திருமண சடங்குகள் *

தமிழர் சமயம் 


அநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
"கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
"பேரில் கிழத்தி யாகென" தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

(பதவுரை)
உழுந்து - பருப்பு
களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம்
கோள் - கெட்ட கிரகங்கள்
கால் - இடம், சகடம்
திங்களையுடைய நாள் - திருமண நாள்
பொதுசெய் கம்பலை - திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் முதுசெம் 
பெண்டிர் - அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப் பெண்டிர்
முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் 
முறை - முறையாகக் கொடுக்க
புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர்
அலரி - பூ
வதுமை நன்மணம் - வதுவைத் திருமணம்
ஓரில் - சதுர்த்தி அறை
உடன்புணர்தல் - கூடப்புணர்கிற
நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை
கொடும்புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு
சதுர்த்தியறை - நான்காம் நாட் பள்ளியறை  
 
விளக்கவுரை: "எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் "கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!"

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு' என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினை யுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான். 
 
குறிப்பு: சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது. 
 
புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது. 
 
முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய திருமணங்களில் உள்ள -
(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை
(2) புரோகிதர் இல்லை.
(3) எரி ஓம்பல் இல்லை.
(4) தீவலம் இல்லை.
(5) அம்மி மிதித்தல் இல்லை.
(6) அருந்ததி காட்டல் இல்லை.
(7) கோத்திரம் கூறல் 
(8) தாலி முதலியன இல்லை

பெற்றோர் கொடுப்பக் கொள்வதுவே

“கற்பெனப்படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல். பொருள். நூ. 140)
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான” (தொல். பொருள் நூ. 141) 
 
‘கற்பு’ என்று சொல்லப்படுவதே திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே என்கிறார் தொல்காப்பியர். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்தல் தான் கற்புடன் கூடிய திருமணம் என்றும், உடன்போக்கு - பெற்றோர் இசைவில்லாது ஆண், பெண் இருவரும் தாமே மணம் புரிந்து கொள்ளுதல் ஆகிய இரு முறைகளிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.

இந்துமதம் 

இன்று இந்துக்கள் என்று தங்களை கருத்திக்கொள்ளக் கூடியவர்கள் திருமண சடங்குகளாக சிலவற்றை நிகழ்த்து கின்றனர். ஆனால் இந்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

  • கன்னிகாதானம் - பெண்ணை மணமுடித்து தருவதாக ஒப்புக் கொள்வது 
  • தாலி - என்பது திருமணமானதிற்கு அடையாளமாக ஏற்பட்டுள்ள ஓர் லௌகீக சம்பிரதாயமே தவிர தாலி என்பது சாஸ்திரத்தின்படி அவசியமானதல்ல.
பிறகு தாலி புனிதம்,சென்டிமென்ட் என்பதெல்லாம் எப்பொழுது யார் ஏற்படுத்தியது? 
 

 இஸ்லாம் 

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (குர்ஆன் 4:21)

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு (மணக்கொடை - ஆண் பெண்ணுக்கு தருவது) அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும். அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும். இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது. 


2 கருத்துகள்:

  1. அகநானூறு Agananuru 282
    தலைவியின் திருமணச் சடங்குக்குப் பொங்கல் வைக்கும் தோழி சொல்கிறாள்.
    1
    கானவன் பெருமலையில் வேட்டைக்குச் செல்கிறான்.
    திருப்புமுனை கொண்ட அம்பும் வில்லும் கொண்டுசெல்கிறான்.
    தன்னோடு போரிடும் யானையைக் கொன்று அதன் தந்தத்தை எடுத்ததுக்கொண்டு அதனால் தண்ணீர் ஊறும் மண்ணைப் பொன்னுக்காகத் தோண்டுகிறான்.
    பொன்னுடன் மணிகளும் கிடைக்கின்றன.

    தோண்டும் தந்தத்தின் நுனி ஒடிந்துவிடுகிறது.
    ஒடிந்த தந்தத் துணுக்குகள் நீரில் மழைநீர்ப் பனிக்கட்டி போல் நீரில் முத்துக்களாக மிதக்கின்றன.

    இப்போது அவனுக்குப் பொன், மணி, தந்த-முத்து ஆகிய மூன்று செல்வங்கள் கிடைத்துள்ளன.

    அவற்றை நறைக்கொடி நாரால், சந்தனக் காவுமரத்தில் (கட்டித் தூக்கும் மரம்) மரத்தில் கட்டிச் சுமந்துகொண்டு வருகிறான்.

    அவன் வேங்கைப் பூவாலான மாலையைத் தலையில் அணிந்திருக்கிறான்.
    இப்படிப்பட்ட கானவன் வாழும் நாட்டின் தலைவன் உன் தலைவன்.

    தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம்.

    பொன்னும், மணியும், முத்தும் சந்தனக் கா மரத்தில் மணக்கும் நறை-நாரால் கட்டி மணமகன் வீட்டார் கொண்டுவருகின்றனர்.
    2
    மணமகளாகிய தலைவியின் தந்தை பலாப்பழச் செல்வ-வளம் மிக்கவன்.
    இவன் அவர்களை எதிர்கொள்கிறான்.
    கொடையாகத் தன் மகளை மணம் செய்து கொடுக்கிறான்.

    அலரும் அம்பலுமாச் சொல்லித் தூற்றிய ஊரார் வாய் இப்போது திருமண நிகழ்வு பற்றிப் பேசுகிறது.

    உன் தாய் “அவனே உன் தோளுக்கு உகந்தவன்” எனப் பாராட்டுகிறாள்.

    நான் “விரைந்து வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டு என் தோளுக்கு நேராக என் கைவிரல்களைக் கூப்பி-நின்று வரவேற்கிறேன்.

    இல்லத்தில் வாழும் கடவுளுக்குப் படைக்கப் பொங்கல் வைக்கிறேன்.

    மகிழ்ச்சிதானே!

    பாடல் சொல் பிரிப்புப் பதிவு
    திணை, குறிஞ்சி

    1
    பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
    செறி மடை அம்பின், வல் வில், கானவன்
    பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
    நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்,
    கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, 5
    வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
    தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
    மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
    சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
    வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
    2
    இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
    எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்
    அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
    சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
    யாயும், ''அவனே'' என்னும்; யாமும், 15
    ''வல்லே வருக, வரைந்த நாள்!'' என,
    நல் இறை மெல் விரல் கூப்பி,
    இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!

    இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது;
    தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
    தொல் கபிலன் பாடல்

    கி.மு. காலத்துப் பாடல்
    ஆங்கில விளக்கம் பாடல்



    கும்பிட்டு வரவேற்கும் தமிழர் பண்பாடு இப்பாடலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
    இறை = கையிலுள்ள மணிக்கட்டு
    விரல் கூப்பி “வருக” என்றனர்.
    இக்காலத்தில் “வாருங்கள் வாருங்கள்” | “வாங்க வாங்க” என்று சொல்லிக்கொண்டு கை கூப்பி வரவேற்கின்றனர்.

    ''வல்லே வருக, வரைந்த நாள்!'' என,
    நல் இறை மெல் விரல் கூப்பி,

    https://vaiyan.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%20251-300

    பதிலளிநீக்கு


  2. https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=558:2012-01-02-22-57-15&catid=56:2013-09-02-02-58-06

    பதிலளிநீக்கு