நிலையாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலையாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எது என்றும் நிலைத்திருக்கும்?

 இவ்வுலகை பொருத்தமட்டில் நிலையாமை மட்டுமே நிலைத்து இருக்கும்.

இவற்றை பற்றி ஆழமாக வாசிப்பது அவசியம். ஆனால் எங்கே வாசிப்பது? சில தகவல்கள் உங்களுக்காக.

தமிழர் சமயம்

நாலடியார் - 1.செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.

ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று.

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.

யானையின் பிடா¢யிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! (ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.

ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.

ஆயுட் காலத்தின் எல்லையைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை 'தழீம் தழீம்' என்னும் ஓசையுடன் எழும்

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.

எமன், ஒளி மிக்க சூரியனை, 'நாழி' என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருளுடையவராக ஆகுங்கள்! அப்படி காதவர் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே வர்!

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையயோம்!' என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினா¢ன் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தொ¢யாமல் அழிந்துவிடும்!

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.

ஒருவன் தான் உண்ணாதவனாய், மதிப்பை நிலை நிறுத்தாதவனாய், மிக்க புகழுக்குரிய செயல்களைச் செய்யாதவனாய், நெருங்கிய உறவினா¢ன் துன்பங்களைக் களையாதவனாய், இரப்பார்க்குக் கொடாதவனாய், வீணாகப் பொருளைக் காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! (செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.)

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.

10 வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலா¢னின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்!

நாலடியார் - 2.இளமை நிலையாமை

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.

11 நல்லறிவாளர், மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு பூண்டனர்; குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

12 நட்பாகிய கயிறுகள் அற்றுப் போயின; பெண்களும் அன்பில் குறைந்தனர்; சுற்றத்தாரின் அன்பாகிய கயிறும் அவிழ்ந்து வீழ்ந்தது; மனத்திலே யோசித்துப் பார்! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி உயிரோடு இருப்பதில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இல்லை.

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.

13 பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பொ¢தும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் போ¢ன்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

14 முதுகு வளைந்து கூனி உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடந்து தள்ளாடி வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவளிடத்தும், மன உறுதி யில்லாத காம மயக்கம் கொண்ட மனிதருக்கு, இவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது இவள் தாய்க்கு ஊன்று கோலாக இருந்த நாளில் (இவள் இளமையோடிருந்த நாளில்) மிக்க ஆசை உண்டாகியிருக்கும். (இந்தக் கிழவி இளமையோடிருந்தபோது, இவள் மீது ஆசை உண்டாகியிருக்கும் என்றதனால், இப்போது இளமையோடிருப்பவர், நாளை முதுமையடைந்து வெறுக்கத்தக்க நிலையடைவர் என்பது உணர்த்தப்பட்டது.)

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.

15 எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இவ்வுலகத்தில் விட்டு விட்டுத் தனக்கொரு தாயைத் தேடிப் போனாள். (இறந்துவிட்டாள்) அப்படிப் போன என் தாய்க்குத் தாயாக இருந்த என் பாட்டியும், தனக்கொரு தாயைத் தேடிச் சென்றாள். இத் தன்மையாய் இந்த உலகம் ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டு செல்லும் எளிமை உடையது! (எத்தகைய இளமை அழகுடையோரும் இறந்துபடுவர் என்பது கருத்து)

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

16 வெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவா¢டத்து இல்லை!

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.

17 இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்! (கனிகள் உதிர்ந்த மரம் விரும்பத் தகாததாகி விடும். அதுபோல இளமை கழிந்த உடலும் விரும்பத் தகாததாம். முதுமையில் பார்வை குறைவதால் கோலைத் தட்டி வழி கண்டு செல்வாள் என்பதை உணர்த்த 'கோல் கண்ணள்' என்றார்.)

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

18 வயது எத்தனை ஆயிற்று? பல்லின் நிலைமை என்ன? ஆடாது இருக்கிறதா? இரு புறங்களிலும் மென்று தின்ன முடிகிறதா?' என்று வயதானவர் நிலையைக் கேட்டறிவதால், அறிவுடையோர், இளமையின் உடல் வலிமையை நிலையானது என்று கருதமாட்டார்கள்.

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

19 நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு. (பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து)

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.

20 ஆயுள் முடியும் ஆளைத் தேடிக்கொண்டு திரிகின்ற, அருள் இல்லாத எமன் என ஒருவன் இருப்பதால் (மறுமைப் பயணத்துக்கு வேண்டிய) தோளில் சுமக்கத்தக்க கட்டுச் சோற்றை (புண்ணியத்தை) தக்க காலத்தில் தேடிப் பிழைத்துக்கொள்ளுங்கள்! வயிற்றில் இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாய் அலறி அழுமாறு பிள்ளையைக் கொண்டு போவதால், அந்த எமனுடைய வஞ்சனையை அறிந்து நல்வினை செய்தல் நல்லது!

நாலடியார் - 3.யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.

21 மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல, யானைத் தலையின் மீது பிடித்த குடையுடைய அரசர்களும், உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. (மன்னாதி மன்னர்களும் மாண்டனர் என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.)

வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.

22 உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் உதயமாதலால், ஆயுள் கெடா முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். (சூரியன் தோன்றுவது - ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருத்தலால், வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது கருத்து.)

மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.

23 திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும்.

சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.

24 (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிப்பதற்குள் சாகப் போகிறவர்கள், செத்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்பை எடுத்துக்கொண்டு சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்வர். (எனவே யாக்கை நிலையாமையை நன்கு யோசித்துப் பார்!)

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.

25 கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!

நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.

26 தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

27 வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இப்பொ¢ய உலகில் ஒத்திருப்பவர் யார்? ஒருவரும் இல்லை!

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை
மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.

28 உடம்பை உறுதியுடையதாக முன் செய்த நல்வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களைச் செய்வாராக! ஏனெனில் மலை மீது உலாவும் மேகம்போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்துவிடும்

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.

29 ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

30 மனிதர்கள் 'வரட்டுமா' என்று கேளாமல் வந்து உறவினராய் ஒரு வீட்டில் பிறந்து பின், தாம் வாழ்ந்த கூடு மரத்திலே கிடக்கத் தூரத்தே பறந்து செல்லும் பறவைகளைப் போலச் சுற்றத்தாரிடம் உடம்பை விட்டு விட்டுப் பேசாமல் இறந்து போவார்கள். ('குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு' என்பது குறள்.)

திருக்குறள்

34. நிலையாமை

331. நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருளுரை: நிலையில்லாத தன்மையுடைய பொருட்களை நிலைத்து நிற்கும் பொருட்கள் என்று தானாக எண்ணிக்கொள்ளும் சிற்றறிவு உடைவராயிருத்தல் இழிவானதாகும்.

332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.

பொருளுரை: ஒருவனிடம் பெரும் செல்வம் வந்து குவிவது, கூத்தாடும் சபையில் மக்கள் குழுமுவது (கூடுவது) போன்றது. அச்செல்வம் பிறிதோர் இடத்திற்குப் போதலும் கூத்து முடிந்தவுடன் மக்கள் கலைந்து செல்வதைப் போன்றது.

333. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.

பொருளுரை: செல்வமானது. நிலையில்லாத தன்மையுடையது. அவ்வாறு நிலையற்ற தன்மையுடைய செல்வத்தைப் பெற்றால் நிலையான தன்மையுடைய அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும்.

334. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

பொருளுரை: காலத்தின் தன்மையை உணரும் தன்மையைப் பெற்றவர், நாள் என்று சொல்லப்படுது ஒரு கால அளவுகோலினைப்போல் தன்னைக்காட்டி உயிரை அறுக்கின்ற வாள் அது என்பதை உணர்ந்தவர் ஆவர்.

335. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பொருளுரை: ஒருவன் தனக்கு பேச்சு எழாதபடி நாவானது அடங்கி, விக்கல் எழும்பி இறப்பு வருவதற்கு முன், நற்செயல்களை விரைவாக முந்திக்கொண்டு செய்யவேண்டும்.

336. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

பொருளுரை: நேற்று இருந்தான் ஒருவன், இன்று இல்லை என்னும் பெருமை உடையது இந்த உலகம்.

337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

பொருளுரை: ஒரு நாள் அளவுகூட தாம் உயிர் வாழ்வதை அறியாதவர்கள் நினைப்பது கோடியளவு மட்டும் அல்ல, அதைவிட மிகவும் பலவாகும்.

338. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

பொருளுரை: உடம்புக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பு, முட்டையானது தனித்துக்கிடக்க அதனுள் இருந்த பறவையானது பறந்து சென்றதைப் போன்றது

339. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

பொருளுரை: உறங்குவதைப் போன்றது சாவு. உறங்கியபின் விழித்துக்கொள்ளுதலைப் போன்றது பிறப்பெடுத்தல்

340. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு.

பொருளுரை: உடம்பின் உள்ளே ஒண்டி ஒதுக்கமாக இருந்த உயிருக்கு, நிலையான ஓர் இடம் அமையவில்லை போலும்.

நல்வழி

ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்

மாறிடு மேறிடும் மாநிலத்தீர் - சோறிடுஞ்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

உண்ணீர்மை வீறு முயர்ந்து. 32

பொருளுரை: இந்தப் பூவுலகில் வாழும் மாந்தர்களே ! கேளுங்கள் ! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடுகளும் தாழ்வான பள்ளங்களும் போல உங்களிடம் உள்ள செல்வமும் வளர்வதும் தேய்வதுமான குணங்களை உடையது. ஆகையால், இத்தகைய நிலையற்ற செல்வம் மீது ஆசை வைக்காமல், அறவழியில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்; இரவலர்களின் பசித்த வயிற்றுக்குச் சோறு இடுங்கள். அவர்கள் பருகுதற்கு நல்ல தண்ணீரும் கொடுங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால், இந்தத் தருமமே உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உள்ளமும் தூய தன்மை உடையதாக ஓங்கி விளங்கும் !

திருமந்திரம்

நிலையாமை – விளக்கம்: நிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்தபின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம். மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

யாக்கை நிலையாமை:

திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல் 211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப்பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.”
 (திருமந்திரம் – 188)

என்ற பாடலில் கூரைபோல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும் துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,

”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.” 
(திருமந்திரம் – 189)

என்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உயிருடன் இருந்தபோது உடலுக்கு வைத்த பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.

”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.”
 (திருமந்திரம் – 202)

என்ற பாடலில் உடைந்த குடத்தைக் கூட ஓடென்று வீட்டிலோர் ஓரத்தில் பல நாட்கள் வைக்கமுடியும். ஆனால், உயிரில்லாத உடலை அவ்வாறு வைக்க இயலாது என உயிரற்ற உடலின் நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

”பால்துளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்.” 
(திருமந்திரம் – 211)

என்ற பாடலில் உயிரானது உடலைத் தோற்பையாகப் பயன்படுத்திவிட்டு தனது தொழில் முடிந்த பிறகு உணவருந்திய எச்சில் வாழையிலை போன்று தூக்கி எறிந்திடும் என்கிறார், திருமூலர்.

செல்வம் நிலையாமை:

திருமந்திரத்தில் செல்வம் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 212 முதல் 220 வரை இடம்பெற்றுள்ளன. நிலையில்லாத செல்வத்தை உவா (அமாவாசை) நாளில் மறையும் நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அப்பாடல்,

”இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா. ” 
(திருமந்திரம் – 213)

உலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற கருத்தை பின்வரும் பாடலில் கூறுகிறார்.

”ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவழி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.” 
(திருமந்திரம் – 215)

மணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனைச் சேர்த்துத் தமது கூட்டில் வைக்கும். அத்தேனைப் பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே அது பிறரால் கவரப்படுகிறது என செல்வத்தின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார்.

”மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்.” 
(திருமந்திரம் – 217)

முன்னர், செல்வத்தைத் தேனீ சேர்க்கும் தேனுக்கு ஒப்பாகக் கூறிய திருமூலர் இப்பாடலில் நீரில் செல்லும் கலத்திற்கு (படகுக்கு) ஒப்பாகக் கூறியுள்ளார். செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்கலம் கவிழ்வது போல அழிந்தொழியும் எனச் செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடுயுள்ளார்.

இளமை நிலையாமை:

திருமந்திரத்தில் இளமை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 221 முதல் 228 வரை இடம்பெற்றுள்ளன. இளமை என்பது மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் பருவம். மனிதனின் உடல் உறுதியோடு காணப்படும் பருவம். அப்பருவத்தின் நிலையாமையைத் திருமூலர்,

” கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்.”
 (திருமந்திரம் – 221)

என்ற பாடலில் சூரியன் கிழக்கில் உதயமாகி (பிறந்து) மேற்கில் மறையும் வரையுள்ள (இறப்பு) இடைப்பட்ட கால அளவே மனிதனின் இளமை என்று குறிப்பிடுகிறார். மேலும்,

” தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை.” (திருமந்திரம் – 223)

என்ற பாடலில் இளமை தேய்ந்து ஒழியக்கூடியது எனப் பாடியுள்ளார்.

உயிர் நிலையாமை:

திருமந்திரத்தில் உயிர் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 229 முதல் 238 வரை இடம்பெற்றுள்ளன. உடல் (யாக்கை), செல்வம், இளமை ஆகியவற்றை முதலில் கூறிய திருமூலர் உயிரின் நிலையாமையை இறுதியாகக் குறிப்பிடுகிறார். உடலையும் செல்வத்தையும் இளமையையும் உயிரில்லாமல் அனுபவிக்க இயலாது. உயிரின் நிலையாமையைக் குறித்து,

” தழைக்கின்ற செந்தளிர் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்.”
 (திருமந்திரம் – 229)

என்ற பாடலில் பல கிளைகளைக் கொண்ட மரத்திலிருந்து பழுப்புற்று உதிரும் இலை போலப் பல உறுப்புகளைக் கொண்ட உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் எனக் கூறுகிறார்.

இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 70 வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் வாழப்போகும் சில ஆண்டுகளாவது உயிரைக் கொண்டு இயங்குகின்ற உடலாலோ, செல்வத்தாலோ, இளமைத் துடிப்பாலோ பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையை விளைவிக்காது வாழ்வதற்குத் திருமூலரின் இப்பாடல்கள் துணைபுரியும்.

இஸ்லாம்

அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.

அறி : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி),
நூல் : 
புகாரி-6414

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இறைதூதருக்கு சொன்ன ஐந்து அறிவுரைகள் #abdul_basith_bukhari#short dawaah

முழு படைப்புகளை பொறுத்தவரையில் அனைத்தையும் படைத்த ஒருவனே நிலைத்து இருப்பான்.