மிக முக்கியமான கேள்வி.
- சமயங்களுக்குள்ளே ஏற்படும் பூசல்களுக்கு காரணம், "தான் செய்யும் முறை தவறு என்றாலும், நோக்கம் சரி" என்ற சிந்தனை எல்லா சமயத்தினருக்கும் உண்டு. எனவே "நல்ல நோக்கத்தை அடைய தீமை செய்வதில் பிழை இல்லை" என்பது நமது பொது சிந்தனையாக இருக்கிறது.
- "நாங்கள் செய்வது அநீதி என்றால், அவர்கள் செய்தது நீதியா?" என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.
- "நாம் எவ்வளவுதான் நேர்மையாக, அறத்துடன், நீதியுடன் நடக்க முயன்றாலும், எதிரி இது எதையும் பின்பற்றுவதில்லை, எனவே நாங்களும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் நாம் கருதுகிறோம்.
- தான் நேரடியாக அநீதி செய்யவில்லை என்றாலும், "இவ்வாறு அநீதியை ஈடுபடுவோர் தன் சமயத்தை காக்க, அல்லது தன் இனத்தை காக்க, அல்லது தன் மொழியை காக்கத்தான் இவ்வாறு செய்கிறார்" என்று கருதுவதால் செய்பவர்களை பொதுமக்கள் ஆதரிப்பது உண்டு.
சுருக்கமாக சொன்னால் நீதி-யை பொறுத்த நிலைப்பாடாக இல்லாமல், தான், தனது என்ற அடிப்படையில் அல்லது உணர்ச்சி வேகத்தில் நிலைப்பாடுகள் எடுக்கப்படுகிறது.
ஆனால் இக்கேள்விக்கு "நிச்சயமாக முடியாது" எனபதுதான் பதில்.
- இந்த பதில் உண்மை தன்மையை அறிய முதலில் நாம் ஆதரிக்கும் சமயத்தின் அறநெறிகளை மறைநூல்கள் மூலம் கற்க வேண்டும். மறைநூல்கள் கூறும் அறநெறிகளை பின்பற்றவில்லை என்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கற்று அறிய வேண்டும். ஏனென்றல் எல்லோரும் "தான் சரி, எதிரிதான் தவறு செய்தவர்" என்ற எண்ணம் கொண்டவர்களாய் இருப்போம். எனவே நாமும் நமது செயலும் சரியா? என்று சுய பரிசோதனை செய்வதற்காக நமது கருமங்களை வேதம் கூறும் அறங்களோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஒருவேளை ஒப்பிட்டு பார்ப்பதாக இருந்தால் எதிரியின் செயலைதான் ஒப்பிட்டு பார்ப்போம். இந்த அணுகுமுறையால் நமக்கு ஏதும் தீங்கு இல்லை என்று கருதுகிறோமா என்று தெரியவில்லை.
- இரண்டாவது, இவ்வாறு சார்புடன் நடக்க அனுமதி உண்டா? என்று வேதங்களை தேடி வாசிக்க வேண்டும். அவ்வாறு சார்புடன் நடப்பதால் நமக்கு நமது சமுதாயத்துக்கும் ஏற்படும் தீமை என்ன? என்றும் ஆய்ந்து அறிய வேண்டும்.
- மூன்றாவது இவ்வாறு அநீதி செய்வதன் மூலம் நாம் விரும்பும் நீதி நிலைபெறுமா? அல்லது கடவுள் மகிழ்ச்சி அடைவாரா? என்று ஆய்ந்து அறிய வேண்டும்.
இவைகளை ஏன் செய்ய வேண்டும்? ஏனென்றால் இறைவன் தான் கூறும் அறங்களுக்கு, தர்மத்துக்கு, மார்க்கத்துக்கு வழிப்படுவோரை தான் விரும்புவான் அவர்களுக்குத்தான் சொர்க்கத்தில் இடமளிப்பான் எனபது அவனது வாக்குறுதியாக இருக்கிறது. எனவே நாம் செய்யும் செயலால் நமது நோக்கத்துக்கே தீங்கு என்கிற பொழுது இதை கற்று அறிந்து அதற்க்கு வழிப்படுவதுதான் அறிவுடைமை.
இந்த கோணத்தில், சில ஆதாரங்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழர் சமையம்
அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்
கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,
நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை. - (திரிகடுகம் 86)
பொருள்: உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. - (குறள் - செங்கோன்மை 1)
பொருள்: நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும். (தண்டனை கொடுப்பது தனிமனிதனின் உரிமை அல்ல.)
இஸ்லாம்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:4:135)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன்:5:8)
கிறிஸ்தவம் / யூதம்
“அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும். - (உபாகமம் 1:16)
நமையின் மூலம் தான் தீமையை வெல்ல முடியும். (அ) நீதியை வெல்ல அநீதியால் ஒருபோதும் முடியாது.
தமிழர் சமயம்
அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'. (பழமொழி நானூறு 23)
அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடைவார்கள். 'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து.
கிறிஸ்தவம்
பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள். - (ரோமர் 12:21)
இஸ்லாம்
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். - (குர்ஆன் 41:34)