இம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எத்தனை பிறவி உண்டு? / ஏழேழு ஜென்மாமா? ஒரே ஜென்மமா?

தமிழர் சமயம் 

 
பல பிறப்புகள் என்கிற வாதமுமும் இம்மை மறுமை என இரண்டே பிறப்புகள் என்றும் பலர் பல விதமான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம். அதற்கு ஆதாரமாக பல செய்திகளை அவர்களை கூறும்பொழுது அதன் மூலத்தையும் உண்மைத் தன்மையையும் ஆராய்வது அவசியமாகிறது. ஏனென்றால் பௌதீக விதிக்கு மீறிய நிகழ்வுகளாக பிறப்பும் அதன் இரகசியங்களும் இருக்கிறது. 
 
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை: 
ஒருமை-ஒருபிறப்பு,தனிமை; 
செயல்-செய்தல்; 
ஆற்றும்-செய்யும்; 
பேதை-அறிவிலி; 
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்; 
தான்-தான்; 
புக்கு-புகுந்து; 
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய; 
அளறு-நரகம், நிரயம்.

மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

எமது மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் வாழ்க்கையிலும் அவன் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள்.

    • "எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
    • எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
    • முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
    • நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
    • கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
    • நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
    • எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள். 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62) 

உரை: எழுபிறப்பினுந் (மறுமையினுந்) துன்பங்கள் சாரா: பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.’ (குறள் எண் 98)

உரை: இனிய சொல்லானது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் (எழுபிறப்பிலும்) இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)

உரை: ஒரு பிறப்பில் ஆமை கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலன்களையும் ஒருவன் அடக்குவானாகில் அது அவனுக்கு எழுமையும் (மறுமையிலும்) சிறப்பு  சேர்க்கும்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 398)

உரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு இம்மையில் மட்டுமல்லாமல் எழுமையும் (மறுமையிலும்) உதவும் தன்மை உடையது.

‘மனநலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இன நலத்தின் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 459)

உரை:ஒருவனுக்கு மன நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனநலத்தால் மேலும் சிறப்புப் பெறும்.

‘இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.’ (குறள் எண் 1042)

உரை: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப ...’
 
என்று அகநானூறு (66 ஆம் பாடல்) மறுமை பற்றிப் பேசுகிறது.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மினென் பாரே - நறுநெய்யுள்
கட்டை யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.’

‘மறு உலகத்தைப் பற்றிப் பேசாமல் இம்மையில் எல்லாச் சுகங்களையும் அனுபவியுங்கள் என்று சொல்பவர்கள் நறுமணம்   கொண்ட நெய்யில் செய்து பாகில் ஊறிய அடையை உண்ணக் கொடுக்காமல், செங்கல்லை உண்ணக் கொடுப்பவர்களைப் போன்றவர்கள்!’ என்கிறார்   மூன்றுறையரையனார் தம் பழமொழி நானூறு என்ற நூலில்.
 
‘எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழிநல் குரவே தலை’ ... (நாலடியார் 275)

கடல்நீர் அளவு அதிகமிருந்தாலும் அதை மக்கள் தேடிப் பருகுவதில்லை. சிறுகிணற்றின் ஊற்று நீரையே தேடிப் பருகுவார்கள். எனவே, மறுமை  இன்பத்தை நாடி  அறம் செய்யாதாரின் செல்வத்தை விட, சான்றோரின் வறுமையே போற்றத்தக்கது என்கிறது நாலடியார் வெண்பா.

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. - (சிவவாக்கியம் 47)

ஆவையம் பாவையும் மற்றற வோரையும் 
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் 
காவலன் காப்பவன் காவா தொழிவனேல் 
மேவும் மறுமைக்கு மீளா நரகமே (திரு .243)

பசு , பெண் , அறவோர் , துறவோர் முதலானோரை மன்னன் காத்தல் வேண்டும் என்கின்றது திருமந்திரம் ; அவ்வாறு  காக்கவில்லையெனில் அரசனுக்கு நரகமே கிட்டும் என்பதை 
எடுத்துரைக்கின்றது

மறுமை நோக்கின்றோ? அன்றே!
பிறர் வறுமை நோக்கின்று
அவன்கை வண்மையே! (புறநானூறு 141)

பொருள்: அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது. 

இஸ்லாம்  


“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் (உயிரை) கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (குர்ஆன் 32:11)

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். குர்ஆன்  2:4

'மனிதர்களே! (இறந்த பின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்: (என்ற நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படி செய்கிறோம்: பின்னர் உங்களை குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம்: பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்துவிடுகிறவரும் இருக்கின்றனர்: (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்த பின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கபடுபவரும் உங்களில் இருக்கின்றனர்: மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர்: அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொருவகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது' (17: 5) 
 

கிறிஸ்தவம் 


அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

மறுஜென்மம் எனபது இறந்து எழுப்பப்படும் காலத்தை குறிப்பதை நாம் இங்கே அறியலாம். 
 

முடிவுரை

எனவே ஏழு ஜென்மம் எனபது ஒரு கற்பனைக் கதை. பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கிற இறைவனிடமிருந்து வந்த புனித நூல்கள் கூறுவது இம்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான வாழ்வு, மறுமையில் முடிவில்லா பெருவாழ்வு. இம்மை வாழ்வும் அதன் தன்மைகளையும் நாம் அறிவும். மறுமையில் நிரந்தர சொர்கம் அலல்து நிரந்தர நரகம் வழங்கப்படும் அவரவர் செயலுக்கு ஏற்ப.

செயல், பண்ணுதல், அமல், வினை, கருமம் & கர்மா இவை அனைத்தும் ஒரே பொருளை கொண்டவை. 

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம்

தமிழர் நெறி 

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகநானூறு 66)

கருத்துரை - (இம்மை = இவ்வுலக வாழ்க்கை; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலக வாழ்க்கை; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் =பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.- (நாலடியார் 58)

கருத்துரை - பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்வதல்லாமல் தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும். திருவத்தவர் - சிறப்பினை உடையவர்

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை 49)

கருத்துரை - (இம்மை = இந்த வாழ்க்கை; மறுமை = அடுத்து வரும் வாழ்க்கை; நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)
இந்தப் வாழ்க்கை முடிந்து அடுத்தப் வாழ்க்கையிலும் நீ தான் எனக்குக் கணவன். நான் தான் உனக்கு மனைவி
 
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)

கருத்துரை - மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. - (நாலடி 275)

கருத்துரை - மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது. (உலோபிகள் செல்வம் பெற்றிருப்பினும் வறியரான சான்றோரளவு கூட உதவார்).

மறுமை என்றால் என்ன ?


அகநானூறு 66-இல் குறிப்பிட்டு இருப்பதுபோல் மறுமை என்பது வேறு உலகம் ஆகும் இவ்வுலகத்தில் இருப்பதாக சொல்லப்படும் மறுபிறவி அல்ல என்பதும் உறுதியாகிறது.

இஸ்லாமிய நெறி 


(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின் மறுமையில்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.  - (திருக்குர்ஆன் 11:113)

ஏன் அனைத்து நூல்களும் மறுமை பற்றி பேசுகிறது? வாசிப்பார் சிந்தைக்கே..

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம், அதில் நெருப்பை கொண்ட நரகம் என ஒன்று உண்டு
  

சான்றுகள் 


மறுமை என்ற ஒன்று உண்டா?

தமிழர் சமயம்


மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.(முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுஉலகம் என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.
 
மனநலத்தின் ஆகும் மறுமை (459)
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

என்ற குறள்களில் மறு உலக வாழ்கையை சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்து கையாள்கிறார்:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் (98)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இன்மையும் இன்றி வரும் (1042)

இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அதாவது மறுமை வாழ்க்கையில் சுவர்க்கம் என்பதையும் கச்சிதமாகச் சொல்கிறார்.

அதை,
வானென்னும் வைப்பு (24)
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)
புக்கில் (340)
வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)
வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும்,
பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும்,
அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை)
அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும்,
அதற்குக் காரணம் பற்று (347) என்றும்,
பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346)
ஆசை, வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் துன்பம் என்பது தொடரும் என்றும்,

இம்மையில் செய்த வினையின் விளைவு மறுமையில் மீண்டும் எழும் பொழுது அதன் வினைப்பயன் தொடரும் என்றும், (107, 126, 398, 538),

பற்றற்ற கண்ணே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் (349) என்றும்
படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. - குறள் 23.

இருமை வகை தெரிந்து - இவ்வுலக மறுஉலக வாழ்கை என்னும் இரண்டு உள்ளதென ஆராய்ந்து அறிந்து; ஈண்டு - இம்மையில், அறம் பூண்டார் பெருமை - அறக் காரியங்களை செய்வர் பெருமை; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. குறள் 374

இருவேறு உலகத்து - இம்மை மறுமையில்
இயற்கை திருவேறு - உள்ள பொருள்களின் தன்மைகள் வெவேறு
தெள்ளிய ராதலும் வேறு. - அவர்கள் அதில் அறிவதும் வேறு வேறு

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே. திருமந்திரம்

பொழிப்புரைஅகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

குறிப்புரை : `உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது 

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார். - நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் (01)

கருத்துரைமேமையான தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.

விசேடவுரைதவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.

பதவுரை
மேலை= மென்மையான ;
தவத்தால்= தவங்காரணமாக;
தவம்= நற்றவம்;
செய்யாதார்= செய்யாதவர்கள்;
அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
நோக்கி= பார்த்து;
தாம்புக= தாம் உள்ளே நுழைய;
பெறார்= பெறாதவர்களாய்;
புறங்கடை= தலைவாயிலை;
பற்றி= பிடித்துநின்று;
மிக= மிகவும்;
தாம்= தாங்கள்;
வருந்தி= வருத்தப்பட்டு;
இருப்பர்= இருப்பார்கள்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
உறும் ஆறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும். பாடல்: 95 (மறுமை)

பதவுரை
மறுமையும்= மறு பிறப்பையும்,
இம்மையும்= இப்பிறப்பையும்,
நோக்கி= ஆராய்ந்து,
ஒருவர்க்கு= ஒருவருக்கு,
இயைவ= பொருந்தியவைகளை,
கொடுத்தல்= வழங்கல்,
உறும் ஆறு= பொருந்தும் வழி
வறுமையால்= தரித்திரத்தினால்,
ஈதல்= கொடுத்தல்,
இசையாது எனினும்= கூடாதாயினும்,
இரவாமை= யாசியாதிருத்தல்,
ஈதல்= கொடுத்தலினும்,
இரட்டி= இருமடங்காக,
உறும்= அடையும்.

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர். 243

எந்த மண்ணில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக முளைக்காது.
எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிந்தவர் சுவர்க்கம் புகுவர்.
நல்லறம் செய்யும் தன் முயற்சியால்தான் சுவர்க்கம் புகமுடியும்.
வடதிசை மண்ணிலும் நல்லறம் புரியாமல் வீணானவர்கள் உண்டு.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 275

அலை வீசி எறியும் பெரிய கடலில் இருந்தாலும் நீர் சிறிதளவே இருக்கும் சிறிய கிணற்று நீரையே மக்கள் உண்பர். அதுபோல, வழங்கி, மறுமை இன்பம் பெறாமல் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனின் செல்வத்தை விட, சான்றோரை வாட்டி வதைக்கும் வறுமை நிலையே தலைமையானதாகும்.

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார். 329

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக எண்ண வேண்டும் 

பேறுஅழிவு சாவு பிறப்புஇன்பத் துன்பம் என்ற
 ஆறுஉள அந்நாள் அமைந்தன - தேறி
 அவைஅவை வந்தால் அழுங்காது விம்மாது
 இவைஇவை என்றுஉணரற் பாற்று. - அறநெறிச்சாரம் 149

 விளக்கவுரை செல்வம், வறுமை, இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் என்னும் இந்த ஆறும் முன்பு செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; (ஆதலால்) இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் மகிழாது, வருந்தாது நம்மை நாடி வந்த இவை, இன்ன வினைகளால் வந்தன என்று ஆராய்ந்து அடங்குவதே செய்யத்தக்கது.


ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே! பாடல் - 150

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
 தானே தனக்கு மறுமையும் இம்மையும்
 தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
 தானே தனக்குக் கரி.

விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.

சிறந்த துணையாவது செய்வினையே பாடல் - 151

செய்வினை அல்லால் சிறந்தார் பிறர்இல்லை
 பொய்வினை மற்றைப் பொருள்எல்லாம் - மெய்வினவில்
 தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
 நீயார் நினைவாழி நெஞ்சு.

விளக்கவுரை நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாய் அமைவதின்றிச் சிறந்த துணைவர் வேறு எவரும் இல்லை! நிலை பெற்றவை என நீ எண்ணுபவை எல்லாம் அழியும் தன்மை உடையவையே! உண்மையை அறிய வினவினால் தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் யார்? நீ இவர்களுக்கு யார்? (இவர்கள் உன்னுடன் எத்தகைய தொடர்பை உடையவர்?) இவர்கள் நிலையான தொடபற்றவர்கள்.

எண்ணருந்துன்பம் உடலுக்கு! பாடல் - 152

உயிர்திகிரியாக உடம்புமண் ணாகச்
 செயிர்கொள் வினைகுயவ னாகச் - செயிர்தீர்
 எண்அரு நல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
 எண்அருநோய் துன்பம் அவர்க்கு.

விளக்கவுரை குற்றம் தரும் வினை, பாண்டம் செய்யும் குயவனாக நின்று, உயிர்க் காற்றையே தண்ட சக்கரமாகவும், எழுவகைப்பட்ட, தாதுவையே களிமண்ணாகவும் கொண்டு குற்றத்தினின்று நீங்காத நினைத்தற்கு அரிய பாத்திரத்தைச் செய்யும் அந்த உடலுக்குள் அதனை அனுபவிக்கும் சீவர்க்கு அளவிட இயலாத கொடிய நோய்கள் பல உள்ளன.

மறுமையைப் பற்றி எண்ண வேண்டும் பாடல் - 153

முன்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதுஓர்
 இல்பிறந்து இன்புஉறா நின்றவர் - இப்பிறப்பே
 இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
 முன்னி முயன்றுஒழுகற் பாற்று.

விளக்கவுரை முன்னைய பிறவியில் தாம் இயற்றிய அறச் செயல் காரணமாக, நல்ல ஒரு குடியில் தோன்றி இன்பத்தை அனுபவிப்பவர்கள், இம்மை இன்பத்தையே இன்னமும் எண்ணி, அதற்காக முயல்வாராயின், மறுமையில் அடைவது துன்பமே ஆகும். ஆதலால் இம்மை இன்பத்தில் செலுத்தும் கருத்தை ஒழித்து, மறுமை இன்பத்துக்குக் காரணமான அறத்தை நினைத்து முயன்று அதனைச் செய்வதே சிறந்தது.

மறுமைக்கு அறம் செய்யாதவர் அறியாதவர் பாடல் - 154

அம்மைத் தாம் செய்த அறத்தின் வரும்பயனை
 இம்மைத் துய்த்து இன்புஉறா நின்றவர் - உம்மைக்கு
 அறம்செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
 கறந்து உண்டுஅஃது ஓம்பாமை யாம்.

விளக்கவுரை முன் பிறவியில் தாம் செய்த அறம் காரணமாக இப்பிறவியில் இன்பம் அனுபவிப்பவர்கள் அறத்தைச் செய்யாமல் ஐந்து பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பங்களை நுகர்ந்து கொண்டு வாளா இருத்தல், நல்ல பசுவின் பாலைக் கறந்து அருந்தி, அப்பசுவை உணவிட்டுக் காவாமல் இருத்தல் போலாம்.

நல்ல பிறவி தீய பிறவிகளுக்குக் காரணம் பாடல் - 155

இறந்த பிறப்பில்தாம் செய்த வினையைப்
 பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருப்பது
 செய்யும் வினையால் அறிக - இனிப்பிறந்து
 எய்தும் வினையின் பயன்.

விளக்கவுரை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முன் பிறவியில் செய்த நல்வினை தீவினைகளை, எடுத்துள்ள இப் பிறவியில் அடையும் இன்பதுன்பங்களால் அறிந்து கொள்க. இனிமேல் பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை, இம்மையில் பிறந்து செய்யும் நல்வினை தீவினைச் செயல்களால் அறிவார்களாக!

வீடுபேற்றை அடையாத பிறவி பயன் அற்றது பாடல் - 156

தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தார்
 ஆய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
 மேலைப் பிறப்பும் இதுவானால் மற்று என்னை?
 கூலிக்கு அழுத குறை.

விளக்கவுரை மக்கள் வேறொரு தொடர்பும் இல்லாமல் தம்தம் வினை காரணமாகத் தாயும் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் என உறவினராய் வந்து பிறந்து வீடு பேற்றை அடைய முயலாமல் தம்முள் சிலர் வருந்த இறந்துபோதல், வரும் பிறவியிலும் அவர் மீண்டும் தோன்றி அவர்களுள் சிலர் வருந்த இறந்து விட்டால், அவர்கள் வாழ்க்கை ஒருவருக்கொருவர் கூலியின் பொருட்டு அழுத செயலாகும்.
 

இஸ்லாம்


(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 2:4

குர்ஆன் இரு உலக பொருள்களின் தன்மைகளை  இப்படி கூறுகிறது "(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - திருக்குர்ஆன் 2|25

இவ்வுலக மனிதன் அறிய முடியாதது பற்றி திருக்குர்ஆன் "32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது." என்று கூறு கிறது மேலும் மறுமையில் அவன் நிலை பற்றி "99:7,8. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்." இவ்வாறு கூறுகிறது.

திருக்குறள் என்பது ஓரிறை கொள்கையை மட்டுமன்றி மேலே குறிப்பிட்ட அனைத்து இஸ்லாமிய கொள்கைகளையும் வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறது.. ஆனால் அதற்க்கு பொழிப்புரை எழுதிய காலகட்டத்தில் வாட மொழியிலிருந்து வந்த சித்தாந்தங்களின் ஆதிக்கத்தால் எழு பிறவி என்று குறிப்பிடபட்ட இடங்களை ஏழு பிறவி என்று கருத்து திணிப்பு பொழிபபுறையில் இருப்பது  உண்மை. அனால் அது மீண்டும் எழும் பிறவியை அதாவது மறுமையை அவ்வாறு விளக்குகிறது. 

முடிவில் திருக்குறள் இம்மை வாழ்க்கை மறுமை வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வரையறைகள் வரம்புகள் இஸ்லாத்துடன் நிரப்பமாக ஒத்துபோகிறது.. 

இது இறைவன் திருக்குரானில் சொன்ன விஷயங்களையும் அதாவது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறை தூதர்கள் அனுப்ப பட்டார்கள் அவர்களை அந்த சமுதாயத்தில் இருந்தேஅவன் தேர்வு செய்து அனுப்பினான் அவர்கள் விளங்கும் பொருட்டு என்றதும் அவர்கள் உலகம் மற்றும் உலக மக்கள் அனநிவரையும் படைத்த இறைவனாகிய அவனையே வணங்க வலியுறுத்தினார்கள் என்று  கூறியதும் நிரூபணம் ஆகிறது. 

மேலும் வேதத்தை உடையவர்களை உங்களுக்கும் எமக்கும் இடையிலான ஒருபொதுவான விஷயத்தின் பக்கம்வாருங்கள் என்ற இறை வசனத்தை கொண்டு் அழைப்பு விடுப்பதன் மூலம்  ஏறக்குறைய 95% போதனைகள் ஒன்றாகவே இருக்கும் வேத வசனங்களை பின்பற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடியும்.  
 
 
 

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. - (முஸ்லிம் 5436.)