தீமையை போக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீமையை போக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தீமையினை நன்மையினாலே வெல்

தமிழர் சமயம் 


தீமையை போக்குவது நல்லறத்தின் இயல்பு

வினைஉயிர் கட்டுவீடு இன்ன விளக்கித்
தினைஅனைத்தும் தீமைஇன்று ஆகி - நினையுங்கால்
புல் அறத்தைத் தேய்த்துஉலகி னோடும் பொருந்துவதாம்
நல் அறத்தை நாட்டும் இடத்து. (அறநெறிச்சாரம் பாடல் - 8)

விளக்கவுரை: ஆராயுமிடத்து நல்ல அறத்தினை நிலைநிறுத்த எண்ணினால் அந்த நல்ல அறமானது வினையும் உயிரும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இத்தகையவற்றை நன்கு உணர்த்தி தினை அளவும் குற்றம் அற்றதாய்ப் பாவச் செயல்களை அழித்து உயர்ந்தவர் ஒழுக்கத்தோடும் பொருத்தமுற்றதாகும்.

தருமம் செய்யப் பாவம் போகும்

செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப் பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். ஆதலால், தருமஞ் செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர்களுக்கும் அவர்கள் செல்லும் மறுமை உலகத்தின் கண் அதனால் நன்மை உண்டாகும்.

அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'. (பழமொழி நானூறு 23)

அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடைவார்கள். 'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து.

நல்வினைகள் தீவினையை அழிக்கும் 

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது. (நாலடியார் 51)

(இ-ள்.) விளக்கு புக - தீபமானது (ஓரிடத்தில்) பிரவேசிக்க, இருள் மாய்ந்து ஆங்கு - இருட்டு அழிவது போல், ஒருவன் தவத்தின் முன் - ஒருவன் செய்த தவம் விளங்குமிடத்து, பாவம் நில்லாது - பாவச் செய்கைகள் நிற்கமாட்டா; விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் எண்ணெய் முதலியவை குறைந்து போகுமிடத்து, இருள் சென்று பாய்ந்து ஆங்கு - இருட்டுப் போய் பரவுவது போல, நல்வினை தீர்விடத்து - புண்ணிய காரியங்கள் நீங்குமிடத்திலே, தீது நிற்கும் - பாவச்செய்கை வந்து பிரவேசிக்கும், எ-று. ஆம் இரண்டும் - அசை.

விளக்கம்: விளக்கின் முன் இருள் கெடுவதுபோலவும் விளக்கினெய் குறையக் குறைய இருட்டு பரவுவது போலவும் புண்ணிய காரியஞ் செய்து வரப் பாவகாரியம் நாசப்படும், புண்ணிய காரியம் தேய்ந்துவரப் பாவகாரியம் வந்து சேரும் என்பதாம். எனவே ஒருவன் இடைவிடாது நற்காரியஞ் செய்துவந்தால் பாவகாரியம் புக இடம்பெறாது நீங்கும். இடைவிட்டுச் சும்மாவிருந்தால் பாவத்திற்கு இடமுண்டாகும் என்பது கருத்து. 
 

இஸ்லாம் 


நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். - (குர்ஆன் 41:34)

இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள். (குர்ஆன் 28:54)

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 25:70.)

கிறிஸ்தவம் 

பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள். - (ரோமர் 12:21)