தர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிலையான தர்மம் *

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

விளக்கவுரை:
  1. மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், 
  2. கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், 
  3. கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்
எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். 
 

இஸ்லாம் 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
  1. நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா)
  2. பயன்பெறப்படும் கல்வி 
  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3358)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
  1. "ஒருமுஃமினான மனிதன் கற்பித்த கல்வியும்,
  2. (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் ,
  3. அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும்,
  4. (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும்,
  5. அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும்,
  6. வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும்,
  7. அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும்,
  8. அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும்
கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (இப்னுமாஜா : 242)

தர்மம் செல்வத்தை அதிகரிக்கும்.

தமிழர் சமயம்


தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; 
வைத்து வழங்கி வாழ்வார். (ஏலாதி 78)

விளக்கவுரை 

  1. தாயை இழந்த பிள்ளை
  2. தலைமகனை இழந்த பெண்டாட்டி
  3. வாய்ப்பேச்சினை இழந்து ஊமையராய் வாழ்பவர்
  4. வாணிகம் செய்து பொருளை இழந்தவர்
  5. கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர்
  6. கண் பார்வையை இழந்தவர்கள்
ஆகியோருக்குக் கொடுத்தவர்கள் தம் கையில் எப்போதும் பொருள் வைத்துக்கொண்டிருப்பவராக வாழ்வார்கள். கொடையாளி கைக்குப் பொருள் வந்து சேரும். 

இஸ்லாம் 


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (முஸ்லிம் 5047
 

கிறிஸ்தவம் 


பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார். (லூக்கா 6:38)

நேர்மையான வருமானம் மூலம் தர்மம் செய்தல்

இஸ்லாம் 


நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப் படமாட்டீர்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:272
 
நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக் கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 267)  
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.' - அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்  (ஸஹீஹ் புகாரி : 1410)

நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 267)

 

தமிழர் சமயம் 


அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று. - (முதுமொழிக் காஞ்சி 5:8)

சொற்ப்பொருள்: அறத்து ஆற்றின் - அறவழியில்; ஈயாதது - கொடாதது

விளக்கம்: நல்ல வழியில் வராத செல்வத்தைக் கொடுப்பது தர்மமாகாது.


கிறிஸ்தவம் 

உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும்.- (நீதிமொழிகள் 3:9-10)

இவ்வாறு கடினமாக உழைத்து, பலவீனமானவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், 'வாங்குவதை விட கொடுப்பதே பாக்கியம்' என்று கர்த்தராகிய இயேசு கூறியதை நினைவு கூர வேண்டும் என்றும் நான் உங்களுக்கு எல்லாவற்றிலும் காட்டினேன். '" - (அப்போஸ்தலர் 20:35)

தானம் விரும்பி செய்யத்தக்கது

தமிழர் சமயம் 

பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது. - முதுமொழிக் காஞ்சி 4

பொருள் விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகை. அன்றி, விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது. பிறருடைய கட்டாயத்திற்காக, மனம் வருந்திச் செய்யும் ஈகை சிறப்பில்லாதது ஆகும்.

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் -- திருமந்திரம் 85

இஸ்லாம் 

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். - (அல்குர்ஆன் : 3:92)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (13)

கிறிஸ்தவம் 

இதை நினைவில் வையுங்கள்: சிக்கனமாக விதைக்கிறவன் சிக்கனமாக அறுப்பான், தாராளமாக விதைக்கிறவன் தாராளமாக அறுப்பான். நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் இதயத்தில் தீர்மானித்ததைக் கொடுக்க வேண்டும், தயக்கத்துடன் அல்லது நிர்பந்தத்தின் பேரில் அல்ல, ஏனென்றால் கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுப்பவரை நேசிக்கிறார். -  (2 கொரிந்தியர் 9:6-7)

 மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும். - (மத்தேயு 7:12)

 அது சேவை என்றால், பின்னர் சேவை; கற்பிப்பது என்றால், கற்றுக்கொடுங்கள்; ஊக்குவிப்பதாக இருந்தால், ஊக்கம் கொடுங்கள்; கொடுப்பதாக இருந்தால், தாராளமாக கொடுங்கள் ; அது வழிநடத்துவதாக இருந்தால், அதை விடாமுயற்சியுடன் செய்யுங்கள்; கருணை காட்ட வேண்டுமானால் அதை மகிழ்ச்சியுடன் செய். - ரோமர் 12:7-8

தர்மம்



தமிழர் நெறி 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். - குறள் 19

விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் - நல்வழி வெண்பா : 18

விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே. - திருமந்திரம் முதல் தந்திரம் பாடல் எண் : 4

விளக்கம் : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

இஸ்லாம் 

தொழுகையை (தவம்) நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் (தானம்) கொடுங்கள்;  (2.43)

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். [திருக்குர்ஆன் 41:39 ]

 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (முஸ்லிம் 5047)

குறிப்பு : ரம்ஜான் பண்டிகை என்று அழைக்கப்படும் ஈகை பெருநாள் மற்றும் பக்ரீத் என்று அழைக்கப்படும் தியாக திருநாள் என இரண்டு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள். இப்பண்டிகைகள் கொண்டாட்டங்களாக சொல்வது தொழுகை மற்றும் தர்மம் மட்டுமே.

கிறிஸ்தவம் 


நன்மை செய்வதையும், உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதையும் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் இத்தகைய தியாகங்கள் கடவுளுக்குப் பிரியமானவை. – எபிரெயர் 13:16

யாருக்காவது பொருள் இருந்தால், ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேவைப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் கடவுளின் அன்பு எப்படி இருக்கும்? – 1 யோவான் 3:17

இலவசமாகக் கொடுப்பவர்கள் இன்னும் அதிகமாகப் பெறுகிறார்கள்; மற்றவர்கள் தாங்கள் செலுத்த வேண்டியதைத் தடுத்து நிறுத்தி, இன்னும் ஏழையாகி விடுகிறார்கள். – (நீதிமொழிகள் 11:24)

தர்மம் எதற்காக செய்யவேண்டும்?


மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். - நாலடியார் 37

கருத்துரை: நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.

விசேடவுரை: (நீங்கள்) தோன்றா எழுவாய், பண்ணப்படும்- பயனிலை, அறங்களை- செயப்படுபொருள்.

பதவுரை
    மக்களால்= மனிதர்களால்,
    ஆய= உண்டாய,
    பெரும்= பெரிய,
    பயனும்= விளைவும்,
    ஆயுங்கால்= ஆராயுமிடத்து,
    எத்துணையும்= எவ்வளவும்,
    ஆற்ற= மிக,
    பல ஆனால்= பலவாயிருந்தால்,
    தொக்க= பொருந்திய,
    உடம்பிற்கே= உடலுக்கே,
    ஒப்புரவு= தருமத்தை,
    செய்து= பண்ணி,
    ஒழுகாது= நடவாமால்,
    உம்பர்= சுவர்க்கத்தில்,
    கிடந்து= இருந்து,
    உண்ண=அநுபவிக்க,
    பண்ண= தருமங்கள் செய்ய,
    படும்= தகும்.


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம். நாலடியார் 3328

பதவுரை 
சிறுகாலை = இளமை
வல்சி = உணவரிசி
தோள்-கோப்பு = கட்டுச்சோறு

கருத்துரை 
இளமையாக இருக்கும்போதே பிற்காலத்துக்கு (மறுமைக்கு) உதவும் நல்லறப் பொருளைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வெளியூர் செல்வோர் இறுக்கி இறுக்கிக் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வது போலச் சேர்த்து வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். இருக்கும் செல்வத்தை இறுக்கி இறுக்கிப் பிடித்துக்கொண்டு, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பவர் அறிவிர்ராத பேதை ஆவார். அவர் வைத்துக்கொண்டிருக்கும் பொன் பழுக்காத புளிப்புத் தன்மையுள்ள விளாங்காய் போன்றது. விளாங்காய் தின்றால் தொண்டை விக்கும். அப்போது தண்ணீர் பருகினாலும் தண்ணீரும் விக்கும்.

இஸ்லாம் 

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)

கிறிஸ்தவம்

இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.  - (மத்தேயு 19:21)

வறுமையிலும் தர்மம்

தமிழர் சமயம்  


உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை. - (நாலடியார் 185

பொருள்: (மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பொ¢யோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை). 

 

இஸ்லாம்  


தங்களுக்கு இல்லை என்றாலும் தாங்கள் கடுமையான வறுமையில் பட்டினியில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கத்தான் அவர்கள் முன் வருவார்கள். யார் உள்ளத்தின் நப்ஸ் உடைய கஞ்சதனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ  அவர்கள்தான் வெற்றியாளர்கள். (குர்ஆன் 59:9) 

”அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) (நூல்: புகாரி 1413, 6539
 

கிறிஸ்தவம்  

இயேசு நிமிர்ந்து பார்த்தார், பணக்காரர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கை பெட்டியில் வைப்பதைக் கண்டார், மேலும் ஒரு ஏழை விதவை இரண்டு சிறிய செப்புக் காசுகளைப் போட்டதைக் கண்டார். மேலும் அவர், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை அவர்கள் அனைவரையும் விட அதிகமாகப் போட்டாள். ஏனென்றால், அவர்கள் அனைவரும் தங்கள் மிகுதியிலிருந்து பங்களித்தார்கள், ஆனால் அவள் வறுமையிலிருந்து தான் வாழ வேண்டிய அனைத்தையும் செய்தாள். (லூக்கா 21:1-4)