கடவுளின் பாலினம்

 இறைவனை எவரும் கண்டதில்லை என்பதும் அவன் நிகரற்றவன் எனபதும் அவன் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பதற்கான போதுமான தகவல் ஆகும். இருந்த போதிலும் சிவன், அல்லாஹ், கர்த்தார் போன்ற இறைவனுக்கான வெவ்வேறு மாதத்தில் உள்ள பெயர்களை அவன் இவன் என்று அழைப்பதால், இறைவன் ஆண் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே நேரடியான மாறைநூல் ஆதாரமோ அல்லது அந்தந்த சமய வல்லுனர்களின் ஆய்வு கருத்தும் இங்கே பதிலாக கோர்க்கப்படுகிறது.

தமிழர் சமயம் 

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)

உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.

குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம். 
 
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு. - (ஞானக்குறள் 155.)

பெண்-ஆண்-அலி என்னும் பெயர் இல்லாததாகி, அறிவு உடலாய்(சிதாகாய) வியக்கும்படி நிற்கும் அவன் தான் சிவன்.

இஸ்லாம்

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இறைவனை எப்படி அழைக்கிறோம் என்பதை விட இறைவன் தன்னைப் பற்றி எப்படி அழைக்க சொல்கிறான் என்பதுதான் முக்கியம்!

112:1 "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
112:2 அல்லாஹ் தேவைகளற்றவன்.
112:3 (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
112:4 அவனுக்கு நிகராக யாருமில்லை.

 அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் போது 'ஹு' 'ஹுவ' என அவன் இவன் என்று குறிப்பிடுவதால் நாங்களும் அப்படியே அழைக்கிறோம் !

மேலும் ஆணா? பெண்ணா? என்றால் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கத் தேவையற்றவன் ! எந்த மனித பலவீனமும் இல்லாத எல்லையற்ற ஆற்றல் அவன்!

அல்லாஹ் என்னும் அரபுச் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ! அதற்கு பன்மையும் கிடையாது!

கிறிஸ்தவம்

கர்த்தருக்கு பாலினம் இல்லை என்று ஆரம்பகால கிறிஸ்த்தவர்கள் நம்பி வந்ததாக பல நூல்கள் வெளிவந்துள்ளன.

கத்தோலிக்க திருச்சபையின் கேடசிசம், புத்தகம் 239, கடவுள் "தந்தை" என்று அழைக்கப்படுகிறார், அதே நேரத்தில் மனிதனுக்கான அவரது அன்பு தாய்மையாகவும் சித்தரிக்கப்படலாம். இருப்பினும், கடவுள் இறுதியில் பாலினத்தின் மனிதக் கருத்தை மீறுகிறார், மேலும் "ஆணோ பெண்ணோ அல்ல: அது கடவுள். - Gender of God - Wikipedia

உண்மையில், யாத்திராகமம் 3 இல் மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் தனிப்பட்ட பெயர், யாவே, பெண் மற்றும் ஆண் இலக்கண முடிவுகளின் குறிப்பிடத்தக்க கலவையாகும். எபிரேய மொழியில் கடவுளின் பெயரின் முதல் பகுதி, "யா" என்பது பெண்பால், மற்றும் கடைசி பகுதி, "வே" ஆண்பால். யாத்திராகமம் 3 இன் வெளிச்சத்தில், பெண்ணிய இறையியலாளர் மேரி டேலி, “‘கடவுள்’ என்பது ஏன் பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்? ஏன் ஒரு வினைச்சொல் இல்லை - எல்லாவற்றிலும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் மாறும்." - What the early church thought about God's gender

முடிவுரை


தெய்வம் ஆணுமல்ல பெண்ணுமல்ல ஆனால் உயர்திணை பால் என்று அறிய முடிகிறது. தெய்வத்தை அவன் அவள் என்று கூறுவதற்கான காரணம், அது இது என்று அஃறிணையாக அழைக்க கூடாது என்ற அவாவாக இருக்கலாம்.

இறைவன் அருளால் தான், இது நடைபெற்றது என்பதான ஏதேனும் ஒரு சம்பவம் சொல்ல இயலுமா?

இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது..! செல்வ வளங்கள் மட்டுமல்ல, அவனது சோதனையும் அவனது அருள்தான் என்று கூறும் மறைநூல்களின் வரிகள் உங்களுக்காக


தமிழர் சமயம்


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே - திருமந்திரம் கடவுள் வாழ்த்து

பொருள்: இரண்டவன் இன்னருள் – இரண்டவன் இன்னருள் என்பதில் அவனது அருள் இருதிறப்படும் என்ற பொருள்பட அறக்கருணை, மறக்கருணையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கு நடக்கும் நல்லவை தீயவை இரண்டையும் இறைவனே அருளாக வழங்குகிறான்.

நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன் - (அதிகாரம்:ஊழ் குறள் எண்:379)

உரை: நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு? இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

இஸ்லாம்

ஒரு மனிதனை சோதிப்பதற்காக அவனது இறைவன் அருட்கொடைகளை அள்ளிகொடுத்து அவனை கண்ணியப்படுத்தும் போது, எனது இறைவன் என்னை கண்ணியப்படுத்தி விட்டான் என்று அவன் கூறுகிறான். அவனை சோதிப்பதற்காக பாக்கியங்களை சற்று குறைக்கும் போது எனது இறைவன் என்னை கேவலப்படுத்தி விட்டான் என்று அவன் உரைக்கிறான். அவன் அவ்வாறு கூறலாகாது. - (அல்குர்ஆன். 89.15.16)

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 57:22&23)

அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’. (புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: நோய்)  ஹதீஸ் 37

கிறிஸ்தவம்

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? - (பைபிள்: புலம்பல் 3:37-42)

ஒளியை உருவாக்கி இருளை உருவாக்குபவன், நல்வாழ்வை ஏற்படுத்துபவன், பேரழிவை உருவாக்குபவன்; இவை அனைத்தையும் செய்யும் இறைவன் நானே. - (ஏசாயா 45:7

முடிவுரை

மனிதனுக்கு நிகழும் ஒவ்வொன்றும் இறைவனின் அருள் ஆகும். நடக்கும் நன்மைக்கு நன்றி சொல்லும் பொழுதும் நடக்கும் தீமைக்கு இறைவனுக்காக பொறுமையாக இருக்கும் பொழுதும் அந்த அருளின் முழு சுவையை நாம் அடைய முடியும். 

இறைநம்பிக்கையற்றவர்கள் கெட்டவர்களா?

கடவுள் நம்பிக்கை அல்லாதவர்களை கெட்டவர்களாக பார்ப்பது யார் என்று நோக்கினால் அது நிச்சயம் ஒன்று கடவுளாக அல்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகதான் இருக்க முடியும். ஏன் என்றால் கடவுள் இல்லை என்று நம்புவது உண்மைக்கு புறம்பானது. 

ஒவ்வொரு சமயத்தின் மறைநூல்கள் இறை மறுப்பாளர்களை என்ன சொல்கிறதென்றும், அதை ஏன் சொல்கிறதென்றும் பார்ப்போம்.

தமிழர் சமயம்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள் 0002 - திறன்)  

 

பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவால் ஆகக்கூடிய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?

கருத்து: கடவுள் வணக்க வழிபாடு இல்லாதவர்க்கு கல்வியின் பயன் என்ன?)
 
“மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலும்
குண்டல முதல் கண்டோர் பொற்கொல்லனுண் டென்னல் போலும்
ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும்
அண்டமற் றகண்டம் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே” 

“தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரம் திகழ்பொற் பாவை
ஆட்டுவோ னின்றித் தாமே ஆடுமோ திவவி யாழின்
மீட்டுவோ னின்றிக் கீதம் விளையுமோ சரா சரங்கள்
நாட்டுவோ னொருவனின்றி கன்கமைந் தொழுகுங் கொல்லோ” - 

“மரமுதல் அசைதலால் காலுளதென மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீயுள தென்று தேர்வார்
பரனுளன் எனும் உண்மைக்குப் பாரெலாம் சான்று மன்னோ” - 

“வானின்றி மழையுமில்லை வயலின்றி-விளைவு மில்லை
ஆனின்றிக் கன்றுமில்லை அரியின்றி ஒளியுமில்லை
கோனின்றிக் காவலில்லை குமரர் தாயின்றி யில்லை
மேனின்ற கடவுளின்றி மேதினி யில்லை மாதோ” - (நீதிநூல் 1-4)

எனவே, தர்க்க (Logical) வாதத்தின்படி நுணுகி நோக்குங்கால், யாதோ ஒர் ஆற்றல் இன்றி யாரோ ஒருவர் இன்றி, உலகங்களும் உயிர்களும் தோன்றி யிருக்க முடியாது. யதோ ஒர் ஆற்றல் எனில், அந்த ஆற்றல்தான் கடவுள் ஆகும். எனவே, கடவுள் என ஒரு பொருள் உண்டு என்பது உறுதி-இவ்வாறாக, இன்னும் பலவாறாக, ஆத்திக வாதம் பேசப்பட்டுப் பீடு நடை போடுகிறது நன்னூல்.
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)
 
பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.

இஸ்லாம்

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (குர்ஆன் 2:28)

யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124)

கிறிஸ்தவம்

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. - (சங்கீதம் 53: 1)

முடிவுரை  


இது போல ஒவ்வொரு வேதமும் இறைவனை நம்பாதவர்களை சாடியே இருக்கிறது.

தர்க்க ரீதியாக யோசித்தால் இறைவன் இல்லை என்பவர்கள், இறைவனை ஏன் இல்லை என்கிறார்கள்? இது பற்றி ஏற்கனவே நாத்திகம் தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில காரணங்களை இங்கே  பட்டியலிடலாம்.
    • இறைவனை இவ்வுலகில் எங்கும் காண முடிவில்லை,
    • கடவுள் பெயரால் நடக்கும் சண்டை சச்சரவுகள், யுத்தங்கள், தீவிரவாத செயல்பாடுகள்
    • மறை நூல்களில் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில பகுதிகள்,
    • இறைவனை நம்புபவர்களின் மூட நம்பிக்கையும் அதன் பின் விளைவுகளும்,
    • மதங்களில் சொல்லப்பட்ட சில செய்திகள் அறிவியலுக்கு முரண் என்று கருதுவது,
    • புராணங்களில் உள்ள ஒழுக்க கேடான யதார்த்தத்திற்கு முரணான கட்டு கதைகள்,
    • பெருமை மற்றும் பொறாமை 
ஆனால் இந்த கரங்களுக்காக மறை நூல்களையும் இறைவனையும் மறுப்பது அறிவுடைமையா? அல்லது பொய்களை களைந்து உண்மையை கண்டறிவது அறிவுடைமையா? 

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதை ஏற்கும் நாம், ஒருவகை ஆற்றல் இனொன்றாக மாறும் பொழுது அது என்னவாக இருக்கும் என்கிற அறிவு நமக்கு முழுமையாக இல்லை என்று நாம் உணர வேண்டும். மனிதனின் அறிவுக்கு எட்டாத விடயத்தை சான்றுகளோடு மறைநூல்கள் சொல்லும் பொழுது அதை ஏற்க மறுப்பது ஏனோ? ஆற்றல் என்பது என்றென்றும் இருப்பதற்கான காரணம் அது என்றென்றும் இருக்ககூடிய இறைவனிடமிருந்து வெளிப்பட்டது.

மக்களுக்கு பாவ புண்ணியத்தை விளக்கி கூற, எல்லோர் மீதும் கருணையும் இரக்கமும் அன்பும் கொண்ட இறைவனின் மறைநூல்கள் இருக்கும் பொழுதே அதில் முரண்படும் சுயநலம் கொண்ட மனிதர்கள், தாமாக தனது அறிவை கொண்டு, தனது அனுபவத்தை கொண்டு, நம்மை தீமையை வரையறுத்து அதில் ஒருவொருக்கொருவர் முரண்படாமல் அதை பின்பற்றி சமநிலை சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்று கற்பனை செய்வது எத்தனை பெரிய அறிவீனம்?

இவ்வாறு மனிதர்களால் உருவான கொள்கைகளில் ஒன்றான பொதுவுடைமை தத்துவம் ஆட்சி செய்த ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தனி மனித மதிப்பையும் மற்றும் சமூக மதிப்புகளையும் அகற்றி மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவில்லையா? இவ்வாறு ஏற்படும் கொள்கைகளில் சீர் திருத்தம் செய்து அதை ஏற்று நடந்து அதில் உள்ள நிறை குறைகளை அறிந்து, மீண்டும் அதை சீர்திருத்தம் செய்ய தயாராகும் மக்கள், அதே விடயத்தை இறைவனால் வழங்கப்பட்ட சமய நடைமுறைகளில் செய்ய தயங்குவது ஏன்? 

இறைவனால் வழங்கப்பட்ட சமயங்களில் உள்ள கலாச்சாரத்திலும் பண்பாடுகளிலும் மொழியிலும் பல வேறுபாடுகள் உள்ளது ஆனால் அவற்றில் உள்ள வேறுபாடுகளை களைந்து மக்கள் அனைவரையும் நேர்க்கோட்டில் இணைக்கும் வழிமுறை இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேறுபாடுகளையும் அதை களைவதற்கான வழிமுறையையும் பின்னொரு கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

வேகமாக ஓடும் இயந்திர வாழ்க்கையில் சற்று நின்று நிதானமாய் யோசித்து நாம் எதற்க்காக ஓடுகிறோமோ அந்த கரணம் சரியா? இப்படி நிதானமில்லாமால் நில்லாமல் ஓடுவதால் அந்த இலக்கை நாம் அடைகிறோமா? அந்த இலக்கு பெறுமதியானதா? போன்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண்பது அவசியம். 

நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட தத்துவங்களும் சட்டங்களும் மகிழ்ச்சியாகவும் ஒழுக்கமாகவும் சுதந்திரமாகவும் வாழ வகைசெய்கிறதா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் பொழுது இறைவனின் வழிகாட்டுதலின் அவசியம் புரியும்.

இறந்தவர்களை வணங்குவது பிழை. ஏன்?

மனிதன் குறிக்கப்பட்ட நேரத்த்தில் மரணத்தை தழுவுவான், அவன் மீண்டும் பிறப்பதில்லை, அவன் இறந்தபின்பு அவனால் கேட்கவோ பார்க்கவோ முடியாது எனபதே அனைத்து மத தத்துவமாகும். 

தமிழர் சமயம்


இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - நாலடியார்

பொருள்: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். (நல்வழி 10)

பொருள்: இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாநிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள்.

கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே. (சிவவாக்கியம் 48)

இஸ்லாம்

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. - (குர்ஆன் 39:42)

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. - (திருக்குர்ஆன் 23:99, 100)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். - (குர்ஆன் 16:21)

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. - (திருக்குர்ஆன் 27:80)

கிறிஸ்தவம்

கீழ்ப்படியாமல் போன ஆதாமிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட பிறகு கர்த்தார் சொன்னார்:

‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கே திரும்புவாய். . . . நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’ - (ஆதியாகமம் 3:19)

எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு. பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, மரிப்பதற்கு ஒரு காலமுண்டு.. - (பிரசங்கி 3:1-2)

அதுபோலவே, மனுஷன் கண் மூடிவிட்டால் எழுந்திருப்பதில்லை. வானம் ஒழிந்துபோகும்வரை அவன் கண்திறக்கப் போவதில்லை. அவனை யாரும் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப் போவதில்லை. கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்துவைத்து, உங்கள் கோபம் தீரும்வரை அங்கேயே மறைத்துவைத்து, நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?... - (யோபு 14:12-14)

உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை. (பிரசங்கி 9:5)

முடிவுரை:

மனிதன் நேரம் நெருங்கினால் அவன் நிச்சயமாக இறந்து போவான், அவனது உடல் மண்ணிலும், அவனது உயிர் இறைவனிடத்திலும் தங்கி இருக்கும், அவன் மீண்டும் பிறக்க வாய்ப்பில்லை என்பதே அனைத்து மதங்களின் சாரம். இறந்தவருக்கு எந்த வித சக்தியும், கேட்கும் திறனும் கிடையாது எனவே அவர்களை வணங்குவது என்பது அறிவீனத்தின் உச்சம் ஆகும்.

மூதாதையருக்கு நன்றி செலுத்த வணங்குவதாக சொன்னால், ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் ஆணுக்கு அந்த பெண் கற்பை கொடுக்க முடியுமா? முடியாது. அவள் அவளது எல்லையில் நின்று அவள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனை தீர்க்கலாம். அதுபோல மூதாதையருக்கு நன்றி சொல்ல விரும்புவோர், அவர்களுக்காக பிராத்தனை செய்யலாமே தவிர அவர்களை வணங்க கூடாது. வணங்கப்பட தகுதியானவன் அனைத்து வேதங்களையும் தந்த, அனைத்தையும் படைத்த, ஏக இறைவன் மட்டுமே. 

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

நேர்கோடு போன்று உருவாக்கப்பட்ட விதிப்படி நடப்பதில்லை, அப்படி இருந்தால் மனிதர்கள் நற்கருமங்கள் செய்ய வேண்டியதில்லை. மனித வாழ்வில் நிகழும் காரியங்கள் இந்த மூன்றின் சரியான கலவை.

  1. வினைப்பயன் எனப்படும் கர்மா
  2. ஊழ் எனப்படும் விதி
  3. பிராத்தனை மூலம் கிடைக்கும் இறைவனின் அருள்
விதியை விதித்தவனும் தீவினைகளை மன்னிக்க கூடியவனும் இறைவன் ஒருவனே. எனவே விதியை மாற்றவும் பாவங்களை மன்னிக்கவும், ஈருலகிலும் நம்மை வேண்டியும் அவனது வணங்கி வழிபடுவோர்க்கு அவன் அருள் செய்கிறான். இவ்வாறு செய்பவர்கள் ஒருநாளும் அநீதி செய்யப்படுவதில்லை.