வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!

வேதங்களை ஒப்பு நோக்குவது கல்வியின் ஒரு இன்றியமையாத பகுதி. அது உண்மை வேதம், உண்மை குரு, உண்மை தெய்வம் மற்றும் பொய் வேதம், பொய் குரு, பொய் தெய்வங்களுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்குவதுடன் அதில் உண்மையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கும். உண்மை பிறப்பறுத்து வெற்றிக்கு வழிகாட்டும். வேதங்களை ஒப்பு நோக்கும் காரணத்தையும் அவசியத்தையும் நான்மறைகள் கீழ்கண்டவாறு விளக்குகிறது. 

தமிழர் சமயம் 


உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
பெருந் தவம் செய்தார், பெரிது. (ஏலாதி 64)

பொருள்: எல்லாரினும் உயர்ந்தவன் தலைவனாவா என்று ள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார்.

அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு. (ஏலாதி  75)

விளக்கவுரை ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்து உணர்ந்து, மறு வரவில் ஆராய்ந்து நீக்கி தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்கி. மறுவரவின் ஆசிரியனாக மீண்டும் சொல் மாற்றுதலே ஆசாரியனின் அமைவு. (இது வழி நூல் வரும் முறையை சொல்கிறது)

இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம். - (அறநெறிச்சாரம் பாடல் - 39)
 
விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!  
 
உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பு இன்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு - (அறநெறிச்சாரம்: அறத்துக்கு இன்றியமையா 4: 3)

விளக்கவுரை: அறத்தை உரைப்பவனையும், அந்த அறத்தைக் கேட்பவனையும் உரைக்கப்படும் அறத்தையும், கூறியதால் ஏற்படும் பயனையும் குற்றம் இல்லாமல் ஆராய்ந்து, அந்நான்கினுள்ளும் குற்றமானவற்றை அகற்றி, (நல்லனவற்றை) நிலைபெறும்படி செய்தல் உயர்ந்தவர் கடனாகும்.   

1) தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்
3) மூவர் தமிழும் 4) முனிமொழியும் 5) கோவை
திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

பதவுரை: தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும்; திரு நான்மறை முடிவும் - உலக வேதங்களாகிய நான்மறையின் சாரமும், மூவர் தமிழும் - (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் -  சித்தர் பாடல்கள்; கோவை திருவாசகமும் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்,  திருமூலர் சொல்லும் - திருமூலரின் திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. 

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4

பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது

பொருள்: திருக்குறளை விரும்புவோர்க்கு மறை நூல்களின் விளக்கம் அவிழ்வது எளிது.

குறிப்புரை: "திருக்குறளை விரும்பி ஓதி தெளிந்தவர்க்கு மறைநூல்கள் அனைத்தின் விளக்கம் கிடைப்பது எளிது" என்பதன் பொருள் திருக்குறள் என்னும் மறைநூலைஓதி உணர்ந்து விரும்புபவர்களுக்கு நான்மறை மறைநூல்களை ஒப்பு நோக்கினால் அவைகளிடம் ஓர் இணக்கப்பாட்டை காணமுடியும், அவைகள் ஒரே கருத்தை உரைப்பனவாகவும் இருக்கும், இதைக் கொண்டு மற்ற மறை நூல்களை அடையாளம் காணமுடியும் என்பதாம். எனவே தற்செயலாக குறளை கீதையுடனும், பைபிளுடனும், குர்ஆனுடனும் சிலர் ஓப்பு நோக்கி நூல்கள் எழுதி இருப்பதை காண முடிகிறது. 
 
தமிழர் சமயம் கூறும் நான்மறை பற்றியும், ஆறு சமயம் பற்றியும் முதல் மற்றும் வழி நூல் பற்றியும் அறிவோர் வேத மற்றும் சமய ஒப்பு நோக்கின் காரணத்தை அறிவர்.    
 

 இஸ்லாம்


“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள் - (அல்குர்ஆன் 3:64
 

கிறிஸ்தவம் 


வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். - (ஏசாயா 1:18)