அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தன்னை விட அதிகமாக இறைவனை நேசித்தல்

தமிழர் சமயம் 


என்னில் யாரும் எனக்கினியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்
கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

பொருள் நம் எல்லோருக்குமே மிகவும் பிடித்த நபர் முதலில் நாம் தான். நம்மை விட நமக்கு இனியவர் யாரும் இல்லை. என்னை விட எனக்கு இனிமையானவன் ஒருவன் இருக்கின்றான். அவன் இன்னம்பர் ஈசனே
 

இஸ்லாம் 


 “உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்” என்று கூறுவீராக! (அல்குர் ஆன்: 9 : 24)

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31) 

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அளைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்: புகாரி 15)

அல்லாஹ்வே! உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பாளர்: முஆத் பின் ஜபல் (ரலி), நூல்: திர்மிதீ )

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ, தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள். அறி: அனஸ் பின் மாலிக் (ரலி), ( நூல்: புகாரி-6171 )

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை) 1.  அல்லாஹ்வை நம்புதல், 2. அல்லாஹ்வை நேசித்தல், 3.இணை வைப்பிற்குத் திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக இருத்தல். (நூல்: அஹ்மத்)

கிறிஸ்தவம் / யூதம் 


உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்,  உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை (மாற்கு 12:30) (Deut 6:5)

என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. (மத்தேயு 10:37)

இறைவனின் அன்பை பெரும் வழி?

 தமிழர் சமயம் *

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்

தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்

தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்

தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)

பொருள்: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. - (திருமந்திரம் 8)

பொருள்: இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்! தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயை விட வெம்மை உடையவன்; (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன். சிவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை. 

இஸ்லாம்

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான். [ஸூரது மர்யம் 96]

அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:76)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 2:195)

திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:222)

பொய்யையே! அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 5:42)

அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:146)

அல்லாஹ் கூறுகிறான் "என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் 21114)

இறைவனின் அன்பு கிடைத்துவிட்டால்?

அல்லாஹ் கூறினான்: எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.» (ஆதாரம் ஹதீஸுல் குத்ஸி புகாரி). {அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}. [ஸூரதுல் மாஇதா 54]

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் நீங்களும் அவரை நேசியுங்கள் என்று சொல்லுகிறான் எனவே விரைவில் அவர் நேசிக்கிறார் பின்பு வானத்திலே மற்ற மலக்குமார்களை அழைத்து இறைவன் இந்த மனிதரை நேசிக்கிறான் எனவே நீங்கள் நேசியுங்கள் என்று கூறுகிறார் வானத்தில் உள்ளவர்கள் அவரை நேசிக்கிறார்கள் பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது அல்லாஹ் ஒரு அடியானை கோபம் கொண்டால் விரைவில் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை கோபம் கொண்டு விட்டேன் நீங்களும் அவர் மீது கோபம் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்முடைய கோபம் கொள்கிறார்கள் என்பவரை அழைத்து அல்லாஹுத்தஆலா இவர் மீது கோபம் கொண்டு விட்டால் நீங்களும் அவரை கோபப்படும் என்று சொல்கிறார்கள் ஆனால் அதிலுள்ள மலக்குமார்கள் அந்த மனிதர் மீது கோபம் கொள்கிறார்கள் பின்பு பூமியிலே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தப்படுகிறது. (முஸ்லிம் ; 2637)

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புஹாரி ; 6502)

கிறிஸ்தவம்

ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! (உபாகமம் 5:10)

தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும். (சங்கீதம் 85:10)

கடவுளின் அன்பு

கிறிஸ்தவம் & யூதம் 

 ஆனால், ஆண்டவரே, நீரோ இரக்கமும் கருணையும் உள்ள கடவுள், நீடிய கோபம், அன்பும் உண்மையும் நிறைந்த கடவுள். - சங்கீதம் 86:15

உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவரே உண்மையுள்ள கடவுள், தம்மை நேசித்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களில் ஆயிரம் தலைமுறைகளுக்கு அவருடைய அன்பு உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறார். -  உபாகமம் 7:9 

இஸ்லாம் 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் - குர்ஆன் 1:1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும். - ஸஹீஹ் முஸ்லிம் : 5313

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.) அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.- ஸஹீஹ் முஸ்லிம் : 5315.  

தமிழர் சமயம் 


அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - (திருமந்திரம் 18. அன்புடைமை 270.)

பதவுரை: அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்: அன்பு வேறு சிவம் வேறு அல்ல.அப்படி வேறு படுத்தி பார்ப்பது அறிவீனர் செயல்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்: அன்பே சிவம் ஆவது எல்லோருக்கும் தெரியாது
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்: அப்படி அன்பே சிவம் ஆனதை அறிந்தவர்கள்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே: அன்பும் சிவமும் இரண்டற கலந்த நிலையை அடைவார்கள் 
 
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே

தமிழர் சமயம் 


பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. குறள் 773

பொருள்: பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

யூதம் 

17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. 18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார். - (நீதிமொழி 24:17-18) 

கிறிஸ்தவம் 

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். - லூக்கா 6:27

 பழிவாங்குதல் பற்றிய போதனை

38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’  என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

அனைவரையும் நேசியுங்கள்

43 ,“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும் (மத்தேயு 5)

 இஸ்லாம் 

“மார்க்கம் (தீன்) என்பதே பிறர் நலம் நாடுவதுதான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்-95 

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி-7376 

மேலுள்ள வசனங்கள் முஸ்லிம்களுக்கு நலம் நாடுவதென்றோ அல்லது முஸ்லிம்களுக்கு மீது கருணை காட்டாதவர்கள் என்றோ கூறாமல், பகைவர் உட்பட அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.