கஞ்சத்தனம்

தமிழர் சமயம்


நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 271)

விளக்கம்: நண்பர்க்கும், நண்பர் அல்லாதார்க்கும் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு சமைத்த உணவினைப் பகுத்துக் கொடுத்துப் பின் தாமும் உண்பதுதான் உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவினை, கதவை அடைத்துக் கொண்டு, உள்ளேயிருந்து தாம் மட்டும் உண்டு வாழும் நன்மையில்லாத சுயநலமாக்கள் உள்ளே புக முடியாதபடி மேல் உலகத்தின் கதவுகள் அடைக்கப்படும். (இம்மையில் பகுத்து உண்ணாதவர்க்கு மறுமை இன்பம் இல்லை என்பது கருத்து).

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும். (நாலடியார் 28 ஈயாமை 274)

விளக்கம்: பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும். (உலோபியின் செல்வத்தை அயலாரே அனுபவிப்பர்).

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் - (நல்வழி வெண்பா : 18)

விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று - [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல் குறள் 438]

விளக்கம்: பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை (உலோபித்தனம் - கஞ்சத்தனம்), குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. குறள் ஈகை 230

உரை: சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது

கிறிஸ்தவம்


“உண்மையுள்ள ஒருவன் அபரிமிதமான ஆசீர்வாதத்தைப் பெறுவான், ஆனால் பணக்காரனாக ஆசைப்படுகிறவன் தண்டிக்கப்படாமல் போகமாட்டான். பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல - ஒரு ரொட்டிக்காக ஒரு மனிதன் தவறு செய்வான். கஞ்சன் பணக்காரனாவதற்கு ஆர்வமாக இருக்கிறான், வறுமை தங்களுக்கு காத்திருக்கிறது என்பதை அறியாது” (நீதிமொழிகள் 28:20-22)


இஸ்லாம்


அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபித்தனம் தெய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்கு தீங்குதான் அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். (3-180)

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி,  அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.   (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)

“(இறைவா!) நான் உன்னிடம்ஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)

7 கருத்துகள்:

  1. (அவ்வாறே) அவன் அவர்களுக்கு தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கி விட்டனர். எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி ) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (9:75-77))

    பதிலளிநீக்கு
  2. கருமித்தனம் வேண்டாம்
    ஸஹீஹ் புகாரி : 1433

    அஸ்மா(ரலி) அறிவித்தார்.

    'நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!' எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்' எனக் கூறினார்கள் என உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. உலோபி தடியால் அடிக்க உதவுவான்

    அறநெறிச்சாரம் பாடல் - 182

    இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
    பட்ட வழங்காத பான்மையார் - நட்ட
    சுரிகையாற் கானும் சுலாக்கோ லாற் கானும்
    செரிவதாம் ஆபோல் சுரந்து.

    விளக்கவுரை தம்மிடம் பொருந்திய நெருங்கிய நண்பர்களுக்கும் கொடாமலும், பிச்சை ஏற்று வாழ்பவர்க்கும் கொடாமலும் வாழும் உலோப குணம் உடையவர், உடை வாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடி கொண்டு தம்மை அடிக்க வருபவனுக்கும், பசு தனது பாலைக் கறப்பனுக்குச் சுரந்து கொடுப்பது போல் மிகுதியாகக் கொடுப்பது உண்டு.

    பதிலளிநீக்கு
  4. புரவலரும் இரவலரும் தருபொருளும் அறநெறிச்சாரம் பாடல் - 184

    கொடுப்பான் வினைஅல்லன் கொள்வானும் அல்லன்
    கொடுக்கப் படும்பொருளும் அன்றால் அடுத்து அடுத்து
    நல்லவை யாதாங்கொல் நாடி உரையாய்நீ
    நல்லவர் நாப்பண் நயந்து.

    விளக்கவுரை இவ்வுலகில் கொடுக்கும் கொடையாளி கொடுக்கும் தொழிலை மேற்கொள்ளாதவனாகவும், கொள்பவனான யாசிப்பவன் அவன் தொழிலை மேற்கொள்பவனாகவும் அல்லாமல் யாவரும் செல்வராகவும், தருதற்குரிய பொருளும் கொடுத்தற்கு அல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால், பெரியோரிடையே அடிக்கடி ஏற்படி வேண்டிய நற்செயல்கள் எங்ஙனம் ஏற்படும் என்பதை, நீ உலக நன்மையை விரும்பியவனாய் ஆலோசித்து சொல்வாயாக.

    பதிலளிநீக்கு
  5. கஞ்சத்தனம் – 3:180, 4:37, 4:128, 9:34,35, 9:76, 25:67, 47:37, 47:38, 57:24, 59:9, 64:16, 92:8

    பதிலளிநீக்கு
  6. 2:195. நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்; (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.

    பதிலளிநீக்கு
  7. வெண்பா : 18 நல்வழி

    பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
    உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
    இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
    சரணம் கொடுத்தாலும் தாம்

    விளக்கம்:
    அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு