பல சமய புனித நூல்களை சிறிதளவேனும் வாசித்த பிகு வேதம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிய முற்படும் பொழுது கீழ்கண்ட இலக்கணங்கள் வேதங்களுக்கு பொருந்தும் என தோன்றியது.
- முன்னறிவிப்புகள்: பின்வருபவனவற்றை முன்னமே அறிவிக்கக் கூடியது (Prophecy) - உதாரணமாக பின்வரும் சம்பவங்கள் தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள்.
- கடந்த கால வேதத்தை மெய்ப்பிக்கக் கூடியது: எடுத்துக்காட்டாக, அவ்வையாரின் நன்னூல்,குறளையும், திருமந்திரத்தையும் ஒரே வாக்கு என்று கூறுவதும், ஆபிரகாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் முன் தோன்றிய வேதங்களை குறித்து கருத்துக்களை சொல்வதும், ரிக் யஜுர் சாம வேதங்கள் அதே போல முன் வந்த தூதர்களை பெருமை படுத்துவதும் இதில் அடங்கும்.
- மனிதன் அறியாத உண்மைகளை விளக்குவது: கடவுளின் வரையறை, கடவுள் துதி முறைகள் மற்றும் மனித அறிவுக்கு எட்டாத விதி, சொர்கம் நரகம், உயிர், பிறப்பு இறப்பு தொடர்பான செய்திகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
- நன்மை தீமையை வரையறுப்பது: மனிதனின் வாழ்க்கையில் எவையெவை அறம் எவையெவை மறம் என்று பிரித்து வரையறுத்து கூறக்கூடியதாகவும், அறம் செய்தால் விளையும் நன்மையையும் மறம் செய்வதால் ஏற்படும் தீமையையும் விளக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஆனால் இந்த வரையறை முறையானதல்ல. இந்த வரையறை குறளுக்கும், தொல்காப்பியத்துக்கு பொருந்துமா? பொருந்தாது.! இவை இரண்டையும் வேதம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வரையறையை ஏற்படுத்த முயன்றதாக நீங்கள் கருதினால் அதில் பிழை ஏதும் இல்லை.
குறள் ஒரு மறை நூல் என்பது "தேவர் குறளும்.....,மூலர் சொல்லும்....ஒன்றே என்றுனர்" எனும் அவ்வையார் வாக்கிலிருந்து புலப்படுகிறது. ஏனென்றால் மூலர் தனது திருமந்திரத்தில் "வேதம் செப்ப வந்தேனே" என்கிறார். இதன் மூலம் குறள் ஒரு மறைநூலாக இருக்க வாய்ப்புள்ளது.
தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்பதை அறிவோம். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அது எவை எவைக்கெல்லாம் இலக்கணம் சொல்கிறது என்று நாம் அறிந்தால் அதுவும் ஓர் மறைநூல் என்று நாம் கருதாமல் இருக்க முடியாது.
- தெய்வம் பாலினமற்றது: தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே - சொல்லதிகாரம் 1:4
- மறைநூலுக்கான வரையறை: முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
- உலகம் எதனால் ஆனது: நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல். பொருள். மரபியல் - 635)
எனவே மனிதன் அறியாத பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதால் தொல்காப்பியமும் மறைநூல் எனக் கருதலாம். சொல்லும் எழுத்தும் புணரும் விதி உட்பட தொல்காப்பியத்தின் பல சூத்திரங்கள் மனித வாழ்வுக்கும் பொருந்தும் என தொல்காப்பிய அறிஞர்கள் கூறுவார். ஒரு சூத்திரம் பல இடங்களுக்கும், இனங்களுக்கும் பொருந்தும் ஒன்று மறைநூலாக கருதாமல் இருக்க முடியவில்லை.
மறைநூலுக்கான வரையறைகளாக பல்வேறு மரபுகளின் கருத்தை காண்போம்.
தமிழர் சமயம்
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
- வினை-யின்: செயல்-இன்
- நீங்கி: அதை நீக்கி (அ) இல்லமால்
- விளங்கிய: உணரும் உணர்ச்சி
- அறிவு: அறிவு ஞானம்
- முனைவன்: முந்தியவன், மூத்தவன்
- கண்டது: "எழுதப்பட்டது" என்பது இதற்க்கு பொருந்தாது. ஏனென்றால் மனிதன் எழுத துவங்கும் முன்பே அறிவு நூற்கப் பட துவங்கி விட்டது. எனவே கண்டது என்பதே இங்கே குறிப்பிட சிறப்பான சொல், "எழுதப்பட்டது" என்பது "கண்டது" என்கிற சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. எடுத்துக் காட்டாக, கீதை - பாடல், வேதம் என்பது கீர்த்தனைகளின் தொகுப்பு, அத்-திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது) திருக்குர்ஆன் அழைக்கப் படுகிறது. அகத்தியம் (அகம்+இயம்) என்பதும் அகத்தில் ஒலிப்பது , பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் என்று பெயர்.
- முதல்: ஆதி, ஆரம்ப, தொடக்க
- நூல்: (கோர்வையாக, வரிசைப் படுத்தி) நூற்கப்பட்டது
வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641)
வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும்.- விக்கி
வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)
- முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
- முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
- முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
- முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.
முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அதாவது சிந்த அனுபவத்தில் அல்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அல்லது இறைவனிடம் இருந்து போதிக்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதநூல் ஆகும்.
இஸ்லாம்
தமிழர் சமயம் கூறுவது போல "நூல்" (அல் கித்தப் - The Book) என்றும் குர்ஆன் தன்னை அடையாள படுத்துகிறது.
இது, சந்தேகத்துக்கு இடமில்லா அல் கிதாப் (நூல்) ஆகும். பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - (குர்ஆன் 2:2)
குர்ஆன் நூலானது அவரின் அனுபவமன்றி அவருக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் ஆகும். அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். இதில் வஹீ என்பது சில முறைகளில் வழங்கப் பட்டது.
(நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (தேவதூதர்) என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? - (குர்ஆன் 6:50)
1) வஹீயின் மூலமோ 2) திரைக்கப்பால் இருந்தோ அல்லது 3) ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன்:42:51)
மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.
- வஹீயின் மூலம் பேசுவது - உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக (அசரீரியாகவோ, கனவிலோ ) அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. (திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)
- திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது - அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (திருக்குர்ஆன்:4:164.)
- வானவர் (ஜிப்ரீல்) மூலம் செய்தியைத் தெரிவிப்பது - என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (திருக்குர்ஆன்:16:2.)
ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.
சுருக்கமாக, முகமது நபி, தான் செய்த வினையின் மூலம் விளைந்த அறிவின்றி, அதாவது அனுபவத்தின் மூலமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கொண்டு குர்ஆனை மக்களுக்கு போதித்தார்.
கிறிஸ்தவம்
"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)
பௌத்தம்
புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் இருந்தபொழுது ஞானம் கிடைத்தது என்று நாம் படித்துள்ளோம். யாரிடமிருந்து? புத்தமதம் நாத்தீக மதம் என்று சொல்லப்படுகிறது. முதலில் பகுதி தொலைந்த அரைகுறை தகவல் உள்ள நூலையோ, அதன் முழு வரலாறு அறியாத நிலையிலோ அந்த முடிவுக்கு நாம் வர முடியாது.
முடிவுரை
எனவே மனிதனின் அனுபவ அறிவுமின்றி ஒரு கல்வி எல்லா காலங்களிலும், எல்லா மொழயிலும், எல்லா நிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனுக்கு வழங்கப் பட்டுக் கொண்டே இருந்து இருக்கிறது. அவைகள்தாம் மறை நூல்களாகும், அவைகள் ஒரே இறைவனிடமுள்ள ஒரே மூல நூலின் சிறு சிறு பகுதிகளாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக