நான்மறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான்மறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நான்மறை

"நான்மறை" நாம் அறியாத சொல் அல்ல. அவ்வப்பொழுது ஆங்காங்கே ஆத்திகம் பற்றிய உரையாடல்களில் நாம் செவியுறும் வார்த்தை தான். உதாரணமாக,

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 
தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், 
திரு நான்மறை முடிவும் -மேலான நான்கு மறை நூல்களின் கருத்தும்
மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழும், 
முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, 
கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், 
திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், 
ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. (இது இவைகளெல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்கிற பொருளையும் தரும்)

ஆனால் பொதுவாக "நான்மறை" என்பது என்னவாகவெல்லாம் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்.

1) தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர்.

2) நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

3) நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! : ‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது.

4) தமிழர்களின் நான்மறை வேதம் திருக்குறள்: திருக்குறளை திருவள்ளுவர் பத்து பத்து பாடல்களை அதிகாரமாக பிரித்தாரே தவிர அதனை மூன்று பாலாக திருவள்ளுவர் பிரிக்கவில்லை. 133 அதிகாரங்களை மூன்று பாலாக பிரிக்காமல், நான்கு பாலாக மாற்றி அம்மைத்தல் வேண்டும். அதாவது அறம், பொருள், இன்பம், என்ற தலைப்பின் கீழ் வரையறுத்து இருப்பதை. மீள்வரையறை செய்து அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கு பாலில் வடிவமைக்க வேண்டும். அதுவே தமிழர்களின் நான்மறை வேத வடிவின் ஒத்ததாக இருக்கும்.


5) நான்மறை படைத்தது தமிழரே! : உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.

இன்னும் வேறு சில கருத்துக்கள் கூட இருக்கலாம். மேலே குறிப்பிட குறிப்புகளில்  சில உண்மை இருந்தாலும் அவர்களின் இறுதி முடிவில் உண்மை இல்லை எனபது திண்ணம். ஏனென்றால் அவர்களின் முடிவானது ஒரு பகுதி தகவல்களையும், யூகங்களையும் கொண்டு அமைந்துள்ளது. அவைகள் உண்மை அல்ல என்பதற்கான விளக்கங்கள் பின்வருமாறு.

நான்மறை என்பது ஆரிய வேதங்கள் அல்ல. ஏன்?

  • அதர்வணம் பிற்கலத்தில் வேதங்களில் இணைக்கப் பட்டது.
  • ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்றுகுறிப்பிட்டது ஆரிய வேதங்களை அல்ல என்கிற தகவலும், 
  • மற்ற மூன்று வேதங்களின் மதத்திற்கு மாறாக, அதர்வவேதம் வேறு ஒரு 'பிரபலமான மதத்தை' பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறப்படுகிற தகவலும்,  
  • அதர்வ வேதா என்ற பெயர், "அதர்வாணர்களின் வேதம்" என்பதற்காகவே என்று லாரி பாட்டன் கூறுகிற தகவலும்,
  •  அதன் சொந்த வசனம் 10.7.20-ன் படி, நூலின் மிகப் பழமையான பெயர், வேத அறிஞர்களான "அதர்வன்" மற்றும் "ஆங்கிரஸ்" ஆகியவற்றின் கலவையான அதர்வங்கிரசாகும் என்கிற தகவலும், 
  • ஆரம்பகால பௌத்த நிகாயா நூல்கள், அதர்வவேதத்தை நான்காவது வேதமாக அங்கீகரிக்கவில்லை, மேலும் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • பண்டைய சம்ஸ்கிருத பாரம்பரியம் ஆரம்பத்தில் மூன்று வேதங்களை மட்டுமே அங்கீகரித்தது என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், தைத்திரிய பிராமணத்தின் 3.12.9.1 வசனம், ஐதரேய பிராமணத்தின் 5.32-33 வசனம் மற்றும் பிற வேத கால நூல்கள் மூன்று வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன என்கிற தகவலும்,
  • ரிக்வேதம், சாமவேதம் அல்லது யஜுர்வேதத்தை கடைபிடிக்கும் ஆசாரியர்களுடன் ஒப்பிடுகையில், அதர்வவேதத்தை கடைப்பிடிக்கும் புரோகிதர்கள் பிராமணர்களின் மிகக் குறைந்த அடுக்குகளாகக் கருதப்பட்டனர். ஒடிசாவில் அதர்வவேத குருமார்களுக்கு எதிரான களங்கம் நவீன காலம் வரை தொடர்கிறது என்கிற தகவலும் 

மேலும் ஒரு ஆதாரம் மனுதர்மசாஸ்திரம் ஆகும்.

But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yagus, and Saman, for the due performance of the sacrifice. (Law of Manu Ch.1:V.23)

பொருள்: ஆனால் நெருப்பு, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றிலிருந்து அவர் யாகத்தின் சரியான செயல்பாட்டிற்காக ரிக், யாகஸ், சமன் என்று அழைக்கப்படும் மூன்று நித்திய வேதங்களை உருவாக்கினார்.

எனவே நான்மறை என்பதை நிச்சயம் சம்ஸ்கிருத வேதங்களை குறிக்கவில்லை என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

நான்மறை என்பது தமிழர் மறைகள் மட்டுமோ, அல்லது திருக்குறள் மட்டுமோ அல்ல. 

ஏனென்றால் மற்றவர்களை போலல்லாமல் மறைநூல்கள் என்றால் என்ன? என்கிற வரையறையும், நான்மறை என்றால் என்ன? என்கிற வரையறையும் நமது மறைநூல்களில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பகுதி தகவல்களையும், யூகங்களையும் விட சில ஆதாரப்பூர்வமான தரவுகள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும். 

நான்மறை என்பது உண்மையில் எதை குறிக்கிறது?

நான் மறை என்பதை அறியும் முன்னர், மறைநூலின் வரையறையினை அறிதல் அடுத்த அடி எடுத்து வைப்பதில் நமக்கு தெளிவை தரும். அதை அறியாதவர்கள் இக்கட்டுரை-யை வாசித்தல் நலம். 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், 
    1. நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர் - மாடு அல்ல 
    2. அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் 
    3. அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நதிகள் உள்ளனர்.
    4. (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி.
    5. மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர் 
    6. நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது (தொடர் ஆய்வுகள் தேவைப்படும் இது தனிப்பெரும் தலைப்பு)
    1. மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்)
    2. வடக்கு (பதஞ்சலி) - ஆரிய வேத பொருள் 
    3. தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc)
    4. கிழக்கு (வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc)
மொழிகளை, மதங்களை வகைப்படுத்தும் முறைமை உலக நடைமுறையில் வேறொன்றாக இருந்தாலும் இறைவனின் முறைமை இதுவாக உள்ளது. நான்மறை என்பது உலகம் முழுமைக்கானது என்றால் உலகம் முழுதும் உள்ள மறைநூல்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது அறமல்ல. உலகில் உள்ள அனைத்து சமய, மொழி, நில, இன மக்களின் வேதங்களும் சேர்ந்ததுதான் நான்மறையே தவிர, சம்ஸ்கிருத மறைகள் மட்டுமோ அல்லது தமிழர் நூல்கள் மட்டுமோ நான்மறை அல்ல.

நான்மறைக்கும் ஒரே இறைவன்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. - (தேவாரம் 3320)

பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி மறைநூல்களை ஓதுபவர்களை நன்னெறிக்கு ஊக்குவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும், அனைவருக்கும் ஆசிரியனானவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும். 
 
குறிப்பு: நான்மறை என்பது திசைக்கு ஒரு மறை எனவே அனைத்து மொழி சமய மறை நூல்களையும் இது குறிக்கும்.

நாலுவேத ஞானமும் ஒன்றே  

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவுஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்: நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய இறைவன் படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே, இந்த நூல்களும் அதை அடிபப்டையாக கொண்ட இந்த கட்டுரையும் கூறும் கூற்று எல்லாம் உண்மை என்று எந்த அடிப்படையில் ஏற்பது? என்ற கேள்வி தோன்றுவது இயற்கை தான்.

இதை மீண்டும் சில நூல் ஆதாரம் மற்றும் வரலாற்று ஆதாரம் கொண்டு ஆய்வு செய்வோம். 

    1. நான்கு வேதமும் ஒன்று தான் - அதாவது இவற்றின் போதனைகள் ஒன்றே 
    2. ஒரே கடவுள் மூலம் நான்கு திசைகளுக்கு நான்கு தேவர்கள் மூலம் வழங்கப்பட்ட ஒரே மூல நூலின் வகைகளே நான்மறை ஆகும் 
    3. ஒரே வேதம் நான்காக பிரிவதற்கு முன் மக்கள் ஒரே மொழியை பேசி இருக்க வேண்டும் அல்லது ஒரே சமுதாயமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.
    4. ஒரே இடத்திலிருந்து நான்கு நாதர்கள் அதாவது குருமார்கள் நான்கு திசைக்கு பிரிந்து சென்று இருக்க வேண்டும், அவர்களுக்கு நான்கு நந்திகள் மூலம் ஒரே இறைவன் ஒரே மூல நூலின் பகுதிகளை உபதேசமாக கொடுத்து இருக்க வேண்டும்.

முதல் இரண்டு கருத்துக்கு ஏற்கனவே ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. 

மூன்றாவது கருத்தான "மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்: என்பதற்கு உள்ள ஆதாரம் என்ன?

கிறிஸ்தவம் / யூதம் 

வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். (ஆதியகமம் 11:1-2)

இஸ்லாம் 

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:22)

தமிழர் சமயம் 

தமிழ் சமயங்களை பொறுத்தவரையில்  மொழியே ஓர் ஆதாரமாகும். உலகில் உள்ள மொழிகளில் மிக பழமையானது தமிழ் என்பதும், உலக மொழிகளில் உள்ள சொற்களின் வேர்ச்சொல்லை தேடினால் அது தமிழில் முடிவதை தமிழ் சொல்லியல் அறிஞர்கள் பலர் விளக்கி வருவதை காணலாம். உதாரணமாக,

      • மா.சோ.விக்டர் 
      • கு. அரசேந்திரன்
      • அருளியார் 

ஆகியோர் சமகாலத்தில் உள்ளோர் ஆவர். 

ஆனால் மனிதர்கள் ஒரே மொழி பேசியதற்கு நான்மறைக்கும் என்ன தொடர்பு? உண்டு! எப்படி? 

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட திருமந்திர பாடல்களில் உள்ள நான்கு திசைகளை கணக்கெடுத்து கொண்டால், நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நந்தி (மனிதருக்கு வேதம் உபதேசம் செய்யும் தேவர் இனத்தை சேர்ந்த ஆசிரியர்) என்று சொல்லப்படுகிறது. இதில் நான்கு திசையை குறிப்பிடும் பொழுது எந்த இடத்தில் இருந்து அந்த திசைகளை கணக்கெடுத்து கொள்வது? என்ற கேள்வி எழுகிறது. 

அக்காலத்தில் வெள்ளப் பேரழிவுக்கு பிறகு மனிதர்கள் தங்கி, அவர்களின் நாகரிகம் ஓங்கி வளர்ந்து, பிறகு உலகெல்லாம் பரவியது என்று பைபிள் சொல்கிறது. அது இன்று ஆய்வாளர்களால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மெசபட்டோமியா அல்லது சிந்துசமவெளி நாகரிகம் என்று சொல்லப்படும் இடமாயிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் வெள்ளப் பிரளயத்துக்கு பிறகு மக்கள் சமவெளி பிரதேசத்தில் தங்கினார்கள் என்று பைபிள் கூறுகிறது. 

பின்னாளில் மேற்கு திசையின் சமய பாரம்பரியமான ஆபிரகாமிய மதங்களின் முன்னோடியான ஆப்ரஹாம் மெசபட்டோமியாவிலிருந்து  இன்றைய சிரியாவுக்கு குடி பெயர்ந்தார். இதைப்பற்றி யூதர்களின் பூர்வீகம் என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் விளக்கி உள்ளோம். 
 

அதே போல அகத்தியர் வடக்கிலிருந்து தெற்கிற்கு நடுநிலையை நிலைநிறுத்த வந்தவர் என்பதை நாம் அறிவோம். இந்த செய்தி புராண கற்பனை கதை இல்லை, ஏனென்றால் இதை திருமந்திரம் எனும் நூல் சொல்லுகிறது. ஆனால் "இவ்வுலகம் சரிந்து" என்கிற சொல்லாடலை "இவ்வுலக நிலம் சரிந்தது" என்று பொருள்படும் விதமாக புராணம் எழுதி அதை திரைப்படமாக எடுத்த அறிவு ஜீவிகள் நிறைந்த நிலம் இது. நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து என்பதற்கு, "இவ்வுலக அறம் மங்கி" இருந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். காரணம் அறம் கூறும் முனைவர் இந்த நிலப்பகுதிக்கு இல்லாமல் இருந்து இருக்கவில்லை என்பது மறைமுக செய்தி ஆகும்.

நடுவுநில்லாது இவ்வுலகஞ் சரிந்து
கெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
 
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல் பாலவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம், பாடல் எண் : 2)

மேலும் அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் நூல் தான் முதல் நூல் என்பது தொல்காப்பியம் அதன் வழிநூல் என்பதையும் நாம் அறிவோம்.

மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழி தான் பேசினார்கள் என்ற செய்தியும், பின்னாளில் மொழிகள் பிரிந்த பொழுது திசைக்கு ஒரு மொழியாகவும், ஒவ்வொரு மொழிக்கு ஒரு நந்தியும் இருந்ததை திருமந்திர நூலில் உள்ள குரு பாரம்பரியம் அத்தியாயம் மூலம் உணரமுடிகிறது. பின்னாளில் ஒவ்வொரு திசையிலும் உள்ள மொழிகள் திரிந்து, பல மொழிகளாக பிரிந்தது அவைகளை மொழிக் குடும்பமாக உருவெடுத்தது என்பதை மொழிகளின் வரலாறுகள் கூறுகிறது. 

இந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு பார்த்தலும் தொல்காப்பிய முதல் நூல் தத்துவத்தை பார்த்தாலும், ஒரு மொழிக்கு ஒரு முதல் நூல் மட்டும்தான் இருக்க முடியும், மற்றவைகள் எல்லாம் வழி நூல்கள் ஆகும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு நந்தி ஒரு முதல் நூலை மட்டுமே போதிப்பார், அவர் பின்னாளில் போதித்த அனைத்தும் வழி நூல்களாகும். மொழிகள் பிரிந்து திரியும் பொழுதும் அந்த மொழியில் உள்ள மறை நூல் என்பது வழிநூல் மட்டுமே, முதல் நூல் ஆகாது. அந்தவகையில் பார்த்தல் மேற்க்கத்திய சமய பாரம்பரியத்துக்கு எப்படி ஆப்ரஹாம் முன்னோடியோ அதேபோல தெற்கின் சமய பாரம்பரியத்துக்கு அகத்தியர் முன்னோடி ஆவார், அதோடு அவர் தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் எழுதியமையால் அதாவது முதல்நூல் எழுதியமையால் பழமையான மொழிகளில் தமிழ் இடம் பெற்று உள்ளது.

சம்ஸ்கிருதம், சீனம் (Mandarin), ஆகியவற்றுக்கும் மெசபட்டோமியாவில் பேசப்பட்ட மொழிகளான சுமேரியன், பாபிலோனியன் மற்றும் அசிரியன் (ஒன்றாக சில நேரங்களில் 'அக்காடியன்' என்று அழைக்கப்படுகிறது), அமோரிட், மற்றும் அராமிக் ஆகிய மொழிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.  அதே நேரத்தில் மெசபட்டோமியாவில் பேசப்பட்ட சுமேரியன் மொழிக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், மேலும் ஹீப்ரு, அராமிக், மற்றும் அரபிக் மொழிகளுக்கும் அக்காடியன் மொழிக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நமது இந்த கட்டுரையில் வடக்கு (சமஸ்கிருத மொழி குடும்பம்) மற்றும் கிழக்கு (சீன மொழிக் குடும்பம்) பற்றிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படவேண்டி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த கோணத்தில் மொழி பற்றிய ஆய்வும், சமயங்கள் பற்றிய ஆய்வும் தொடங்கப்படும் பொழுது காலக்கோட்டில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. 

"யாது ஊரே யாவரும் கேளீர்" என்கிற வரிகள் மொழிப் பெருமைக்கானது அல்ல. அதை நிதர்சனமாக ஏற்று தமிழர் அறத்தை மொழியுடன் சுருக்கிக் கொள்ளாமல் இருப்பது அறிவுடைமை. 

முடிவாக, 
  • நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும். 
  • அவைகள் அனைத்தும் வழங்கிய இறைவன் ஒன்று,
  • அவைகள் பேசும் அறம் ஒன்று,
  • அவைகளுக்குள் ஒரு தொடர்பு உண்டு, 
  • அதை ஆய்ந்து, அறிந்து, கற்று, ஏற்று, வழிப்பட்டு பிறருக்கு கூறுவது நம் கடமை ஆகும்.