புறங்கூறாமை

தமிழர் சமயம் 


முன்நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கல்நின்று உருகக் கலந்துரைத்துப் - பின்நின்று
இழித்துஉரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்துஇமையார் நின்ற நிலை. (அறநெறிச்சாரம் பாடல் - 84)

விளக்கவுரை வானவர் விழித்தகண் மூடாமல் நிற்கும் நிலைக்குக் காரணம், ஒருவனுக்கு முன் இருந்து கல்லும் உருகுமாறு முகம் மலர்ந்து வாயாலும் இன்சொல் கூறிப் புகழ்ந்து, அவன் இல்லாத இடத்தில் அவனையே இகழ்ந்து பேசுகின்ற கயவர்களை, கண்களை மூடினால் நம்மையும் அவர்கள் இகழ்வார்களே என்று அச்சம் கொண்டதால் ஆகும்.

பொய்ம்மேல் கிடவாத நாவும் புறன்உரையைத்
தன்மேல் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
பிணிப்பண்பு அழியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை. (அறநெறிச்சாரம் பாடல் - 85)

விளக்கவுரை புறங்கூறுதலைத் தன்னிடம் உண்டாகாமல் காத்துக்கொள்பவன், பொய்ம்மை பேசுவதில் செயல்படாத நாவையும், மெய் பேசுவதில் பொருந்தியிருக்கும் பண்புடைமை நீங்காமையையும் பெற்ற அப்போதே பிறவி நோயைப் போக்கும் சிறந்த மருந்தைப் பெற்றவன் ஆவான்.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (குறள்: புறங்கூறாமை 181)

விளக்கம்: அறத்தைப்பற்றி வாயாலும் சொல்லாதவனாய் ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும்,' அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் ' என்பது இனிதாகும்.

அறனழீ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)

விளக்கம்: அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். (183)

விளக்கம்: பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல். (184)

விளக்கம்: நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக ; நேரில் இல்லாதபோது, பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால காணப் படும். (185)

விளக்கம்: அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதால் அந்த இழிசெயலால் தெளிவாக அறியலாகும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன் தெரிந்து கூறப் படும். (186)

விளக்கம்: பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுக் குள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)

விளக்கம்: 'மகிழ்ச்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை' என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.

துள்ளியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. (188)

விளக்கம்: நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (189)

விளக்கம்: ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)

விளக்கம்: அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?

 

இஸ்லாம்

(பிறரைக்) குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். - (திருக்குர்ஆன் 104.1 ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்))

'சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாத ஒருவனையும், கோள் சொல்லி (புறங்கூறி) திரிந்தவனையும் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - (புகாரி : 1361, நஸஈ : 2042)

நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். - திருக்குர்ஆன் 49:12 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் , ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ , நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 5048)


கிறிஸ்தவம் 

1. இரகசியமாய்ப் பேசுதல் (Whispering) – ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறான முறையில் இரகசியமாகப் பேசுதல் (ரோமர் 1:30; 2 கொரி. 12:20).

ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர். (ரோமர் 1:30)

2. அவதூறு சொல்லுதல் (Backbiting) – இதைப் புறங்கூறுதல் என்கிறோம் (ரோமர் 1:30; 2 கொரி. 12:20).

 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். - (2 கொரி. 12:20)

3. கேடான சந்தேகங்கள் (Evil surmising) – இதை தமிழ் வேதம் ‘பொல்லாத சம்சயங்கள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஒருவரைப் பற்றி ஆதாரமே யில்லாமல் சந்தேகங்களை எழுப்பி தவறாகப் பேசுதல் (1 தீமோ. 6:4).

தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன. - (1 தீமோ. 6:4).

4. கோள் சொல்லுதல் (Tale-bearing) – லேவி. 19:16.

மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்! - (லேவி. 19:16.)

5. அலப்புவாயன் (Babbling) – ஒன்றுக்கும் உதவாத வீண்பேச்சு பேசுகிறவன்  (பிரசங்கி 10:20).

அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும். -  (பிரசங்கி 10:20).

6. அலப்பல் (Tattling) – நேரத்தை வீணாக்கி அடுத்தவர்களைப் பற்றிப் பேசித்திரிதல் (1 தீமோ. 5:13).

இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள். - (1 தீமோ. 5:13).

7. மற்றவர்களுக்கு விரோதமாகப் பேசுதல் (Evil speaking) – சங். 41:5; 109:20.

என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள். (சங். 41:5)

8. அவதூறு சொல்லுதல் (Defaming) – மற்றவர்களைப் பற்றி இல்லாததைச் சொல்லி அவர்களுடைய பெயரைக் கெடுத்தல் (யெரே. 20:10; 1 கொரி. 4:13).

மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர். - 1 கொரி. 4:13

9. பொய்சாட்சி சொல்லுதல்  (Bearing False witness) – பார்க்காத ஒன்றைப் பார்த்ததுபோல் ஒருவருக்கெதிராக சாட்சியமளித்தல் (யாத்தி. 20:16; உபா. 5:20; லூக்கா 3:14).

பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம். - யாத்தி. 20:16

10. மற்றவர்களைத் தவறாக எடைபோட்டு பழித்துப் பேசுதல் (Judging uncharitably) – யாக். 4:11-12.

சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். (யாக். 4:11-12.)

11. மற்றவர்களைப் பற்றி தவறான செய்தி கொடுத்தல் (Raising false reports) – யாத்தி. 23:1.

பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். – (யாத்தி. 23:1)

12. ஒருவர் செய்த தவறைத் திரும்பத் திரும்பச் சொல்லி இன்பம் காணுதல் (Repeating matters) – நீதி. 17:9.

ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே பேச்சில் தொடர்ந்து கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும். - நீதி. 17:9.

9 கருத்துகள்:

  1. உண்மைக்கு மாறானதை , பிறரைப் பற்றிய அவதூறினைப்

    பேசம் புறஞ்சொல் ( 268 ) , புறமொழி ( 270 ) . தொல்காப்பியம் https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006417/TVA_BOK_0006417_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt

    பதிலளிநீக்கு
  2. அறநெறிச்சாரம்
    புறம் சொல்லுதலின் இழிவு பாடல் - 84

    முன்நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
    கல்நின்று உருகக் கலந்துரைத்துப் - பின்நின்று
    இழித்துஉரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
    விழித்துஇமையார் நின்ற நிலை.

    விளக்கவுரை வானவர் விழித்தகண் மூடாமல் நிற்கும் நிலைக்குக் காரணம், ஒருவனுக்கு முன் இருந்து கல்லும் உருகுமாறு முகம் மலர்ந்து வாயாலும் இன்சொல் கூறிப் புகழ்ந்து, அவன் இல்லாத இடத்தில் அவனையே இகழ்ந்து பேசுகின்ற கயவர்களை, கண்களை மூடினால் நம்மையும் அவர்கள் இகழ்வார்களே என்று அச்சம் கொண்டதால் ஆகும்.

    புறம் கூறாததால் ஏற்படும் உயர்வு பாடல் - 85

    பொய்ம்மேல் கிடவாத நாவும் புறன்உரையைத்
    தன்மேல் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
    பிணிப்பண்பு அழியாமை பெற்ற பொழுதே
    தணிக்கும் மருந்து தலை.

    விளக்கவுரை புறங்கூறுதலைத் தன்னிடம் உண்டாகாமல் காத்துக்கொள்பவன், பொய்ம்மை பேசுவதில் செயல்படாத நாவையும், மெய் பேசுவதில் பொருந்தியிருக்கும் பண்புடைமை நீங்காமையையும் பெற்ற அப்போதே பிறவி நோயைப் போக்கும் சிறந்த மருந்தைப் பெற்றவன் ஆவான்.
    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  3. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொ லுரைப்பான் பொறை
    (அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:189)

    பொழிப்பு: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 11:13 அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2011&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  5. புறம் கூறுதலைக் கேளாத காது

    நா, செவி, கண், மனம் ஆகியவற்றின் தூய்மை
    அறநெறிச்சாரம் பாடல் - 103

    அறம்கூறு நாஎன்ப நாவும் செவியும்
    புறம்கூற்றுக் கேளாத என்பர் - பிறன்தாரத்து
    அற்றத்தை நோக்காத கண்என்ப யார்மாட்டும்
    செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு.

    விளக்கவுரை அறத்தைச் சொல்லும் நாக்கே சிறந்த நா ஆகும் என்பர். புறம் கூறுதலைக் கேளாத காதும் சிறந்த செவியாகும் என்பர். மற்றவனது மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே சிறந்த கண் ஆகும் என்று இயம்புவர். தீமை செய்பவரிடத்தும் பகைமை நீங்கியிருப்பதே மனம் ஆகும்.

    பதிலளி

    பதிலளிநீக்கு
  6. சங்கீதம் 4

    4 என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும்.
    என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்!
    என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!

    2 ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்?
    என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். [ஸஹீஹ் புகாரி 5143 ]

    பதிலளிநீக்கு
  8. நீர் மக்களின் குறைகளைத் தேடித்திரிந்தால், நீர் அவர்களைக் கெடுத்து விட்டீர்” [அபூதாவூத் 4888]

    தெளிவுரை:– மக்களின், குறைகளைத் தேடித்திரிவதால் அவர்களுக்குள் வெறுப்பு, கோபம், மற்றும் ஏராளமான தீமைகள் உண்டாகும். மேலும் மக்களுடைய குறைகளைத் தேடுவதாலும், அதைப் பரப்புவதாலும், அந்த மக்கள் பாவம் செய்யத் துணிவு ஏற்பட்டுவிடும். இவைகள் அனைத்தும் அவர்கள் மேலும் கெடுவதற்குக் காரணங்களாகும். (பத்லுல் மஜ்ஹூத்)

    https://vellimedaikal.wordpress.com/2021/02/16/jk/

    பதிலளிநீக்கு
  9. நீதிமொழிகள் 26:20 உதவிகரமானது உதவியாக இல்லை
    விறகு இல்லாததால் நெருப்பு அணைந்துவிடும், கிசுகிசுப்பவர் இல்லாத இடத்தில் சண்டைகள் நின்றுவிடும்.

    பதிலளிநீக்கு