தூது

சமூகங்களுக்கு இடையே இன்றைய காலகட்டத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு சமூகத்துக்கும் மற்றொரு சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை முன்னிறுத்திச் சிந்திப்பதைவிட, அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்து, அவற்றை உரையாடலின் மூலம் பகிர்ந்து கொண்டு ஏற்றுக்கொண்டு நடப்பதே அமைதியானதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் வழியாகும். நாம் வாழும் நிலப்பரப்பின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, இந்த அமைதியான சமூகச் சூழலையும் நமது பிள்ளைகளுக்குப் பாரம்பரியமாக விட்டுச் செல்லுவது நமது கடமையாகும்.

மறைநூல் ஒப்பீடு ஏன்? அது சரியான வழிமுறையா? 

மனிதன் படைக்கப்பட்டவனா, பரிணமித்தவனா என்கிற இரு தத்துவ அடிப்படை பிரிவில் இக்கட்டுரை மனிதன் படைக்கப்பட்டவன் எனும் கோணத்தில் பயணிகிறது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்றுக்கு நேர் முரணானது. ஆனால் இரண்டையும் இணைத்து ஒரு குழப்பமான கருத்தை இன்றைய ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதாவது மனிதன் ஆரம்பத்தில் குடிகளாக மாறிய பிறகு, கால வோட்டத்தில் சிந்தித்து தேவைகளுக்கு ஏற்ப கடவுள் எனும் கருப்பொருளை உருவாக்கினான் என்பதாகும். ஆனால் மனிதன் படைக்கப்பட்டவன் என்றும் அதற்கான தரவுகளை உலக மறைநூல்களில் உள்ளது என்றும் பல்வேறு தரவுகளை அவைகள் சொல்லுகின்றன. அந்த தரவுகளை எடுத்து ஆராய்ந்து சீர்த்தூக்கி பார்ப்பதன் மூலம் அதன் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். 
 
தமிழ் சமயத்தில் மறைநூல்களாக அறியப்படும் நூல்களையும், இஸ்லாமிய மறைநூலான திருக்குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கமாக அமைந்த நபி மொழியும் ஒப்பிட்டு ஆராய்வதன் நோக்கம், இரு சமூகங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கம் மட்டுமல்ல; அவ்வாறு ஒற்றுமையை தேடி அறிந்துகொள்ளும் பொழுது குறைந்தது இருவருக்கும் பொதுவான அறத்தின் வழி வாழ இவ்விரு மார்க்க வேதங்களுமே வலியுறுத்துவதால் இந்த முயற்சி செய்யப்படுகிறது.

குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 4)

பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது

பொருள்: திருக்குறளை விரும்புவோர்க்கு மறை நூல்களின் விளக்கம் வெளிப்படுவது எளிது. 

குறிப்பு: முதுமொழிக்காஞ்சி-யின் ஆசிரியர் கிபி 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மதுரை கூடலூர் கிழார் ஆவார், இதை 1919-ல் உரையுடன் பதிப்பித்தவர் கே. செல்வகேசவராய முதலியார் ஆவார். அவரின் பொழிப்புரையில் குறள் எனபதற்கு 'கோள் சொல்லுதல்' என பொழிப்புரை எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு அப்படி ஒரு பொருள் இருப்பதாக எந்த ஒரு அகராதியிலும் நிகண்டிலும் இருப்பதாக தெரியவில்லை. குறள் என்பதற்கு (குரு+அள்=குருகிய அளவுடையது) குறுமையானது, சிறியது, சுருக்கமானது என்ற பொருளைதான் காணமுடிகிறது. 
 
எனவே இவ்வாறு முதுமொழி கூறுவதன் காரணம் குறளோடு இன்னொரு மறை நூலை ஒப்பிட அவற்றில் ஒன்று மற்றொன்று ஆதாரமாக, சாட்சியாக, ஒன்றை ஒன்  று நிறுவக்கூடியதாக அமையும் என்பதால். இது தமிழ் மறைகளை மட்டும் ஒப்பிட அனுமதிக்கிறதா? அல்லது மொழி, நிலம் காலம் கடந்து இறைவனால் வழங்கப்பட்ட எந்த மறைநூலையும் ஒப்பிட அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு நல்வழி பாடல் ஒரு கருத்தை கூறுகிறது. 
 
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும்
கோவை திருவாசகமும் திருமூலர் சொ ல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

பதவுரை: தேவர் குறளும் - தேவர் வழங்கிய திருக்குறளும்; திரு நான்மறை முடிவும் - உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் உள்ள வேதங்களாகிய நான்மறையின் சாரமும், மூவர் தமிழும் - (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - இது வல்லாத ஒத்தகருத்துடைய மற்ற நூல்களும், சித்தர் பாடல்களும்; கோவை திருவாசகமும் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருமூலர் சொல்லும் - திருமூலரின் திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று உணர்ந்துகொள்.

இஸ்லாம் குர்ஆனுடன் மற்ற வேதங்களை ஒப்பிட அனுமதிக்கிறதா?

“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள் - (குர்ஆன் 3:64)

குறிப்பு: மேலும் இவ்வாறு வேதங்களை ஒப்பீடு செய்வது ஏன்? என்றும் நான்மறை என்பது உலக வேதங்கள் ஆகும்! எனபதும், சம்ஸ்கிருத வேதமல்ல! என்பதும், திருக்குறள் மட்டுமல்ல! எனபதும் அதற்குரிய தலைப்பில் விரிவாக ஆதாரங்களுடன் எழுதப்பட்டு உள்ளது. எனவே அவற்றை இங்கே விரிவாக எழுதவில்லை.

இந்த அடிப்படை புரிதலோடு இந்த கட்டுரையின் மையக்கருத்தான தூது-வை வாசிப்போம்.

தூது என்பது பொதுவாக இருவரிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ளப் பிறிதொருவரை (அல்லது அஃறிணைப் பொருட்களை) அனுப்புவதாகும். இது, தலைவன்-தலைவியர் இடையேயான காதல், அரசர்களின் அரசியல் உறவு எனப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிந்து வைத்து உள்ளோம்.

அதே வேளையில் ஆபிரகாமிய மாதங்களில் கூறப்படுவது போல இறைத்தூதர் எனும் கருத்து தமிழ் சமயத்தில் உண்டா? என்ற கோணத்தில் நாம் ஆய்வு செய்யவேண்டி உள்ளது. ஏன்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமந்திர தத்துவம் உண்மை என்றால் இறைவன் என்று பேசும் எந்த மொழியாக இருந்தாலும் எந்த மறைநூலாக இருந்தாலும் அந்த சமயம் உருவான முறையில், அதன் அடிப்படை தத்துவத்தில் ஒற்றுமைகள் இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. அந்தவகையில் ஆபிரகாமிய மதங்கள் கூறும் தூதுத்துவம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.

தூது செய்தி எப்படி மக்களுக்கு வருகிறது என்று கூறும் பொழுது இசுலாம் இவ்வாறு விளக்குகிறது.

அல்லாஹ் --> ஜிப்ராயீல் (தேவர்) --> குரு (மனிதர்) --> மனிதர்கள் & ஜின்கள் (அசுரர்கள்)   

தூது செய்தி எங்கு தொடங்கி எப்படி பயணித்து எங்கே முடிகிறது என்பதை மேலுள்ள படம் விளக்குகிறது.

அதற்கான ஆதாரமான பின்வரும் வசனம் கூறுகிறது: 

அல்லாஹ் ஜிப்ராயீல் எனும் தேவர்தூதருக்கு தனது கட்டளைகளை கூறுகிறான். 

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது - (குர்ஆன் 2:97)

அவன் மலக்குகளிடம் (தேவதூதர்களிடம்) வஹீயைக் (தூது செய்தியை) கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். - (குர்ஆன் 16:2)

அந்த தேவதூதர்கள் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு அதை உபேதேசம் செய்கின்றனர்.

மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் (தேவர்கள்) மீதும் சத்தியமாக! - (குர்ஆன் 77:5,6)

இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை. - (குர்ஆன் 19:64)

(நபியே!) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்..- (குர்ஆன் 2:99)
 
முகமது நபி அவரிகளின் பணி அந்த குர்ஆனை மக்களுக்கு போதிப்பதோடு அதை பயிற்றுவிப்பதும் ஆகும். அதை அவர் செவ்வனே செய்து முடித்தார் என்பது வரலாறு.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். - (குர்ஆன் 5:67)

(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (குர்ஆன் 16:44 )

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். (குர்ஆன் 42:48)

(மக்களே!) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? ‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’ (முகமது நபி அவர்களின் இறுதி பேருரை)

அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை.. (குர்ஆன் 53:3,4)
 
அவர் கொடுத்த தூது செய்தியில், குர்ஆனில் வேறு எந்த ஒரு செய்தியை கூட்டுவதும் குறைப்பதும் மற்ற எவருக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது . அதோடு அவரின் உபதேசத்துக்கும் மாற்று விளக்கம் கூறுவதும் தடசைசெய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரின் போதனையின் அடிப்படை பாதுகாக்கப்படுகிறது. கால ஓட்டத்தில் அந்த அடித்தளத்தின் மீது நமது வாழ்வை கட்டி அமைக்கலாம், ஆனால் அந்த அடிப்படைகளை தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் பயணிக்க முடியாது என்கிறது இஸ்லாம். எனவே இறைவனின் தூது செய்தியில் பொய் கலக்காமல் இருக்க என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யபபட வேண்டுமோ அதை இஸ்லாம் தெளிவாக செய்து உளள்து. 
 
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம். - (குர்ஆன் 15:9
 
நபி அவர்களின் சொல் என்பது குர்ஆனுக்கு விளக்கமானது, எனவே அவர் சொன்னானதாக அல்லது செய்ததாக பொய் கூறுவது நரகிற்கு அழைத்து செல்லும். 
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!' நூல்கள் : (புகாரீ -106, முஸ்லிம் 2
 
குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்று உளளதால் அதில் மாற்றம் செய்ய முடியாதவர்கள் அடுத்து நபி அவர்களின் மீது பொய் கூற முயல்வர் அடுத்தது குர்ஆனுக்குஇ மாற்று வியாக்கம் சொல்ல முயற்சி செய்வர் என்பதால் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்க முயல்வர். எனவே அதற்கும் தடை உள்ளது. 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி
 
மேற்சொன்ன வசனத்தில் "அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும்..." என்கிற செய்தி மூலம் தூது என்பது மிக வெளிபபடையான இந்த வேதத்தின் ஆதாரம் என்பது புலப்படுகிறது.

இதே போல வேறு காலத்தில், மொழியில் இடத்தில் இப்படி தூதர்கள் இருந்து இருக்கிறார்களா? குர்ஆன் என்ன சொல்கிறது? 
 
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (குர்ஆன் 16:36) 
 
எனவே இந்த தூத்துவ கட்டமைப்பு தமிழ் சமயங்களில் இருந்ததா? இருந்திருதால் அது இப்பொழுது ஏன் அந்நியமாக தெரிகிறது? என்பதை ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் மறைநூல்கள் இந்த தூது பற்றி என்ன சொல்கிறது?  

பல்வேறு தமிழ் நூல்கள் தூதுப்பற்றி பேசுகிறது. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இதில் நாம் ஆய்வு செய்யும் நூல்கள் எல்லாம் குறைந்தது 2000 ஆண்டுகள் பழமையானவை, அதற்கு பொழிப்புரைகள் அதிகபட்சம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப்பட்டு உள்ளது. எனவே அக்கால இடைவெளி, அரசியல் சூழ்நிலைகள் அஆகியவற்றை கருத்தில் கொண்டு அவைகளை அபப்டியே பயன்படுத்தாமல், அவற்றை அடிப்படியாக கொண்டு, சொல்லுக்கு சொல் அகராதியில் உள்ள பொருளையும் பயன்படுத்தி கொண்டு இந்த ஒப்பீட்டு பணி முன்னெடுத்து செல்லப்படுகிறது. இதுதான் சரியான வழிமுறையாகவும் இருக்கும் என்பதை நாம் சிந்தித்து உணரவேண்டும். 

திருமந்திரம்  

இஸ்லாத்தில் அல்லாஹ் தேவர்களுக்கு மனிதர்களுக்கு போதிக்கும் பொருட்டு வேதத்தை போதித்ததாக அறிந்துள்ள நாம், தமிழர் சமயத்தில் அந்த வழிமுறை உள்ளதா என்று ஆய்வு செய்யும் பொழுது திருமந்திரம் இப்படி சொல்வதை கண்டோம்.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10) 
 
பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் வேதத்தை சொல்பவன் ஈசன் ஆவான்.

குறிப்பு: சிவன் என்பதற்கும், நந்தி என்பதற்கும் சிவபுராணம் அல்லது மற்ற புராணங்கள் கூறிய கதைகளை மறந்துவிட்டு இப்பாடல்களின் விளக்கத்தை நேரடியாக திருமந்திரம் எனும் வேதம் வழியாக தமிழ் சொற்களின் பொருள்களை கொண்டு வாசிக்கும் பொழுதுதான் அதன் உண்மை பொருளை அறிய முடியும்.

இதில் மூவர் யார்?

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. - திருமந்திரம்

குறிப்பு: அசுரர் என்பது மனிதர்கள் அணுகமுடியாத வேறு ஒரு படைப்பு. எனவே நரகாசூரன் பத்மாசூரன் போல சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். 

நால்வர் யார்? 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

மனிதர்களில் நந்தியின் அருள்பெற்ற நாதனை / குருவை நீங்கள் தேடினால், 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியக்ராமர் 4) எண்மர் இந்த நால்வரும் தான் நதிதேவர் ஆவார்கள் என்பதை அறிக. 

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.  
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - திருமந்திரம் 

அந்த நந்தி தேவர் என்பவரை குருவாக ஏற்ற திருமூலர் அவர்கள் மக்களுக்கு குருவாக ஆக்கபட்டதாவகவும், அவர் வழிகாட்ட அந்த வழியை பின்பற்றியதாக அவர் கூறுகிறார். இது முகமது நபி அவர்கள் தேவதூதர் ஜிப்ரியேலின் மூலம் எப்படி தூதுத்துவத்தை பெற்றாரோ அவ்வாறே உள்ளது. 

திருக்குறள் 

திருக்குறளில் கூறப்படும் மன்னன் மற்றும் தூது ஆகிய கருத்துகளை நாம் பெரும்பாலும் அரசியல் அல்லது நிர்வாகக் கோணத்தில் மட்டும் அணுகும் பழக்கம் கொண்டுள்ளோம். ஆனால் வடமொழி அல்லது வடமொழி சார்ந்த சமயச் சிந்தனைகள் இந்நிலத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு, இங்கு நிலவிய தமிழ்சமய மரபில் இந்த நிலத்தை ஆண்ட மன்னன் வெறும் அரசாராக மட்டுமல்ல; அவன் தூதனாகவும் இருந்தான். அதாவது, அவன் அறநெறி மற்றும் மறைநூல் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பொறுப்பையும் ஏற்றிருந்தான்.

மன்னன் மறைநூல் போதிப்பவனாக இருந்தானா?” என்ற கேள்விக்கு திருக்குறளே ஆதாரமாக நிற்கிறது.

எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. - மன்னரோடு சேர்ந்தொழுகல் 695

இக்குறளுக்கான மு. வரதராசன் அவர்களின் விளக்கம்: (அரசர் மறைபொருள் பேசும் போது வேறு) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும் என்பதாகும்.

இதன் மூலம், மன்னனின் கடமை ஆட்சி செய்வதோடு மட்டுமல்ல; ஆன்மீகத்திற்கும் அறநெறிக்கும் அடிப்படையாக விளங்கிய மறைநூலை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும் அவனுக்கிருந்தது என்பது தெளிவாகிறது.

இதை தொல்காப்பியம் மரபியல் இப்படி கூறுகிறது.

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. - தொல்காப்பியம் மரபியல் 71
பொருள்: நூல், கரகம், முக்கோல், மணை ஆகியவை நாலுதொழில்.

நூல்: மறை நூல் (ஓதல்)

கரகம்: தமிழ் மரபில் கரகம் எனபது உயிர், நீர், சக்தி, ஆகியவற்றின் ஒன்று கூடிய குறியீடு.

முக்கோல்: பழந்தமிழ் மரபில், முக்கோல் என்பது அரசன் அல்லது தலைவன் கையில் இருப்பது: 1) அறம் (நீதி), 2) பொருள் (ஆட்சி – ஒழுங்கு), 3) இன்பம் (பாதுகாப்பு – நலன்) என்ற மூன்று தளங்களையும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும்

மணை - உயர்வு, மரியாதை

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. - தொல்காப்பியம் மரபியல் 73

பொருள்: இந்த உரிமைகளை அரசனும் பெறலாம்.

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. - தொல்காப்பியம் மரபியல் 83

பொருள்: அரசாளும் உரிமையும் அந்தணர்க்கு உண்டு.

எனவே வட மொழி பாரம்பரியம் போலல்லாமல் தமிழ் மரபில் அந்தணரும் அரசரும் ஒரே ஆளாக இருக்கமுடியும். அது ஆபிரகாமிய மதங்களோடு இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இசுலாமிய மரபோடு ஒத்துப்போகிறது.

சரி அந்தணனும் அரசனும் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு என்று ஏற்று கொண்டாலும், தூதன் என்பவன் தலைவனாகவோ அரசனாகவோ இருக்கமுடியுமா என்ற கேள்வி எழுகிறது?

பொதுவாக தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அந்தப் பொறுப்பை ஏற்றுச் செல்பவன் தூதன் ஆவான் என்று நாம் புரிந்து வைத்து உள்ளோம். அந்த வரையறை சரியா அல்லது முழுமையானதா என்று நாம் சிந்திக்கே வேண்டிய தருணம் இது. இது இஸ்லாம் கூறும் இறை தூதை குறிப்பிடவில்லையா என்று ஆய்வு செய்வோம்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - குறள் 681

இங்கு தூதனுக்குத் தேவையானவை அன்பு, சிறந்த பண்பு, ஆன்ற குடிப்பிறப்பு எனக் கூறப்படுகின்றன. பண்பு அவசியமான தகுதி, அன்பு இருப்பது கூடுதல் சிறப்பு; ஆனால் ஆன்ற குடிப்பிறப்பு ஏன் அவசியமாக்கப் படுகிறது

இதற்கான விடை, தூதன் வெறும் செய்தியாளன் அல்ல என்பதிலேயே உள்ளது. அவன் மறை கூறும் அறத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறான்; ஆகவே, அவனது சொல், செயல், நின்று பேசும் துணிவு ஒரு மரபின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்த உண்மையை மேலும் தெளிவாக்குவது குறள் 685:

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

மு. வரதராசன்: பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

ஒரு அரசன் தன் தூதனை இன்னொரு அரசனிடம் அனுப்பும்போது, அவனிடம் கொடுக்கப்பட்ட செய்தியில் இருந்து பயனற்றவை” என்று எண்ணி சிலவற்றை நீக்க செய்தியாளனுக்கு அனுமதி உண்டா? இல்லை என்றுதான் நாம் உணர்கிறோம். அதுபோல, அந்த செய்தி கொண்டு செல்வதால் எதிர் தரப்பை மகிழ்விப்பதா, சினமூட்டுவதா என்பது செய்தியின் தன்மையைப் பொறுத்ததே தவிர, தூதனின் சொல்வித்தையால் அல்ல. எனவே, இந்தக் குறள் அரசர்களுக்கிடையேயான அரசியல் தூதை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

தூவாத நீக்கி என்றால்  தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு நபரின் தன்மைக்கு ஏற்ப தேவையற்ற முறைகளை அல்லது விடயங்களை நீக்கி கேட்பவர் நன்மை பெறும் விதமாக, ஆனால் தூதின் அடிப்படை மாறாமல் செய்தியை சுவையாக சொல்லுவது ஆகும். அது தூதர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

குறள் 686 இதை மேலும் வலுப்படுத்துகிறது:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

இங்கு வரும் காலத்தால் தக்கது அறிவதாம் தூது” என்பது, ஓரிரு நாளில் செய்தி சொல்லி திரும்பும் ஒருவனைச் சுட்டவில்லை. மாறாக, அந்த மக்களிடையே தங்கி, அவர்களைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு தொடர்ந்து உபதேசிக்கும் ஒருவனைச் சுட்டுகிறது.

குறள் 688 இல் வரும் தூய்மை, துணைமை, துணிவு என்ற மூன்றும் இதனை உறுதிப்படுத்துகின்றன. தூய்மை ஒழுக்கத்தைக் குறிக்கிறது. ஆனால் துணைமை ஏன்?.

இந்த முழுச் சிந்தனையின் உச்சமாக விளங்குவது குறள் 690:

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

இதை அரசியல் தூதுவாக எடுத்தால் பொருள் பிழை படும். ஆனால் இறைவனின் மறை உண்மையை எடுத்துச் சொல்லும் தூதனாக எடுத்தால், இதன் பொருள் மிகத் தெளிவாகிறது. உண்மையைச் சொல்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், அதற்காக அஞ்சாமல் இறைவனின் சத்தியத்தைப் பேச வேண்டும் என்பதே இக்குறளின் உள்ளடக்கம்.

ஆகவே, தூது அதிகாரம் முழுவதையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது, இது

    • மறை நூல்களை தூது கூறும் தூதரைப் பற்றியதாகவும்
    • அரசியல் தூதர் மறைத் தூதர் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அடிப்படை குணங்களை வரையறுக்கும் அத்தியாயமாகவும் விளங்குகிறது.

இதுவே திருக்குறள் காட்டும் தூது —

செய்தி அல்ல; சத்தியம்.

பணியல்ல; பொறுப்பு.

அரசியல் அல்ல; அறம்.


2 கருத்துகள்:

  1. 33:7. (நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.

    7:79. (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார்.

    7:93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.

    11:57. நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவன். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்'' என்றும் கூறினார்.)

    29:18. (இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை.

    21:109. (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக.

    36:17. “எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்.)

    24:54. (மேலும்) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)து தான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தான் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை.
    5:92. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

    5:99. நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.

    பதிலளிநீக்கு
  2. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்ஆன் 2:101)

    அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே,) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கிறது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (குர்ஆன் 6:157)

    பதிலளிநீக்கு