இளமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அறமும் ஆன்மீகமும் முதுமையிலா? இளமையிலா?

தமிழர் சமயம்  

அறநெறிச்சாரம்  

இளமைப் பருவத்தில் அறம் செய்க 

இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக,
வன்சொல் களைகட்டு, வாய்மை எருஅட்டி,
அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். (அறநெறிச்சாரம் பாடல் - 16) 

விளக்கவுரை: இனிமையான சொல்லே விளை நிலமாகவும் ஈகையே விதையாகவும் கடுஞ்சொல்லான களையைப் பிடுங்கி, உண்மையான எருவினை இட்டு, அன்பு என்னும் நீரைப் பாய்ச்சி அறம் என்ற கதிரை ஈனுவதாகிய ஒப்பில்லாத பசுமையான பயிரை, இளம் பருவத்திலேயே மனமே, செய்வாயாக. 

இளமையில் அறம் செய்தலின் இன்றியமையாமை

காலைச் செய் வோம்என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்

கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு. (பாடல் - 17)

விளக்கவுரை: தருமத்தை இளமையிலேயே செய்வோம் என எண்ணி உறுதியாகக்கொண்டு மிக செய்பவரே சிறந்தவர் ஆவர். இரவில் படுத்தவள் காலைப் போதில் விழித்து எழுவது அருமை. (அங்ஙனமிருக்கவும்) தருமத்தை இளமையிலேயே செய்யாதிருத்தல் என்ன காரணமோ! 

இளமையில் அறம் செய்யாமையால் ஏற்படும் இழிவு

சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வுஅரிது - என்று ஒருவன்
நன்மை புரியும் நாள்உலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். (பாடல் - 18)

விளக்கவுரை : ஆயுளில் கழிந்த நாட்கள் எல்லாவற்றையும் சிறு விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம். இனி இருக்கும் நாட்களை எத்தகையவர்க்கும் இத்தனை என்று அளவிட்டு அறிய இயலாது என எண்ணி, ஒருவன் நல்வினையை விரைவாகச் செய்யாது ஆயுள் நாள் வீணே கழியும்படி விட்டிருப்பதால் ஏற்படும் துன்பம் பின்னர் மிகும். 

நாலடியார்

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல் (நாலடியார் - 2. இளமை நிலையாமை 16)

விளக்கவுரைவெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவாரிடத்து இல்லை!

நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி,
தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)

விளக்கவுரைவாழ்வில் எதுவும் நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் செய்யவேண்டிய அறச்செயலை செய்வர். இடையறாமல் குறியும் சோதிடமும் பார்த்துப் பிதற்றிக்கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை. 

திருமந்திரம் 

 

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை

ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்

பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை

ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. - (1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை: 3)


பொழிப்புரை: சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே நந்தியின் போதனையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. - (பாடல் எண் : 5)

பொழிப்புரை: ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற இறைவனின் திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. - (பாடல் எண் : 9)

பொழிப்புரை : பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. - (பாடல் எண் : 10)

பொழிப்புரை: வரையறுக்கப்பட்ட இளமை கழிவதன் முன் உள்ளநாட்களில் பொருள்சேர் புகழால் திருமுறைவழி இடையறாது ஏத்துங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட நாள்களில் அருள் துணையால் மாசறுத்துத் தூயராய் இறை நினைவுடன் வாழுதல் வேண்டும். இங்ஙனம் ஒழுகாமல் மனம்போல் ஒழுகி வழுக்குற்று இழுக்கடைவாரும் பலர். இதனைப் பொருந்திய நாள்களில் இருந்து கண்டேன் என்க. கண்டேன்: நன்றாற்றுதலாகிய நல்லறஞ் செய்யாது இளமை சிலர்க்குப் பயன் இன்றிக் கழியக் கண்டேன். 
 

வளையாபதி : இளமை நிலையாமை 2 - கலிவிருத்தம் 

 

கலிவிருத்தம் (கருவிளம் காய் கூவிளம் கூவிளங்காய்)


இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றவல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றுமென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். (வளையாபதி 41)

பொருளுரை: இன்பம் நுகர்தற்குரிய இளமைப்பருவமும் நிலைத்திராமல் நீரில் குமிழி போல அழிந்து போகும். நுகரும் இன்பங்களும் நிலைத்து நிற்கும் இயல்புடையன அல்ல. அதே போல, அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும் நிற்பன அல்ல. அவ்வின்பம் நிலையாததோடு வாழ்க்கையில் நாள்தோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன. ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நமக்கு இருக்கிறதென்று கர்வம் கொள்ளாமல், விளைகின்ற நன்செயை உழுகின்ற வேளாண்மக்கள் வரும் எதிர் ஆண்டிற்கு அவ்விளைச்சலில் இருந்து விதைநெல் சேமித்துக் கொள்வது போல, நீங்களும் நாள்தோறும் இனிச் சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக அறமாகிய வித்தினை நாட்களை வீணாக்காமல் செய்துகொள்ளக் கடவீர் எனப்படுகிறது.

 விளக்கம்: நீங்கள் இளமை முதலியன அழிந்துவிடும் என்பதை உணர்ந்து, இளமை முதலியவற்றால் மகிழ்ந்து சும்மா இருந்து விடாமல் இப்பொழுதே அறம் முதலியன செய்து இறைவன் திருவடியைச் சேர்ந்து சுவர்க்கம் அடைவதற்கு ஆக்கம் செய்து கொள்ளுங்கள்.

புறநானூறு 

இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்

செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,

தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,

மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு             5

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,

நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,

கரையவர் மருளத், திரையகம் பிதிர,

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,

குளித்துமணற் கொண்ட கல்லா இளமை         10

அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-

தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,

இருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே? - (புறநானூறு 243. யாண்டு உண்டுகொல்)


பொருள்: திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

விளக்கம்:  அப்போது இருக்கமான மணலில் பாவை செய்து அதற்குப் பூக்களைக் கோத்துவிட்டு விளையாடிய மகளிர் குளத்தில் நீராடும்போது அவர்களோடு கை கோத்துக்கொண்டும், தழுவிக்கொண்டும், ஒருவர்மீது ஒருவர் தொங்கிக்கொண்டும், ஒளிவு மறைவு இல்லாமல், கள்ளம்-கபடம் இல்லாமல் விளையாடியதும், மகளிரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அத் துறையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மருதமரத்தில் நீரோரமாகச் சாய்ந்திருந்த கிளையில் ஏறி, கரையில் உள்ளவர் மருளும்படியும், நீரலை பெரிதாகிக் கரையில் பிதிரும்படியும், விரிவான, ஆழமான குட்டையில் ‘துடும்’ என்னும் ஓசை உண்டாகும்படி நீரில் பாய்ந்து, மூழ்கி, ஆழத்திலிருந்த மண்ணை எடுத்துக்கொண்டு மேலே வந்து, கள்ளம்-கபடம் இல்லாத (கல்லா) இளமையானது இப்போது எங்கே போய்விட்டது? அந்தோ! அந்த இளமை இரங்கத் தக்கது. இப்போது தலையில் வளையல்-பூண் கட்டிய தடியை ஊன்றிக்கொண்டு தலையும் உடலும் நடுங்க, தொடர்ந்து பேசமுடியாமல் இடையிடையே சிற்சில சொற்களைப் கொண்டு, பெருமூதாளராக (தொடுதொடு கிழவராக) இருக்கும் என்னிடம் அன்று இருந்த அந்த இளமை எங்கே இருக்கிறது? இன்று என் இளமை செத்துவிட்டது. ஒருநாள், நானும் …!   

பழமொழி நானூறு - தருமம் செய்யுங்கள்

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'. - 6

பொருள்: தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.

இஸ்லாம் 


உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(வ), அம்ர் இப்னு மைமூன்(வ) நூல்: நஸாஈ 11832, ஹாகிம் 7846)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: “நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!
1. நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும்,
2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும்,
3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும்,
4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும்,
5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும்
நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!” (ஹாகிம்: 7846, நஸாயீ: 11832)

 இளைமை பருவத்தை வணக்கத்தை அல்லாஹ்வுக்காக கழித்த மனிதர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்.உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ - (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-660)

கிறிஸ்தவம் 


ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான் - நீதிமொழிகள் 22:6

 இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்

இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். (பிரசங்கி 11:9)

நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை. பிரசங்கி 12:1

“யூதா, நீ பாதுகாப்பை உணர்ந்தாய். ஆனால் நான் உன்னை எச்சரித்தேன்! ஆனால் நீ கேட்க மறுத்தாய். நீ இவ்வாறு உனது இளமைகாலம் முதல் வாழ்ந்திருக்கிறாய். உனது இளமை காலத்திலிருந்து நீ எனக்கு கீழ்ப்படியவில்லை. யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும். அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும். சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய். ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும். பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய். நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய். - எரேமியா 22:21&22

என் இளமையின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினைவில் கொள்ளாதே; கர்த்தாவே, உமது கருணையின்படி உமது நன்மைக்காக என்னை நினைவில் வையுங்கள். சங்கீதம் 25: 7