நல்லொழுக்கம்

தமிழர் சமயம்


நல்லொழுக்கமே முத்திக்கு விதை

இருளே உலகத்து இயற்கை; இருள் அகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை; - கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத்து அருள்உடைமை,
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவு 
இல்லா மேல் உலகம் எய்துபவர். (அறநெறிச்சாரம்-193)

விளக்கவுரை இவ்வுலகம் அறியாமை என்னும் இருள் நிறைந்ததாகும். ஞான நூல்களைக் கற்றதால் ஏற்பட்ட அறிவுடைமை அந்த இருளைப் போக்கும் கைவிளக்கே ஆகும். மனத்தில் உள்ள அருள் அந்த விளக்கை ஏற்றுவதற்குரிய நெய் ஆகும். நெய்க்குக் காரணமான பால் போன்ற ஒழுக்கத்தை உடையவரே துன்பம் அற்ற வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்.

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை குறள்134)

பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

இஸ்லாம் 


நபி (ஸல்) அவர்கள் "நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது" என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)

கிறிஸ்தவம் 


அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான். - நீதிமொழிகள் 5:23

 அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய். - நீதிமொழிகள் 19:20

எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது. - நீதிமொழிகள் 8:10

4 கருத்துகள்:

  1. 14. ஒழுக்கம் உடைமை

    குறள் 131:
    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்

    மு.வ உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

    குறள் 132:
    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.


    மு.வரதராசன் விளக்கம்:
    ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்

    குறள் 133:
    ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.


    மு.வரதராசன் விளக்கம்:
    ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

    குறள் 134:
    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


    மு.வரதராசன் விளக்கம்:
    கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

    குறள் 135:
    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.


    மு.வரதராசன் விளக்கம்:
    பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

    குறள் 136:
    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.


    மு.வரதராசன் விளக்கம்:
    ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

    குறள் 137:
    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.


    மு.வரதராசன் விளக்கம்:
    ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

    குறள் 138:
    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.


    மு.வரதராசன் விளக்கம்:
    நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

    குறள் 139:
    ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.


    மு.வரதராசன் விளக்கம்:
    தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

    குறள் 140:
    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.


    மு.வரதராசன் விளக்கம்:
    உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

    https://www.ytamizh.com/thirukural/chapter-14/

    பதிலளிநீக்கு

  2. எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
    வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
    நேராமை சால உணர்வார் பெருந் தவம்
    போகாமை, சாலப் புலை. ஏலாதி 38


    இறப்பும் பிறப்புமாகிய துன்பம் கல்வியறிவினளவே நீங்காது, தியான அளவிலே நீங்காது, துதிக்குந் தோத்திரத்தினாலும் நீங்காது, இவை முதலாகிய மாட்சிமைப் பட்ட ஒழுக்கங்களினாலேயும் அவை தீர்த்துப் பேரின்பம் வாயாமை முற்றுங் கண்ட துறந்தோரது மாதவத்தை அடையாதிருத்தல் மிக்க அறியாமையாம்.

    கருத்து: உணர்ந்தோரெல்லாரும் ஒழுக்கமுந் தவமுங் கெட்டு வெறும் பொருளற்ற வழிபாடுகள் செய்தல் பெரிதுந்தவறாகும்.

    பதிலளிநீக்கு

  3. இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
    வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
    செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
    வெல்வான் விடுப்பான் விரைந்து. ஏலாதி 45


    தானொழுகுநெறியைத் தப்பாது பிறர்க்கின்னாதனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வௌவாது தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினை யீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான்.

    கருத்து: ஒழுக்கம் வழுவாமை முதலியன உடையவன் உலகத்திற் பலரையும் வென்று அரசனாவான்.

    பதிலளிநீக்கு
  4. நல்லறத்தின் இயல்பு

    வினைஉயிர் கட்டுவீடு இன்ன விளக்கித்
    தினைஅனைத்தும் தீமைஇன்று ஆகி - நினையுங்கால்
    புல் அறத்தைத் தேய்த்துஉலகி னோடும் பொருந்துவதாம்
    நல் அறத்தை நாட்டும் இடத்து.

    அறநெறி சாரம் பாடல் - 8

    விளக்கவுரை: ஆராயுமிடத்து நல்ல அறத்தினை நிலைநிறுத்த எண்ணினால் அந்த நல்ல அறமானது வினையும் உயிரும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இத்தகையவற்றை நன்கு உணர்த்தி தினை அளவும் குற்றம் அற்றதாய்ப் பாவச் செயல்களை அழித்து உயர்ந்தவர் ஒழுக்கத்தோடும் பொருத்தமுற்றதாகும்.

    பதிலளிநீக்கு