தமிழில் வேதம் உண்டா?

இந்த கேள்விக்கு பல சகோதரர்கள் உண்மைக்கு நெருக்கமாக பதிலை பதிவிட்டு உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதில் தமிழில் உள்ள அனைத்து சங்க இலக்கியங்களையும் இலக்கணங்களையும் சமண சைவ வைணவ நூல்களையும் பட்டியல் இட்டு உள்ளனர்.

சிலர்"என்னை பொறுத்தவரை" என்று தான் விரும்பியதை கூறி உள்ளனர். இவ்வாறு வேதம், ஆன்மீகம், கடவுள், சமயம் மற்றும் குரு போன்றவைகளுக்கு ஏதேனும் வரையறை உண்டா அல்லது இவ்விடயம் தொடர்பாக நமது விருப்பத்துக்கு கருத்துக்களை உருவாக்கி கொள்ளலாமா என்பதையும் நாம் ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் வேதங்கள் யாது? என்ற கேள்விக்கு முன் அது உள்ளடக்கிய வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறிந்து இருக்கவேண்டும். அதோடு சேர்த்து சில உப கேள்விகளுக்கும் பதில் தெரிந்து இருக்க வேண்டும். அவற்றில் சில..

  1. வேத நூல் என்றால் என்ன?
  2. மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா?
  3. வேதத்துக்கும் வேதம் அல்லாத நூல்களுக்கும் என்ன வேறுபாடு?
  4. தமிழில் வேதம் உண்டா?
  5. வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியுமா?
  6. வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?
  7. தமிழ் கடவுளின் மொழியா? அப்பொழுதுதான் தமிழில் வேதம் இறங்க முடியும்!

இப்பொழுது இதற்கான பதில்களை காணலாம்.

1) வேதம் என்றால்,

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

இன்று பொதுவாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இறைவனால் கொடுக்கப்படுவது தான் நூல் ஆகும்.

எடுத்துகாட்டாக, பைபிள் என்ற கிரேக்க சொல்லுக்கும் புத்தகம் என்றுதான் பொருள்.

குர்ஆனின் மற்றொரு பெயர் கித்தாப் (புத்தகம்) ஆகும். 

முதலில் நூல் என்று மட்டும் அழைக்கப்பட்டது, காலத்து ஏற்ப தொடர் நூல்கள் வந்த பொழுது முதல் நூல், வழி நூல் என்று பிரித்து அழைக்கப் பட்டது. பின்னாளில் மக்களும் நூல்கள் எழுத துவங்கியதும் அது மறை நூல்கள் என்று அழைக்கப்பட்டது. வேற்று சமய கலப்பு ஏற்படும் பொழுது அவைகள் ஆகமம் என்றும் வேதம் என்றும் சொல்லப்பட்டது. எனவே வேதம் என்றல் இறைவனால் வழங்கப்பட்டது ஆகும். அதன் பெயர்தான் மேற்சொன்னபடி காலவோட்டத்தில் மாற்றப்பட்டது.

2) மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா? என்று கண்டறிய விரும்பினால்,

மேல் சொன்ன அருங்கலச்செப்பு, பாடல் 9 தெளிவாக கூறுகிறது "என்றென்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு" என்று.. எனவே இவைகள் அனுபவத்தின் ஊடாக அல்லாமல், என்றென்றும் உள்ளேனன்றும் உருவாகியது ஆணால்நது அவனால் வெளிப்படுவது எப்போது என்றால் அதை தொல்காப்பியம் தெளிவாக விளக்குகிறது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். - (தொல்காப்பியம் மரபியல் 640)

இதன் பொருள், அனுபவத்தின் மூலம் அல்லாமல் இருக்க கூடிய அறிவை முனைவன் கண்டது (எழுதியது அல்ல) முதல் நூல் அல்லது முதல் வேதமாகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். (தொல்காப்பியம் மரபியல் 641)

வேதம் ஒன்றுமட்டுமல்ல, அது தொடந்து பல காலகட்டங்களில் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும் என்கிறது தொல்காப்பியம்.

உதாரணமாக, 1) பைபிள் வெவ்வேறு நபர்கள் எழுதிய 60 க்கும் மேற்ப்பட்ட நூல்களை உள்ளடக்கியது. 2) ரிக், யஜுர் சாம வேதங்களும் 600 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்கியது, 3) தமிழிலும் அவ்வாறுதான். புறநானூறு 150 பேரால் எழுதப்பட்டுள்ளது, தேவாரம் மூவரால் எழுதப்பட்டுள்ளது. இவாறாக நான்கு சமய பாரம்பரியங்கள் உள்ளது. அதுதான் நான்மறை என்று அழைக்கப் படுகிறது.

இங்கே நாம் சிந்திக்க வேண்டியது ஒருவர் எழுதிய நூலில் இன்னொருவர் எழுத எப்படி முடிந்தது? ஏனென்றால் அது வேதம் என்பதால். இந்நூல்களின் முறைப்பகுதியை எழுதியவர்கள் அதன் உரிமையாளர்கள் அல்ல. பின் எழுதுபவர்களும் அதன் உரிமையாளர்கள் அல்ல. எல்லோரும் அந்த நூலின் உரிமையாளன் கூறியபடி அவனின் அனுமதியோடு அந்நூலில் எழுதுகிறார்கள். ஏனென்றால் எழுதுவது அவர்களின் சொந்த அனுபவமோ ஞானமோ திறமையோ அல்ல.

3) வேதத்துக்கும், வேதம் அல்லாதவைக்கும் என்ன வேறுபாடு?

மேற்சொன்ன வரையறையின் படி, மனிதனின் தனது அனுபவத்தால் அல்லது பக்தியில் இறைவனை புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களும், சுய சிந்தனையினால் உந்தப்பட்டு எழுதப்பட்ட கதைகள் எதுவும், சில பல வேதங்களை கற்று அதன் சாரத்தை கூறுவதும் வேதம் ஆகாது. வேதம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட நேரடி வார்த்தைகளே.. வேதத்தின் மொழிபெயர்ப்பு கூட மனிதனின் அறிவை கொண்டு செய்யப்பட்டால் வேதம் ஆகாது.

4) தமிழில் வேதம் உண்டா?

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147)

பொருள்: வானில் இருந்து வந்த மறைபொருளை அறிவது நான் பெற்ற இன்பம் அது இவையகமும் அதை பெற வேண்டும் என்று விரும்புகிறார் திருமூலர். .

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149.

இப்பாடல்கள் மூலம் திருமூலர் தமிழில் வேதம் கொண்டு வந்தது நிரூபணமாகிறது. அதோடு இவ்வேதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கு அனைவருக்கும் என்று கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் உண்டு.

5) வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுமா?

1)தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்

3) மூவர் தமிழும் 4)முனிமொழியும் - 5) கோவை

திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 1) திருவள்ளுவருடைய திருக்குறளும், 2) நான்கு வேத பாரம்பரியங்களின் முடிவும், 3) மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர்களுடைய தேவாரமும், 4) சிவவாக்கியர் போன்ற முனிவர்களின் மொழியும் - 5) மாணிக்கவாசகரின் கோவை திருவாசகமும், 6) திருமூலருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு மூலத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று அறிவாயாக. 

எனவே சமண நூல் என்று அறியப்பட்ட குறளும், சைவ நூல்களான தேவாரமும் திருவாசகமும் திருமந்திரமும், சித்தர்கள் எழுதிய நூல்களும், உலகில் உள்ள அனைத்து சமய நூல்களை உள்ளடக்கிய நான்மறையும் ஒன்றுதான் என்று கூறுகிறது இந்த பாடல். எனவே இவைகள் ஒன்றுக்கொன்று முரண்படாது. 

முதல் நூலை வழித்து வந்தது வழி நூல் என்று தொல்காப்பியம் வரையருப்பதன் மூலமும், நல்வழி பாடல் 40 தின் மூலமும், முதலும் வழியும் மற்றும் நான்மறைகளும் ஒன்றுக்கொன்று முரண்படாது. முரண்படுவதாக தோன்றுவதற்கு காரணம் நமது கல்வியின் குறைபாடு ஆகும். மறை நூல்கள் அல்லது அறநெறி நூல்கள் போன்றவைகள்பணம் சேர்க்கும் கருவியாக இல்லாமல் இருப்பதால் அதை கற்று அறியாமல், தொழிற்கல்வியை பிரதானமாக கற்றதன் விளைவு உலகில் உள்ள அனைத்து சமய வேதங்கள் ஒன்றுக்கொன்று முரன்படுவது போல தெரிகிறது.

6) வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?

எவர் வேண்டுமென்றாலும் ஏற்கனவே உள்ள வேதத்தை படித்து, தான் ஒரு நூல் எழுதி அதை வேதம் என்று வாதிடலாம். அதற்கு அவருக்கு தேவை வாத திறமை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு. இது கால காலத்துக்கு தீயவர்களின் கைகளுக்கு எட்டும் விடயமாகவே இருந்து வருகிறது. எனவே இவ்வாறு உள்ளவர்கள், தான் எழுதிய நூலை வேதம் என்று தன்னுடைய நூலில் குறிப்பிட்டவோ அல்லது மக்களிடத்தில் பிரகடன படுத்தவோ முடியும். எனவே இதற்கிடையில் உண்மை வேதத்தை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு எதேனும் வழிமுறை உள்ளதா என்றால்? உண்டு.

தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. - (அறநெறிச்சாரம் பொய்ந்நூல்கள் பாடல் - 47)

பொருள்: தங்கள் தங்களின் விருப்பம், தத்தமது காட்சி/விளக்கம் என இவற்றுடன் ஒரு சிறிதும் பொருந்தாதபடி உரைப்பவரைப் பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய் நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்றுவணங்கி வழிபடுபவர் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உள்ளவர்கள் இல்லை.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். பாடல் - 2

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)

உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில் - (நாலடியார்பொருட்பால், 14. கல்வி 140)

விளக்கம்அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், அவ்வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

வேதம் என்று ஏற்கனவே அறியப்படும் நூல்களுக்கு முரண்படும் நூல்கள், ஆசையை வளர்க்கும் நூல்கள், உலக வாழ்க்கைக்கு மட்டும்  பயன்படும் நூல்கள் ஆகியவை வேத நூல்கள் அல்ல.

7) தமிழ் கடவுளின் மொழியா?

மக்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் வாழும் அனைத்து திசைக்கும் வேதம் வழங்கியது அதே இறைவன்தான் எனவே மொழிகள் அனைத்தும் அதே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் தேவ பாஷா என்று எதும் இல்லை.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருமூலர் போன்ற மக்களுக்கு குருவாக இருக்கும் மனிதர்களுக்கு உபதேசிக்கும் நந்திகள் மொத்தம் நான்கு பேர், அவர்கள் திசைக்கு ஒருவராய் அவர்களது பணியை செய்தனர். நான்கு திசையில் ஒரே மொழி பேசியவர்களா இருந்தனர்? இல்லை, வெவ்வேறு மொழி பேசிய, பேசும் மக்கள் தான் இருந்து வந்துள்ளனர். எனவே எல்லா மொழிகளுக்கும் வேதம் உண்டு, எனவே தேவ பாஷை என்று எதும் இல்லை.

முடிவுரை:

மேலே தரப்பட்ட கேள்விகளும் பதிலும் இந்த நீண்டந்தலைப்பில் ஒரு முன்னுரை போன்றே. உங்களுடைய நியாயமான கேள்விகள் வரவேற்க்கப் படுகிறது.

இந்த சிறு ஆய்வின்படி, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தின் படி, கீழ்கண்ட நூல்கள் தமிழ் வேதங்களாக இருக்கலாம்.

  1. அகத்தியம்
  2. தொல்காப்பியம்
  3. புறநானூறு
  4. அகநானூறு
  5. குறள்
  6. ஞானக்குறள்
  7. நாலடியார்
  8. ஆத்திசூடி,
  9. நல்வழி,
  10. மூதுரை
  11. திரிகடுகம்,
  12. பழமொழி 400
  13. தேவாரம்,
  14. திருவாசகம்,
  15. திருமந்திரம்,
  16. சிவவாக்கியம்
  17. அறநெறிச்சாரம்,
  18. அறுஞ்செக்கலப்பு
  19. ஆசாரக்கோவை
  20. ஏலாதி
  21. சிருபஞ்ச மூலம்
  22. முதுமொழி காஞ்சி
  23. இன்னா 40,
  24. இனியவை 40

இவைகள் மேற்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் எனது ஆய்வுகளின் மூலம் வேதமாக இருக்கலாம் என்று நான் கருதியவைகள். எனவே தமிழில் வேதங்கள் இவைகள் மட்டுமல்ல, வைணவம் இன்னும் ஆய்வு செய்யப்படாத பகுதியாக உள்ளது.

குறிப்பு: இந்த நூல்களை வகைப்படுத்த முயலும் பொழுது தமிழ் அறிஞர்கள், தொல்காப்பிய வழிகாட்டுதலின் படி முதல், வழி மற்றும் வழிநூலின் வகைகளை கொண்டு வகைப்படுத்தி இருந்தால் சரியாக இருந்து இருக்கும். நெறி நூல்கள், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், சமய நூல்கள் என்று பிரித்தது பிழை என்று கருதுகிறேன். இந்த வகைகளை எல்லாம் ஒரு பகுதியில் வைத்துவிட்டு, தொல்காப்பிய நூல் விதி அடிப்படையில் ஒவ்வொரு நூலும் வகைப்படுத்தப்படவேண்டும். இதனால் மக்கள், எந்த நூலை ஏற்கவேண்டும், எந்த நூலை புறந்தள்ள வேண்டும் சென்று அறிந்து இருப்பர். 

பைபிள் எடுத்து பார்த்தால் 60 க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பலவகைப்பட்ட நூல்கள் ஒன்றிணைத்து அத்தியாயமாக குறிப்பிடப்ட்டு ஒரே நூலாக அறியபப்டுகிறது. ஒருவேளை இது நமக்கு நடைபெறாமல் போக இங்கு இருந்த அரசியல் பண்பாட்டு சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஆனால் இதைவிட மோசமான சூழ்நிலையை கடந்துதான் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வந்துள்ளார் எனபதும் எதார்த்தம். இதே நிலைதான் சம்ஸ்கிருத நூல்களுக்கும். 


2 கருத்துகள்:

  1. வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
    நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
    பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. திரு - 2358
    வேதமுடன் ஆகமங்களும் மெய்யான இறைவனை உணர்த்தும் நூல்களே. ஓதவும் பொதுவாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. நாதன் உரை எவை என்று நாடில் இரண்டின் முடிவும் அது. இருப்பினும் பேதம் தரும் என்று பெரியவர்கள் உரைப்பர் காரணம் அவர்கள் உணர்ந்துவிட்டதால் அந்த பேதம் ஏற்படுகிறது. பின்குறிப்பு – வேதமும் ஆகமமும் இறையை உணர்த்தும்.

    பதிலளிநீக்கு
  2. இந்திய_இலக்கியச்_சிற்பிகள்

    https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006323_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf

    பதிலளிநீக்கு