ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமேசென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்துநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - (திருமந்திரம் 2104)
பதவுரை
ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.
ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது
நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.
நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே = வெட்கப் படாமல்
சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை
நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்
பொருளுரை
ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோர் அன்னசாதலும் புதுவது அன்றே வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்இன்னா தென்றலும் இலமே மின்னொடுவானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமேசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - புறநானூறு : 192
பதவுரை
யாதும் – அனைத்தும்; ஊரே - நமது ஊர் தான்
யாவரும் – அனைவரும்; கேளிர் - நமது உறவினர்
தீதும் - தீயவையும் (நமக்கு நேரும் தீமையும்)
நன்றும் - நல்லவையும் (நம்மைச் சேரும் நன்மையும்)
பிறர்தர - பிறர் தருவதால்; வாரா – வாராது, வருவதல்ல
நோதலும் - வருந்துவதும்
தணிதலும் - அது தீர்வதும்
அவற்றோர் - அவற்றை, முன் சொல்லியவற்றை
அன்ன - போல (உவம உருபு)
சாதலும் - சாவது
புதுவது - புதிது
அன்றே (அன்று + ஏ): அன்று - இல்லை
வாழ்தல் - வாழ்தல்
இனிதுஎன - இனியது என
மகிழ்ந்தன்றும் – மகிழ்வதும்; இலமே - இல்லை
முனிவின் - வெறுப்பு ஏற்பட்டு (முனிவு - வெறுப்பு, வருத்தம்)
இன்னாது - துன்பம் மிக்கது (வாழ்வு துன்பம் மிக்கது)
என்றலும் - என்று சொல்வதும்; இலமே - இல்லை
மின்னொடு - மின்னலுடன்
வானம் - வானம்
தண்துளி: தண் - குளிர்ந்த; துளி - மழைத்துளி
தலைஇ - பெய்வதால் (தலைதல் - மழைபெய்தல்)
ஆனாது – விடாமல், தொடர்ந்து
கல்பொருது - கல்லுடன் மோதி (பொருதுதல் - மோதுதல், போர்செய்தல்)
இரங்கும் - ஒலிக்கும் (இரங்குதல் - ஒலித்தல்)
மல்லல் - வலிமை மிக்க
பேர்யாற்று (பெரிய + ஆற்று) - பெரிய ஆற்றின்
நீர்வழி - நீரின் ஓட்டத்தின் வழியே
படூஉம் – செல்லும், பயணப்படும்
புணைபோல - மிதவை போல (புணை - தெப்பம்)
ஆருயிர் (அருமை + உயிர்) - இந்த அரிய உயிர்
முறைவழி - விதியின் வழியே
படூஉம் - செல்லும், பயணப்படும்
என்பது - என்பது
திறவோர் - திறம் கொண்டு அறிந்தோர் (பகுத்தறிந்தோர்)
காட்சியின் - நூலின் மூலம், தந்த அறிவின் மூலம்
தெளிந்தனம் - தெளிவு பெற்றோம்
ஆகலின் - ஆனதால்
மாட்சியின் - பெருமை மிக்க
பெரியோரை - பெரியவர் என்று
வியத்தலும் - வியந்து அடிபணிவதும்; இலமே - இல்லை
சிறியோரை - சிறியோர் என்று
இகழ்தல் - இகழ்ந்து பழித்தல்
அதனினும் - அதனை விட (பெரியோர் என அடிபணிதலை விட)
இலமே - இல்லை
பொருளுரை
அனைத்தும் நமது ஊர் தான்; அனைவரும் நமது உறவினரே. நமக்கு நேரும் தீமையும், நம்மைச் சேரும் நன்மையும் பிறர் தந்து வருவதல்ல; நாம் எற்படுத்திக் கொள்வது. அதுபோல் தான் நமது துயரமும், அதன் தீர்வும். சாவும் புதிது அல்ல; நமது பிறப்பின் பொழுதே உறுதியாகிவிட்ட ஒன்று. வாழ்வதே இனிது என்றோ, வாழ்வின் இனிமையான பொழுது நிலையானது என்றோ மகிழ்வதும் இல்லை; வெறுப்பு ஏற்பட்டு இந்த வாழ்வு துன்பம் மிக்கது என்று சொல்வதும் இல்லை. மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால் முடிவில்லாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே செல்லும் மிதவையைப் போல இந்த அரிய உயிரும் விதியின் வழியே செல்லும் என்பது திறம் கொண்டு பகுத்தறிந்தோர் தந்த அறிவின் மூலம் தெளிவு பெற்றதனால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் வியந்து அடிபணிவதும் இல்லை; அதைவிட, சிறியோர் என்று யாரையும் இகழ்ந்து பழித்தலும் இல்லை.
இஸ்லாம்
இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் (என்றும் கூறினோம்). - (குர்ஆன் 23:52)உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். (குர்ஆன் 21:92)(ஆரம்பத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தோன்றவே) நேர்வழியில் செல்வோருக்கு நற்செய்தி அறிவிப்போராகவும், (தீயவழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் தனது தூதர்களை அனுப்பி வைத்தான். மேலும், மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விசயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காக சத்திய வேதத்தையும் தன்இறைதூதர்களுக்கு அல்லாஹ் அருளினான்.'' (அல்குர்ஆன் 2:213)மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். - (அல்குர்ஆன் 49:13)
கிறிஸ்தவம்
நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும். - ஆதியாகமம் 9:8&9
முடிவுரை
கிறிஸ்தவத்தில் இஸ்லாத்திலும் உள்ள "மனிதன் படைக்கப் பட்டவன்" என்கிற கருத்தும் "குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல" என்கிற கருத்தும் பல காரணங்களால் விமர்சிக்கப்படுகிறது. அதில் ஒன்று, ஒரே ஜோடியிலிருந்து எப்படி மனித இனம் பெருகியது? சகோதரர்களும் சகோதரிகளும் மணமுடித்தால் தான் இது சாத்தியம். இந்த நடைமுறை மனித ஒழுங்குக்கும் சிந்தனைக்கும் மாற்றமாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது தான் அது.
ஆனால் அனைத்து பண்பாட்டின் ஆரம்ப கால நூல்களும் இவ்வாறுதான் சொல்கிறது. அனைவரும் உறவினர்கள் என்பதும், ஒரே குலத்தை சார்ந்தவர்கள் என்பதும் எப்படி சாத்தியம்? எனவே ஒழுக்கம் என்பதும் அறம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும் ஆனால் அது இறைவனால் வகுக்கப் படுமே தவிர மனிதர்களால் அல்ல.
(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:38)
மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். (திருக்குர்ஆன் 2:213)
(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். (திருக்குர்ஆன் 2:4)
“...உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.” (திருக்குர்ஆன் 23:50)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பதிலளிநீக்குபகவன் முதற்றே உலகு
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)
பொழிப்பு (மு வரதராசன்): எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
பதிலளிநீக்குசெய்தொழில் வேற்றுமை யான்." (குறள். 972)
"தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
பதிலளிநீக்குவெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே." (புறம்.189)
"நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்." (நாலடி.195)
"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே." (கபிலர் அகவல்)
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக இறைவனிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
பதிலளிநீக்கு