இறைச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைச்சி உணவு

தமிழர் சமயம்

சிவவாக்கியர் பாடல்கள்

புலால் புலால் அதேன்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருப்பது எங்ஙனே
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பெருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே! (சிவவாக்கியம்-149) 
 
பதவுரை
புலால் - மாமிசம், இறைச்சி, சதை பிண்டம்; 
பேதைமை - அறிவீனம், மடமை, மூடத்தனம்; 
பிதற்று: உளறு, அறிவின்றிப் பேசும் பேச்சு; 
(பெருலா=பெரிய+உலா) உலா: காமுறுதல்;  
பித்தன் - பைத்தியக்காரன், அதீத அன்பு;
அத்தன் - தந்தை, அப்பா; 

பொழிப்புரை மாமிசம் மாமிசம் என்று மடமை பேசுகிறீர். மாமிசத்தை எம் இறைவன் பிரிந்து இருந்தது எங்கே? காமுறும்போது மாமிசத்தோடு உளறி அவன் வித்தாக மாமிசத்தில் முளைத்து எழும் பிள்ளையின் மீது அதீத அன்பு கொள்ளும் அப்பனே. 

உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டு பட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே! (சிவவாக்கியம்-150
 
பதவுரை 
உத்திரம்: இரத்தம், குருதி;
ஒக்க: ஒருமிக்க, ஒருசேர, சமமாயிருக்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க; இதரம்: வேறு, அன்னியம், வேறுவஸ்துகள், தேகப் பிணிப்பில்லாத ஆத்துமா
மதிரம் = மதிரை: கள் (சூடாமணி நிகண்டு); 
சதிரம்: உடல், தேகம், சரீரம்;

பொழிப்புரை: இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்து தகுதியாயிருக்கம் நீர் வளர்ந்ததும் வேறு வஸ்துவாய் இருந்த அது ஒன்று அல்லது இரண்டு என்று என்னக்கூடிய அளவில் கருவில் பட்டபொழுது விடவில்லை அது மாமிச புலால் என்று. அப்படி விட்டு இருந்தால் உடலாக எப்படி வளர்ந்து இருக்கும்? சைவரான மூடரே! 

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். (சி.வா. 157)

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே? (சி.வா. 148) 
 
 அகநானூறு  
  

மேலும் அகநானூற்றில் 136-ஆம் பாடலி லும் பண்டைத் தமிழரின் திருமண முறைகள் பற்றிப் பேசப்பட்டுள்ள காட்சிகளையும் காண்போம். நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண் சோற்றை மணவினை காணவந்தோர்க்குக் கொடுத்து, உரோகிணி கூடியதனால் எல்லாக் குற்றமும் நீங்கிய சுபநேரத்தில் மணவீட்டினை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணப்பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, மங்கல மகளிர் தலைவியை நீராட்டியபின், வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்ணூலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்றுகூடி, மழைச் சத்தம் போன்ற மணவொலி கூடிய பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினால் ஏற்பட்ட வியர்வையைத் துடைத்து, பெற்றோர் (தமர்) ‘நமக்கு இற்கிழத்தியாகத் தந்த தலைநாள் இரவின் கண்..’ என்று வதுவை மணம் நடந்தேறி முடிகின்றது. 


“மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்..
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய.
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை

பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்..
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

மழைபட் டன்ன மணன்மலி பந்தர்

இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்..” (அகம். 136)

தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்..” (அகம். 136)

 
புறநானூறு 
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
5 செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
10 மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே! - புறநானூறு - பாடல் 103

உரை: காவடியில் ஒரு பக்கம் பதலையும் ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு, ”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே! போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை, மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும் பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான். நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான். அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான். வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன். வாழ்க அவன் திருவடிகள்!

குறிப்பு: புறநானூறு ஒரு வழிநூல் ஆகும். முதல்நூல் மற்றும் வழிநூல்கள் என்பன மறை நூல்களாகும். 
 
நற்றிணை

உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்
கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன் (நற்.59)

என்னும் நற்றிணைப் பாடலடிகளில் உடும்பு, நுணல், ஈயல், முயல் ஆகியவற்றை வேட்டையாடி வரும் வேட்டுவனின் செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகேசி 

 சமண சிறு காப்பியமான நீலகேசி வேதப் பார்ப்பனர்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறது,

“வசுக்கள் உருத்திரர் பிதிரரொடு
இவர் முதலாப் பலர்க்கும்
பசுக்களோட எருமைகள் குதிரைகள்
புலியொடு நாய் முதலா
இசு கழிந்தன பல கொலைகளும்
இரங்கலிர் கொன்று அவரை
அசிப்பவர் போன்ற நீர் ஆயினும்
அருவினையா நுமக்கே”

பொருள் “வசுக்கள், உருத்திரர், பிதிரர் ஆகியோருக்காக என்று சொல்லிக் கொண்டு, வேள்வியில் சிறுதும் இரக்கமின்றி பசு, எருமை, குதிரை, புலி மற்றும் நாய் போன்ற விலங்குகளைக் கொலை செய்கிறீர்கள். அந்த தேவர்களுக்கு ஊட்டுவது போல நடித்து, நீங்களே புசிப்பீர்கள். எனவே இந்த தீவினை உங்களையே சாரும்.” இது வடநாட்டில் மட்டுமல்ல, அன்றைய தமிழகத்திலும் வேதப் பார்ப்பனர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட பல விலங்குகளைக் கொன்று தின்றதையே காட்டுகிறது.

அதே நீலகேசி அந்த வேள்விமுறையையே கீழ்வருமாறு கேள்விக்குள்ளாக்குகிறது

“நண்பரை நுதலியும் பகைவரை
நுதலியும் அமிர்தோடு நஞ்சு
உண்பார்க்கு அல்லது அவர்களுக்கு
ஆம் என உரைக்குநர் யார்
பண்பிலி தேவரை நுதலிய
கொலையினில் பல் வினைதான்
உண்பல வகையினின் அடைந்தலை
விளையுங்கள் உன் நுமக்கு என்றாள்”

தன் நண்பன் நீடு வாழ வேண்டும் என்று ஒருவன் அமிர்தம் உண்டான். இன்னொருவனோ தனது எதிரி அழிந்து போகட்டும் என நஞ்சு அருந்தினான். இந்த இரண்டின் பலனும் உண்டவர்களுக்குத் தானே போகும். அந்த நண்பர்களுக்கு போகும் என்று யார் சொல்வார்கள். அவ்வாறே தேவர்களுக்காக செய்யப்பட்ட கொலைகள் என்று சொன்னாலும், அதன் தீவினைப்பயன் கொன்ற உங்களுக்கே சேரும் என வேதவாதியைப் பார்த்து நீலகேசி சொல்கிறாள்.

இதில் வேள்விகள் ஏமாற்று வேலை என்பதையும், அவை வேத பார்ப்பனர்களின் மாமிச இச்சைக்கான பெரிய அடுப்புகளாகவே விளங்கின என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது நீலகேசி.

இன்னொரு இடத்தில் நீலகேசி வேதத்தைத் தாக்கித் தகர்க்கையில்,

“………….
கொலை மண்ணும் மருவுதலின்
ஐயம் இல் தீக்கதி செலுத்துவது”

என்று வேதத்தை சாடுகிறாள்.

இங்கு வேள்விக் கொலைகளையே தனது சாரமாகக் கொண்டிருந்த வேதப் பார்ப்பனீயத்தை நீலகேசி சரியாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது.

பவுத்த காப்பியமான மணிமேகலையோ ஆபுத்திரனின் கதை மூலம், வேதப் பார்ப்பனர்களின் மாட்டுக்கறி வெறியை அம்பலப்படுத்துகிறது. அக்கதை இதோ…

வாரணாசியில் அபஞ்சிகன் என்ற “மறை (வேதம்) ஓம்பாளன்” இருந்தான். அவனுடைய மனையாளியின் பெயர் “பார்ப்பினி சாலி” அவள் ஒழுக்கம் தவறி நடந்து விட்ட காரணத்தால், அந்தப் பாவம் போக்கு “குமரி ஆடிய வருவாள்” வரும் வழியில் குழந்தை பிறந்து விடுகிறது. எனினும் “ஈன்ற குழந்தைக்கு இரங்காளாகி” மறைவானதொரு இடத்தில் அதை விட்டுவிட்டு சென்று விடுகிறாள்.

பசியால் குழந்தை அலற, அது கேட்டு “ஓர் ஆ (பசு) வந்து அணைந்து” ஆதரவு தந்தது. நாக்கால் நக்கி கொடுத்து, பாலும் கொடுத்தது. இப்படி அந்தக் குழந்தை ஆபுத்திரன் ஆனது. அப்போது அவ்வழியே வந்த இளம்பூதி என்கிற “மறை ஓம்பாலனும்” அவனது மனையாளும் குழந்தையைக் கண்டு அதை எடுத்து கொள்கிறார்கள். ஆ மகன் அல்லன் என் மகன் என்றே” கொஞ்சுகிறான் அவன்.

இளம்பூதியின் இல்லத்தில் குழந்தை வளர்கிறான். உபநயனத்திற்கு முன்னரே அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறான். சிறுவன் ஒருநாள் அந்த ஊரிலுள்ள இன்னொரு அந்தணர் வீட்டிற்கு செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சியை மணிமேகலை விளக்குகிறது,

“ஆங்கு புலைசூழ் வேள்வியில்
குரூரத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சிவெய் துயிர்த்து புலம்பிக்
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று அங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங்கண் நீர் உடுத்து”

இதற்கு பொ. வே. சோமசுந்தரனார் கொடுத்துள்ள விளக்கவுரையை அப்படியே தருவோம் 

     “அவ்விடத்தே அப்பார்ப்பனர்கள் தாம் மறுநாள் ஊன் தின்பதற்கு ஏதுவாக வேள்வி செய்வதாக ஒரு சூழ்ச்சி செய்து, நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று தின்பதற்காக நிறமிக்க மலர் மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டுத் தன்னைக் கொல்பவரும், தான் பெரிதும் அஞ்சுதற்குக் காரணமாகியவரும் கொடியவருமாகிய அப்பார்ப்பனர்க்குப் பெரிதும் அஞ்சி, உய்தி காணாமல் வெய்தாக மூச்செறிந்து வருந்தி, கொலைத் தொழிலை மிகுதியாக செய்கின்ற வேடர் வில்லிற்கு அஞ்சி ஓடிப்போய் அவர் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான் போல அஞ்சி, அவரால் கட்டப்பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு. தனது நெஞ்சம் நடுங்கி, நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து”

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வேதியர்களும் வேள்வியில் பசுவைக் கொன்றார்கள். பசு மாமிசத்தை உண்பதற்காகவே பசுவைக் கொன்றார்கள் என்பது தெளிவாகிறது. பவுத்த சமயமே இது கண்டு கொந்தளித்தது. தனது எதிர்ப்பை அந்த சிறுவனின் செய்கை மூலம் இலக்கியமாக்குகிறார் சாத்தனார். அன்று இரவு அந்தப் பசுவை அவிழ்த்துக் கொண்டு, ஆபுத்திரன் ஊரை விட்டுக் கிளம்பி விடுகிறான். அந்தணர்கள் விசயம் அறிந்து, அவனையும் பசுவையும் வளைத்துக் கொள்கிறார்கள். “புலைச் சிறுமகனே போக்கப்படுதி என அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப” என்பது நடக்கிறது. அதாவது மரணத்திலிருந்து பசுவைக் காப்பாற்றியவனை “புலைச் சிறுமகனே” என்று திட்டியிருக்கிறார்கள்! கோல் கொண்டு அடித்திருக்கிறார்கள்!

அடிபட்டாலும் பசுவைக் காப்பாற்றிய மன நிறைவோடு, “நோவன செய்யமின்” என சிறுவன் அந்தணர்களுக்குப் புத்தி சொல்கிறான். அவர்களுக்குக் கோபம் வருகிறது. தங்களின் வேள்வியை இகழ்ந்ததன் மூலம் தங்களின் புனித வேதத்தையே இகழ்ந்துவிட்டதாகக் குமுறுகிறார்கள். “அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை” என்கிறார்கள். இதிலிருந்து மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லும் வேள்வி முறையையே தங்களது வேத உட்பொருளாக வேதியர்கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

மேலும் பல தமிழ் நூல்கள்  

    • விலங்குகளில் ஆட்டிறைச்சி (பொருநர்.103-140, புறம்.366:18-20, புறம்.261:8-9), 
    • ஆமான் என்றழைக்கபடும் காட்டுப்பசு இறைச்சி (சிறுபாண்.175-177), 
    • முயல் இறைச்சி (புறம்.319:6-9), 
    • முளவு மா என்னும் முள்ளுடைய பன்றி இறைச்சி (ஐங்.364:1-2, புறம்.177:13-15, மலை.175-177), 
    • யானை இறைச்சி (அகம்.106:12, அகம்.169:3-7), 
    • மான் (இரலை, உழா, கடமா, நவ்வி, மரையான்) இறைச்சி (புறம்.150:5-15, புறம்.152:25-27, மலை.175-185, அகம்.107:5-10) 
    • ஆமை (பட்.64, புறம்.42, புறம்.176), 
    • உடும்பு இறைச்சி (புறம்.325, புறம்.326, பெரும்பாண்.131-133, மலை.175-177) 
போன்றன உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன.


இந்துமதம் 


இந்து மதம் உள்ளிட்ட உலகில் உள்ள அனேக மதங்கள் மதப் புனிதத்தைப் போற்றிக்காக்க விலங்குகளை பலியிட்டுள்ளனர். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் உணவுக்காகவே விலங்குகள் பலியிடப்பட்டதற்கு மனுஸ்மிருதி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், தர்மசூத்திரங்கள் உள்ளிட்ட இந்து மத சமய நூல்கள்களே சான்றாக உள்ளன.

”சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல”. (மனு: 5-30)

“நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான்” - சத்பத பிராமணத்தில் மகரிஷி யாக்யவல்கியன். (3/1/2/21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்” என்கிறது அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1/3/10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும் (10/85/13), பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான் (6/17/1) என்கிறது ரிக் வேதம்.

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான் என்கிறது வஷிஸ்த தர்ம சூத்திரம் (11/34).

பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி

திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு... க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் - தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?)

மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும் விவேகானந்தர்

“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4)

“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9)

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) - தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏப்ரல் 2015

புனிதம் தான் காரணம் என்றால் இந்த ஆதாரங்கள் போதும் இவர்களுக்கு. ஆனால் இவர்கள் செய்வது அரசியல், எத்தனை ஆதாரங்களை அடுக்கினாலும் இவர்கள் அதை ஆய்வு செய்வது கூட கிடையாது, வெறுமனே புறந்தள்ளி விடுவார்கள்.  


கிறிஸ்தவம்


லேவியராகமம் 11 - இறைச்சி உண்பது பற்றிய விதிகள்


1 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,  

 

2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் கூற வேண்டியதாவது: நீங்கள் உண்ணத்தக்க மிருகங்கள் பின்வருவனவாகும்,  

 

3 இரண்டாகப் பிளந்த குளம்புடைய மற்றும் அசைபோடும் மிருகங்களின் இறைச்சியை உண்ணலாம். 

 

4-6 “சில மிருகங்கள் அசைபோடும். ஆனால் அவற்றுக்குப் பிளந்த குளம்புகள் இருக்காது. அவற்றை நீங்கள் உண்ணக் கூடாது. ஒட்டகம், குழிமுயல், முயல் ஆகிய மிருகங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. அவை தீட்டு உள்ளவை.  

 

7 இன்னும் சில மிருகங்களுக்குக் குளம்புகள் விரிந்திருக்கும். ஆனால் அசை போடாது. அவற்றையும் நீங்கள் உண்ணக் கூடாது. பன்றிகள் இத்தகையவை. எனவே இவை தீட்டுள்ளவை.  

 

8 அவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள்! அவற்றின் பிணத்தையும் தொடாதீர்கள்! அவை உங்களுக்குத் தீட்டுள்ளவை!


கடல் உணவைப்பற்றிய விதிகள்


9 “சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ வாழ்ந்து அவற்றுக்குச் செதில்களும், சிறகுகளும் இருந்தால் அவற்றை நீங்கள் உண்ணலாம்.  

 

10-11 ஆனால் சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ, வாழ்ந்தும் அவற்றுக்குச் செதில்களும் சிறகுகளும் இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது. கர்த்தர் இத்தகைய மிருகங்கள் உண்பதற்குத் தகுந்தவையல்ல என்கிறார். இவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள். இவற்றின் பிணத்தைத் தொடவும் கூடாது.  

 

12 எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள்.


உண்ணத் தகாத பறவைகள்


13 “தேவன் உண்ணத்தகாத மிருகங்களைப்பற்றி சொன்னது போலவே உண்ணத்தகாத பறவைகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது கழுகு, கருடன், கடலுராஞ்சி,  

 

14 பருந்து, வல்லூறு வகைகள்,  

 

15 காக வகைகள்,  

 

16 நெருப்புக் கோழி, கூகை, செம்புகம், டேகை,  

 

17 ஆந்தைகள், நீர்க்காகம், கோட்டான்,  

 

18 நாரை, கூழக்கடா, குருகு,  

 

19 கொக்கு, ராஜாளி வகைகள், புழுக்கொத்தி, வௌவால் ஆகியவற்றை நீங்கள் உண்ணக் கூடாது.


உண்ணத்தக்க பூச்சிகள் பற்றிய விதிகள்


20 “சிறகும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.  

 

21 ஆனால் நீங்கள் தரையிலே தாவுவதற்கேற்ற வகையில் கால்களுக்கு மேல் தொடைகளைக் கொண்டவற்றை உண்ணலாம்.  

 

22 வெட்டுக்கிளி வகைகளையும், சோலையாம் என்னும் கிளி வகைகளையும் அர்கொல், ஆகாபு என்னும் கிளி வகைகளையும் நீங்கள் உண்ணலாம். 

 

23 “ஆனால் சிறகுகளும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை, கர்த்தர் உண்ணக் கூடாது என்றார்.  

 

24 அப்பூச்சிகள் உங்களைத் தீட்டுக்குள்ளாக்கும். எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டாலும் மாலைவரை தீட்டுள்ளவர்களாவர்.  

 

25 எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டு எடுத்தால் அவர்கள் தங்கள் ஆடைகளை துவைக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டாக இருப்பார்கள்.


மிருகங்களைப்பற்றி மேலும் சில விதிகள்


26-27 “சில மிருகங்களுக்குப் பிளந்த குளம்புகள் இருக்கும். ஆனால் அவை சரியாக இரண்டாக பிளந்திருக்காது. சில மிருகங்கள் அசைபோடாது. சில மிருகங்கள் குளம்புகளால் நடக்காமல் உள்ளங்கால்களால் நடக்கும். இவை அனைத்தும் தீட்டுள்ளவை. அவற்றைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.  

 

28 எவராவது இவற்றின் சடலத்தை எடுத்தால் அவர்கள் தம் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவர்களும் மாலைவரை தீட்டு உள்ளவர்களாக இருப்பார்கள். அம்மிருகங்கள் உங்களுக்கு தீட்டானவை.


ஊர்ந்து செல்லும் பிராணிகள் பற்றிய விதிகள்


29 “பெருச்சாளி, எலி, பெரிய பல்லி வகைகள்,  

 

30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி  

 

31 ஆகிய ஊர்ந்து செல்லும் பிராணிகள் அனைத்தும் உங்களுக்குத் தீட்டானவை. இவற்றின் செத்த உடலைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.


தீட்டான மிருகங்களைப்பற்றிய விதிகள்


32 “மேற்சொன்ன தீட்டான மிருகங்கள் செத்து எதன் மேலாவது விழுந்தாலும் அது தீட்டாகும். அவை மரப்பொருள், ஆடை, தோல், துக்க நேரத்திற்குரிய ஆடை, வேலைக்குரிய கருவி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவானாலும் உடனடியாக அதை தண்ணீரால் கழுவ வேண்டும். அது மாலைவரை தீட்டாக இருக்கும். அதன் பிறகே அவை தீட்டு கழிந்து சுத்தமாகும்.  

 

33 அவற்றில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால், பாத்திரமும் அதில் உள்ள பொருளும் தீட்டாகிவிடும். எனவே அதனை உடைத்துப் போட வேண்டும்.  

 

34 தீட்டான மண்பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து உணவுப் பொருட்கள் மேல் படுமேயானால், அவ்வுணவும் தீட்டாகிவிடும்.  

 

35 மரித்து தீட்டாகிப் போன மிருகத்தின் உடலானது எதன் மேலாவது விழுமானால், அதுவும் தீட்டாகிப்போகும். அது களிமண்ணாலான அடுப்பாகவோ, அல்லது மண் தொட்டியாகவோ இருக்கலாம், அவற்றை உடைத்துப் போட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டாய் இருக்கட்டும். 

 

36 “நீரூற்றும், தண்ணீருள்ள கிணறும் சுத்தமாக இருக்கும். ஆனால் எவராவது தீட்டான மிருகத்தின் செத்த உடலைத் தொட்டால் அவர்களும் தீட்டாகிவிடுவார்கள்.  

 

37 தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது.  

 

38 ஆனால் தீட்டான மிருகங்களின் செத்த உடலின் பாகங்கள் தண்ணீர் பட்ட விதையின்மேல் பட்டால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். 

 

39 “உங்களது உணவுக்கான ஒரு மிருகம் செத்தால், அதன் உடலைத் தொடுகிறவன் மாலைவரை தீட்டாக இருப்பான்.  

 

40 அதன் இறைச்சியைத் தின்றவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அம்மிருகங்களின் செத்த உடலைத் தூக்குகிறவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். இவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 

 

41 “தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களை கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது.  

 

42 தரையில் ஊர்ந்து செல்லும் சகல மிருகங்களிலும் வயிற்றினால் நகர்ந்து செல்லுகின்றவற்றையும் நாலு கால்களால் நடமாடுகின்றவற்றையும் பற்பல கால்கள் உள்ளவற்றையும் உண்ண வேண்டாம். அவை தீட்டுள்ளவை.  

 

43 அவை உங்களைத் தீட்டுப் பண்ணாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  

 

44 ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர் நீங்களும் உங்களைப் பரிசுத்தமானவர்களாக வைத்துக் கொள்ளுங்கள். ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ளாதீர்கள்.  

 

45 நான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். நான் இதைச் செய்ததால் நீங்கள் சிறப்பான ஜனங்களாக விளங்குகிறீர்கள். உங்களது தேவனாகிய நான் பரிசுத்தமானவராக இருக்கிறேன். நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருங்கள்” என்றார். 

 

46 இவை அனைத்தும் மிருகம், பறவை, ஊர்வன பற்றிய விதிகள் ஆகும். இவை அனைத்தும் கடலிலும், தரையிலும் உள்ள மிருகங்களைப்பற்றியவை.  

 

47 இதன் மூலம் ஜனங்கள் தீட்டுள்ள மிருகங்களுக்கும் தீட்டில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறு பாட்டைக் கண்டுகொள்ளலாம். அதோடு உண்ணத் தக்க மிருகம் எது, உண்ணத்தகாத மிருகம் எது என்றும் அறிந்துகொள்ளலாம்.


ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான். - (லேவியராகமம் 5:2)

அந்நிய தெய்வங்களுக்கு படைக்கப்பட்டது  

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை என்றும் அறிந்திருக்கிறோம். - (1 கொரிந்தியர் 8:4)

நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன். அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள். எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர், அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். (எரேமியா 1:16)


இஸ்லாம்


உணவில் ஹலால் ஹராம் பேணுவோம்

சைவ உணவு பொருத்த வரை அனைத்துமே அனுமதிக்கப்பட்டது 

- ஒரு தாவரத்தை சாப்பிடுவது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றால் அதை நாம் உண்ண கூடாது அதை தவிர்த்து மற்ற உணவுகளை நாம் உண்ணலாம்!

அசைவ உணவை மூன்று வகையாக பிரிக்கலாம் 

- ஒன்று தரையில் வாழும் விலங்குகள்
- இரண்டாவது கடலில் வாழும் விலங்குகள்
- மூன்று வானத்தில் பறக்கும் பறவைகள்

தரையில் வாழும் விலங்குகள் 

கீறிக் கிழித்து விலங்கு எதுவாக இருந்தாலும் அதை உண்ணுவது ஹராம் ஆகும்! 
 
ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி?

இஸ்லாத்தில் இரண்டு வகை பிராணிகளை உண்ண நேரடியான தடை உள்ளது 

1) பன்றி (அல் குர்ஆன் 5:3)
2) வீட்டு கழுதை (ஸஹீஹ் புஹாரி : 4217)

இவைகளை தவிர (தானாகச்) செத்தவைகள் - இரத்தம் - அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும்

கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அல்குர்ஆன் : 5:3)

ஷிர்க் ஆன இடத்தில் அறுக்கப்பட்ட பிராணிகள் அல்லது உணவுகள் உண்ண கூடாது

இவைகளை தவிர பிற பிராணிகளில் ஹலால் ஹராம் கண்டுபிடிக்க நபி (ஸல்) அவர்கள் சில வழிமுறைகளை கூறி உள்ளார்கள்!

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள். (நூல்: புகாரி : 5530)

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும்.

ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்துமே சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும் ஆனால் பூனை,நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

கோரைப் பல் உள்ள எந்த பிராணியையும் நாம் உண்ண கூடாது !

இந்த அளவுகோலை வைத்து நாம் எந்த பிராணிகளை உண்ணலாம் / உண்ண கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்!

கடல்வாழ் உயிரினங்கள்

 கடல் வாழ் உயிரினங்களை பொருத்த வரை அனைத்துமே நமக்கு அனுமதிக்கப்பட்டது - அவைகள் செத்தால் கூட நாம் அவற்றை உண்ணலாம் - கடல் வாழ் உயிரினங்களில் ஹராம் என்று எதுவும் கிடையாது

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ 64)

 கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை!

ஆனால் சிலர் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை நாம் உண்ணக் கூடாது! அவற்றிக்கும் கோரை பல் உள்ளது என்று கூறுவார்கள் ஆனால் இதற்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த வித ஆதாரமும் கிடையாது

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 5:96)

 கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ண கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது!

இருந்தாலும் கடலில் உள்ள அனைத்துமே நமது உடலுக்கு நல்லது அல்ல அதில் உள்ள சில மீன்களை சாப்பிட்டால் நமது உடலுக்கு தீங்கு ஏற்படும்!

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் :4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில் நாம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கடல் வாழ் உயிரினங்களை தவிர்த்து ! மற்ற கடல் வாழ் உயிரினங்களை நாம் உண்ணலாம்!

பறவைகள் 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் : பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3914)

பறவைகளை பொருத்த பொருத்த கால்நடைகளுக்கு உள்ள அதே சட்டம் போன்று தான்!

கீறி கிழித்து உண்ணும் பறவைகள் காகம், கழுகு, பருந்து போன்றவைகளை உண்ணுவது ஹராம்!

கோழி, கொக்கு, மயில் போன்றவைகளை கூட நாம் உண்ணலாம்!

ஒரு பொருள் ஹராமா அல்லது ஹலாலா என்று சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

சில உணவுப் பொருட்களை அது ஹலாலா? ஹராமா? என கண்டறிவது கடினமாக இருக்கலாம்! 
 
நமக்கு அவ்வாறு ஏதேனும் சந்தேகமானது இருந்தால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து கொள்ளுவது சிறந்தது!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். (ஸஹீஹ் புகாரி : 2051)

 தற்போதைய காலத்தில் ஹலால் ஹராம் என்பது பெரும்பாலானவர்கள் பேணுவதே கிடையாது.

ஒரு காலம் வரும் ஹலாலா? ஹராமா? என்பதை மனிதன் பொருட்படுத்த மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)

முடிவுரை 

இறைச்சி உணவிற்கான தடை ஒரு சில காலத்தில் ஒரு சில பண்பாட்டில் இருந்ததை மறுக்க முடியாது ஆனால் பொதுவாக மனிதன் இறைச்சி உண்ணும் அமைப்பிலேயே படைக்கப் பட்டுள்ளான் என்பதற்கான சான்று அவனது பற்களும், குடலமைப்பும், அதை சிரிக்க சுரக்கும் அமிலங்களும் ஆகும். மேலும் இறைச்சி உண்ணும் முறையை ஒவ்வொரு சமய பண்பாட்டிலும் வழிகாட்டப் பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன ஆதாரங்கள் நிரூபிக்கின்றது. 

பெரும்பாலான சமயங்கள், பன்றி, நாய், தானாக செத்தது, ஊனுண்ணி விலங்குகள் ஆகியவைகளை தடை செய்துள்ளது என்பதை காணமுடிகிறது. ஆனால் அனைத்து மதத்திலும் மாட்டுக்கறி பிரதான உணவாக இருந்து வந்துள்ளது.  

மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதல் இடம்

காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை ஆண்ட வரை மாட்டு இறைச்சியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. பசுக்களைக் காப்பாற்று வதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உணவு உரிமையைத் தடை செய்யும் மோடி அரசு வந்த பிறகு உலக அளவில் முதல் இடத்தைப் பிடித் துள்ளது. 2014-2015இல், ஆண்டுக்கு 24 இலட்சம் டன் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு. மாட்டுக் கறி வணிகத்தில் உலகிலேயே முதல் இடம். நமது பண்பாட்டையும் உரிமையையும் பறிப்பதற்கு பசுப் பாது காப்பு நாடகம். (‘தி இந்து’, 10.8.2015)

மாட்டு இறைச்சிக்கு எதிரான பார்ப்பன அரசியலை முறியடிப்போம்!

 

பன்றி இறைச்சி உண்ண தகுமா?

கிறிஸ்தவம்

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். - லோவியராகமம் 11-7 

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. - உபாகமம் அதிகாரம் 14:8


இஸ்லாம் 

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (2:173)

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.