சினம்

தமிழர் சமயம்  


உழந்துஉழந்து கொண்ட உடம்பினைக்கூற்று உண்ண
இழந்துஇழந்து எங்ஙணும் தோன்றச் - சுழன்று உழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால், நல் நெஞ்சே
செற்றத்தால் செய்வது உரை. - (அறநெறிச்சாரம் பாடல் - 66)

பொருள்: விளக்கவுரை நல்ல மனமே! பலமுறை முயன்று நாம் அடைந்த உடலை இயமன் கவர்ந்து கொண்டு போக எவ்விடத்தும் பிறத்தலால் உலக வாழ்வில் நம்மொடு கூடிச் சுழன்று திரிந்த மக்களுள் உறவினர் அல்லாதவர் வேறு எவரும் இலர். அங்ஙனமேல் பிறர்மாட்டுக் கொள்ளும் சினத்தால் செய்யக் கூடியது யாது? கூறுவாய்!

இஸ்லாம்


பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (குர்ஆன் : 3:134)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (புகாரி : 6114)

கிறிஸ்தவம் 

வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது. - (நீதிமொழிகள் 16:32)


 

10 கருத்துகள்:

  1. வெகுளியை விட்டவர் வீடு பெறுவர்
    அறநெறிச்சாரம் பாடல் - 205

    சுட்டுஎனச் சொல்லியக்கால் கல்பிளப்பில் தீயேபோல்
    பொட்டப் பொடிக்கும் குரோதத்தை - வெட்டெனக்
    காய்த்துவரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
    மோக்க முடிவுஎய்து வார்.

    விளக்கவுரை தம்மை மற்றவர் சினந்து வன்சொற்களைக் கூறியபோதும், கடுகடுத்துத் தம்மைத் தாக்குதற்கு வரக்கண்டபோதும், கல்லை உடைக்கும்போது அதில் தோன்றும் தீயைப் போன்று விரைவாகத் தோன்றும் சினத்தை மேலே எழாதபடி அடக்க வல்ல ஆற்றல் உடையவரே வீட்டின்பத்தை அடைபவர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
    பிறத்தல் அதனான் வரும்
    (அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303)

    பொழிப்பு (மு வரதராசன்): யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  3. உலகி நீதி

    சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் (21)

    சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம் (22)

    பதிலளிநீக்கு
  4. மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
    ஏதம் பலவும் தரும்
    (அதிகாரம்:உட்பகை குறள் எண்:884)

    பொழிப்பு (மு வரதராசன்): மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.

    மணக்குடவர் உரை: மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின் தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம். இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.

    பரிமேலழகர் உரை: மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
    (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)

    தமிழண்ணல் உரை: மனம் மாட்சிமைப்படாத உட்பகை ஒருவனுக்கு அவனது ஏனைய சுற்றத்தையும் மாட்சிமைப் படாமல் செய்து, அச்சுற்றத்தாரது பகையை வளர்த்துத் துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்கும். சுற்றத்தார் அவனை நம்பாமலும் அவன் சுற்றத்தாரை நம்பாமலும் ஆகி, அதனால் பல துன்பங்கள் விளையும்.

    பதிலளிநீக்கு
  5. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
    (அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:130)

    பொழிப்பு: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

    மணக்குடவர் உரை: வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்.
    இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

    பரிமேலழகர் உரை: கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெறியின்கண் சென்று.
    (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)

    வ சுப மாணிக்கம்: உரை: உள்ளக் கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு அறம் காத்துக் கிடக்கும்.

    http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0130.aspx

    பதிலளிநீக்கு
  6. துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோக்கிற் பவர்
    (அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0159)

    பொழிப்பு: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

    மணக்குடவர் உரை: மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்.
    இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

    பரிமேலழகர் உரை: துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
    (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

    இரா சாரங்கபாணி உரை: நெறிகடந்தவர் வாயிலிருந்து வரும் வசைமொழிகளைத் தாங்கிக் கொள்பவர் துறவிகளினும் தூயவராவர்.


    பொருள்கோள் வரிஅமைப்பு:
    இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார் .


    துறந்தாரின் தூய்மை உடையார்:
    பதவுரை: துறந்தாரின்-பற்றற்றவர் போல; தூய்மை-நன்மை; உடையார்-பெற்றுள்ளார்.

    http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0159.aspx

    பதிலளிநீக்கு
  7. கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய
    மதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால்,
    கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்த
    நாய் வாயுள் நல்ல தசை. 15

    கதம் - கோபம்
    கழிய - மிக்க

    நற்குணமில்லாதார் முன்பு கோபம் நல்லது, அங்குச் சான்றான்மை தீது. மிக்க வலி செய்தல் நன்று. கீழ்மக்களுக்குக் கொடுக்கும் உணவு நாயின் வாயிற் கொடுத்த மாமிசத்தை விட நல்லதாகும்.
    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  8. மூன்றாம் தந்திரம் - 8. தியானம் பாடல் எண் : 5

    மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
    சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
    அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
    மனத்து விளக்கது மாயா விளக்கே.

    பொழிப்புரை : மனதில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10308

    பதிலளிநீக்கு
  9. மூன்றாம் தந்திரம் - 8. தியானம் பாடல் எண் : 6

    எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
    உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
    கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

    பொழிப்புரை :நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.

    பதிலளிநீக்கு
  10. நீதிமொழிகள் 331 சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே. 32 ஏனென்றால் கெட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார்.

    பதிலளிநீக்கு