ஆத்திசூடி & இஸ்லாம்
ஓர் ஒப்பீடு
1. ஆத்திசூடி
அறம் செய விரும்பு
பொருள் அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு – ஆசை கொள்
விளக்கம் தர்மம்/கடமை/நன்மை செய்ய ஆவல் கொள்.
இஸ்லாம்
எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (குர்ஆன் 16:128)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள், தொழு கையையும் நிலைநிறுத்துவார்கள், நாம் அவர் களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய் வார்கள். நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள், இத்தகையோருக்கு மறுமையில் (சுவனபதியயன்னும்) நல்ல வீடு இருக்கிறது. (13:22)
ஆறுவது சினம்
பொருள் ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபம்.
விளக்கம் கோபம் தணியத் தகுவதாம். / ஆத்திரம் அடக்கு.
இஸ்லாம்
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (குர்ஆன் 3:134)
இயல்வது கரவேல்
பொருள் இயல்வது-முடிந்தததை, கரவேல்- மறைக்காதே
விளக்கம் கொடுக்கமுடிந்த பொருளை கேட்பவர்களிடம் மறைக்காதே
இஸ்லாம்
வறுமை நிலைமையிலும் (முடிந்தததை) தானம் செய் - (குர்ஆன் 3:134)
ஈவது விலக்கேல்
பொருள் ஈவது-கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.
விளக்கம் ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.
இஸ்லாம்
எவர் கருமித்தனம் செய்வதுடன் மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம் - (குர்ஆன் 4:37)
உடையது விளம்பேல்
பொருள் உடையது - உள்ள பொருளை, விளம்பேல் - சொல்லாதே
விளக்கம் உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி(பெருமையாய்) சொல்லாதே / தற்பெருமை கூடாது.
இஸ்லாம்
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான் - குர்ஆன் 4:38
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)
எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. - (குர்ஆன் 4:36)
தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), (முஸ்லிம்: 148)
விளக்கம்: தன்னிடம் உள்ள செல்வத்தை பெருமைக்காக சொல்வதை கொடுப்பது அல்லாமல் பிறருக்கு ஆர்வமூட்டுவதற்க்காக வெளிபப்டையாக கொடுக்க அனுமதி இருந்தாலும், மறைத்து கொடுப்பதே சிறந்தது. தானம் செய்வதற்க்கே இந்த கட்டுப்பாடு இருக்கின்ற பொழுது பெருமைக்காக தன்னிடம் உள்ள செல்வதை வெளியில் சொல்லுவதை நினைத்து பாருங்கள்.
ஊக்கமது கைவிடேல்
பொருள் ஊக்கம் - மன உறுதியை, கைவிடேல் – கைவிடாதே
விளக்கம் நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே / உற்சாகத்தை (தன்னம்பிக்கை / விடாமுயற்சி) இழக்காதே
இஸ்லாம்
உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? - (குர்ஆன் 4:36)
எண் எழுத்து இகழேல்
பொருள் எண் - கணித, எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழாதே.
விளக்கம் கற்றலை இகழாதே / கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்
இஸ்லாம்
நபி(ஸல்)கூறினார்கள், அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலிகளிடம் பெருமையடிக்கவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவோ கல்வியை ஒருவன் தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (அறிவிப்பவர்: கஃப் இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: திர்மிதீ, ஹாகிம், பைஹகீ)
"இரவின் ஒரு சிறுபகுதியில் கல்வி கற்பது, இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் புரிவதை விடச் சிறந்ததாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: மிஷ்காத்)
கல்வியைத் தேடி எவர் செல்கிறாரோ அவருக்கு சுவனத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்குகிறான். மேலும் அவருக்காக வானவர்கள் இறைஞ்சுகிறார்கள். அவர்களின் இறக்கைகளை பணிக்கிறார்கள். சுவனவாசிகள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள் கடலில் வாழம் மீன்கள் உள்பட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றன". (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி)
‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)
கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? - (குர்ஆன் 39:9)
ஏற்பது இகழ்ச்சி
பொருள் ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்.
விளக்கம் இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. / இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்)
இஸ்லாம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”…யாசகம் கேட்பதை, அல்லாஹ் வெறுத்துள்ளான்.” - (ஸஹீஹ் புஹாரி 3:591)
ஐயமிட்டு உண்
பொருள் ஐயம் - பிச்சையை, இட்டு - கொடுத்து, உண் - உண்ணு
விளக்கம் பிச்சையிட்டுப் பிறகு உண்
இஸ்லாம்
'அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறை விசுவாசியாக இருக்க முடியாது’ - (நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா-20160)
ஒப்புர வொழுகு
பொருள் ஒப்புர- ‘ஒப்பு’ என்றால் சமம் என்று பொருள், ‘உரவு’ என்றால் வலிமை, அறிவு, பரத்தல், மிகுதி, உளத்திட்பம் என்று பொருள் ‘ஒப்புரவு’ என்றால் பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு உதவுதல். ஒழுகு- அந்த வழியிலே நட
விளக்கம் உலகத்தோடு ஒற்றுவாழ் / பகிர்ந்துண்டு வாழ் / பிறரையும் தமக்குச் சமமாகக்கருதி வாழ் என்று பலபொருள்படும்
இஸ்லாம்
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி)
நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?’ எனும் (குர்ஆன் 47:22)
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
"பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 5991)
ஓதுவது ஒழியேல்
பொருள் ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் – விடாதே
விளக்கம் ஒருபோதும் படிக்கும் பழக்கத்தை கை விடாதே.
இஸ்லாம்
கல்வி கற்பது இறைநம்பிக்கையாளரின் மீது கடமையாகும் - (திரிமிதி 74)
ஒளவியம் பேசேல்
பொருள் ஒளவியம் - பொறாமை அல்லது பெருமை கொண்ட வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.
விளக்கம் நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்கள் ''பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ, புட்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத் தின்று விடும்''. (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (ஆதாரம் : அபூதாவூத்)
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5048)
புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
அஃகஞ் சுருக்கேல்
பொருள் அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைக்காதே
விளக்கம் மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே
இஸ்லாம்
நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்- (குர்ஆன்:55:9)
கண்டொன்று சொல்லேல்.
பொருள் கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே.
விளக்கம் கண்ணாற் கண்டதற்கு மாறாகச் (பொய்ச்சாட்சி) சொல்லாதே.
இஸ்லாம்
அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்.)
ஙப்போல் வளை.
விளக்கம்: ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
இஸ்லாம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். - புஹாரி 6: 78: 5984
சனிநீ ராடு.
பொருள் சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு - நீரிலே தலைமுழுகு
விளக்கம் சனிக்கிழமைதோறும் குளி.
இஸ்லாம்
”ஜும்ஆ (வெள்ளி) நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி: 858
குறிப்பு: ஒவ்வொரு சமூகத்துக்கும் புனித நாள் வேறுபடுகிறது.
ஞயம்பட வுரை.
பொருள் ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.விளக்கம் கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
இஸ்லாம்
மேலும் மக்களிடம் அன்பாகப் பேசுங்கள். (அல்குர்ஆன் 2:83)
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. ... (குர்ஆன் 3:159)
இடம்பட வீடெடேல்
பொருள் இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதேவிளக்கம் அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
இஸ்லாம்: செல்வத்தில் போட்டி வேண்டாம்
அம்ர் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களுக்காக நான் அஞ்சுவது வறுமை அல்ல, மாறாக உங்களுக்காக நான் அஞ்சுவது என்னவென்றால், உங்களுக்கு முன் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போல உலக செல்வங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படலாம், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டது போல் நீங்கள் அவர்களுக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவீர்கள், அவர்கள் அழிக்கப்பட்டதைப் போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.” - அல்-புகாரி (2988) மற்றும் முஸ்லிம் (2961)
இணக்கமறிந் திணங்கு
பொருள் இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நட்பு கொள்.
விளக்கம் நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய்.
இஸ்லாம்
என் இரட்சகனே! நீ எனக்கு அறிவை வழங்குவாயாக! மேலும், நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! (திருக்குர்ஆன்:- 26:83)
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒருவன் அவனது நண்பனின் மார்க்கத்தில் உள்ளான். எனவே, நண்பனாக எவனைத் தேர்ந்தெடுப்பது என்பதை உங்களில் ஒருவர் சிந்திக்கட்டும்." நூல்:- அபூதாவூத்-4833, திர்மிதீ-2378
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) நூல் : புகாரி (2101)
தந்தைதாய்ப் பேண்
பொருள் தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்றுவிளக்கம் உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
இஸ்லாம்
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குர்ஆன் 31:14)
நன்றி மறவேல்.
பொருள் நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.விளக்கம் உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு. உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.
இஸ்லாம்: நன்றி இறைநம்பிக்கையின் அடையாளம்
சக மனிதனுக்கு நன்றி செலுத்திடுதல்
எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ 403)
‘மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.'(லுக்மான் : 14)
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்
நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” (14:7)
அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்பகரா: 243)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.’ [அல் குர்ஆன்14:34]
அல்லாஹ் யாருக்கு நன்றி செலுத்துகிறான்?
‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 652)
பருவத்தே பயிர்செய்.
பொருள் பருவத்தே - தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு.விளக்கம் விளையும் பருவமறிந்து பயிரிடு.எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.
இஸ்லாம்
விலை மதிப்பற்ற செல்வமான காலத்தை வீணடிப்பது பெருங்குற்றமாகும். இதற்காகக் கடுமையான தண்டனையை மறுமை நாளில் பெற நேரிடும். தண்டனையிலிருந்து தப்பிக்கவும் முடியாது.
மறுமையில் இவர்களது வாதம்: எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம் என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ் நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை (என்று கூறப்படும்) (அல்குர்ஆன்: 35:37)
இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம். - நூல்: புகாரி.
இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி
மன்றுபறித் துண்ணேல்.
பொருள் மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே.விளக்கம் நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
இஸ்லாம்
இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதே
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் (லஞ்சமாக) கொண்டு செல்லாதீர்கள் (திருக்குர்ஆன்:2:188)
அபூ ஹீரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் தீர்ப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் அல்லாஹ் சபிக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - (இப்னு ஹிப்பான் 5077, முஸ்னது அப்துர்ரஸாக் 14669)
ஸவ்பான்(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: லஞ்சம் வாங்குவோரையும் லஞ்சம் கொடுப்போரையும் இருவருக்கும் மத்தியில் லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக பேசுவோரையும் அல்லாஹ் சபிக்கிறான். - (தப்ராணீ 1415, பஸ்ஸார் 1353)
“திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தி வாழும் படியும், பிறருக்கு நலன் செய்து வாழும் படியும், உறவினர்களுக்கு ஈந்து வாழும் படியும் உங்களுக்கு ஏவுகிறான்.” (அல்குர் ஆன்:16:90)
நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்“ என்று சொல்ல கேட்டேன்“ எனக் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி
இயல்பலா தனசெயேல்.
பொருள் இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே.விளக்கம் நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.
இஸ்லாம்
(ஒவ்வொரு குழந்தையும் ஃபித்ராவில் (மனிதனின் இயற்கையான நிலையில்) பிறக்கிறது, பிறகு அதன் பெற்றோர் அதை ஒரு யூதராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது ஸொராஸ்டிரியராகவோ ஆக்குகிறார்கள் [புகாரி 2:441]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் கூறினான்:(நான் என் அடியார்களை ஹுனஃபாக்களாக (நேர்மையானவர்களாக) படைத்தேன்.) - ஸஹீஹ் முஸ்லிம்
நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய். - முஸ்லிம் 2553
விளக்கம்: ஒவ்வொரு குழந்தையும் இறைவனால் படைக்கப்படும் பொழுது நேர்மையானவர்களாக இயல்பானவர்களாக படைக்க பட்டு உள்ளனர். எனவே அவர்கள் பாவம் செய்யும் பொழுது அது இயல்புக்கு எதிரானது என்பதால் உள்ளத்தில் குறுகுறுப்பும் அந்த பாவத்தை நாம் செய்வதை பிறர் பார்ப்பதை வெறுக்கும் மனநிலையும் அல்லாஹ் நமக்கு கொடுத்து உள்ளான். எனவே அந்த செயல்களை செய்யமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அரவ மாட்டேல்.
பொருள் அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.விளக்கம் பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.
இஸ்லாம்
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தங்களைப் பழிவாங்கும் என அச்சத்தால் யார் பாம்புகளை (கொல்லாமல்) விட்டு விடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். அவற்றிடம் நாம் சண்டை போட ஆரம்பித்த நாளிலிருந்து அவற்றோடு நாம் இணங்கிப் போனதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4570, முஸ்னது அஹ்மத்
இமாம் அஸ்zஸர்கஷீ கூறினார்கள் : “தீங்கிழைக்கக் கூடிய (பாம்பு, பல்லி, எலி உட்பட) ஐந்து உயிரினங்களையும் கையகப்படுத்துவது (அதை விற்பது, வாங்குவது, வளர்ப்பது, விளையாடுவது) தடுக்கப்பட்டதாகும்.” (துஹ்பதுல் முஹ்தாஜ் : 9/337) , (அல்மன்ஸுர் பில் கவாஇத் : 3/80)
பொருள் இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு.விளக்கம் இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.
இஸ்லாம்: மெத்தை-யில் தூங்கலாம் ஆனால் அதனால் தொழுகை பாழாகக் கூடாது:
நபி (ஸல்) அவர்களது படுக்கை விரிப்பு எவ்வாறு இருந்தது என்று அன்னை ஹஃப்ஸாவிடம் (ரளி) வினவப்பட்ட போது, அது ஒரு சாக்குப் பை. அதை இரண்டாக மடித்து நபியவர்களுக்கு படுக்கை யாக்கி விடுவோம் என்று அவர் கூறினார்.
ஒருமுறை நபியவர்கள் காலையில் எழுந்ததும் படுக்கையை விரித்தது யார் என்றார்கள். நான்தான் விரித்தேன் என்றேன். எதை விரித்தீர்கள் என்றார்கள். எப்போதும் விரிக்கும் சாக்குப் பைதான். ஆனால் சற்று மிருதுவாக இருக்கட்டுமே என்று நான்காக மடித்து விரித்தேன் என்றேன்.
இனி இரண்டாகவே மடித்து விரியுங்கள். ஏனெனில், அதன் மிருதுத் தன்மை, தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழ எனக்கு இடையூறாக இருந்தது என்றார்கள் நபியவர்கள். [திர்மிதி]
குறிப்பு: அரேபிய தீபகற்பத்தில் இலவம் பஞ்சு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அது அவர்களின் வாழ்வியலோடு இணைந்து இருக்கவில்லை எனவே இலவம் பஞ்சு என்பது குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.
வஞ்சகம் பேசேல்.
பொருள் வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே.விளக்கம் கபடச் சொற்களைப் பேசாதே.
இஸ்லாம்: குழப்பம் ஏற்படுத்தும் சொற்களை பேசுபவர் நயவஞ்சகர் என்று இஸ்லாம் சொல்கிறது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்:அவன் பேசும்போது பொய் உரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான். (முஸ்லீம்)
(முஹம்மதே!) முன்னரும் அவர்கள் (நயவஞ்சகர்கள்) குழப்பம் விளைவிக்க எண்ணினார்கள். பிரச்சனைகளை உம்மிடம் திசை திருப்பினார்கள். முடிவில் உண்மை தெரிந்தது. அவர்கள் வெறுத்த போதும் அல்லாஹ்வின் காரியம் மேலோங்கியது. (குர்ஆன்: 9:48)
நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன்: 9:67)
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (குர்ஆன்: 4:142)
அழகலா தனசெயேல்.
பொருள் அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே.
விளக்கம் இழிவான செயல்களைச் செய்யாதே.
இஸ்லாம்
நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிடவில்லை. (குர்ஆன் 7:28)
மானக்கேடான செயல்களின் பக்கம் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ நெருங்காதீர்கள். (குர்ஆன் 6:151)
நிச்சயமாக தொழுகை (மனிதனை) மானக் கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்; நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு(தியானம்) மிகவும் பெரிதாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ (அவனை ஷைத்தான்) மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) ஏவுவான். (குர்ஆன் 24:21)
(இறை நம்பிக்கையாளர்களான) அவர்கள் (எத்தகையோரெனில்) பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (குர்ஆன் 42:37)
நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ளமாட்டீர்களா? (குர்ஆன்: 5:90-91)
“அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்” என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.(திருக்குர் ஆன் 2:83)
இளமையிற் கல்.
பொருள் இளமையில் - இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்.
விளக்கம் இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.
‘உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாஈ 11832, ஹாகிம் 7846)
"எவரொருவர் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்கிவிடுகிறான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம், அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
அறனை மறவேல்.
பொருள் அறனை- நற்குணம் , மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.
விளக்கம் நற்குணத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்களும் "நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2)
முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! (திர்மிதி)
பெரும்பாலும் மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும் நற்குணங்களும் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, ஹாகிம்)
அனந்த லாடேல்.
பொருள் அனந்தல் - தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.விளக்கம் மிகுதியாகத் தூங்காதே.
இஸ்லாம்
"இதயத்தைக் கெடுக்கும் ஐந்து விஷயங்களைப் பொறுத்தவரை, அவை குறிப்பிடப்படுகின்றன: மக்களுடன் அதிகமாகக் கலப்பது, ஆசைப்படுதல், அல்லாஹ்வைத் தவிர வேறு எதனுடனும் பற்றுக் கொள்வது, நிரம்பி வழிவது, மிகுதியாக தூங்குவது. இந்த ஐந்தும் இதயத்தைப் பெரிதும் கெடுக்கும்." (மதரிஜ் அஸ்-சாலிகின், 1/453).
கடிவது மற.
பொருள் கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு.
விளக்கம் யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன் பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்! நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்.” (ஸஹீீஹுல் புகாரி)
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, எசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் “அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள். ((ஸஹீஹுல் புகாரி)
“முஃமின் (அல்லாஹ்வை விசுவாசித்தவர்) குத்திக் காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ, ஆபாசமாகப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“அசிங்கமான செயல்களைச் செய்பவரையும், அசிங்கமான சொற்களைப் பேசுபவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (முஃஜமுத் தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (குர்ஆன் 3:134)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 5180)
காப்பது விரதம்.
பொருள் காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் - நோன்பாகும்.
விளக்கம் பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும். தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!” என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட நறுமணம்மிக்கதாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)” (புஹாரி: 1894)
‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கை களையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். (புஹாரி: 1903)
கிழமைப் படவாழ்.
பொருள் கிழமைப்பட- (உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - வாழு.விளக்கம் உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.
இஸ்லாம்
“மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவதுதான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 95)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார் (புகாரி: 13)
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)
நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்“ என்று சொல்ல கேட்டேன்“ எனக் கூறினார்கள். - ஸஹீஹ் புகாரி
கீழ்மை யகற்று.
பொருள் கீழ்மை - இழிவானவற்றை, அகற்று - நீக்கு.விளக்கம் இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
இஸ்லாம்