தமிழர் சமயம்
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)
விளக்கம்: இவனருள் வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன் கருணை பொழிவான், அறிவு மினுங்கப் பெறும். வான்கங்கை பாயப் பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்.
காய்ந்த அறிவு - மினுங்கும் அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி
இஸ்லாம்
“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29)
யூதம் / கிறித்தவம்
இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )
கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)