சத்குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சத்குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சற்குரு வரைவிலக்கணம் என்ன? சற்குரு மற்றும் சத்குரு இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

சற்குரு என்றால் யார்? 

அவரது பண்புகள் என்ன? 

என்று யோசிக்கும் பொழுது எதோ ஒரு வார இதழில் வந்த துணுக்கை அடிப்படையாக கொண்டு இதற்கு பதில் அளிப்பதை விட, அல்லது எனது சிந்தனை அறிவை சுழற்றிவிட்டு ஒரு பதிலை தருவதை விட இதற்கு தமிழர் சமய, அற, இலக்கண நூல்கள் என்ன கூறி உள்ளது என்று நோக்கும் பொழுது திருமந்திரம் சற்று விளக்கமாக பாடிஇருப்பதை அறிந்து உங்களுடன் பகிர ஆசைப் படுகிறேன்.

சத்குரு என்று சிலர் தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நிலையில் அச்சொல்லுக்கு இலக்கணமாக தமிழர் வேதமமாம் திருமந்திரம் கூறும் விளக்கத்தை காண்போம்.! 

திருமந்திரம் ஏழாம் தந்திரம்

27. சற்குரு நெறி

1 தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன்
தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.

விளக்கம்:
 தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு - ஞானம் தந்து அளிக்கும் தலைவனே சத்குரு;
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன் - ஞானத்தை தருவதன் மூலம் தன்னை அறிய உதவுபவன்;
தாள் தந்து தத்துவ ஆதீதத்துச் சார் சீவன் - 
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே

சொற்ப்பொருள்  தாள் - ஞானம், உணர்வு. 
 

2 தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவித் துயர் தானே.
 

3 கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.
 

4 பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.
 

5 நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
 

6 பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகும் மா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரி மலம் தீர்ந்து சிவகதி ஆமே.
 

7 தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே.
 

8 வரும் வழி போம் வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும் வழியா நந்தி பேசும் வழியைக்
குரு வழியே சென்று கூடலும் ஆமே.
 

9 குரு என்பவனே வேத ஆகமம் கூறும்
பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.
 

10 சத்தும் அசத்தும் சத சத்தும் தான் காட்டிச்
சித்தும் அசித்தும் சிவ பரத்தே சேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச் சுகம் ஆன சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே.
 

11 உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித்
தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே.
 

12 எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே.
 

13 ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித்
தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே.
 

14 அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐம் கருமத்து இடும் தன்மையே.
 

15 ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே.
 

16 மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.
 

17 அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க
இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே.
 

18 ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குரு வாம் இயம்பிலே.
 

யாரெல்லாம் சற்குரு அல்ல..

26. அசற்குரு நெறி 

1 உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேத ஆகம நெறி காணான்
பணி ஒன்று இலா தோன் பர நிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசல் குரு ஆமே.
 

2 மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண் பொருள்
அந்தகர் ஆவோர் அசல் குரு ஆமே.
 

3 ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று
கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே.
 

4 கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற் பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே.

5 குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
 

முடிவுரை:

மக்களுக்கு போதனை வழங்கி அதை தானும் ஒழுகி வருபவர் தான் சத்குரு என பாடல் 1 கூறுகிறது.

அவருக்கு கட்டுப்படும் மக்கள் செய்த வினையை போக்க உதவுபவன், தனது பாதத்தில் விழுந்து மக்கள் வணங்குவதை தவிர்ப்பவன், எமனின் தூதர்களை தவிர வைப்பவன், பிறவித் துயரை நீக்க செய்பவன் சற்குரு ஆவான் என பாடல் 2 கூறுகிறது.

பொய்யான மாயையான வழி அல்லாது, தவறான வழி அல்லாது, நந்தி தேவர் மூலம் பெறப்பட்ட இந்த வேத ஆகமாமான திருமந்திரத்தில் கூறப்படும் வழியே சற்குருவின் வழியாக இருக்கும் என்று பாடல் 8 மற்றும் 9 கூறுகிறது. அதாவது திருமந்திரத்துக்கு முரணாக எந்த கருத்தையும் சற்குரு கூறவோ செய்யவோ மாட்டார் என்று பொருள்.

சற்குரு தான் சமஸ்கிருத மொழி தாக்கத்தில் சத்குரு என்று அழைக்கப்படுகிறது. சர்குரு என்று எந்த சொல்லும் தமிழில் இல்லை.