தமிழர் சமயம்
உழந்துஉழந்து கொண்ட உடம்பினைக்கூற்று உண்ண
இழந்துஇழந்து எங்ஙணும் தோன்றச் - சுழன்று உழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால், நல் நெஞ்சே
செற்றத்தால் செய்வது உரை. - (அறநெறிச்சாரம் பாடல் - 66)
பொருள்: விளக்கவுரை நல்ல மனமே! பலமுறை முயன்று நாம் அடைந்த உடலை இயமன் கவர்ந்து கொண்டு போக எவ்விடத்தும் பிறத்தலால் உலக வாழ்வில் நம்மொடு கூடிச் சுழன்று திரிந்த மக்களுள் உறவினர் அல்லாதவர் வேறு எவரும் இலர். அங்ஙனமேல் பிறர்மாட்டுக் கொள்ளும் சினத்தால் செய்யக் கூடியது யாது? கூறுவாய்!
இஸ்லாம்
பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (குர்ஆன் : 3:134)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி : 6114)
கிறிஸ்தவம்
வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது. - (நீதிமொழிகள் 16:32)