பத்துக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பத்துக்கட்டளை *

முதல் கட்டளை: என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்

கிறித்தவம் & யூதமதம் 

உன் தேவனாகிய கர்த்தர் நானே; என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். (யாத்திராகமம் 20: 2,3) (உபாகமம் 5: 6,7) 

இஸ்லாம் 

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன்:2:163)

தமிழர் சமயம் 

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - (திருமந்திரம் 5)

கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.

இரண்டாம் கட்டளை: எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது


கிறித்தவம் & யூதமதம் 

நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். (யாத்திராகமம் 20: 4,5) (உபாகமம் 5: 8,9) 
 
இஸ்லாம் 

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப் படுவீர்கள். (குர்ஆன் 29:17)

தமிழர் சமயம்

மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந்திரம் 2614)

பொருள்: மாடத்தில் இல்லை, மண்டபத்தில் இலை, கூடத்தில் இல்லை, கோவிலில் இல்லை, வேடத்தில் (உருவம்,  இன்று சொல்லப்படும் சிவன் என்னும் கதா பாத்திரம், லிங்கம், அல்லது ருத்ராட்சை போன்ற பொருள்களில்) இல்லை. அவன் ஆசை இல்லாதவர் நெஞ்சில் இருக்கின்றான், அவனே முக்தி தருகிறான்.

மூன்றாம் கட்டளை: கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தாதே 


கிறித்தவம் & யூதமதம்  
 
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார். (யாத்திராகமம் 20: 7) (உபாகமம் 5: 11)

பொருள்: கடவுளின் பெயரில் பொய்யாகப் பேசும் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தடையால் இந்த விளக்கம் ஆதரிக்கப்படுகிறது, இதற்கு மரண தண்டனை தேவை (உபாகமம் 13:1-5) 
 
இஸ்லாம் 

அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும்” (அல்-குர்ஆன் 10:69

தமிழர் சமயம் *

-

நான்காம் கட்டளை: ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

கிறித்தவம் & யூதமதம் 

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது.. (யாத்திராகமம் 20: 8-10) (உபாகமம் 5: 12) 
 
இஸ்லாம் 

மேலும் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1549)

 ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (குர்ஆன் 62:9)

தமிழர் சமயம் *


ஐந்தாம் கட்டளை: உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும்

கிறித்தவம் & யூதமதம் 

உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும். (யாத்திராகமம் 20: 12) (உபாகமம் 5: 16) 
 
இஸ்லாம் 

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்திருக்கிறோம்.. (குர்ஆன் 29:8) 

தமிழர் சமயம் 

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல் (மக்கட்பேறு குறள் எண்:70)

பொழிப்பு (மு வரதராசன்): மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..

ஆறாம் கட்டளை: கொலை செய்யாதிருப்பாயாக.

கிறித்தவம் & யூதமதம் 

கொலை செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 13) (உபாகமம் 5: 17) 
 
இஸ்லாம் 

( கொலையை ) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால் , அவருடைய வாரிசுக்கு ( பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம் ; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதில் வரம்பு கடந்து விடக் கூடாது ; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு ( நீதியைக் கொண்டு ) உதவி செய்யப் பட்டவராவார். (அல்குர்ஆன் 17:33)

தமிழர் சமயம் 

கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே (திருமந்திரம் 554)

பொருள்
கொல்லாமை
பொய் கூறாமை
களவு செய்யாமை
எண்ணத்தகுந்த நற்குணம் கொண்டிருத்தல்
நல்லவன் ஆதல் 
அடக்கம் உள்ளவன் ஆதல் 
நடுவு நிலையைப் பின்பற்றுதல் 
வல்லவன் ஆதல் 
பகுத்து உண்ணல் 
குற்றமற்றவன் ஆதல் 
கள் உண்ணாமை
காமம் இல்லாமை - ஆகியவை இயம நெறிகள்.  

ஏழாம் கட்டளை: விபசாரம் செய்யாதிருப்பாயாக.

கிறித்தவம் & யூதமதம் 

விபசாரம் செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:14) (உபாகமம் 5:18) 
 
இஸ்லாம் 

மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது. (குர்ஆன் 17:32
 
தமிழர் சமயம் 

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. (திருமந்திரம் 251)

(ப. இ.) முறையாக மணந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும், நன்னெறிக்கும் துணைபுரியத்தக்க நன்மக்களைப் பெறுவதே இல்வாழ்க்கையாகிய நற்றவப் பயனாகும். அதற்கென அமைக்கப்பட்டதே விந்துவாகிய வித்து. அவ் விந்து கோழை எனப்படும். அவ்விந்துவை முறை கடந்த பெண்பால் தீ யொழுக்கமாகிய மாசு மூடிக் கிடக்கும் குளமாகிய கருக்குழியில் ஒழுக்கி நட்டு வாழ ஆராய்வார்களை நல்லோர் தடுத்து ஒறுத்து வழி நிறுத்துதல் வேண்டும். அங்ஙனம் தடுக்காவிட்டால் அத் தீயோர் பாவப்புகும்வழி நுழைந்து தமக்கும் பிறர்க்கும் வரவேண்டிய நற்பயனை இழப்பித்து மாள்வர். 

(அ. சி.) கோழை - விந்து. குளம் - கருப்பை. பாசி - மாசு. அளப்புறுவார் - ஆராய்வார். தாழ - தடைப்பட. பூழை - புகும்வழி. 
 

எட்டாம் கட்டளை: திருடாதே 

கிறித்தவம் & யூதமதம் 

களவு செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 15) (உபாகமம் 5: 19)

இஸ்லாம் 

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். (குர்ஆன் 5:38)

தமிழர் சமயம் 
 
கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே (திருமந்திரம் 554)

பொருள்
கொல்லாமை
பொய் கூறாமை
களவு செய்யாமை
எண்ணத்தகுந்த நற்குணம் கொண்டிருத்தல்
நல்லவன் ஆதல் 
அடக்கம் உள்ளவன் ஆதல் 
நடுவு நிலையைப் பின்பற்றுதல் 
வல்லவன் ஆதல் 
பகுத்து உண்ணல் 
குற்றமற்றவன் ஆதல் 
கள் உண்ணாமை
காமம் இல்லாமை - ஆகியவை இயம நெறிகள்.   
 

ஒன்பதாம் கட்டளை: பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

கிறித்தவம் & யூதமதம் 

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத்திராகமம் 20: 16) (உபாகமம் 5: 20)

இஸ்லாம் 

 அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்)

தமிழர் சமயம் 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை (நல்வழி வெண்பா:23)

விளக்கம்: வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

கண்டொன்று சொல்லேல் (ஆத்திசூடி 14)

பத்தாம் கட்டளை: பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.


கிறித்தவம் & யூதமதம் 

பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 17)

இஸ்லாம் 

மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள். (குர்ஆன் 2:188)

தமிழர் சமயம் 

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (குறள் 178)

 பொருளுரை: ஒருவன் தன்னுடைய செல்வம் குறையாதிருப்பதற்கு வழி எது என்றால் பிறனுக்கு உரிமையான செல்வத்தை விரும்பாது இருத்தல் ஆகும்.