ஆத்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆத்மா (அ) உயிர்

தமிழர் சமயம்


உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?
உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?
உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது? 

ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பது போலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர். 
 
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...' (பாடல் 724)

உடல் அழிந்து விட்டால், உயிரும் உடலை விட்டு நீங்கி விடும்.பின், உயிருக்கு உற்ற துணையான, மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருளை சேர முடியாது. அதனால் உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்பது பொருள்.

எல்லோரும் உடம்பை சதைப் பிண்டம், உடல் தேவையற்ற பாரம் என்றே பாடியிருக்கிறார்கள்.

அழுகணிச் சித்தர்,

"ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ...'

என, உடம்பை துர்நாற்றம் வீசுகிற "ஊற்றைச் சடலம்' எனக் குறிப்பிட்டார். ஆனால், திருமூலரோ "உடலைப் பாதுகாக்க வேண்டும்' என்கிறார். அடுத்த பாடலில்,

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' (பாடல் 725)

எனப் பாடுகிறார்.

இந்த உடம்பை பாவச்சுமை, இழுக்கானது என நினைத்திருந்தேன். இந்த உடம்பில் பரம்பொருள் இருப்பதை அறிந்தேன். உடம்புக்குள் உத்தமனாகிய பரம்பொருள் கோயில் கொண்டிருப்பதால், உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வருகிறேன் என்கிறார்.

நம் உடம்பை நல்லபடியாக வளர்த்து, பேணிப் பாதுகாத்தல் அவசியம். ஏனெனில் அது இறைவன் வசிக்கும் இடம்.

உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?

சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர். 

கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.

உடம்பை வளர்ப்பது என்றால் நன்றாகத் தீனி போட்டு வளர்ப்பது, விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வது என்று பொருள் அல்ல... இறைவனின் வசிப்பிடம் என்பதை உணர்ந்து, அதைத் தவறாக பயன் படுத்தாமல், நல்ல நெறிகளின் படி வாழ்வது, ஆரோக்கியமாக வைத்திருப்பது என்றே பொருள். 

 

இந்துமதம்


அவ்யக்தோ யமசிந்த்யோ யமவிகார்யோ யமுச்யதே ।
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோ சிதுமர்ஹஸி ।। கீதை 25

இந்த ஆத்மாவானது புலன்களால் அறிய முடியாதது, சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என சொல்லப்படுகிறது. ஆத்மாவை இவ்விதம் அறிந்து துயரத்தை அகற்று.

 

இஸ்லாம்


(நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. - (குர்ஆன் 85)

 செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன். - (குர்ஆன் 2:173)

 

கிறிஸ்தவம்


உயிரின் ஊற்று நீங்கள்தான்(சங்கீதம் 36:9)

ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது. -  (உபாகமம் 12:23)

ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. - (லேவியராகமம் 17:11)