மறை நூல்கள் மூடனுக்கு பயனளிக்காது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறை நூல்கள் மூடனுக்கு பயனளிக்காது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மறை நூல்கள் மூடனுக்கு பயனளிக்காது

 தமிழர் சமயம் 

பாம்புஉண்ட நீர்எல்லாம் நஞ்சுஆம்; பசுஉண்ட

தேம்படு தெள்நீர் அமுதமாம் - ஓம்பற்கு

ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோல்

களியாம் கடையாயார் மாட்டு. - (அறநெறிச்சாரம் பாடல் - 187)  

 
விளக்கவுரை பாம்பு உண்ட நீர் முழுவதும் நஞ்சாக மாறும்; அதுபோலக் அறிவற்றவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் மயக்கத்தையே ஏற்படுத்தும்; பசுக்கள் குடித்த இனிய தெளிந்த நீர் பாலாக ஆகும்; அதைப் போல் உயர்ந்தவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் போற்றுதற்குரிய அறிவை வளர்க்கும்.   


பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,

மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது, உணர்வு. (சிறுபஞ்ச மூலம் 21)

 சொற்பொருள் கடையாயயர் (கடை+ஆயர்). கடை ஆயர் என்பது அறிவீனர்களிலே மிகவும் கீழ்தட்டில் இருப்பவர்கள் என்று பொருள். 

விளக்கவுரை ஆண்டுகள் முதிர்ந்து வயதாகியும் அறிவு முதிராதவர், பூத்தாலும் காயா மரம் போன்றவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.

சொற்பொருள்: நன்று - நன்மை தேற்றாதார் - தெரியாதார் 

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. - (நாலடியார் - 8:71)

விளக்கவுரை மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.  
 
இஸ்லாம்


(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (குர்ஆன் 2:269)

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை. (குர்ஆன் 10:108)

நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். - (குர்ஆன் 2:6) 

கிறிஸ்தவம் 

ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான். (யோபு 11:12)


புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். - (நீதிமொழிகள் 1:5-7)