நேரமும் காரணமும் தெரியாது, ஆனால் நிச்சயம் வரும் : மரணம்

தமிழர் சமயம்  

அடப்பண்ணி வைத்தார்; அடிசிலை உண்டார்;
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்;
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்;
கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே! (திருமந்திரம் 148)
 
பொருள்: அருமையாய்ச் சமைத்து வைத்துவிட்டுச் சாப்பிடக் கூப்பிட்டாள் மனைவி. வந்தவர் உண்டார். மனைவியைக் கமுக்கமாகக் கொஞ்சினார். ‘இடப் பக்கம் லேசாக வலிக்கிறது’ என்றார். ‘வாய்வுப் பிடிப்பாக இருக்கும்; சற்றுப் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றாள் மனைவி. படுத்தார். போய்விட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுதான் கதி. 
 
நாட்டுக்கு நாயகன்; நம்ஊர்த் தலைமகன்;
காட்டுச் சிவிகைஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. (திருமந்திரம் 153)
 
பொருள்: இந்த நாட்டுக்கே நாயகன்; நம் ஊரின் தலைமகன்; காலால் நடந்து அறியாதவன். ஏறினால் பல்லக்கு; இறங்கினால் அரசுக் கட்டில். புடை சூழ வருவதற்குப் படை உண்டு. வருகை அறிவிக்க முன்னே முரசொலிக்கும். போகும் வழியெல்லாம் பூச்சொரிந்து வரவேற்பார்கள். முன்னறிவிப்பில்லாமல் எங்கேயும் போகாத அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சாவு வந்தது. கிளம்பினான். நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை: இப்போதும் புடைசூழ ஆட்கள் வந்தார்கள்; போகும் வழியெல்லாம் பூச்சொரிந்தார்கள். மாற்றம் சிலவற்றில்தான்: பல்லக்கு, பாடை ஆகிவிட்டது; முரசு, பறை ஆகிவிட்டது. அவ்வளவே.

பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்;
கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து,
தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;-
வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. (சிறுபஞ்ச மூலம் 24
 
கழிமின் - விடுங்கள்

விளக்கம்: நன்மைக் குணமுடையவர்களைச் சேரவேண்டும். பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தீக்குணத்தாருடன் நட்பு விடவேண்டும். தீய சொற்களைச் சொல்லாதிருக்க வேண்டும். எமன் நிச்சயம் வருவான். இஃது உலக வழக்கமாகும். 
 

இஸ்லாம் 

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (குர்ஆன் 62 : 8

நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (குர்ஆன் 4 : 78) 

மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (குர்ஆன் : 50:19) 

கிறிஸ்தவம் & யூதம் 

உயிருள்ளவர்கள் தாங்கள் இறப்பதை அறிவர்; ஆனால் இறந்தவர்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் அவர்களுக்கு ஒரு வெகுமதியும் இல்லை, ஏனென்றால் அவர்களின் நினைவகம் மறந்துவிட்டது.  (பிரசங்கி 9:5)

என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.. (சங்கீதம் 73:26)

உங்கள் தந்தையர், அவர்கள் எங்கே? மேலும் தீர்க்கதரிசிகள், அவர்கள் என்றென்றும் வாழ்கிறார்களா? (சகரியா 1:5)

அவன் தாயின் வயிற்றிலிருந்து நிர்வாணமாக வந்ததைப் போல, அவன் வந்தபடியே திரும்புவான். அவர் தனது உழைப்பின் பலனில் இருந்து எதையும் கையில் எடுத்துச் செல்ல மாட்டார். (பிரசங்கி 5:15)

எந்த மனிதனுக்கும் காற்றினால் காற்றை அடக்குவதற்கு அதிகாரம் இல்லை, அல்லது மரண நாளின் மீது அதிகாரம் இல்லை; மேலும் போரின் போது எந்த வெளியேற்றமும் இல்லை, அதைச் செய்பவர்களை தீமை விடுவிக்காது. (பிரசங்கி 8:8)

2 கருத்துகள்:

  1. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
    பின்னை வந்தவர்கென்ன பிரமாணம்
    முந்நூறு கோடி உறுகதி பேசிடில்
    என்ன மாயம் இடிகரை நிற்குமோ

    நமக்கு முன் வந்தவர்கள் எத்தனையோ பேர். எல்லோரும் முடிந்து போய் விட்டார்கள். இன்று இருப்பவர்களுக்கும், இனி வரப் போகிறவர்களும் நிரந்தரமாய் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒன்றும் இல்லை. எத்தனை மாத்திரை, மருந்து, சிகிச்சை, சோதனை செய்தாலும் என்ன? இடிகரை நிற்காதது போல, நம் வாழ்வும் நிலைக்காது என்கிறார் திருமூலர்

    http://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  2. 4:78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே!

    பதிலளிநீக்கு