முகமது நபி ﷺ இஸ்மாயீலின் சந்ததிதான்!


வாழ்த்துக்கள் சகோ,

உங்களது ஆய்வில் உள்ள சில பிழைகளை சுட்டிக்காட்ட இந்த பதிவு, ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம்.

முதலில், "இஸ்மவேல் என்று கிறிஸ்தவத்திலும் இஸ்மாயீல் என்று இஸ்லாத்திலும் அழைக்கப்படுகிறவர்" என்று நீங்கள் கூறுவது பிழை. பைபிளும் இஸ்மாயீல் (Ismayel) என்றுதான் அழைக்கிறது, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பின் நிலை இவ்வாறு உள்ளது.

இரண்டாவது, "நம்பிக்கை அடிப்படையிலே முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்" என்று கூறுவதன் மூலம் எந்த நம்பிக்கையும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கூற வருவதாக நான் புரிந்து கொள்கிறேன். 
 
உங்களிடம் உள்ளது கர்த்தரிடம் வந்த, இயேசு அவர்கள் மூலம் வெளிப்பட்ட, உண்மை பைபிள் என்பதற்கான ஆதாரம் என்ன? இல்லை என்பதற்கான ஆதாரம் கிறிஸ்தவ இணைய தலங்களிலேயே விரவிக் கிடக்கிறது. சில ஆதாரங்கள் கீழே ஒன்றன் பின் ஒன்றாக விளக்கப் பட்டுள்ளது.

மூன்றாவது, "புஹாரி நூலானது முகமது நபிக்கு 200 வருடத்துக்கு பிறகு தொகுக்கப் பட்டுள்ளது" என்பதை குறிப்பிடுவதன் மூலம் அதன் மீதான உண்மைத் தன்மையை கேள்வி எழுப்புகின்றீர்கள். ஆனால் பைபிளை பற்றிய பின்வரும் செய்தியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

"27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல் , 4 ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப் அதானசியஸ் 367 AD இல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் உள்ள ஹிப்போ (393 AD) மற்றும் கார்தேஜ் (397 AD) சபைகளின் போது முதன்முதலில் முறையாக நியமனம் செய்யப்பட்டது" - New Testament wikipedia
 
சில நூல்களில் கிறிஸ்துவுக்கு பிறகு 45 முதல் 95 வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்டது என்கிறது.

நான்காவது, "ஹதீஸ் நூலகளைப் பற்றி முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது" என்று கூறுவதன் மூலம் அனைத்து ஹதீஸ் நூல்களையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்தை விதைக்க விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன்.

புஹாரி நூலானது குர்ஆனுக்கு அடுத்த நம்பகமான நூல். 1200 வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் விளக்கவுரை எழுதி உள்ளனர். அதில் எவரும் இதன் நம்பகத் தன்மையை கேள்வி எழுப்பவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ் நூல்கள் உண்டு, அவை அனைத்தும் ஒரே தரமுடையதல்ல. எதிரிகள் அவர்கள் விருப்பட்டதை எழுதி ஹதீஸ் நூல் என்று சொன்னால் அதை எவ்வாறு தரம் பிரிப்பது என்று அறிவியல் ரீதியான ஒரு முறையினை கையாண்டு எழுதப்பட்ட நூல் புஹாரி. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் இமாம் புஹாரியால் சேகரிக்கப்பட்டு வெறும் 7000 மட்டுமே நூலில் பதியப்பட்டுள்ளது. மற்றவைகள் ஏன் பதியப்படவில்லை?, இவைகள் ஏன் பதியப்பட்டுள்ளது? என்பதற்கு தனி தொகுப்புடைய நூல்கள் உள்ளது. நீங்கள் கூறும் நூலின் பெயர் ஸஹீஹ் புஹாரி. ஸஹீஹ் என்றால் உண்மையான என்று பொருள்.

உதாரணமாக, பைபிளில் ஜான் எழுதிய சுவிசேஷத்தை எடுத்து கொள்வோம். கிறிஸ்துவுக்கு பிறகு சில நூறு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட பைபிளில், ஜான் எழுதிய சுவிசேஷம், இயேசு அவர்களின் சீடரான ஜான் தான் எழுதினார் என்பதற்கும், ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அவர் எழுதிய சுவிசேஷம் மட்டும் தான் அதில் உள்ளது என்பதற்கும், அதில் பின் வந்தவர்கள் இடைச்சொருகல்கள் செய்யவில்லை என்பதற்கும், என்ன ஆதாரம் உங்களிடம் உண்டு? வெறும் நம்பிக்கை மட்டுமே உங்களிடம் உண்டு, ஆதாரம் இல்லை.!

ஐந்தாவது, பைபிளின் வசனத்தை அடிப்படையாக கொண்டு, குர்ஆனின் செய்தியை மறுக்க முடியாது. பைபிள் பரிசுத்தம் இல்லாதது என்கிறது குர்ஆன். இது வெற்று நம்பிக்கையல்ல, ஆதாரம் இதோ.

விருத்தசேதனம் ன்பது ஆப்ரஹாமின் சந்ததிகள் கர்த்தருடன் செய்துகொண்ட கால எல்லையற்ற உடன்படிக்கை ஆகும்.

இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். - (ஆதியாகமம் 17:10)

ஆனால் இப்படி ஒரு கேள்வி பைபிளில் உள்ளது! 

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? - (ரோமர் 3:1)

கட்டளையிட்டவர் உலகம் அனைத்தையும் படைத்த இறைவன் என்பதைவிட வேறு சிறப்பு வேண்டுமா?

ஆனால், இயேசுவுக்கு பின் வந்தவ பால் என்ன சொல்கிறார்?  

ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். - (1 கொரி 7:19)

விருத்தசேதனம் செய்வதே கர்த்தரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாகும் அல்லவா?

கர்த்தருடன் இப்ராஹிமின் சந்ததி செய்து கொண்ட உடன்படிக்கையை, கர்த்தரோ அல்லது அவரது தீர்க்கதரிசியான இயேசுவோ தானே முறிக்க முடியும்? இயேசுவின் காலத்துக்கு பிறகு பால் என்று யாரோ ஒரு மனிதர் தன்னைத்தானே இயேசுவின் சீடராக அறிவித்து, கர்த்தருடனான விருத்தசேதன உடன்படிக்கையை முறித்து விடுகிறார். அவரைப்பற்றி முன்னறிவிப்போ அல்லது விருத்த சேதனத்திற்க்கான கால எல்லையோ பைபிளில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. 

பைபிள் கறைபடிந்தது என்பதற்கு இதைவிட சான்று என்ன தேவை?  

ஆறாவது, "சாராள் மகனுக்கு எகிப்துலிருந்து ஒரு பெண்ணை தன் மகனுக்கு கண்டுபிடித்தாள்" என்ற பைபிளின் செய்தியானது, "ஆப்ரகாமினால் வனாந்திரத்தில் விடப்பட்ட சாராள், விடப்பட்ட இடத்தின் வழியே வந்த ஏமன் நாட்டு கூட்டத்தாரின் பெண்ணை பிற்காலத்தில் இஸ்மாயில் திருமணம் செய்தார்" என்கிற புகாரியின் செய்தியோடு முரண்படுகிறது என்கிறீர்கள். இதன் மூலம் முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி அல்ல என்று நிறுவ முயல்கிறீர்கள்.

ஆனால், 1) கர்த்தருக்கும் இப்ராஹிமின் சந்ததிக்கும் இடையிலேயான "விருத்தசேதன ஒப்பந்தம்" முகமது நபியின் காலத்துக்கு முன்னமே அங்கே பின்பற்றி வந்ததற்கான வரலாற்று சான்றுகள் பல உண்டு. இஸ்மாயில் அங்கே வாழ்ந்திராமல் அது சாத்தியமில்லை.

மேலும் நீங்கள் சொல்லும் முரண்பாட்டில், தவறான தகவலாக பைபிளில் உள்ளத்தைத்தான் கருத முடியும். ஏன்?

2) ஆதியாகமம் 21:21 இல் இஸ்மாயீல் மற்றும் இஸ்மாயீல்களுடன் பரான் தொடர்பு இருப்பதை புவியியலாளர் யாகுத் அல்-ஹமாவி உறுதிப்படுத்துகிறார், அவர் " பரான், ஒரு ஹீப்ரு வார்த்தை, தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள மெக்காவின் பெயர்களில் ஒன்றாகும்." என்று கூறுகிறார் - Desert of Paran wiki

எனவே அரேபியாவிலிருந்து சாராள் எகிப்துக்கு சென்று பெண்ணை கண்டுபிடித்தால் என்பதைவிட, பிற்காலத்தில் தன் இடம் நோக்கி வந்த மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் தேர்ந்தெடுத்தாள் என்பதுதான் பொருத்தமானதாகும்.

மேலதிகமாக, 3) இஸ்மாயில் அவர்களுக்காக உருவான நீரூற்று என்பது என்றென்றும் வெளிப்படும் கெட்டுப்போகாத, எண்ணிலடங்கா நன்மைகள் நிறைந்த ஜம்ஜம் நீராக அல்லாமல் வேறெந்த இடத்தில் உள்ள நீராக இருக்க முடியும்? கர்த்தரின் அற்புதம் அல்லவா அது?

ஏழாவது, முகமது நபியின் வம்சம் பற்றியுள்ள முரண்பாடுகளை அர்-ரஹீக்குல் மக்துமில் குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மைதான்.  

ஆனால் அதைக் கொண்டு புகாரியின் செய்தியை பொய் என்று நிறுவமுடியாது. ஏன்?

ஏனென்றால் அந்த முரண்பாடுகள் தரவுகளின் குறைபாட்டால் ஏற்பட்டது. வேறு தரவுகள் இருந்தாலும் இல்லையென்றாலும் புகாரியின் செய்தி உண்மையானதே. 

உதாரணமாக ஆதம் ஏவாளின் செய்திகளை பைபிள் சொன்னதால் நம்பும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வேறு இடங்களில் தேடி அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஆதாரத்தின் அடிப்படையில் பைபிளில் சொன்ன செய்திகளை நீங்கள் ஏற்பதில்லை. 

முகமது நபி அவர்களின் வம்ச செய்தியை பின்னாளில் பொய் என்று கூறி எடுத்துவிட்டார்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு நபிமொழி-யின் தரம் தான்தோன்றித்தனமாக நிணயிக்கப் படுவதில்லை என்கிற செய்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

அதற்கென்று விதிகள் உள்ளன.அந்த விதிகளின் நோக்கம், அந்த செய்தி உண்மையிலேயே முகமது நபியால் சொல்லப்பட்டாதா அல்லது இடையிலே எதிரிகளால் சொருகப் பட்டதா என்று பிரித்தறியும் விதத்தில் அமைந்து உள்ளது. 

எட்டாவது, குர்ஆனின் 3:84, 6:156,157, 28:46 போன்றவைகளை குறிப்பிட்டு, "இஸ்மாயிலுக்கும், இஸ்மாயயிலின் சந்ததிக்கும் வேதம் கொடுக்கப்பட்டுள்து" என்று சில வசனத்திலும்,"வேதம் கொடுக்கப்படாத சமுதாயம் அரபு சமுதாயம்" என்று சில வசனத்திலும் குறிப்பிட்டுள்ளதை முரண்படுவதாக கருத தேவையில்லை. 

 காரணம் 1) நபி, ரசூல் என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் உண்டு. அதன் வேறுபாடுகள் உங்களுக்கு தெரிந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. தமிழிலே தேவாரம் திருவாசகம் போன்றவைகள் பெரியதாகவும் இருப்பதற்கும், ஆத்திச்சூடி சிறியதாக இருப்பதற்கும் காரணம் உண்டு. மோசஸின் நான்கு புத்தகங்கள் பெரியதாகவும் ரூத்தின் செய்தி சிறியதாக இருப்பதற்கும் இருக்கும் காரணமுண்டு.

காரணம் 2) இஸ்மாயீலின் காலத்துக்கும் முகமது நபியின் காலத்துக்கும் இடையில் சில ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது. எனவே இத்தனை ஆண்டுகள் வேதம் கொடுக்கபடாத மக்களை வேதம் கொடுக்கப்படாதவர் என்றுதானே குறிப்பிட முடியும். சில நூறு ஆண்டுகள் இடைவெளியே மக்களின் குணத்திலும் செயலிலும் கலாச்சார பண்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்கிற பொழுது "சில ஆயிரம் ஆண்டுகள்" என்பது மிக மிகப் பெரிய இடைவெளி. 

எனவே முகமது நபி இஸ்மாயிலின் சந்ததி என்பதற்கு இவைகள் போதுமான ஆதாரங்கள்.

இறுதியாக, முகமது நபி அவர்கள் ஆதாமின், நோவாவின் சந்ததி தான் என்று நிறுவத் தேவையில்லை என்று கருதுகிறேன். 

மேலும் வாசிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக