* லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மண்ணறை *

தமிழர் சமயம் 


உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் பாடல் 174.) 
 
உறக்கம்  உணர்வோடு உயிர்ப்பின்மை அற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம் 

பரம் - உயர்ந்த  

உறக்கம், உணர்வு, உயிர் கொடுக்கப்படாமை இவை இல்லாமல் போனால் பிறப்பு இன்றி உயர்ந்த வீட்டைப் பெறலாம். 

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். (ஞானக்குறள் , 11 பிறப்பறுத்தல் 176.)

உடம்பு இரண்டும் கெட்டாலும் உறுபயன் ஒன்று உண்டு
திடம் படும் ஈசன் திறம்.

உறுபயன் - உண்டான பயன் 
திடம் - உறுதி 
திறம் - ஆற்றல் 

உயிருள்ள உடம்பும், இறப்புக்கு பிறகுள்ள உயிரற்ற உடல் இரண்டும் கெட்டு அழிந்தாலும், செய்த வினையின் பயன் உண்டு, அவ்வினைப்பயன் நிலைபெறும் இறைவனின் ஆற்றலினால். 

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 177) 
 
தன்னை அறிந்து செறிந்து அடங்கித் தான் அற்றால்
பின்னைப் பிறப்பு இல்லை வீடு.

தனது நிலையை அறிந்து நிறைவாக அறநூல்களுக்கு கட்டுப்பட்டால்  இறந்த பின் மண்ணறை வாழ்க்கை இல்லை, சுவர்க்கம் மட்டுமே.  
 
செறிந்து - நிறைந்து 
அற்றால் - மரணித்தால்

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 178) 
 
மருள் அன்றி மாசு அறுக்கின் மா தூ வெளியாய்
இருள் இன்றி நிற்கும் இடம். 
 
மருள் = மயக்கம் 
மாசு = குற்றம் 
மா = பெருமை பொருந்திய
தூ = தூய, பரிசுத்தமான 
வெளி  = மைதானம் 

மயக்கமன்றி குற்றங்களை அறுத்தால் பெரிய பரிசுத்தமான மைதானம் போல இருள் இல்லாத இடமாக மண்ணறை மாறும். 
 
(பிறப்பறுத்தல் எனபது மண்ணறை வாழ்க்கையில் துன்பப்படாமையை குறிக்கிறது) 
 

கிறிஸ்தவம் 

பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். - (தானியேல் 12:2)

இஸ்லாம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். (முஸ்லிம் 5503)


தவத்தின் பலன் *

தமிழர் சமயம்

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே. - (மூன்றாம் தந்திரம் - 8. தியானம், பாடல் எண் : 7)

பொழிப்புரை: ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.

இஸ்லாம்

(கடமையானவற்றுடன்) மேலதிகமான தொழுகைகளை கொண்டு எனதடியான் என்பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். நான் அவனை நேசிக்கும் வரை. நான் அவனை நேசித்துவிட்டால், அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆகிவிடுவேன். அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆகிவிடுவேன். அவன் பிடிக்கும் கையாக நான் ஆகிவிடுவேன். அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். (ஹதீதுல் குத்ஸி, புஹாரீ 6502) 
 

முடிவுரை

மனிதன் கடவுளாக முடியும் என்று இவைகள் கூறவில்லை.  மனிதர்களுக்கு இவைகள் கடவுளுடன் அந்த அளவு நெருக்கத்தை கொடுக்கும் என்கிற பொருளில் கூறப்பட்டது.

இறைவன் அனுப்பும் தீர்க்கதரிசிகளுக்கு ஏன் கட்டுப்பட்டு பின்பற்ற வேண்டும்? *

 யூதம் & கிறிஸ்தவம்  

மோசே கூறினார் "அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்." (உபாகமாம் 18:19)

அதற்கு இயேசு, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம். ஆனால் என்னை நேசிக்காதவன், என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற எனது உபதேசங்கள் எல்லாம் என்னுடையவையல்ல. அவை என்னை அனுப்பின எனது பிதாவினுடையவை. (யோவான் 14:23-24)  

இஸ்லாம் 

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமான வையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:24

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். (அல்குர்ஆன் 33:6) 

“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-14)

“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவர் ஆவார். (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற எதையும் விட அதிக நேசத்திற்கு உரியவர்களாக ஆவது. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திருப்பிச் செல்வதை வெறுப்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அனஸ் (ரலி), நூல்: புகாரி-16)

திருமண சடங்குகள் *

தமிழர் சமயம் 


அநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
"கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
"பேரில் கிழத்தி யாகென" தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

(பதவுரை)
உழுந்து - பருப்பு
களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம்
கோள் - கெட்ட கிரகங்கள்
கால் - இடம், சகடம்
திங்களையுடைய நாள் - திருமண நாள்
பொதுசெய் கம்பலை - திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் முதுசெம் 
பெண்டிர் - அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப் பெண்டிர்
முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் 
முறை - முறையாகக் கொடுக்க
புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர்
அலரி - பூ
வதுமை நன்மணம் - வதுவைத் திருமணம்
ஓரில் - சதுர்த்தி அறை
உடன்புணர்தல் - கூடப்புணர்கிற
நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை
கொடும்புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு
சதுர்த்தியறை - நான்காம் நாட் பள்ளியறை  
 
விளக்கவுரை: "எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் "கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!"

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு' என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினை யுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான். 
 
குறிப்பு: சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது. 
 
புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது. 
 
முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய திருமணங்களில் உள்ள -
(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை
(2) புரோகிதர் இல்லை.
(3) எரி ஓம்பல் இல்லை.
(4) தீவலம் இல்லை.
(5) அம்மி மிதித்தல் இல்லை.
(6) அருந்ததி காட்டல் இல்லை.
(7) கோத்திரம் கூறல் 
(8) தாலி முதலியன இல்லை

பெற்றோர் கொடுப்பக் கொள்வதுவே

“கற்பெனப்படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல். பொருள். நூ. 140)
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான” (தொல். பொருள் நூ. 141) 
 
‘கற்பு’ என்று சொல்லப்படுவதே திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே என்கிறார் தொல்காப்பியர். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்தல் தான் கற்புடன் கூடிய திருமணம் என்றும், உடன்போக்கு - பெற்றோர் இசைவில்லாது ஆண், பெண் இருவரும் தாமே மணம் புரிந்து கொள்ளுதல் ஆகிய இரு முறைகளிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.

இந்துமதம் 

இன்று இந்துக்கள் என்று தங்களை கருத்திக்கொள்ளக் கூடியவர்கள் திருமண சடங்குகளாக சிலவற்றை நிகழ்த்து கின்றனர். ஆனால் இந்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

  • கன்னிகாதானம் - பெண்ணை மணமுடித்து தருவதாக ஒப்புக் கொள்வது 
  • தாலி - என்பது திருமணமானதிற்கு அடையாளமாக ஏற்பட்டுள்ள ஓர் லௌகீக சம்பிரதாயமே தவிர தாலி என்பது சாஸ்திரத்தின்படி அவசியமானதல்ல.
பிறகு தாலி புனிதம்,சென்டிமென்ட் என்பதெல்லாம் எப்பொழுது யார் ஏற்படுத்தியது? 
 

 இஸ்லாம் 

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (குர்ஆன் 4:21)

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு (மணக்கொடை - ஆண் பெண்ணுக்கு தருவது) அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும். அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும். இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது. 


அறவோனை அஞ்சும் தீமை *

தமிழர் சமையம்


நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;
மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள். திரிகடுகம் 72

பொருள்: ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். வீரனுக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.

இஸ்லாம் 

ஷைத்தான் கூறும் ஆசைவார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் தீமைகளை வெறுத்து ஒதுக்குவதில் உறுதியாக இருந்தால் ஷைத்தான் நம்மைப் பார்த்து பயப்படுவான். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு இருந்ததால் அவர்களைப் பார்த்து ஷைத்தான் அஞ்சியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.....(அப்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள். - அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி (3294)

அமானிதம் *

தமிழர் சமயம் 


நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார். (திரிகடுகம் 62)

பொருள்: நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.

இஸ்லாம் 


நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன்4:58)

வேதத்தில் ஒன்றை பின்பற்றி ஒன்றை விட அனுமதி இல்லை! *

கிறிஸ்தவம் 

ஒருவன் திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, ஒரேவொரு கட்டளையை மட்டும் மீறினால், அவன் எல்லா கட்டளைகளையும் மீறியவனாக ஆகிவிடுவான். - (யாக்கோபு 2:10)

இஸ்லாம் 

நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து (மற்றும்) சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இதைச் செய்கிறவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. (குர்'ஆன் 2:85)

(நபியே!) ...பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்...” - (குர்ஆன்13:36) 


குறித்த நேரம் வந்துவிட்டால் *

தமிழர் சமயம் 


இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - (நாலடியார், செல்வம் நிலையாமை 6)

கருத்து: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

(பொ-ள்.) இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

இஸ்லாம்  


ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும்.’ (ஆலுஇம்ரான்: 185)

மேலும் கூறுகின்றான்: ‘நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!’ (அந்நிஸா: 78)

மேலும் கூறுகின்றான்: ‘(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எந்த மரணத்தை விட்டும் நீங்கள் விரண்டோடிச் செல்கின்றீர்களோ அம்மரணம் உங்களைச் சந்தித்தேயாகும்.’ (அல்ஜுமுஆ: 08)