முன்னுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முன்னுரை

இது சுய சரிதை அல்ல, 800 கோடிக்கும் மேல் சுய சரிதைகள் உள்ளது இன்று இப்பூவுலகில். மேலும் ஆதி மனிதன் முதல் என்று கணக்கிட தொடங்கினால் சுயசரிதைகளின் எண்ணிக்கையை எவராலும் எண்ணிமுடிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் சுயசரிதையில் எனக்கு உடன்பாடு இல்லை.
அதற்கான காரணங்களாவன 
  1. சுயசரிதை எழுதுவோரின் நேர்மையும், நியாபக திறனும், மொழி ஆற்றலும் அதில் எழுதப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும். ஆனால் அதற்கான தகவல்களை நாம் அவரின் சுயவரலாற்றிலிருந்து பெறமுடியாது.
  2. சான்றோரின் வரலாறுதான் மக்களையும், சமூகத்தையும் பண்படுத்தும். ஆனால் யார் சான்றோர்? அதற்க்கான வரைவிலக்கணத்தை எங்கே பெறுவது? தொல்காப்பியரும், வள்ளுவரும், திருமூலரும், ஆப்ரஹாமும், இயேசுவும், முகமதுவும், மேலும் நாம் அறிந்த எந்த சான்றோரும் சுய சரிதையை எழுதி இருக்கவில்லை. ஏன் என்று நாம் சிந்தித்ததுண்டா? அதற்கு அவசியமில்லை என்பதுதான் கரணமாகும்.
  3. வரலாறு என்பது சமகாலத்தில் வாழ்ந்த பல்வேறு மக்களால் கூறப்பட்டு, நேர்மையான அறிஞர்களால் எழுதப்பட்டு, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவதாகும். எனவே எழுதுபவரின் நேர்மையையும் நியாபக சக்தியையும் உறுதி செய்ய முடியாத நிலையில், சுயசரிதையை கொண்டு ஒருவரை எடை போட முடியாது.
வாழ்க்கைக்கு சான்றாக எடுத்துக்கொள்ள பட வேண்டியவனின் தகுதி தரம் அறியாமல் பெண்பித்தன், தற்பெருமைக்காரன், பொய்யன், ஏமாற்றுக்காரன், நடிகன் என்று யார் யாரையோ நாம் குருவாக, தலைவனாக, சான்றோனாக எடுத்துக் கொள்கிறோம். பரிதாபமான நிலையல்லவா இது?


திறமையாக செய்தால் எதையும் வியக்கும் பண்பு நமது ஆன்மாவுக்கும் நமது சந்ததிக்கும் உகந்ததல்ல. எனவே சான்றோனை கண்டறிய, சான்றோரின் பண்பு எது? அந்த பண்பை வரையறுக்கும் அதிகாரம் படைத்தவன் யார்? போன்ற என்னைக் கவர்ந்த கருப்பொருளையும், எல்லோரும் அறிய வேண்டிய மெய்ப்பொருளை எங்கேனும் பதிந்து வைத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் எவருக்கேனும் பயன்படுமே என்கிற தீராத ஆவலைத் தவிர வேறேதும் இந்த ஆய்வை தொடங்கியதற்கான நோக்கமல்ல. இதன் மூலம் ஒருவரேனும் நான் விரும்பும் விதத்தில் பயன்பெற்றால் நான் என் பிறவிப் பயனை அடைந்ததாக கருதுவேன். 

மிகைப்படுத்தி எழுதுவதோ பேசுவதோ என் இயல்பு அல்ல. மனதுக்கு பிடித்தவர்களை கவர அவ்வாறு பேச முயன்ற பொழுதெல்லாம் அசௌகரிய மன நிலைக்குத்தான் தள்ளப்பட்டேனே தவிர வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது கிடையாது. இதை இங்கே ஒப்புக்கொள்ளும் காரணம் இந்தநூல் முழுவதும் வாசகர்களை வசீகரிக்கும் அமைப்பில் எழுதப்படாது, மாறாக இயல்பாக உள்ளது உள்ளபடியே எழுதப்படும். ஆனால் இதில் உள்ள பல உண்மைகள் நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிராத, ஆச்சரியமூட்டும், நீங்கள் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய, பயனுள்ள, ஒருவேளை உங்கள் வாழ்க்கையை மாற்றும் தகவல்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இன்று நாம் நம்பும் அறிவியல், வணங்கும் கடவுள், வழிபடு அறம், பிசாசு, சொர்க நரகம், செய்து வரும் வணக்க முறைகள், அடக்கம் செய்யும் முறை, பாவ பரிகாரம், பார்க்கும் சோதிடம் மற்றும் குறி போன்றவைகளின் உண்மை நிலை குறித்தது நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? 

இந்த விடயங்களெல்லாம் பேரின்பம் தொடர்புடையது. இந்த பூலோகம் சிற்றின்பம் என்பதும், மேலுலகம் பேரின்பம் என்பதும் நாம் அனைவரும் அறிந்த தகவல். இதுவும் ஆதார நூல்களிலிருந்து வசித்து ஆய்ந்து தெளிவதற்கு மிக தகுதியான கருப்பொருள்.

ஆனால் இந்நூல் முழுக்க முழுக்க ஆன்மிகம் தொடர்பானது என்று எண்ணிவிட வேண்டாம், நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், சரி பிழை போன்ற நமது அன்றாட தேடலுடன் தொடர்புடைய நூலக இது அமையும். என்னுடைய விளக்கங்களைவிட, சரியான நூலிலிருந்து  ஆதாரங்களையும் அதற்கான அறிஞர்களின் விளக்கங்களையும் குவிப்பதே இந்நூலின் நோக்கம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமந்திரத்தின் வாக்கை அது எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டுமோ அவ்வாறு ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த முயற்சிக்கு இறைவன் உதவி புரிவானாக. 

- சக்திவேல்
(1-செப்-22)