தேவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களா?

தமிழர் சமயம்

தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்

சிவத்து இடை நின்றது தேவர் அறியார்

தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்

பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே. (திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 13 பாடல் 1685)

விளக்கம்இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற வழியில் நிற்கின்ற தவசிகள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய கர்மங்கள் அனைத்தும் இறைவன் இடத்திலேயே சென்று சேர்ந்து விடுவதை தேவர்களும் அறிய மாட்டார்கள். தவத்தின் வழியில் நின்று இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் பிறவி எனும் கட்டுக்குள் அகப்பட்டு நின்றது ஒரு முடிவில்லாத வினைகளை அனுபவிக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள்.

இஸ்லாம் 

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே” என்று கேட்டனர். “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!” என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர். “ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான். (குர்ஆன் 2:30-32)

(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார் (அல்-குர்ஆன் 27:65) 

மறைவானவற்றின் சாவிகள் என்னிடம் தான் இருக்கின்றது. அவனைத்தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். (குர்ஆன் 6:59)

கிறிஸ்தவம் / யூதம் 

இயேசு கூறினார் "அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களும், குமாரனும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்." (மத்தேயு 24:36

முடிவுரை 

தேவர்கள் கூட அனைத்தையும் அறிந்தவர்கள் அல்ல. ஆனால் மனிதர்கள் சிலர் அனைத்தையும் அறிந்தவர்கள், முக்காலமும் உணர்ந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இறைவன் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன், முக்காலமும் உணர்ந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக