ஜோசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோதிடமும் குறிசொல்லுதலும் ஆன்மிகம் அல்ல

நாதீகர்கள் நிச்சயம் ஜோதிடத்தை நம்புவதில்லை.. எனவே இது அவர்களுக்கான பதில் அல்ல, கடவுள் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குழப்பம் அடைகின்றனர். 

எந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும் எதிர்காலத்தை ஒரு மனிதனால் அறிய முடியுமா? அல்லது கணிக்க முடியுமா? என்று அவரவர் சமய நூல்கள் என்ன சொல்கிறது என்று வாசிக்க வெண்டும்.

மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் எதிர்க்கலத்தில் நடக்கவிருப்பது பற்றி எந்த அறிவும் இல்லை.

இஸ்லாம்

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65) 

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘மறைவு ஞானத்தின் திறவு கோல்கள் ஐந்து, மறுமை எப்போது வரும் என்ற அறிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது, அவனே மலையை இறக்குகின்றான். கட்பறைகளுல் உள்ளவற்றையும் அவனே அறிவான், எந்த ஒரு ஆத்மாவும் நாளை என்ன நடக்கும் என்பதை அறியமாட்டாது, எந்த ஒரு ஆத்மாவும் அது பூமியின் எவ்விடத்தில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது, அல்லாஹ்வே அறிந்தவனும் நுனுக்கமானவனுமாவான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)  

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (அல்குர்ஆன் 11:49)  

கிறிஸ்தவம் / யூதம் 

  
இயேசு கூறினார் "அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களும், குமாரனும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்." (மத்தேயு 24:36

எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. (நீதிமொழிகள் 27)

யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! 6 நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கிழக்கு நாட்டு ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பெலிஸ்தியர்களைப்போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோத எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். ( ஏசாயா 2:5)

எனவே தீர்க்கதரிசிகளும் கூட இறைவனின் வழிகாட்டுதலில் தான் எதிர்காலத்தில் நடக்க விருப்பத்தை தீர்க்க தரிசனமாக கூறினார்கள். அது அல்லாமல் கோள்களை கொண்டோ, எண்களை கொண்டோ, கிளியை கொண்டோ, ஆக்டோபஸை கொண்டோ எதிர்கால நிகழ்வை கூறியதில்லை. அப்படி நடக்க வாய்ப்பு உண்டு என்றும் அவர்கள் கூறவில்லை.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சோதிடம் பொய் என்று இந்த வசங்களை கொண்டு புரிவதும் ஏற்பதும் மிக மிக எளிது, ஏனென்றால் வேத வாக்கியமாக எந்த நூலை ஆதாரமாக எடுப்பது என்பதில் அவர்களுக்கு குழப்பம் இல்லை. ஆனால் சைவர்களுக்கும் சமர்களுக்கும் வைணவர்களுக்கும் அல்லது இந்துக்கள் என்று கருதுபவர்களுக்கும் இதில் சிரமம் உண்டு. அது ஆதார நூல்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம், வேதம் என்றால் என்ன எனும் வரையறையை அறியாத நிலை தான் இவைகளுக்கு மூல காரணம்.

இத்தனை குழப்பத்தை தவிர்க்க, தமிழர் வேதம் என்று எனது ஆய்வில் நான் கருதும் நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்வோம். 

தமிழர் மதம்

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில்.  - (நாலடியார் 52)

(பதவுரை)
தலை ஆயார்= பெரியோர்கள்,
நிலையாமை= (செல்வம், இளமை, சரீரம் இவை) நில்லாமை,
என்று= என்றும்,
நோய்= வியாதியும்,
மூப்பு= முதுமையும்,
சாக்காடு= மரணமும் இருக்கின்றன,
என்று= என்றும்,
எண்ணி= நினைத்து,
தம்= தமக்கு ஏவப்பட்ட,
கருமம்= நற்செயலை,
செய்வார்= செய்வார்கள்;
தொலைவு இல்லா= அதிக அளவில்லாத,
சத்தமும்= குறி கேட்டல்,
சோதிடமும்= சோதிடமும்,
என்று= என்று சொல்லிய,
இவை= இவைகளை,
பிதற்றும்= உளரும்,
பித்தரின்= பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
பேதையார்= அறிவீனர்,
இல்= இல்லை.

(கருத்துரைபெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். குறி சொல்லுதலும், சோதிடமும் கற்று உளறும் பைத்தியகாரர்களை போல அறிவீனர்கள் இல்லை.

குறிப்பு: சத்தம் என்பது குறி சொல்லுதல் என்றும் இசை என்றும் இரு வகை கருத்து உண்டு. ஆனால் குறி கேட்டல் என்பதே இந்த பாடலின் கருத்துக்கு பொறுத்தமானதாகும்.

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - (அறநெறிச்சாரம் பாடல் - 144)

(பதவுரை)
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை - தனக்கு இணையான தெய்வம் வேறொன்றும் இல்லை;
தான் தன்னைப் பின்னை மனம் அறம் பெற்றானேல் - ஒருவன் தெய்வத்தையும் அறத்தையும் மனதில் பெற்றால்,
எழுத்து எண்ணே நோக்கி என்னை - எண்கள் மற்றும் எழுத்து முதலியவற்றை அடிப்படையாக கொண்ட சோதிடம் பார்ப்பதால் என்ன பயன்?
இருமையும் கண்டு - இம்மையிலும் மறுமையிகும் இன்பம் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து,
அருட்கண்ணே நிற்பது அறிவு - அந்நூல்கள் வாயிலாக தெய்வத்தின் உதவியுடன் இருப்பதுதான் அறிவாகும்

நாளையும் கோளையும் நம்பாதே நமச்சிவாயனை நம்பு. - (திருஞானசம்பந்தர்)

இஸ்லாம் 


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)  

 

கிறிஸ்தவம் 


மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன். (லேவியராகமம் 20:6)

 
உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க கூடாது குறிசொல்லவோ மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ சூனியம் வைக்கவோ,வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம  அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். - (உபாகமம் 18:10-13)

மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார். (லேவியராகமம் 20:27)

சோதிடம் பார்ப்பது எனபது வேதத்தையும் கடவுளையும் நிராகரிப்பது ஆகும். 

கிறிஸ்தவம் 

கர்த்தர் கூறுகிறார்: மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன். (லேவியராகமம் 20:6) 

இஸ்லாம்

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட இறைவனின்  சட்டத்தை அவன் நிராகரித்து விட்டான்(அஹ்மத் 9171) 

முடிவுரை


எனவே சோதிடம் உண்மையல்ல, ஏனென்றால் அதை உளறல் என்கிறது நாலடியார்.

ஜோதிடம் உண்மை, நல்ல தொழில், அது ஒரு கடல், அதை கற்க பொறுமை வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் கூறி இருப்பதை காண முடிகிறது. ஆனால் சோதிடம் தமிழர் பண்பாடு அல்ல, இது எனது கருத்து அல்ல, மாறாக தமிழர் அறம் கூறும் கருத்து. சோதிடத்துக்கு ஆதரவாக தமிழர் அற நூல்களில் எதேனும் ஆதரவு கருத்து உண்டா என்று தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.


சோதிடம் நல்லதொழில் அல்ல, ஏனென்றால் உணமையல்லாத ஒன்றை மக்களிடம் கூறி பணம் பெறுவது அறமல்ல.

சோதிடம் ஒரு கடல் அல்ல - "தொலைவில்லா சத்தமும் சோதிடமும்" என்கிறது நாலடியார் அதாவது "ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே இல்லாத" என்று பொருள்.

சரிப்பா, அகத்தியர் சோதிட நூல் எழுதி இருக்காரே? வரலாற்றில் அகத்தியர் என்ற பெயரில் பல பேர் வெவ்வேறு இனத்தில் இருந்துள்ளனர், ஆரியர்கள் உட்பட என்று ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. 
 
இதுபோல போகர் உட்பட பல சித்தர்கள் பெயரில் சோதிட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தண்மை ஆராயப்பட வேண்டும்.  உண்மையான சித்தர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ வழி சொல்லுவதில்லை. உலகம் நிலையில்லாதது என்று தான் போதனை செய்வர்.

சரிப்பா, நாடி சோதிடம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளதே, எப்படி? இதை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் சரபோஜி மன்னர் ஆவார். இது உண்மையில் ஆன்மீகமாக அல்லது அறிவியலாக இருந்தால் இன்றும் அது வளரவேண்டும், எழுதப்பட வேண்டும். இல்லையே, ஏன்?

அதுமட்டுமல்ல உலகின் பெரும்பாலான சமயங்கள் சமயங்களும் சோதிடத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இஸ்லாம் அது எவ்வாறு இயங்குகிறது என்று ஜின் அத்தியாயம் விளக்குகிறது.

ஜின்கள் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை ஒட்டு கேட்டு குறி சொல்பவர் காதில் கூறுபவையாக இருந்து வந்துள்ளது. நபிகள் இதற்கு எதிராக பிராத்தனை செய்த காரணத்தினால் இப்பொழுது ஒட்டு கேட்கும் ஜின்கள் கொல்லப் படுகிறது. எனவேதான் நாடிசோதிடத்தில் பல செய்திகள் உண்மையாக நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறாது, காரணம் மனித வாழ்கையின் நிகழ்வுகள் மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டது. அவைகளாவன விதி, பிராத்தனை மற்றும் வினைப்பயன்.

எனவே இப்பொழுது பெரும்பாலான ஜின்கள் ஒட்டுகேட்கும் நிலையில் தேவர்கள் உலகம் இல்லை. நீங்கள் சில ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை படைத்ததால் அவர்களுக்கு உள்ள ஒரே தகவல் மூலம் இறந்த காலம் மட்டும். வரலாறு திரும்பும் என்கிற நியதி அடிப்படையிலும் மனிதன் செய்த வினையின் பயன் அடிப்படையிலும் சில எதிர்கால நிகழ்வுகள் யூகித்து கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால் சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் பொய்யகவும் உள்ளது.

ஜின்கள் கூறுகின்றது: 

 72:8. “நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

72:9. “(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.

72:10. “அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம். 

சோதிடம் 100% உண்மையா பொய்யா என்ற கவலையை விடுத்து, இதை  இறைவன் விரும்புவதில்லை என்பதை உணர்வோம். தேவைகளை இறைவனிடம் கேட்போம், நல்லறங்கள் செய்வோம், அது நமது வாழ்வை இருமையிலும் வளமையாகும்.