தர்மம் செல்வத்தை அதிகரிக்கும்.

தமிழர் சமயம்


தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; 
வைத்து வழங்கி வாழ்வார். (ஏலாதி 78)

விளக்கவுரை 

  1. தாயை இழந்த பிள்ளை
  2. தலைமகனை இழந்த பெண்டாட்டி
  3. வாய்ப்பேச்சினை இழந்து ஊமையராய் வாழ்பவர்
  4. வாணிகம் செய்து பொருளை இழந்தவர்
  5. கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர்
  6. கண் பார்வையை இழந்தவர்கள்
ஆகியோருக்குக் கொடுத்தவர்கள் தம் கையில் எப்போதும் பொருள் வைத்துக்கொண்டிருப்பவராக வாழ்வார்கள். கொடையாளி கைக்குப் பொருள் வந்து சேரும். 

இஸ்லாம் 


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (முஸ்லிம் 5047
 

கிறிஸ்தவம் 


பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார். (லூக்கா 6:38)

4 கருத்துகள்:

  1. விஷயம் இதுதான்: சிக்கனமாக விதைக்கிறவன் சிக்கனமாக அறுவடை செய்வான், ஏராளமாக விதைக்கிறவனும் ஏராளமாக அறுப்பான். 2 கொரிந்தியர் 9:6

    பதிலளிநீக்கு
  2. செல்வம் யாரிடம் சூழ்ந்திருக்கும்?
    பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
    கார்ப்பார் தமையாதுங் காப்பிலார் -தூப்பால
    நிண்டாரா லெண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
    பண்டாரம் பற்றவாழ் வார்.
    (நூலின் 54 ஆவது பாடல்)
    பதவுரை:
    பார்ப்பார் - அந்தணர்,
    பசித்தார் - பசித்தவர்,
    தவசிகள் – தவஞ்செய்கின்றவர்,
    பாலர்கள் - குழந்தைகள்,
    கார்ப்பார் - பிறரால் வெறுக்கப்படுகின்றவர்கள்,
    தமை காப்பு யாதும் இல்லார் - தம்மைக் காத்துக்கொள்ளுதற்குரிய ஆதரவு சிறிதும் இல்லாதவர்கள்,
    தூப்பால நிண்டார் - அழுக்கற்ற நல்லொழுக்கத்தில் மிக்கவர்கள் என்பார்க்கு,
    எண்ணாது நீத்தவர் - பயன் கருதாமல் அவர் துன்பங்களை நீக்கியவர்கள்,
    மண் ஆண்டு பண்டாரம் பற்ற வாழ்வார் - உலகத்தை அரசாண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்பத்துடன் வாழ்வார்கள்.

    பொழிப்புரை:
    அந்தணர், பசித்தவர், தவம் செயகின்ற சான்றோர், பச்சிளங் குழந்தைகள், பிறரால் வெறுக்கப்படுகின்றவர்கள், தம்மைப் பாதுகாக்கும் ஆதரவு சிறுதும் இல்லாதவர்கள், சிறிதும் களங்கமற்ற நல்லொழுக்கத்தில் உள்ளவர்களின் துன்பங்களை சிறிதும் பயன் கருதாமல் நீக்கியவர்கள் உலகத்தை அரசாண்டுகொண்டிப்பர். செல்வம் எப்போதும் அவரைச் சூழ்ந்துகொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வெண்பா : 17
    செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
    எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
    “அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
    வெறும்பானை பொங்குமோ மேல்?
    விளக்கம்:
    வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல். குறள்

    பொருள்: பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

    பதிலளிநீக்கு