தமிழர் சமயம்
'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,விருந்தில்லா வீடு விழல்' - ஔவையார் தனிப்பாடல்கள்பொருள்: செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்கற்புடையாள் பூண்ட கடன். திரிகடுகம் 64பொருள்: விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.
வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,வாளால் மண் ஆண்டு வரும். ஏலாதி 48
பொருள் பழிதருஞ் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.
இஸ்லாம்
“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்” என்று கேட்டார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் (அபூதல்ஹா (ரலி) எழுந்து) , “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, “(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னார்.
அதற்கு அவர் (உம்மு சுலைம்) மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், “(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாüக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்” என்று சொன்னார்.
அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தüத்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், “இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் “வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) “சிரித்துக்கொண்டான்’ என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்…” எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4889)
கிறிஸ்தவம்
தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். - தீத்து 1:8
என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார். என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம். - உன்னதப்பாட்டு 2:4