தர்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாகூர் தர்கா பற்றி கூற முடியுமா?

 நாகூர் மட்டுமல்ல வேறு எந்த தர்காவும் இஸ்லாத்துக்கு தொடர்புடையது அல்ல.

1. படைத்த இறைவனை தவிர மற்றவர்களை வணங்க கூடாது.

ஏனென்றால் இறந்தவர்கள் எவ்வளவு பெரிய அவுலியாவாக இருந்தாலும், முகமது நம்பியாகவே இருந்தாலும் அவர்களை வணங்க எவருக்கும் அனுமதி இல்லை.

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்ஆன் 17:23)

ஏனென்றால் முகமது நபி அவர்களும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

"கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்! " - (நூல்: புகாரி 3445)

முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 827

2. அது இறைவனைக்கு இணையாக வேறொன்றை கருதுவது ஆகும்

ஏனென்றால் இவ்வாறு உலகு அனைத்தையும் படைத்த கடவுளைத் தவிர வேறெவரும் வணங்கப்பட தகுதி அற்றவர்கள். அவ்வாறு செய்தால் அது படைத்து பாதுகாத்து அழிக்கும் இறைவனுக்கு இணையாக வேறொன்றை கருதுவது போல் (ஷிர்க்) ஆகும்.

இவ்வாறு படைத்து பரிபாலிக்கும் இறைவனைத் தவிர வேறு எதை வணங்கினாலும் மனிதனுக்கு நிம்மதி அற்றுப் போகும்.

3. அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யவோ அல்லது அல்லாஹ்வுடன் நம்மை நெருக்கமாக்கவோ மரணித்தவர்களால் செய்ய முடியாது

அல்ல, நாங்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய வேண்டி நல்லடியார்களிடம் பிராத்தனை செய்ய மட்டுமே செல்கிறோம் என்று சிலர் கூறுவதுண்டு. அவர்களிடம் அல்லாஹ் இவ்வாறு கேட்கிறான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். - (திருக்குர்ஆன் 39:3

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. - (குர்ஆன் 27:80)

அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்று சிலரும் சொல்வதுண்டு ஆனால் அதுவெல்லாம் வெரும் பசப்பு வார்த்தைகளே.. ஏனென்றால் கடமையாக விதிக்கப்பட்ட தொழுகை, நோன்பு, ஜக்காத், பொருமை உட்பட பல அமல்களை விடுத்து கட்டாயமாக்கப்படாத ஒன்றை இவர்கள் செய்வது எவ்வகையில் பொருத்தமாகும்? எப்படி உண்மையாகும்?.

4. மண்ணறைகளை உயர்த்தி கட்டக் கூடாது

மேலும் மனிதர்கள் புதைக்கப்பட்ட இடத்தை தர்கா கட்டிடம் போன்று அல்ல, சிறிதளவு கூட உயர்த்தி கட்ட இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, முஸ்லிம் – 921, அபூதாவூத் – 3227, நஸாயீ – 703, முஅத்தா – 414, தாரமி – 1403, அஹ்மத் – 1884, நஸாயீயின் குப்ரா – 782, பைஹகீ – 7010, அபூயஃலா – 5844, தப்ரானி (கபீர்) – 393-411 - இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

(கப்ருகளை) இறந்தவர்களை புதைத்த இடங்களை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி) நூல்: அஹ்மத் 1602

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை மஸ்ஜித்களாக தர்காக்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 437

‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி) நூல்: முஸ்லிம் 827

ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதை தர்காவை கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்” எனக் கூறினார்கள். நூல்: புகாரி 427, 434, 1341, 3873

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் 1746

இவ்வளவு தெளிவாக வேறு எந்த மார்க்கத்திலும் குறிப்பிடவில்லை. எனவே தர்காவில் வணங்கும் ஒருவர் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்து கொள்கிறார்.