முகஸ்துதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகஸ்துதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகஸ்துதிக்கு மயங்காதே

அங்கீகாரம் என்கிற பெயரில் ஒவ்வொரு துறையிலும் இவ்வாறு தன்னை புகழும் இடத்தையும் மேடையையும் தேடி ஓடிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில் நாம் அறிய வேண்டிய மிக மிக மிக அவசியமான செய்திகள்.

தமிழர் சமயம்


முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம்

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம். - (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 232)

பதம் பிரித்து:
தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
அமராததனை அகற்றலே வேண்டும்;
அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பொருள் விளக்கம்: தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை, அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.

பிரபலமடைவதை விரும்பாதே

கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள. (புறத்திரட்டு. 1222)

பொருள்: மறைந்து வாழ்பவர்களைப் போல் பகலில் தோன்றலும், இரப்பவர்கள் போல் தேய்ந்து காணப்படுதலும், இரப்பவர்களுக்கு கொடுப்பவர்கள் போல் முகம் ஒளிருதலும், ஆகிய இம்மூன்றும் சந்திரனுக்கு உள்ள இயல்புகளாகும் 
 

இஸ்லாம்  

ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ”அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (புஹாரி : 6499 ஜூன்துப் ரலி). 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார். (நூல்: அஹ்மத் 16517)

“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி) (நூல்: அஹ்மத் 23630, 22528)

மேலும், ஒருவன் எத்தகைய உயரிய நற்காரியம் புரிந்திருந்தாலும் அதை முகஸ்துதிக்காக அவன் செய்திருந்தால் நரகில் முகம் குப்புற அவன் தள்ளப்படுவான். 

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான்.

அதற்கு அவர் “நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்” என்று கூறுவார். “நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும்” என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது’’ என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் “இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான்.

அதற்கு அவர் “நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன்’’ என்று பதில் சொல்வார். ‘‘நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான்.

அதற்கு அவர், ‘‘நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை’’ என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம்-3865 (3537))

கிறிஸ்தவம் 

தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பார்க்கிலும், கடிந்து கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான் -  (நீதிமொழி 28:23
 
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் - (நீதிமொழிகள் 29:5)