நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'நண்பனில் ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பன் என்றாலே நல்லவன் தான்' - இது உண்மைதானா?

தவறான கருத்து.

நண்பர்களை உருவாக்கி கொள்ளும் பொழுதே நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.


 தமிழர் சமயம்  

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. (குறள் - 791)

உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

இஸ்லாம்  

ந‌பிக‌ர் நாயக‌ம் (ஸ‌ல்) கூறு‌கிறா‌ர், "ம‌னித‌ன் த‌ன்னுடைய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌‌யிலேயே செ‌ல்‌கிறா‌ன். ஆகவே யாருட‌ன் ந‌ட்பு கொ‌ண்டு இரு‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்." (நூல்:திரிமிதி)

(அன்றி) “என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 25:28)

கிறிஸ்தவம்  

தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப் பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். (நீதிமொழிகள் 12:26)

ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும் (நீதிமொழிகள் 13:20)

நட்பை ஏற்படுத்தி கொள்ளும் முன் / ஏற்படுத்திய பின் நோக்க வேண்டியது.


1) நண்பர்கள் பண்புடையவர்களாக இருக்க வேண்டும்.

தமிழர் சமயம் 

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.(குறள் 783)

உரை: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

இஸ்லாம்  

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (குர்ஆன்: 9:71)

கிறிஸ்தவம் / யூதம் 

 நறுமணமும் தூபமும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் ஒரு நண்பரின் இன்பம் அவர்களின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து உருவாகிறது. —நீதிமொழிகள் 27:9


2) வழி தவறும் பொழுது நேர்வழிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.

தமிழர் சமயம் 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (குறள் 784)

உரை: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்து உரைப்பதற்காகும்.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் 787)

உரை: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

இஸ்லாம்  

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (குர்ஆன்: 5:2)

கிறிஸ்தவம் / யூதம்

 எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப் படுத்துங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:11)

நறுமணமும் தூபமும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் ஒரு நண்பரின் இன்பம் அவர்களின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து உருவாகிறது. —நீதிமொழிகள் 27:9 


3) எண்ணம் ஒத்து இருக்க வேண்டும்

தமிழர் சமயம் 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். (குறள் 785)

உரை: ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

இஸ்லாம்  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (புகாரி 3336)

அந்த (விசாரணை) நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள். (அல்குர்ஆன் : 43:67)

கிறிஸ்தவம் / யூதம் 

"...ஒரே காரியத்தைப் பற்றிய நம்பிக்கையில் உங்கள் அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக இருங்கள்." - (பிலிப்பியர் 2:2)

4) ஆபத்தில் உதபுபவனே நண்பன்

 

தமிழர் சமயம்


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. குறள் 788

உரை: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

இஸ்லாம்  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு இறை அடியானுக்கு மற்றொரு அடியான் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு அடியானின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான்… (புகாரி 2442)

கிறிஸ்தவம் / யூதம் 

நண்பனிடம் கருணை காட்டாதவன் (உதவாதவன்) எல்லாம் வல்ல இறைவனின் பயத்தை விட்டுவிடுவான். - (யோபு 6:14)

5) முட்டாளோடு நட்பு கொள்ள முடியாது, கூடாது.


தமிழர் சமயம் 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (குறள் 782)

உரை: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

இஸ்லாம் 

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப் படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 6133)

கிறிஸ்தவம் / யூதம்  

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை. (நீதிமொழிகள் 14:7)

இந்த பண்புகள் இல்லாத நட்பை அறியாமல் ஏற்படுத்தி கொண்டால்?

மேல்சொன்ன தகுதிகள் எல்லாம் உள்ளனவா என்று ஆய்ந்து நட்பு பாராட்ட வேண்டும். சில சமயங்களில் அவ்வாறு முயன்றும் கெட்டவர்களை நபர்களாக்கி கொள்ள நேரிடும். அப்பொழுது என்ன செய்வது இந்த நாலடியார் பாடல் பதில் சொல்கிறது.

தமிழர் சமயம் 

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.- (நாலடியார் 75)

பொருள்: மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.

இஸ்லாம்  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்து இருப்பவரிடம் இருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர். (நூல்: புகாரி-2101)

குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)

எனவே தீய நட்பை விட்டுவிட வேண்டும் என்கிறது இந்த செய்திகள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் ரகசியமாக எதையோ சொல்ல அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ரகசியத்தை நான் பரப்பமாட்டேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ஃபாத்திமா (ரலி) ஒன்றும் கூறவில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : புகாரி-3623)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி). (நூல் : முஸ்லிம்-2833)

அதே போல ஒருவர் கூறிய இரகசியத்தை எப்பொழுதும் வெளிய கூறக்கூடாது என்று சொல்கிறது இந்த செய்திகள்.

கிறிஸ்தவம் 

மிக சீக்கிரத்தில் கோபம் கொள்கிறவர்களோடு நட்பு கொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும். (நீதிமொழி 22:24–25)

நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை. அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன் (சங்கீதம் 26:4–5)

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப் போன்று வாழாமலும், தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான் (சங்கீதம் 1-1)

முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள். (1 கொரி 15:33)