வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ் அல்லாத மொழிகளிலும் மறைநூல்கள் உண்டு என்று தமிழர் பண்பாடு கூறுகிறதா?

 கீழ் கண்ட தொல்காப்பிய நூல் விதியானது நூல் என்றாலே மறைநூல் அல்லது வேதம் என்கிறது.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639) 

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640) 

 

கருத்துமுனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு விளங்கவைக்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும். 
 

அதிலும் தொடந்து ஒன்றன் பின் ஒன்றாக வரக்கூடியதை வழிநூல் என்கிறது.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641)

பேராசிரியர் உரை: என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

கருத்து: வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும். - விக்கி 

அந்த வழிநூலிலும் மொழிபெயர்ப்பு நூல் உண்டு என்கிறது. அதாவது பிற மொழி வேதத்தை தமிழுக்கு மொழி பெயர்த்தால் அதுவும் வேதமாக கருதப்படும் என்று பொருள்.

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642-643)  

பேராசிரியர் உரை: முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், பிற மொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

கருத்துதொல்காப்பியம் வழிநூலை

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • வேற்று மொழி நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்

என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும். 


ஆனால் இங்கே நோக்கத் தகுந்த மிக முக்கியமான விடயம் என்னவென்றல்,

  1. மொழி பெயர்க்கப்படும் அனைத்தும் வேதம் அல்ல. அது முதல் நூலின் இலக்கணத்துக்கு முரண் படக்கூடாது. அதாவது மொழி பெயர்ப்பு நூலும் கூட மனிதனின் அனுபவத்தில் விளைந்ததாக இருக்க கூடாது.  
  2. அந்த நூல் உண்மை குருவின் மூலம் மொழி பெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும். முனைவன் (அ) குரு என்றால் யார் என்ற இலக்கணமும் அனைத்து மறை நூல்களிலும் உண்டு. பொய் குரு யார் என்ற இலக்கணமும் உண்டு. 

முடிவுரை:

எனவே தமிழ் அல்லாத மொழிகளில் வேதம் இருப்பதை தமிழர் பண்பாடு ஏற்கிறது.

அது மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து மொழி வேதங்களையும் நான்மறை என்று தமிழர் சமயங்கள் அழைக்கிறது.

வேதத்தில் கூட்டவும் குறைக்கவும் மனிதர்களுக்கு உரிமை இல்லை

தமிழர் சமயம்  

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். - (பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை பாடல் - 2)

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற செய்திகளும், ஆசையை வளர்க்கும் செய்திகளும், மாற்றப்பட்ட வேறு பொருள் தரப்பட்ட செய்திகளும் கலந்து நிறைந்த நூல்கள் உள்ள இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர். 

யூதம் 

தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான்

“இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.  (உபாகமம் 4:1-2)

கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கிறது; தம்மிடம் அடைக்கலம் புகுபவர்களுக்கு அவர் கேடயமாக இருக்கிறார். அவர் உங்களைக் கடிந்துகொள்ளாதபடிக்கு, நீங்கள் பொய்யராகக் காணப்படாமலிருக்க, அவருடைய வார்த்தைகளோடு சேர்த்துக்கொள்ளாதீர்கள். -  (நீதிமொழிகள் 30:5-6)

கிறிஸ்தவம் 

 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். இந்தத் தீர்க்கதரிசனச் சுருளிலிருந்து யாராவது வார்த்தைகளை எடுத்துவிட்டால், இந்தச் சுருளில் விவரிக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்திலும் பரிசுத்த நகரத்திலும் உள்ள எந்தப் பங்கையும் கடவுள் அந்த நபரிடமிருந்து எடுத்துக்கொள்வார். (வெளிப்படுத்துதல் 22:19)

குறிப்பு: வெளிப்படுத்துதல் சுவிசேஷம் நமக்கு கிடைக்கப்பட்டது புனித ஜான் மூலமாகும், அவர் இயேசு தேர்ந்தெடுத்த அவரின் நேரடி சீடர் ஆவார்.  

இஸ்லாம் 

இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். - (குர்ஆன் 2:41,42) 


வேதத்தை பொருள் அறியாமல் ஓதலாமா?

தமிழர் சமயம்


வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.(பாடல் எண் : 51) 
 

பொருள்வேதத்தை ஓதி வீடு பெற்றனர்! வேதத்தில் நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் உள்ளன. எனவே தர்க்கவாதத்தை விட்டு வேதத்தை ஓதி அனுபூதி மான்கள் முக்தி பெற வேண்டும்.

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (
பாடல் எண் : 36) 

பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே 

இஸ்லாம்


அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 4:82)

கிறிஸ்தவம்


இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8) 

முடிவுரை


வேதம் என்பது பொருள் புரியாமல் ஓதுவதற்கு அல்ல. அது ஓதி உணர்ந்து தானும் பின்பற்றுவதற்கான அறங்களை கொண்டது ஆகும். அதை பின்பற்றாதோர் வீடுபேறு அடைய மாட்டார் என்பது வேதங்களின் கூற்று. வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

தமிழில் வேதம் உண்டா?

இந்த கேள்விக்கு பல சகோதரர்கள் உண்மைக்கு நெருக்கமாக பதிலை பதிவிட்டு உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதில் தமிழில் உள்ள அனைத்து சங்க இலக்கியங்களையும் இலக்கணங்களையும் சமண சைவ வைணவ நூல்களையும் பட்டியல் இட்டு உள்ளனர்.

சிலர்"என்னை பொறுத்தவரை" என்று தான் விரும்பியதை கூறி உள்ளனர். இவ்வாறு வேதம், ஆன்மீகம், கடவுள், சமயம் மற்றும் குரு போன்றவைகளுக்கு ஏதேனும் வரையறை உண்டா அல்லது இவ்விடயம் தொடர்பாக நமது விருப்பத்துக்கு கருத்துக்களை உருவாக்கி கொள்ளலாமா என்பதையும் நாம் ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் வேதங்கள் யாது? என்ற கேள்விக்கு முன் அது உள்ளடக்கிய வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறிந்து இருக்கவேண்டும். அதோடு சேர்த்து சில உப கேள்விகளுக்கும் பதில் தெரிந்து இருக்க வேண்டும். அவற்றில் சில..

  1. வேத நூல் என்றால் என்ன?
  2. மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா?
  3. வேதத்துக்கும் வேதம் அல்லாத நூல்களுக்கும் என்ன வேறுபாடு?
  4. தமிழில் வேதம் உண்டா?
  5. வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியுமா?
  6. வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?
  7. தமிழ் கடவுளின் மொழியா? அப்பொழுதுதான் தமிழில் வேதம் இறங்க முடியும்!

இப்பொழுது இதற்கான பதில்களை காணலாம்.

1) வேதம் என்றால்,

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

இன்று பொதுவாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இறைவனால் கொடுக்கப்படுவது தான் நூல் ஆகும்.

எடுத்துகாட்டாக, பைபிள் என்ற கிரேக்க சொல்லுக்கும் புத்தகம் என்றுதான் பொருள்.

குர்ஆனின் மற்றொரு பெயர் கித்தாப் (புத்தகம்) ஆகும். 

முதலில் நூல் என்று மட்டும் அழைக்கப்பட்டது, காலத்து ஏற்ப தொடர் நூல்கள் வந்த பொழுது முதல் நூல், வழி நூல் என்று பிரித்து அழைக்கப் பட்டது. பின்னாளில் மக்களும் நூல்கள் எழுத துவங்கியதும் அது மறை நூல்கள் என்று அழைக்கப்பட்டது. வேற்று சமய கலப்பு ஏற்படும் பொழுது அவைகள் ஆகமம் என்றும் வேதம் என்றும் சொல்லப்பட்டது. எனவே வேதம் என்றல் இறைவனால் வழங்கப்பட்டது ஆகும். அதன் பெயர்தான் மேற்சொன்னபடி காலவோட்டத்தில் மாற்றப்பட்டது.

2) மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா? என்று கண்டறிய விரும்பினால்,

மேல் சொன்ன அருங்கலச்செப்பு, பாடல் 9 தெளிவாக கூறுகிறது "என்றென்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு" என்று.. எனவே இவைகள் அனுபவத்தின் ஊடாக அல்லாமல், என்றென்றும் உள்ளேனன்றும் உருவாகியது ஆணால்நது அவனால் வெளிப்படுவது எப்போது என்றால் அதை தொல்காப்பியம் தெளிவாக விளக்குகிறது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். - (தொல்காப்பியம் மரபியல் 640)

இதன் பொருள், அனுபவத்தின் மூலம் அல்லாமல் இருக்க கூடிய அறிவை முனைவன் கண்டது (எழுதியது அல்ல) முதல் நூல் அல்லது முதல் வேதமாகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். (தொல்காப்பியம் மரபியல் 641)

வேதம் ஒன்றுமட்டுமல்ல, அது தொடந்து பல காலகட்டங்களில் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும் என்கிறது தொல்காப்பியம்.

உதாரணமாக, 1) பைபிள் வெவ்வேறு நபர்கள் எழுதிய 60 க்கும் மேற்ப்பட்ட நூல்களை உள்ளடக்கியது. 2) ரிக், யஜுர் சாம வேதங்களும் 600 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்கியது, 3) தமிழிலும் அவ்வாறுதான். புறநானூறு 150 பேரால் எழுதப்பட்டுள்ளது, தேவாரம் மூவரால் எழுதப்பட்டுள்ளது. இவாறாக நான்கு சமய பாரம்பரியங்கள் உள்ளது. அதுதான் நான்மறை என்று அழைக்கப் படுகிறது.

இங்கே நாம் சிந்திக்க வேண்டியது ஒருவர் எழுதிய நூலில் இன்னொருவர் எழுத எப்படி முடிந்தது? ஏனென்றால் அது வேதம் என்பதால். இந்நூல்களின் முறைப்பகுதியை எழுதியவர்கள் அதன் உரிமையாளர்கள் அல்ல. பின் எழுதுபவர்களும் அதன் உரிமையாளர்கள் அல்ல. எல்லோரும் அந்த நூலின் உரிமையாளன் கூறியபடி அவனின் அனுமதியோடு அந்நூலில் எழுதுகிறார்கள். ஏனென்றால் எழுதுவது அவர்களின் சொந்த அனுபவமோ ஞானமோ திறமையோ அல்ல.

3) வேதத்துக்கும், வேதம் அல்லாதவைக்கும் என்ன வேறுபாடு?

மேற்சொன்ன வரையறையின் படி, மனிதனின் தனது அனுபவத்தால் அல்லது பக்தியில் இறைவனை புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களும், சுய சிந்தனையினால் உந்தப்பட்டு எழுதப்பட்ட கதைகள் எதுவும், சில பல வேதங்களை கற்று அதன் சாரத்தை கூறுவதும் வேதம் ஆகாது. வேதம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட நேரடி வார்த்தைகளே.. வேதத்தின் மொழிபெயர்ப்பு கூட மனிதனின் அறிவை கொண்டு செய்யப்பட்டால் வேதம் ஆகாது.

4) தமிழில் வேதம் உண்டா?

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147)

பொருள்: வானில் இருந்து வந்த மறைபொருளை அறிவது நான் பெற்ற இன்பம் அது இவையகமும் அதை பெற வேண்டும் என்று விரும்புகிறார் திருமூலர். .

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149.

இப்பாடல்கள் மூலம் திருமூலர் தமிழில் வேதம் கொண்டு வந்தது நிரூபணமாகிறது. அதோடு இவ்வேதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கு அனைவருக்கும் என்று கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் உண்டு.

5) வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுமா?

1)தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்

3) மூவர் தமிழும் 4)முனிமொழியும் - 5) கோவை

திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 1) திருவள்ளுவருடைய திருக்குறளும், 2) நான்கு வேத பாரம்பரியங்களின் முடிவும், 3) மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர்களுடைய தேவாரமும், 4) சிவவாக்கியர் போன்ற முனிவர்களின் மொழியும் - 5) மாணிக்கவாசகரின் கோவை திருவாசகமும், 6) திருமூலருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு மூலத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று அறிவாயாக. 

எனவே சமண நூல் என்று அறியப்பட்ட குறளும், சைவ நூல்களான தேவாரமும் திருவாசகமும் திருமந்திரமும், சித்தர்கள் எழுதிய நூல்களும், உலகில் உள்ள அனைத்து சமய நூல்களை உள்ளடக்கிய நான்மறையும் ஒன்றுதான் என்று கூறுகிறது இந்த பாடல். எனவே இவைகள் ஒன்றுக்கொன்று முரண்படாது. 

முதல் நூலை வழித்து வந்தது வழி நூல் என்று தொல்காப்பியம் வரையருப்பதன் மூலமும், நல்வழி பாடல் 40 தின் மூலமும், முதலும் வழியும் மற்றும் நான்மறைகளும் ஒன்றுக்கொன்று முரண்படாது. முரண்படுவதாக தோன்றுவதற்கு காரணம் நமது கல்வியின் குறைபாடு ஆகும். மறை நூல்கள் அல்லது அறநெறி நூல்கள் போன்றவைகள்பணம் சேர்க்கும் கருவியாக இல்லாமல் இருப்பதால் அதை கற்று அறியாமல், தொழிற்கல்வியை பிரதானமாக கற்றதன் விளைவு உலகில் உள்ள அனைத்து சமய வேதங்கள் ஒன்றுக்கொன்று முரன்படுவது போல தெரிகிறது.

6) வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?

எவர் வேண்டுமென்றாலும் ஏற்கனவே உள்ள வேதத்தை படித்து, தான் ஒரு நூல் எழுதி அதை வேதம் என்று வாதிடலாம். அதற்கு அவருக்கு தேவை வாத திறமை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு. இது கால காலத்துக்கு தீயவர்களின் கைகளுக்கு எட்டும் விடயமாகவே இருந்து வருகிறது. எனவே இவ்வாறு உள்ளவர்கள், தான் எழுதிய நூலை வேதம் என்று தன்னுடைய நூலில் குறிப்பிட்டவோ அல்லது மக்களிடத்தில் பிரகடன படுத்தவோ முடியும். எனவே இதற்கிடையில் உண்மை வேதத்தை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு எதேனும் வழிமுறை உள்ளதா என்றால்? உண்டு.

தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. - (அறநெறிச்சாரம் பொய்ந்நூல்கள் பாடல் - 47)

பொருள்: தங்கள் தங்களின் விருப்பம், தத்தமது காட்சி/விளக்கம் என இவற்றுடன் ஒரு சிறிதும் பொருந்தாதபடி உரைப்பவரைப் பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய் நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்றுவணங்கி வழிபடுபவர் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உள்ளவர்கள் இல்லை.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். பாடல் - 2

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)

உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில் - (நாலடியார்பொருட்பால், 14. கல்வி 140)

விளக்கம்அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், அவ்வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

வேதம் என்று ஏற்கனவே அறியப்படும் நூல்களுக்கு முரண்படும் நூல்கள், ஆசையை வளர்க்கும் நூல்கள், உலக வாழ்க்கைக்கு மட்டும்  பயன்படும் நூல்கள் ஆகியவை வேத நூல்கள் அல்ல.

7) தமிழ் கடவுளின் மொழியா?

மக்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் வாழும் அனைத்து திசைக்கும் வேதம் வழங்கியது அதே இறைவன்தான் எனவே மொழிகள் அனைத்தும் அதே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் தேவ பாஷா என்று எதும் இல்லை.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருமூலர் போன்ற மக்களுக்கு குருவாக இருக்கும் மனிதர்களுக்கு உபதேசிக்கும் நந்திகள் மொத்தம் நான்கு பேர், அவர்கள் திசைக்கு ஒருவராய் அவர்களது பணியை செய்தனர். நான்கு திசையில் ஒரே மொழி பேசியவர்களா இருந்தனர்? இல்லை, வெவ்வேறு மொழி பேசிய, பேசும் மக்கள் தான் இருந்து வந்துள்ளனர். எனவே எல்லா மொழிகளுக்கும் வேதம் உண்டு, எனவே தேவ பாஷை என்று எதும் இல்லை.

முடிவுரை:

மேலே தரப்பட்ட கேள்விகளும் பதிலும் இந்த நீண்டந்தலைப்பில் ஒரு முன்னுரை போன்றே. உங்களுடைய நியாயமான கேள்விகள் வரவேற்க்கப் படுகிறது.

இந்த சிறு ஆய்வின்படி, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தின் படி, கீழ்கண்ட நூல்கள் தமிழ் வேதங்களாக இருக்கலாம்.

  1. அகத்தியம்
  2. தொல்காப்பியம்
  3. புறநானூறு
  4. அகநானூறு
  5. குறள்
  6. ஞானக்குறள்
  7. நாலடியார்
  8. ஆத்திசூடி,
  9. நல்வழி,
  10. மூதுரை
  11. திரிகடுகம்,
  12. பழமொழி 400
  13. தேவாரம்,
  14. திருவாசகம்,
  15. திருமந்திரம்,
  16. சிவவாக்கியம்
  17. அறநெறிச்சாரம்,
  18. அறுஞ்செக்கலப்பு
  19. ஆசாரக்கோவை
  20. ஏலாதி
  21. சிருபஞ்ச மூலம்
  22. முதுமொழி காஞ்சி
  23. இன்னா 40,
  24. இனியவை 40

இவைகள் மேற்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் எனது ஆய்வுகளின் மூலம் வேதமாக இருக்கலாம் என்று நான் கருதியவைகள். எனவே தமிழில் வேதங்கள் இவைகள் மட்டுமல்ல, வைணவம் இன்னும் ஆய்வு செய்யப்படாத பகுதியாக உள்ளது.

குறிப்பு: இந்த நூல்களை வகைப்படுத்த முயலும் பொழுது தமிழ் அறிஞர்கள், தொல்காப்பிய வழிகாட்டுதலின் படி முதல், வழி மற்றும் வழிநூலின் வகைகளை கொண்டு வகைப்படுத்தி இருந்தால் சரியாக இருந்து இருக்கும். நெறி நூல்கள், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், சமய நூல்கள் என்று பிரித்தது பிழை என்று கருதுகிறேன். இந்த வகைகளை எல்லாம் ஒரு பகுதியில் வைத்துவிட்டு, தொல்காப்பிய நூல் விதி அடிப்படையில் ஒவ்வொரு நூலும் வகைப்படுத்தப்படவேண்டும். இதனால் மக்கள், எந்த நூலை ஏற்கவேண்டும், எந்த நூலை புறந்தள்ள வேண்டும் சென்று அறிந்து இருப்பர். 

பைபிள் எடுத்து பார்த்தால் 60 க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பலவகைப்பட்ட நூல்கள் ஒன்றிணைத்து அத்தியாயமாக குறிப்பிடப்ட்டு ஒரே நூலாக அறியபப்டுகிறது. ஒருவேளை இது நமக்கு நடைபெறாமல் போக இங்கு இருந்த அரசியல் பண்பாட்டு சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஆனால் இதைவிட மோசமான சூழ்நிலையை கடந்துதான் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வந்துள்ளார் எனபதும் எதார்த்தம். இதே நிலைதான் சம்ஸ்கிருத நூல்களுக்கும். 


வேதம் (இறைவனின் வசனங்கள்) கண்ணீரை வரவழைக்கும்.

தமிழர் சமயம் 

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. (தேவாரம் 3320)

 பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் ஊக்குவிக்கும் நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குவது, அனைவருக்கும் தலைவனான சிவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும்.

கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் - சொல்லுதல். நாதன் - தலைவன், அரசன், ஆசிரியன், கடவுள், இறைவன், சிவன், அருகன்
 
இஸ்லாம் & யூதம் 

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (குர்ஆன்  5:83)

 அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள். (அல்குர்ஆன் 19:58)

கிறிஸ்தவம் 
 
..பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக [a] உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர். (நெகேமியா 8:9)

மறைநூல் என்றால் என்ன?

பல சமய புனித நூல்களை சிறிதளவேனும் வாசித்த பிகு வேதம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிய முற்படும் பொழுது கீழ்கண்ட இலக்கணங்கள் வேதங்களுக்கு பொருந்தும் என தோன்றியது.
  1.  முன்னறிவிப்புகள்: பின்வருபவனவற்றை முன்னமே அறிவிக்கக் கூடியது (Prophecy) - உதாரணமாக பின்வரும் சம்பவங்கள் தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள்.   
  2.  கடந்த கால வேதத்தை மெய்ப்பிக்கக் கூடியது: எடுத்துக்காட்டாக, அவ்வையாரின் நன்னூல்,குறளையும், திருமந்திரத்தையும் ஒரே வாக்கு என்று கூறுவதும், ஆபிரகாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் முன் தோன்றிய வேதங்களை குறித்து கருத்துக்களை சொல்வதும், ரிக் யஜுர் சாம வேதங்கள் அதே போல முன் வந்த தூதர்களை பெருமை படுத்துவதும் இதில் அடங்கும்.
  3.  மனிதன் அறியாத உண்மைகளை விளக்குவது: கடவுளின் வரையறை, கடவுள் துதி முறைகள் மற்றும் மனித அறிவுக்கு எட்டாத விதி, சொர்கம் நரகம், உயிர், பிறப்பு இறப்பு தொடர்பான செய்திகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
  4.  நன்மை தீமையை வரையறுப்பது: மனிதனின் வாழ்க்கையில் எவையெவை அறம் எவையெவை  மறம் என்று பிரித்து வரையறுத்து கூறக்கூடியதாகவும், அறம் செய்தால் விளையும் நன்மையையும் மறம் செய்வதால் ஏற்படும் தீமையையும் விளக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஆனால் இந்த வரையறை முறையானதல்ல. இந்த வரையறை குறளுக்கும், தொல்காப்பியத்துக்கு பொருந்துமா? பொருந்தாது.! இவை இரண்டையும் வேதம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வரையறையை ஏற்படுத்த முயன்றதாக நீங்கள் கருதினால் அதில் பிழை ஏதும் இல்லை. 

குறள் ஒரு மறை நூல் என்பது "தேவர் குறளும்.....,மூலர் சொல்லும்....ஒன்றே என்றுனர்" எனும் அவ்வையார் வாக்கிலிருந்து புலப்படுகிறது. ஏனென்றால் மூலர் தனது திருமந்திரத்தில் "வேதம் செப்ப வந்தேனே" என்கிறார். இதன் மூலம் குறள் ஒரு மறைநூலாக இருக்க வாய்ப்புள்ளது.

தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்பதை அறிவோம். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அது எவை எவைக்கெல்லாம் இலக்கணம் சொல்கிறது என்று நாம் அறிந்தால் அதுவும் ஓர் மறைநூல் என்று நாம் கருதாமல் இருக்க முடியாது. 

  • தெய்வம் பாலினமற்றது: தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே - சொல்லதிகாரம் 1:4
  • மறைநூலுக்கான வரையறை: முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  • உலகம் எதனால் ஆனது: நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல். பொருள். மரபியல் - 635)

எனவே மனிதன் அறியாத பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதால் தொல்காப்பியமும் மறைநூல் எனக் கருதலாம். சொல்லும் எழுத்தும் புணரும் விதி உட்பட தொல்காப்பியத்தின் பல சூத்திரங்கள் மனித வாழ்வுக்கும் பொருந்தும் என தொல்காப்பிய அறிஞர்கள் கூறுவார். ஒரு சூத்திரம் பல இடங்களுக்கும், இனங்களுக்கும் பொருந்தும் ஒன்று மறைநூலாக கருதாமல் இருக்க  முடியவில்லை.  

மறைநூலுக்கான வரையறைகளாக பல்வேறு மரபுகளின் கருத்தை காண்போம். 

தமிழர் சமயம்

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
  • வினை-யின்: செயல்-இன் 
  • நீங்கி: அதை நீக்கி (அ) இல்லமால் 
  • விளங்கிய: உணரும் உணர்ச்சி 
  • அறிவு: அறிவு ஞானம் 
  • முனைவன்: முந்தியவன், மூத்தவன் 
  • கண்டது: "எழுதப்பட்டது" என்பது இதற்க்கு பொருந்தாது. ஏனென்றால் மனிதன் எழுத துவங்கும் முன்பே அறிவு நூற்கப் பட துவங்கி விட்டது. எனவே கண்டது என்பதே இங்கே குறிப்பிட சிறப்பான சொல், "எழுதப்பட்டது" என்பது "கண்டது" என்கிற சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. எடுத்துக் காட்டாக, கீதை - பாடல், வேதம் என்பது கீர்த்தனைகளின் தொகுப்பு, அத்-திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது) திருக்குர்ஆன் அழைக்கப் படுகிறது. அகத்தியம் (அகம்+இயம்) என்பதும் அகத்தில் ஒலிப்பது , பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் என்று பெயர். 
  • முதல்: ஆதி, ஆரம்ப, தொடக்க 
  • நூல்: (கோர்வையாக, வரிசைப் படுத்தி) நூற்கப்பட்டது 
வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641)  

வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால்,  முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும்.விக்கி  

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)
  • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
  • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
  • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
  • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அதாவது சிந்த அனுபவத்தில் அல்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அல்து இறைவனிடம் இருந்து போதிக்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதநூல் ஆகும்.

இஸ்லாம்

தமிழர் சமயம் கூறுவது போல "நூல்" (அல் கித்தப் - The Book) என்றும் குர்ஆன் தன்னை அடையாள படுத்துகிறது.

இது, சந்தேகத்துக்கு இடமில்லா அல் கிதாப் (நூல்) ஆகும். பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - (குர்ஆன்  2:2)

குர்ஆன் நூலானது அவரின் அனுபவமன்றி அவருக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் ஆகும். அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். இதில் வஹீ என்பது சில முறைகளில் வழங்கப் பட்டது.

(நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (தேவதூதர்) என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? - (குர்ஆன் 6:50)

1) வஹீயின் மூலமோ 2) திரைக்கப்பால் இருந்தோ அல்லது 3) ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன்:42:51)

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.

    1. வஹீயின் மூலம் பேசுவது - உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக (அசரீரியாகவோ, கனவிலோ ) அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. (திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)
    2. திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது - அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (திருக்குர்ஆன்:4:164.)
    3. வானவர் (ஜிப்ரீல்) மூலம் செய்தியைத் தெரிவிப்பது - என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (திருக்குர்ஆன்:16:2.)

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.  

சுருக்கமாக, முகமது நபி, தான் செய்த வினையின் மூலம் விளைந்த அறிவின்றி, அதாவது அனுபவத்தின் மூலமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கொண்டு குர்ஆனை மக்களுக்கு போதித்தார்.

கிறிஸ்தவம் 

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)

 பௌத்தம்

புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் இருந்தபொழுது ஞானம் கிடைத்தது என்று நாம் படித்துள்ளோம். யாரிடமிருந்து? புத்தமதம் நாத்தீக மதம் என்று சொல்லப்படுகிறது. முதலில் பகுதி தொலைந்த  அரைகுறை தகவல் உள்ள நூலையோ, அதன் முழு வரலாறு அறியாத நிலையிலோ அந்த முடிவுக்கு நாம் வர முடியாது.

முடிவுரை

எனவே மனிதனின் அனுபவ அறிவுமின்றி ஒரு கல்வி எல்லா காலங்களிலும், எல்லா மொழயிலும், எல்லா  நிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனுக்கு வழங்கப் பட்டுக் கொண்டே இருந்து இருக்கிறது. அவைகள்தாம் மறை நூல்களாகும், அவைகள் ஒரே இறைவனிடமுள்ள ஒரே மூல நூலின் சிறு சிறு பகுதிகளாம். 

வேத ஆய்வு நடைமுறை

பொய் வேதங்கள் மூன்று முறைகளில் தோன்றி இருக்க வாய்ப்பு உண்டு 
  • இறைவாக்கில்லாமல் மனிதர்கள் எழுதிய நூல்கள் 
  • இறைவாக்கில் சிலவற்றை சேர்த்தும் சிலவற்றை நீக்கியும் மனிதர்கள் திரிபு செய்த நூல்கள்
  • எழுதப்படாமல் மனனமாக தலைமுறை தலைமுறையாக சொல்வழி கடத்தப் பட்டு மறதியினால் மாற்றப்பட்ட நூல்கள்

யூதர்களின் பொய் வேதம் பற்றி குர்ஆன்


அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தாலமுத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (குர்ஆன் 2:79)

 மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (குர்ஆன் 2:78)

தமிழ் மரபு


வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். - 640

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - 641

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் - 642
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. (தொல்காப்பியம 3:643)

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது

இதன் சுருக்கமான கருத்தானது, ஒரு செயலை செய்து பெரும் அனுபவ அறிவு அல்லாமல், கிடைக்கப் பெரும் அறிவு கொண்டு அறிவில் முந்தியவனால் எழுதப்படும் நூல் முதல் நூலாகும். வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். அதாவது வழிநூலை எழுதும் முனைவன் பிற்காலத்தை சார்ந்தவனாகவும், அக்காலத்தில்புழக்கத்தில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவர். 

இந்த அடிப்படையை கருத்தில் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது மெய்யிலிருந்து பொய்யை பிரித்து எடுக்க இயலும். ஆனால் இதற்கு மொழிப் புலமையும், வரலாற்று புலமையும், தத்துவ புலமையும் மிக மிக  அவசியம். மேலும் திருமந்திரம் உட்பட பலநூல்கள் மேலும் நுணுக்கமாக இந்தவரையரையும் அது அவ்வாறு பிரயோகப்படுத்துள்ளது என்பதை விளக்கமாகவும் நமக்கு தகவல்களாக தருகிறது. அதை மறைநூலின் வரையறையில் தெளிவாக விளக்கியுள்ளோம். 
 

தமிழர் சமயம் கூறும் எழுதா கற்பு


பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்
சொல் உள்ளும்
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.  - (குறுந்தொகை 156 - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.)

குறுந்தொகை பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது  

பொய்யிலிருந்து மெய்யை பிரிப்பதற்கு ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு நடைமுறை உள்ளது. ஆனால் வேதத்திற்க்கான வரையறையை அறிந்து கொள்வதன் மூலம் பொய்யை வடிகட்டுவது மிக எளிது. வெவ்வேறு மரபுகள் என்னென்ன வழிமுறைகளை கையாளுகிறது என்று பார்ப்போம். பிறகு சரியான முறை எதுவென்று பார்ப்போம். 

கிறிஸ்தவ வேத ஆய்வு நடைமுறைகள்

அடிப்படை விதிகள்

    1. வசனம் வசனத்தை விளக்கும்.(அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20)
    2. ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.(2கொரிந்தியர் 13:1, வெளி 11:3)
    3. பூரண வேத ஒத்திசைவு தேடு. கண்டடைவாய். (மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17)
    4. எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே. (1கொரிந்தியர் 4:6, வெளி 22:18)

விரிவான விதிகள்

    • மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்: எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப் பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:
        • செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
        • முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
        • கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
    • முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
    • எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
    • வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். 
    • எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
    • வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது.
    • வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும்.
    • எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்."
குறிப்பு: இந்த கிறிஸ்தவஆய்வு நடைமுறை பைபிளுக்குள்ளேயே ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுகிறதே தவிர உலக வேதங்களோடு ஒப்பீட்டாய்வு செய்ய பயன்படாது.அதிலும் கூட இந்த வழிமுறை முற்றிலும் பிழையானது ஏனென்றால் அடிப்படையிலேயே சில பிழை உள்ளது.
    • இயேசு பேசிய மொழி அராமிக், கிரேக்கம் அல்ல. 
        1. வீட்டஸ் சைரா (பழைய சிரியாக்) , கிரேக்க மொழியிலிருந்து ஆரம்பகால கிளாசிக்கல் சிரியாக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதில் 4 சுவிசேஷங்களின் பெரும்பாலான-ஆனால் அனைத்துமே இல்லை— குரேடோனியன் சுவிசேஷங்கள் மற்றும் சைனாய்டிக் பாலிம்ப்செஸ்ட் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        2. கோடெக்ஸ் கிளைமாசி ரெஸ்கிரிப்டஸ் , கோடெக்ஸ் சினைட்டிகஸ் ரெஸ்கிரிப்டஸ் மற்றும் பிற்கால சொற்பொழிவுக் குறியீடுகள் (வாடிகன் சர். 19 [A]; செயின்ட் கேத்தரின் மடாலயம் பி, சி, டி) போன்ற கையெழுத்துப் பிரதிகளில் கிறிஸ்தவ பாலஸ்தீனிய அராமிக் லெக்ஷனரி துண்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
        3. கிளாசிக்கல் சிரியாக் பெஷிட்டா , ஹீப்ருவின் (மற்றும் சில அராமிக், எ.கா. டேனியல் மற்றும் எஸ்ராவில்) பழைய ஏற்பாட்டின் அராமைக் [ மேற்கோள் தேவை ] ஒரு ரெண்டரிங், மேலும் புதிய ஏற்பாடு அதன் அசல் அராமிக் மொழியில், இன்னும் பெரும்பாலான சிரியாக் தேவாலயங்களில் தரமாக உள்ளது.
        4. தி ஹர்க்லீன் , கிரேக்க மொழியில் இருந்து கிளாசிக்கல் சிரியாக் மொழியில் ஹர்கெலின் தாமஸ் எழுதிய கடுமையான நேரடி மொழிபெயர்ப்பு
        5. அசிரியன் மாடர்ன் பதிப்பு , 1997 இல் வெளியிடப்பட்ட கிரேக்கத்திலிருந்து அசிரியன் நியோ-அராமிக் மொழிக்கு புதிய மொழிபெயர்ப்பு மற்றும் முக்கியமாக புராட்டஸ்டன்ட்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது
        6. மற்றும் பல்வேறு பேச்சுவழக்குகளில் பல சிதறிய பதிப்புகள்
      • எனவே ஒரு மொழியில் உள்ள நூலை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு விதிகள் பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை எந்த பதிப்போடு நாம் சரி காண்பது?. விதிகள் பின்பற்றப்படாத மொழிபெயர்ப்பில் கருத்துக் பிழைகள் நிச்சயம் நிகழும். ஆனால் மூலமே ஆறு வகை என்றால் எப்படி இதை நாம் கையாள்வது?
      • மூலமொழியில் உள்ள அத்தியாயங்களும் வசனங்களும் மொழிபெயர்ப்பு நூலில் உள்ளதா அல்லது சிலவைகள் நீக்கப் பட்டுள்ளதா என்றும் சரிக்கான முடியாது. 
      • மூலமொழியில் உள்ள செய்திகளோடு கூடுதலான வசனங்கள் அல்லது அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டுள்ளதா என்றும் சரிகாண முடியாது. ஏனென்றால் மூலமே இது போன்ற பிரச்சனைகளோடு உள்ளது.
      • உள்ளவைகளை ஆய்வு செய்தால் பெஷிட்டாவின் புதிய ஏற்பாட்டில் 22 புத்தகங்கள் உள்ளன, அவற்றில் யோவானின் இரண்டாவது நிருபம், யோவானின் மூன்றாவது நிருபம், பீட்டரின் இரண்டாவது நிருபம், யூதாவின் கடிதம் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் ஆகியவை இல்லை, அவை ஆன்டிலிகோமெனாவின் புத்தகங்கள். 'மேற்கத்திய ஐந்து' புத்தகங்கள் இணைக்கப்படுவதற்கு முன், கிழக்கு தேவாலயத்தின் புதிய ஏற்பாட்டின் நியதி மூடல் ஏற்பட்டது. அதன் நற்செய்தி உரையில் இயேசு மற்றும் விபச்சாரத்தில் எடுக்கப்பட்ட பெண் (யோவான் 7:53-8:11) மற்றும் லூக்கா 22:17-18 என அறியப்படும் வசனங்களும் இல்லை, ஆனால் 'மார்க்கின் நீண்ட முடிவு' உள்ளது. 
      • இயேசு காலத்தில் பைபிள் நிறைவு செய்யப் படாமல், வெவ்வேறு காலங்களில் அது மாற்றப் பட்டு கொண்டே வந்துள்ளது. ஆனால் அவ்வாறு மாற்றுவதற்க்கு அனுமதி இல்லை என்பதை பைபிளே கூறுகிறது. "எது உண்மையான பைபிள்?" எகின்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாம்

 அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)

 மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (குர்ஆன் 16:44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன். அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி) நூல்: அஹ்மத் 15478

 (நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கடுபட்டவன்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

    1. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
    2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
    3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
    4. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.

ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,

    1. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
    2. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
    3. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    4. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது. 
 

சனாதனம்


முடிவுரை

இதற்கு முன் கிறிஸ்தவமமும் திருக்குறளோடு ஒப்பிட்ட வரலாறும் அதன் மூலம் பிறந்த நூல்களும் இன்றுவரை உண்டு. இதனை ஏற்காத தமிழ் பற்றாளர்கள் சாடி பேசியும் எழுதியும் வருகிறார்கள்

அதேபோல இஸ்லாமியர்களும் உலக வேதங்களோடு தனது வேதத்தை ஒப்புநோக்கி பல நூல்கள் எழுதி வந்துள்ளனர். அவைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இல்லை. 

மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து சமயங்களும்  ஒன்று மற்றொன்றோடு ஒப்பிடப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, 

சில ஒப்பாய்வுகள்:
    1. இஸ்லாம் Vs சைவம்  
    2. குறளும் குர்ஆனும்
    3. சைவமும் குறளும்  
    4. எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்
    5. இசுலாம் தமிழர் சமயம்
    6. கீதையும் குறளும் 
    7. பகவத்கீதையும் திருக்குர்ஆனும்
    8. திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து
    9. கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளும்
    10. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
    11. விஞ்ஞானத்தின் ஒளியில் திரு குர்ஆனும் பைபிளும்
    12. இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்
    13. குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
    14. இஸ்லாமும் இந்துமதமும் 
    15. இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்
    16. இந்து வேதங்களில் இஸ்லாம்
    17. தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு
இதுபோல ஒன்றுக்கொன்று முரணாக அறியப்படும் சமயங்கள் சமய நூல்கள் அவ்வப்போது ஒப்பிடப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்பிட முடிந்த காரணம் இவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வந்தது என்பதாலேயே, இதற்க்கு வேறு ஒரு தர்க்க ரீதியான பதில் இருக்க முடியாது. எனவே வேதங்களுக்கான வரையறை அறிவதன் மூலமும் மற்றும் அவைகளில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை  கொண்டு ஒப்பு நோக்குவதன் மூலமும்  உலக வேதங்களில் உள்ள மெய்யையும் பொய்யையும் தனித்தனியாக தரம் பிரிக்கலாம். அதைத்தான் இந்த நூல் முழு முதற் பொருளாக கொண்டுள்ளது. அதோடு கடவுள் என்கிற கருப்பொருள்  நிலம் சார்ந்த, மொழி சார்ந்த அல்லது காலம் சார்ந்த ஒன்று அல்ல என்பதையம் நாம் உணரவேண்டும்.