விதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஊழ் எனபது விதியா? அல்லது முன் ஜென்மமா?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - குறள் 380

மு. வரதராசன் உரை: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

இக்குறளில் "ஊழ்" என்பதற்கு "முன் ஜென்மம்" என்பதைவிட "விதி" என்பதே பொருந்தும். 7 பிறவி என்றொன்று இருந்தால் முதல் பிறவி உள்ளவருக்கு முன் பிறவியின் வலிமை அல்லது தாக்கம் இருக்காது. எனவே இது  பொது விதியல்ல. ஆனால் விதியின் வலிமை ஒவ்வொரு உயிருக்கும் உண்டு.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு. - நாலடியார் 110

பதவுரை
பிறழ் - vary / மாறுபடு
உறுகாலம் - உரிய நேரம்
ஊற்று - support / ஊன்றுகோல்
பொறி - (தலை) எழுத்து
பரிவு - வேதனை
இறுகாலம் - இறுதி நேரம் (மரண நேரம்

பொருள் கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் குறையமாட்டா, வளரமாட்டா, முறைமாறி வரமாட்டா, துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா, எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (விதி குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்). 

உங்களுக்கான சில கேள்விகள்

  1. சில பொழிப்புரையாளர்கள் முன்ஜென்ம வினையின் பயன் என்றும் ஊழை குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் நாம் செய்யும் செயலுக்கான பலன் நாம் செய்த அதே வரிசை முறையில் முறை பிறழாமல் நமக்கு கிடைக்கிறதா?
  2. விதி காலத்தின் அடிப்படையில் நடைபெறுமா? அல்லது வினைப்பயன் நடைபெறுமா?
  3. முந்தய பிறப்பின் வினைப்பயன் (அப்படி ஒன்று இருந்தால்) கரு அமைந்த காலத்தில் ஏற்படுமா அல்லது முந்தய பிறவியில் நம்மால் வினை ஆற்றப் படும்பொழுது ஏற்படுமா?
முடிவுரை

ஊழ்வினை என்பதை முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம் என்று சொல்கிறார்கள். முன் ஜென்மம் என்கிற ஒன்றே கிடையாது. அதை பல்வேறு சான்றுகள் மூலம் நிறுவ முடியும். காண்க.

"ஊழ்" என்பதும் "வினை" என்பதும் இருவேறு முரணான பொருளை கொண்ட சொற்கள்.

மனிதனின் வாழ்க்கை நிகழ்வுகள் சில கூறுகளின் கலவை ஆகும். அவையாவன,

    1. ஊழ் (அ) விதி (அ) கத்ர் (அ) fate
    2. வினை (அ) கருமம் (அ) அமல் (அ) deeds
    3. இரஞ்சுவதால் கிடைக்கும் இறைவனின் அருள் (அ) நாட்டம்

இதில் ஊழ் என்பது இறைவனால் ஏற்கனவே வகுக்கப் பட்டது

வினை என்பது மனிதனால் செய்யப்பட்டது

"ஊழ்வினை" என்கிற பதம் ஏதாவது முதல் அல்லது வழி நூலில் நேரடியாக இடம்பெற்றதாக நான் அறிந்ததில்லை. அறிந்தவர்கள் அதற்கான சான்றை கொடுத்தால் நலம். "ஊழ்" என்றே தனித்து பயன்படுத்த பட்டதன் காரணம் அது வினையின் விளைவல்ல என்பதால். இரண்டுக்கும் வெவ்வேறு வரையறைகள். பொழிப்புரையாளர்களின் கருத்து பிழை. ஊழ் என்பது விதித்தானே தவிர சென்ற பிறவியோ அல்லது முன்ஜெம பாவ புண்ணியமோ அல்ல. முன்ஜன்மம் என்ற ஒன்று இல்லவே இல்லை. 

ஊழிக்காலம் என்பது உலகம் தோன்றி பறந்து மீளவும் அழிந்து ஒடுங்கும் ஒரு பரந்த கால அளவை குறிப்பதாகும். இதன்மூலமும் ஊழ் என்பதை விதி என்றே விளங்கலாம். 

குறிப்பு சிலப்பதிகாரத்துக்கு முன் வந்த எந்த நூலிலும் "ஊழ்"-உம் "வினை"யும் ஒன்றாக கையாளப்பட வில்லை. ஊழ்வினை என்கிற வார்த்தை பிரயோகத்துக்கும் அது உண்டாக்கிய குழப்பத்துக்கு சிலப்பதிகாரம் தான் தொடக்கப் புள்ளி என்று கருத முடிகிறது.

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

எல்லாம் விதிப்படி மட்டும் நடப்பதில்லை, அப்படி இருந்தால் மனிதர்கள் நற்கருமங்கள் செய்ய வேண்டியதில்லை.

மனித வாழ்வில் நிகழும் காரியங்கள் இந்த மூன்றின் சரியான கலவை.

  1. வினைப்பயன் - கர்மா
  2. ஊழ் - விதி
  3. பிராத்தனை மூலம் கிடைக்கும் இறைவனின் அருள்


விதியை ஏற்படுத்தியவன் அவனே.

பாவங்களை மன்னிக்க கூடியவன் அவனே.

ஆனால் முதல் இரண்டை மிகைக்க கூடியது மூன்றாவது.

எனவே அவனை அவன் விரும்பியபடி வணங்க வேண்டும்.

எத்தனை பிறவி உண்டு? / ஏழேழு ஜென்மாமா? ஒரே ஜென்மமா?

தமிழர் சமயம் 

 
பல பிறப்புகள் என்கிற வாதமுமும் இம்மை மறுமை என இரண்டே பிறப்புகள் என்றும் பலர் பல விதமான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம். அதற்கு ஆதாரமாக பல செய்திகளை அவர்களை கூறும்பொழுது அதன் மூலத்தையும் உண்மைத் தன்மையையும் ஆராய்வது அவசியமாகிறது. ஏனென்றால் பௌதீக விதிக்கு மீறிய நிகழ்வுகளாக பிறப்பும் அதன் இரகசியங்களும் இருக்கிறது. 
 
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை: 
ஒருமை-ஒருபிறப்பு,தனிமை; 
செயல்-செய்தல்; 
ஆற்றும்-செய்யும்; 
பேதை-அறிவிலி; 
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்; 
தான்-தான்; 
புக்கு-புகுந்து; 
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய; 
அளறு-நரகம், நிரயம்.

மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

எமது மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் வாழ்க்கையிலும் அவன் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள்.

    • "எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
    • எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
    • முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
    • நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
    • கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
    • நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
    • எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள். 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62) 

உரை: எழுபிறப்பினுந் (மறுமையினுந்) துன்பங்கள் சாரா: பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.’ (குறள் எண் 98)

உரை: இனிய சொல்லானது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் (எழுபிறப்பிலும்) இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)

உரை: ஒரு பிறப்பில் ஆமை கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலன்களையும் ஒருவன் அடக்குவானாகில் அது அவனுக்கு எழுமையும் (மறுமையிலும்) சிறப்பு  சேர்க்கும்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 398)

உரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு இம்மையில் மட்டுமல்லாமல் எழுமையும் (மறுமையிலும்) உதவும் தன்மை உடையது.

‘மனநலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இன நலத்தின் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 459)

உரை:ஒருவனுக்கு மன நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனநலத்தால் மேலும் சிறப்புப் பெறும்.

‘இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.’ (குறள் எண் 1042)

உரை: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப ...’
 
என்று அகநானூறு (66 ஆம் பாடல்) மறுமை பற்றிப் பேசுகிறது.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மினென் பாரே - நறுநெய்யுள்
கட்டை யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.’

‘மறு உலகத்தைப் பற்றிப் பேசாமல் இம்மையில் எல்லாச் சுகங்களையும் அனுபவியுங்கள் என்று சொல்பவர்கள் நறுமணம்   கொண்ட நெய்யில் செய்து பாகில் ஊறிய அடையை உண்ணக் கொடுக்காமல், செங்கல்லை உண்ணக் கொடுப்பவர்களைப் போன்றவர்கள்!’ என்கிறார்   மூன்றுறையரையனார் தம் பழமொழி நானூறு என்ற நூலில்.
 
‘எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழிநல் குரவே தலை’ ... (நாலடியார் 275)

கடல்நீர் அளவு அதிகமிருந்தாலும் அதை மக்கள் தேடிப் பருகுவதில்லை. சிறுகிணற்றின் ஊற்று நீரையே தேடிப் பருகுவார்கள். எனவே, மறுமை  இன்பத்தை நாடி  அறம் செய்யாதாரின் செல்வத்தை விட, சான்றோரின் வறுமையே போற்றத்தக்கது என்கிறது நாலடியார் வெண்பா.

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. - (சிவவாக்கியம் 47)

ஆவையம் பாவையும் மற்றற வோரையும் 
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் 
காவலன் காப்பவன் காவா தொழிவனேல் 
மேவும் மறுமைக்கு மீளா நரகமே (திரு .243)

பசு , பெண் , அறவோர் , துறவோர் முதலானோரை மன்னன் காத்தல் வேண்டும் என்கின்றது திருமந்திரம் ; அவ்வாறு  காக்கவில்லையெனில் அரசனுக்கு நரகமே கிட்டும் என்பதை 
எடுத்துரைக்கின்றது

மறுமை நோக்கின்றோ? அன்றே!
பிறர் வறுமை நோக்கின்று
அவன்கை வண்மையே! (புறநானூறு 141)

பொருள்: அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது. 

இஸ்லாம்  


“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் (உயிரை) கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (குர்ஆன் 32:11)

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். குர்ஆன்  2:4

'மனிதர்களே! (இறந்த பின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்: (என்ற நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படி செய்கிறோம்: பின்னர் உங்களை குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம்: பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்துவிடுகிறவரும் இருக்கின்றனர்: (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்த பின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கபடுபவரும் உங்களில் இருக்கின்றனர்: மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர்: அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொருவகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது' (17: 5) 
 

கிறிஸ்தவம் 


அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

மறுஜென்மம் எனபது இறந்து எழுப்பப்படும் காலத்தை குறிப்பதை நாம் இங்கே அறியலாம். 
 

முடிவுரை

எனவே ஏழு ஜென்மம் எனபது ஒரு கற்பனைக் கதை. பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கிற இறைவனிடமிருந்து வந்த புனித நூல்கள் கூறுவது இம்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான வாழ்வு, மறுமையில் முடிவில்லா பெருவாழ்வு. இம்மை வாழ்வும் அதன் தன்மைகளையும் நாம் அறிவும். மறுமையில் நிரந்தர சொர்கம் அலல்து நிரந்தர நரகம் வழங்கப்படும் அவரவர் செயலுக்கு ஏற்ப.

செயல், பண்ணுதல், அமல், வினை, கருமம் & கர்மா இவை அனைத்தும் ஒரே பொருளை கொண்டவை. 

குறித்த நேரம் வந்துவிட்டால் *

தமிழர் சமயம் 


இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - (நாலடியார், செல்வம் நிலையாமை 6)

கருத்து: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

(பொ-ள்.) இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

இஸ்லாம்  


ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும்.’ (ஆலுஇம்ரான்: 185)

மேலும் கூறுகின்றான்: ‘நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!’ (அந்நிஸா: 78)

மேலும் கூறுகின்றான்: ‘(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எந்த மரணத்தை விட்டும் நீங்கள் விரண்டோடிச் செல்கின்றீர்களோ அம்மரணம் உங்களைச் சந்தித்தேயாகும்.’ (அல்ஜுமுஆ: 08)