ஒப்பாரி


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும். (10 நல்வழி)

பொருளுரைபெரிய பூமியிலுள்ள மனிதர்களே; வருடம் முழுவதும் அழுதுபுரண்டாலும் இறந்தவர் திரும்பி வருவரோ, வரமாட்டார்; ஆதலினால், அழ வேண்டுவதில்லை; நமக்கும் அம்மரணமே வழியாகும்; 

அழுவது பயன் தருமா?  உலகத்து இயற்கை என்னவென்று அறியாமல் அழுவது பயன் தருமா? உலக இயற்கை சொல்கிறது குண்டலகேசிப் பாடல் ஒன்று:

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?

பொருள்: பச்சிளம் குழந்தையராக இருந்தோம். அந்தக் குழந்தைமை செத்துவிட்டது. குழந்தைமையைக் கொன்றுதான் பிள்ளையரானோம். அந்தப் பிள்ளைமை செத்துவிட்டது. பிள்ளைமையைக் கொன்றுதான் காளையரானோம். காளைத் தன்மை செத்துவிட்டது; காமவேகம் ஊட்டுகிற இளமையும் செத்துவிட்டது. இளமையைக் கொன்று மூத்தோம்; காமத்தைக் கொன்று கனிந்தோம். இதுதான் இயல்பு. பழையது சாகும். பழையதன் சாவில் புதியது பிறக்கும். புதியதும் சாகும்-குருத்தையும் குலையையும் ஈன்று வாழை தான் சாவதைப் போல. குருத்திலிருந்து வாழை, மீண்டும் வாழையிலிருந்து குருத்து என்று இது ஒரு சுழற்சி. சாவதற்காக அழுவதென்றால் அழுவது மட்டுமே வாழ்வாக இருக்கும்-ஏனென்றால், ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோம்.

உறக்கமும் சாவும் ஒன்று - வாசிக்க  

இஸ்லாம் 

"இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் ‎அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பரம்பரையை குறைகூறுதல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்‎" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.‎ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎ - (நூல்: முஸ்லிம் 100‎)

(மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா (ரலி) ஜஅஃபர் (ரலி) இப்னு ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, ‘அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து’ எனக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று மூன்றாம் முறையாக வந்து ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிகைத்துவிட்டனர்” என்றார். ”அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, ‘அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன். (புஹாரி: 1299 ஆயிஷா (ரலி))

ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்ததை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம் (ரலி) உம்முல் அலா (ரலி), முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூ சப்ராவின் மகள் இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ ஸப்ராவின் மகள் முஆத் (ரலி) உடைய மனைவி. இன்னும் ஒரு பெண், (புஹாரி: 1306 உம்மு அதிய்யா (ரலி))

நாங்கள் (மகளிர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்கமாட்டார்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரி வைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் ‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரி வைத்து) விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள். (புஹாரி: 4892 உம்மு அதிய்யா (ரலி))

 (துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)  (நூல் : புகாரி 1294)

 உமர் (ரலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கள்.  இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  (நூல் : புகாரி 1304) 

உமர் பின் அல்கத்தாப் (ரலி) (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி), “ஹஃப்ஸா! ‘சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். (அவ்வாறே உமர்மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) சப்தமிட்டு அழுதபோதும் “ஸுஹைப்! ‘சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி). (நூல் முஸ்லீம், அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1542)

கிறிஸ்தவம் & யூதமதம் 

இறந்தவருக்காக அழாதே, அவனுக்காக துக்கப்படாதே, போனவனுக்காக எப்பொழுதும் அழாதே; ஏனென்றால் அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார், அல்லது தனது சொந்த நிலத்தைப் பார்க்க மாட்டார். (எரேமியா 22:10)


1 கருத்து:

  1. 48:
    கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
    உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
    விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே.

    https://www.ytamizh.com/siddhar/sivavaakiyar/

    பதிலளிநீக்கு