்மம்" என்பதைவிட "விதி" என்பதே பொருந்தும். 7 பிறவி என்றொன்று இருந்தால் முதல் பிறவி உள்ளவருக்கு முன் பிறவியின் வலிமை அல்லது தாக்கம் இருக்காது. எனவே இது  பொது விதியல்ல. ஆனால் விதியின் வலிமை ஒவ்வொரு உயிருக்கும் உண்டு.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு. - நாலடியார் 110

பதவுரை
பிறழ் - vary / மாறுபடு
உறுகாலம் - உரிய நேரம்
ஊற்று - support / ஊன்றுகோல்
பொறி - (தலை) எழுத்து
பரிவு - வேதனை
இறுகாலம் - இறுதி நேரம் (மரண நேரம்

பொருள் கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் குறையமாட்டா, வளரமாட்டா, முறைமாறி வரமாட்டா, துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா, எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (விதி குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்). 

உங்களுக்கான சில கேள்விகள்

  1. சில பொழிப்புரையாளர்கள் முன்ஜென்ம வினையின் பயன் என்றும் ஊழை குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் நாம் செய்யும் செயலுக்கான பலன் நாம் செய்த அதே வரிசை முறையில் முறை பிறழாமல் நமக்கு கிடைக்கிறதா?
  2. விதி காலத்தின் அடிப்படையில் நடைபெறுமா? அல்லது வினைப்பயன் நடைபெறுமா?
  3. முந்தய பிறப்பின் வினைப்பயன் (அப்படி ஒன்று இருந்தால்) கரு அமைந்த காலத்தில் ஏற்படுமா அல்லது முந்தய பிறவியில் நம்மால் வினை ஆற்றப் படும்பொழுது ஏற்படுமா?
முடிவுரை

ஊழ்வினை என்பதை முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம் என்று சொல்கிறார்கள். முன் ஜென்மம் என்கிற ஒன்றே கிடையாது. அதை பல்வேறு சான்றுகள் மூலம் நிறுவ முடியும். காண்க.

"ஊழ்" என்பதும் "வினை" என்பதும் இருவேறு முரணான பொருளை கொண்ட சொற்கள்.

மனிதனின் வாழ்க்கை நிகழ்வுகள் சில கூறுகளின் கலவை ஆகும். அவையாவன,

    1. ஊழ் (அ) விதி (அ) கத்ர் (அ) fate
    2. வினை (அ) கருமம் (அ) அமல் (அ) deeds
    3. இரஞ்சுவதால் கிடைக்கும் இறைவனின் அருள் (அ) நாட்டம்

இதில் ஊழ் என்பது இறைவனால் ஏற்கனவே வகுக்கப் பட்டது

வினை என்பது மனிதனால் செய்யப்பட்டது

"ஊழ்வினை" என்கிற பதம் ஏதாவது முதல் அல்லது வழி நூலில் நேரடியாக இடம்பெற்றதாக நான் அறிந்ததில்லை. அறிந்தவர்கள் அதற்கான சான்றை கொடுத்தால் நலம். "ஊழ்" என்றே தனித்து பயன்படுத்த பட்டதன் காரணம் அது வினையின் விளைவல்ல என்பதால். இரண்டுக்கும் வெவ்வேறு வரையறைகள். பொழிப்புரையாளர்களின் கருத்து பிழை. ஊழ் என்பது விதித்தானே தவிர சென்ற பிறவியோ அல்லது முன்ஜெம பாவ புண்ணியமோ அல்ல. முன்ஜன்மம் என்ற ஒன்று இல்லவே இல்லை. 

ஊழிக்காலம் என்பது உலகம் தோன்றி பறந்து மீளவும் அழிந்து ஒடுங்கும் ஒரு பரந்த கால அளவை குறிப்பதாகும். இதன்மூலமும் ஊழ் என்பதை விதி என்றே விளங்கலாம். 

குறிப்பு சிலப்பதிகாரத்துக்கு முன் வந்த எந்த நூலிலும் "ஊழ்"-உம் "வினை"யும் ஒன்றாக கையாளப்பட வில்லை. ஊழ்வினை என்கிற வார்த்தை பிரயோகத்துக்கும் அது உண்டாக்கிய குழப்பத்துக்கு சிலப்பதிகாரம் தான் தொடக்கப் புள்ளி என்று கருத முடிகிறது.