தமிழர் சமயம்
தன்னது சாயை தனக்குஉத வாதுகண்டு
என்னது மாடுஎன்று இருப்பர்கள் ஏழைகள்;
உன்உயிர் போம்; உடல் ஒக்கப் பிறந்தது;
கண்அது காண்ஒளி கண்டுகொ ளீரே - (திருமந்திரம் 170)
பொருள்: வெயிலில் இருக்கும் பொழுது ஒதுங்குவதற்கு நிழல் தேடுகிறீர்கள்; அதுவோ ஒன்றுமில்லாத மொட்டைவெளி; உங்கள் காலடியிலோ உங்களுக்கென்றே அளவெடுத்துச் செய்ததுபோலக் கச்சிதமாய் உங்கள் நிழல். அதில் ஒதுங்க முடியுமா? உங்களது நிழல் உங்களுக்கு என்றைக்காவது உதவியிருக்கிறதா?
இஸ்லாம்
“மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பாளர்:மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள், நூல் : முஸ்லிம்-5497)
“என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!” என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்). (69:28-29)
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால் அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான். - (89:20-24)
மேலும், அவர் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவருடைய செல்வம் அவருக்கு பயனளிக்காது. - (92:11)
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது - (100:8-9)
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். - (104:1-4)
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். - (102:1-3)
“நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். - (8:28)
செல்வமும், குமாரர்களும் (யாதொரு) பயனளிக்காத (அந்த) நாளில், - (26:88)
உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மிடத்தில் சமீபமாக நெருக்கிவைப்பவர்கள் அல்லர்_ விசுவாசங்கொண்டு நற்செயல்களும் செய்தவரைத்தவிர_ அவர்களுக்கு அவர்கள் செய்த (நல்) வினையின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு, அவர்களோ (சுவனபதியிலுள்ள) உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியாக இருப்பவர்கள். - (34:37)
அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். - (58:17)
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள்.
ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.
பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி (1465, 2842)
கிறிஸ்தவம்
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். -(மத்தேயு 6:19-21)
24 ,“எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது. (மத்தேயு 6:24)
தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும். - (நீதிமொழிகள் 11:4)
யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும். பணம் உனது மனதை மாற்ற விடாதேயும். உனது பணம் இப்போது உனக்கு உதவாது. வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது. (யோபு:36:18-19)