இஸ்லாமிய கிறிஸ்தவம் தோன்றும் முன் இந்து கடவுள்கள் இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டார்களா?

1400வருடங்களுக்குமுன்னால் குரான்,முகமது,இஸ்லாம் இல்லை, 2000வருஷத்திற்கு முன்னால் இயேசு,பைபிள்,கிறிஸ்தவம் இல்லை அப்படியானால் இந்த பீடைகள் தோன்றுவதற்குமுன் வாழ்ந்த மக்களுக்கு இந்துகடவுள்கள் இறுதிதீர்ப்பு வழங்கிவிட்டார்களா? அல்லது இரண்டும் டுபாகூர்களா?

இந்து கடவுள்கள் என்கிற பிரயோகம் பிழையானது.

தெய்வம் ஒன்றுதான் என்று இந்த துணைக்கண்டத்தில் வாழ்ந்த பல்வேறு மறைநூல்களும் குருமார்களும் உறுதிபட சொல்லிச் சென்று உள்ளனர்.

அகத்தியர்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு- ஞானம் 1:1

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - ஞானம் - 1:4

அவ்வை

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - ஞானக்குறள் 124.

திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - திருமந்திரம்

ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாயப் பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்த வாறே. - 9ஆம் தந்திரம் 20:6

திருநாவுக்கரசர்

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே - தேவாரம்:2078

சிவவாக்கியர்

எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே
- (பாடல் 224)

அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - சிவவாக்கியம் 225

முனைப்பாடியார்

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - அறநெறிச்சாரம் பாடல் - 144

வள்ளுவர்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் - 01:07.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது. தனக்கு ஒப்புவமை இல்லாத என்றால் இறைவன் ஒரே ஒருவன் என்று பொருள்.

உலகம் முழுமைக்கும் ஒருவன் தான் தெய்வம்/கடவுள்/இறைவன் என்று இந்த பாடல்கள் தெளிவாக கூறுகிறது. இப்பாடல்களை எழுதியவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் சான்றோர் என்று புகழப்பட்ட மனிதர்கள் ஆவர்.

சரி ஒரே இறைவன் என்று இவர்கள் சொல்லலாம், ஆனால் வேறு சில குருமார்கள் பல தெய்வம் இருப்பதாக அல்லது ஒரே இறைவனை பல ரூபத்தில் காணலாம் என்றெல்லாம் கூறுகிறார்களே என்று கேட்டால், குரு என்பவனுக்கான வரையறைகளை தொல்காப்பியம், திருமந்திரம் உட்பட பல நூல்கள் கூறுகிறது. மேலும் பொய் குருக்களை அடையாளம் காணவும் அவைகள் சொல்லித்தருகிறது.

உண்மை குருக்களை இந்த நூல்கள் கூறும் வரையறையுடன் பொறுத்தி பார்த்து கண்டறிந்து அவர்களோடு முரண்படும் குருக்களை பொய் என்று புரிந்து புறந்தள்ளிவிடலாம். அந்த வகையில் உலக மக்களால் சிறந்த குருமார்கள் என்று அறியப்படும் வள்ளுவர், அகத்தியர், அவ்வையார், திருமூலர், நாவுக்கரசர் உட்பட அனைவரும் மேற் குறிப்பிட்ட வரையறைகளுக்கு முரணான பல தெய்வ கோட்பாடு என்பது நிச்சயம் பிழையானதாகும்.

மேலும் இறைவனை கண்டவர்கள் அன்றும் இன்றும் என்றும் எவனும் இல்லை, அவ்வாறு இருக்க அவனை எப்படி வரையவோ செதுக்கவோ முடியும்?

மேலும் உலக மறைநூல்கள் அனைத்தும் இறைவனுக்கான வரையறைகளாக சொல்லுவது என்னவென்றால்

சரி அந்த ஒரே இறைவன் தமிழில் அல்லது சமஸ்கிருதத்தில் அல்லது இந்த நிலப்பரப்புக்கு மட்டும்தான் அறம் கூறும் வேதத்தை அனுப்புவானா அல்லது எல்லா நிலப்பரப்புக்கும், எல்லா மொழிக்கும், எல்லா மக்களுக்கும் அனுப்புவானா? சிந்திக்க மிகத் தகுதியான கேள்வி, சிந்திப்போருக்கு விடை உண்டு.

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல் என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4)

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

நான்மறை என்றால் என்ன என்று அறியும் மக்களுக்கு இப்படி ஒரு கேள்வி கேட்க துணிவு வர முடியாது. இந்த பாடல்கள் எல்லாம் தமிழில் மட்டும்தான் வேதம் உண்டு என்றுகூறவில்லை.

எனவே, மிகவும் பிற்கலத்தில் வந்த வேதங்கள் (அ) சமயங்கள் பீடை என்றால், தமிழில் அகத்தியம், தொல்காப்பியம் முதல் திருமந்திரம், திருவாசகம் வரை வெவ்வேறு காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த அனைத்து தமிழ் மறைநூல்களும் பீடையா? ரிக் வேதம் 356 குருக்களால் ஒன்றன் பின் ஒன்றாக எழுதப்பட்டது, அதற்கு பிற்கலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக யஜுர் மற்றும் சாம வேதங்கள் வந்தது, அதற்கும் மிகவும் பிற்கலத்தில் தான் கீதை வந்தது, பின்னாளில் வந்ததால் கீதையை பீடை என்று சொல்வது பொருந்துமா?

இவைகளெல்லாம் இந்துமத கடவுளை பேசுகிறது ஆனால் அப்ரஹாமிய வேதங்கள் இந்து கடவுள்களை பேசவில்லை என்பது வாதமானால், 

  • ரிக் யஜுர் சம வேதங்கள் கூறும் (அக்னி, இந்திரன், சோமா, ருத்ரா, விஷ்ணு, வருணன் மற்றும் மித்ரா) கடவுளின் பெயருக்கும், அதர்வண வேத (பிரம்மா) கடவுளுக்கும் தொடர்பில்லை, 
  • இந்த வேத கடவுளுக்கும் கீதையின் (கிருஷ்ணா) கடவுளுக்கும் தொடர்பில்லை. 
  • வடமொழி வேத கடவுளின் பெயருக்கும் தமிழர் மறை நூல் கூறும் (ஈசன்,  சிவன், மால்) கடவுளின் பெயருக்கும் தொடர்பில்லை. 
பின்னாளில் வியாசர் இவ்வாறு வெவ்வேறு சமயத்தில் உள்ள இறைவனின் பெயரை தனித்தனி பாத்திரங்களாக்கி புராணம் எழுதிய பின்புதான் இவர்களுக்கு இடையே தொடர்பு உண்டானது. ஆனால் இவர்களின் தன்மைகளாக அந்தந்த வேதம் கூறிய இலக்கணங்களை எடுத்து ஆய்வு செய்தால் இவைகள் அனைத்தும் ஒரே இறைனைத்தான் குறிப்பிடுகிறது.  

  • வட மொழி சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் இடையேயும், 
  • தமிழர் சமயங்களான சைவ சமண சமயங்களுக்கு இடையேயும் 
  • சைவ சமண சமணங்களுக்கு இசையையும் 

நடந்த மத சண்டைகள் வரலாற்றில் பதியப்படாமல் இல்லை. இன்று பீடை என்று இவர் கூறும் சமயத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடு, இந்த நிலப்பரப்பில் வெவ்வேறு பெயரில் இருந்த அனைத்து மதங்களுக்கும் இடையில் அன்று இருந்தது.

வெவ்வேறு மொழியில் உள்ள அனைத்து வேதமும் ஒரே இறைவனை பற்றித்தான் பேசுகிறது என்று அறியாததால் வெவ்வேறு பண்பாட்டில் உள்ள இறைவனின் பெயரை தனித்தனி கதாபாத்த்திரமாக்கி 18 புராணங்களை வியாசர் எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் தத்தமது வேதத்தை ஓதி உணர்ந்து அதனுள் ஓடுங்கும் அதிர்ஷடத்தை இழந்து புராணங்களை இதிகாசங்களை வாசித்து தத்தமது வேத வழிகாட்டுதலுக்கு முரண்பட்டு போயினர்.

அதன் வெளிப்பாடுதான் வேறு சமய மக்களை இவ்வாறு இழித்துரைப்பது என்பதாகும். இதை புரிந்துகொள்ள நீண்ட வாசிப்பும் பொறுமையும் தேவை. இறைவன் அருளினால் நல்ல பண்பு உடையவர்களுக்கு அது எளிதாக புரிய வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக