தெய்வத்தை அஞ்சுதல்

தமிழர் சமயம் 

மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 
(தேவாரம்திருமுறை 1, 076 பொது, பாடல் 1)

பொருள்:  அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.

நெஞ்சு நினைத்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. (திருமந்திரம் 2707
 
பொருள் :  தினமும் தூங்குவதற்கு முன் உள்ளத்தில் நினைத்து, வாயால் தெய்வமே என்று கூறி உன் துணையுடன் உன் திருவடியில் சரண் அடைகிறேன் என்று  எண்ணி இருப்பின், வெண்மேகம் தவழும் வடக்கு எல்லையை உறைவிடமாக கொண்ட இறைவனை அஞ்சினால் அவனது அருள் பெறலாமே.

 சொ.பொருள்: பிரான் - இறைவன், கடவுள், தெய்வம்; துஞ்சும் பொழுது - உறங்கும் பொழுது; மஞ்சு - வெண்மேகம்; வடவரை - வட + வரை = வடவரை; வட - வடக்கு; வரை - எல்லை; மீதுறை = மீது + உறை; உறை - இருப்பிடம்; அஞ்சி - பயந்து;

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌
காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌
பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌
கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - திருமந்திரம் 810

விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி

 

கிறிஸ்தவம் 

கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்: மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7)  
 
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்: அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவரும் நல் அறிவை உடையவர்கள்: அவருடைய துதி என்றென்றும் நிலைத்திருக்கும். - (சங்கீதம் 111:10)

“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். (மத்தேயு 10:28)

இஸ்லாம் 

இப்னு மஸ்வூத் ரலி கூறினார்கள் ; "அறிவு என்பது அதிகமான செய்திகளை (ஹதீஸ் அறிவிப்புகள்) அறிந்து வைப்பதல்ல, உண்மையில் அறிவு என்பது அல்லாஹ்வை அஞ்சுதல் தான்" (இப்னு ஹிப்பான் - ரௌலத்தல் உகாலா 9)

அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன். (குர்ஆன்  74:56)

நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (குர்ஆன் 5:44)

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (குர்ஆன் 9:13)

வேதம் (இறைவனின் வசனங்கள்) கண்ணீரை வரவழைக்கும்.

தமிழர் சமயம் 

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. (தேவாரம் 3320)

 பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் ஊக்குவிக்கும் நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குவது, அனைவருக்கும் தலைவனான சிவனின் திருநாமம் ‘நமச்சிவாய’ ஆகும்.

கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் - சொல்லுதல். நாதன் - தலைவன், அரசன், ஆசிரியன், கடவுள், இறைவன், சிவன், அருகன்
 
இஸ்லாம் & யூதம் 

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (குர்ஆன்  5:83)

 அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள். (அல்குர்ஆன் 19:58)

கிறிஸ்தவம் 
 
..பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக [a] உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர். (நெகேமியா 8:9)

இயேசு இறைமகனா? மனிதகுமாரனா?

கர்த்தர் இயேசுவின் தந்தை என்றால் - அதை ஒன்று கர்த்தர் சொல்லி இருக்க வேண்டும் அல்லது இயேசு சொல்லி இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கூறி உள்ளனரா என்று பார்ப்போம்.

சொற்பொருள்:  தந்தை = பிதா = அப்பன் = தகப்பன்
                                     மகன் = குமாரன் = சுதன்

இயேசு கர்த்தரை பிதா என்று கூறி உள்ளார்!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)

...மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. (மத்தேயு 23:8-10)

மேற்கண்ட வசனத்தின் படி தந்தை என்பவர் பூமியில் இல்லை பரலோகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது இயேசுவுக்கு மட்டுமல்ல மாறாக அனைவருக்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இயேசுவுக்கு மட்டும் என்று கூறி இருந்தால் தந்தை இல்லாமல் பிறந்த இயேசு இறைமகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது உலகில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான செய்தியாக சொல்லப்படுகிறது. இயேசுவை தவிர அனைவருக்கும் இவ்வுலகில் தந்தை உண்டு என்பது நிதர்சனம்.  

கர்த்தரும் இயேசுவை தனது குமாரன் என கூறி உள்ளார்!

வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது. (மத்தேயு 3:17)

கர்த்தர் இயேசுவை மட்டும்தான் குமாரன் என்று கூறினாரா?  

[ஏனென்றால், இஸ்ரவேல் என் குமாரன், என் தலைமகன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.  - [யாத்திராகமம் 4:22, தோரா]

[மேலும்,] 'நான் இஸ்ரவேலுக்குத் தகப்பன், எப்பிராயீம் என் தலைமகன்.' -  [எரேமியா 31:9, தோரா]

[மேலும்,] நான் [சாலமோனை] என் மகனாகத் தேர்ந்தெடுத்தேன், நான் அவனுடைய தகப்பனாக இருப்பேன். - [1 நாளாகமம் 28:6, தோரா]

[மேலும்,] 'நான் [தாவீதை] முதற்பிள்ளையாக்குவேன்,'" - [சங்கீதம் 89:27, தோரா]

[மேலும் அவர்கள், "தேவதூதன்] பதிலளித்து, [எஸ்ராவிடம்], 'இது கடவுளின் மகன், அவர்கள் உலகில் ஒப்புக்கொண்டார்' என்று கூறினார் -  [2 எஸ்ரா 2:47, தோரா]

எனவே தீர்க்கதரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் கர்த்தரிடம் இருக்கிறது அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக இருக்க வேண்டும். 

கர்த்தர் இயேசுவை மனித குமாரன் என்றும் அழைக்கிறார் 

31 “When the Son of Man comes in his glory and all the angels with him, then he will sit on his glorious throne. 32 All the nations will be assembled before him, and he will separate people one from another like a shepherd separates the sheep from the goats. 33 He will put the sheep on his right and the goats on his left
 
31 ,“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.  (மத்தேயு 25:31-33)

தந்தை இல்லாத ஒருவரை மனித குமாரன் என்று கர்த்தர் ஏன் அழைக்கிறார்? ஏனென்றால் அவர் கடவுளின் குமாரன் அல்ல என்பதால்.

நாம் அறிந்தபடிக்கு பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் புதிய ஏற்பாடு அராமிக் மொழியிலும் வழங்கப்பட்டது. பிறகு பாலின் கிரேக்க லத்தீன் கடிதங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட பொழுது இயேசுவின் வேதம் கிரேக்கத்துக்கு, லத்தீனுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதில் கருத்துப் பிழை ஏற்படுவது இயற்கையே. மேலும் மொழிபெயர்ப்புக்கு முன் உள்ள பதிப்பில் அரசியல் மற்றும் வேறு சில காரணங்களால் புகுத்தப்பட்ட செய்திகளை அடையாளம் காண்பது கடினமாகி விடுகிறது. எனவே எந்த வேதமும் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டு அம்மொழி வழக்கொலியாமல் இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம். இல்லை என்றால் அந்த பழைய வேதம் அடையாளம் காட்டும் புதிய வேதத்தை பின்பற்றுவதில் என்ன பிழை உள்ளது? எளிமையாக நம்  கருத்து என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. அப்படி முரண்பட்டால் அது விதிவிலக்கு என்று குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும். அல்லது அது இயேசுவுக்கு பிறகு மக்களால் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும். இந்த இடைச்சொருகள் காரணமாக பைபிளின் ஒரே வசனம் பாதிப்புக்கு பாதிப்பு வேறுபாடுவதையும் காணலாம். உதாரணங்கள் கீழே.

எனவே இயேசு தந்தை என்று குறிப்பிடுவது படைத்த இறைவனை தானே தவிர தனது பயோலொஜிக்கல் தந்தையை அல்ல. அதேபோல கர்த்தர் இயேசுவை மகன் என்று குறிப்பிடுவது அனைத்து தீர்க்க தரிசிகளையும் குறிப்பிடுவது போலத்தானே தவிர பெற்றெடுத்த மகன் எனும் கருத்தில் அல்ல. 

உண்மையை சொல்ல போனால், கடவுளை அப்பன் என்று கூறும் வழக்கம் தமிழிலும் உண்டு.

"ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே". (திருமந்திரம் - 178)

ஆனால் கடவுளுக்கு பாலினம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

முடிவாக, கர்த்தர் ஏசுவுக்கு மட்டும் தந்தை அல்ல, மாறாக அனைவருக்கும் தந்தை ஆவார் ஆனால் பெற்றெடுத்த தந்தை அல்ல. இக்கருத்தை நிறுவ புதிய ஏற்ப்பாட்டில் இயேசுவின் நேரடி சீடர்கள் குறிப்பிட்ட செய்திகளே ஆதாரமாக எடுத்து கொள்ளப்ட்டு உள்து. பவுலின் கருத்துக்கள் எதற்கும் ஆதாரமாக எடுக்காத பட்சத்தில் இயேசுவின் உண்மை போதனைகள் வெளிப்டும் என்கிற காரணத்தினால். 


முத்தமிழ்

தொல்காப்பியர் தாமியற்றிய தொல்காப்பியத்துள் பொருளதிகாரச் செய்யுளியலிலும் மரபியலிலும் முறையே தமிழ்மொழியை 
  • வாய்மொழி (நூற்பா.71), 
  • தொல்மொழி (நூ.230), 
  • உயர்மொழி (நூ.163), 
  • தோன்றுமொழி (நூ.165), 
  • புலன்மொழி (நூ.233), 
  • நுணங்குமொழி (நூ.100) 
என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் "முத்தமிழ்" என்கிற பதத்தை எங்குமே பயன்படுத்தியது இல்லை. முத்தமிழ் என்றால் இயல், இசை மற்றும் நாடகம் என்று கூறப்படுகிறது. இந்த விளக்கங்களும் வர்ணனைகளும் பிற்கால அறிஞர்களால், குறிப்பாக சொன்னால் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. பொதுவாக நூல்களை வகைப்படுத்த இப்பிரிவுகள் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் தொல்காப்பியர் முதல் மற்றும் வழி என்று நூல்களை வகைப் படுத்துகிறாரரே ஒழிய இவ்வாறு அல்ல.

எனவே இது எங்கிருந்து தோன்றி இருக்க கூடும் என்று நூல்களை ஆய்வு செய்யும் பொழுது பின்வரும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகிறது.

மூலம் 1: 

 முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் - தேவாரம்

குறிப்பு: தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன.. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன

மூலம் 2: 

 மூவர் தமிழும் (தேவாரம்) - நல்வழி பாடல் 40 

மூலம் 3: 

சங்கத் தமிழ் மூன்றுந் தா - ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்

குறிப்பு: இவர் நாம் அறிந்த சங்ககால புலவர் அல்ல, 14ம் நூற்றாண்டை சார்ந்த பிற்கல சமய புலவர்.  

மூலம் 4: 

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (பரிபாடல் : திர : 4)

எனவே சங்ககாலத்தில் இப்பதம் பயன்படுத்தப் பட்ட  இடம் எதுவும், இயல் இசை நாடகத்தை குறிக்கவில்லை. பிற்கலத்தில் சங்ககால புலவர்களின் பெயரில் தோன்றிய புலவர்களின் பாடல்களிலேயே இது காணப்படுகிறது. எனவே இது உள்நோக்கம் உடையதாக இருக்கலாம். சமீப காலத்தில் அடிப்படை ஆதாரம் இல்லா இவ்விளக்கம் பரவலாக நம்பப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. முத்தமிழ் என்பது ஒருவேளை தேவாரத்தை குறிப்பிடலாம் அல்லது முதுமையான தமிழ் [தொல்மொழி (நூ.230)] என்பதை முத்தமிழ் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.

மேலும் முத்தமிழ் என்பது நான்மறையோடு சமமாக பயன்படுத்தப் படுவதால் நான்மறையின் வரையறைக்கும் அது கூறும் அறத்துக்கும் முரண் பட்ட விளக்கத்தை யாரும் தர முடியாது. அவ்வகையில் நான்மறைகள் இசையையும் கூத்தையும் பிழை என்கிறது. எனவே முத்தமிழ் என்பது நிச்சயமாக இயல் இசை நாடகத்தை குறிப்பிடவில்லை. தமிழர் என்று பெருமை கொள்வதாக இருந்தால் அதன் அறத்தை பின்பற்றுவதில் தான் அதன் உண்மை தன்மை இருக்கிறது. அறமற்றதாக கூறப்படும் இசையும் கூத்தும் தமிழர் பண்பாட்டில் நுழைத்ததும் அதை வளர்த்தெடுத்ததும் யார்? எப்படி? ஏன்? எனபனவெல்லாம் ஆய்வாளர்களின் சிந்தனைக்கு விடப்படுகிறது. 

குறிப்பு: மேலும் ஆதாரங்கள் கிடைத்தால் கீழே பதிவு செய்யுங்கள் நன்றி. 

ஊருக்கு உபதேசம்

தமிழர் சமயம் 


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை குறள் 834]

பொருள்: ஒருவர் நூல்கள் பலவற்aறை கற்றுத் தேர்ந்து இருப்பார்கள், கற்றவற்றை தர்க்கத்தினாலோ அல்லது அனுபவத்தினாலோ உள்ளமும் உணர்ந்து இருப்பார்கள், தான் கற்றவற்றை பிறர்க்கு உரைத்தும் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்விலே அதனை பின் பற்றாமல் அதன் அப்படி நடக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களை விட அறிவில்லாதவர்கள் பேதைகள் யாரும் இல்லை. ஏனெனில் அறிவை பெறாதவர்கள் அறிவிலிகள் (பேதைகள்) ஆனால் அறிவை பெற்றும் அதன் படி ஒழுகாதவர்களை போன்ற பேதையை விட பேதை யாரும் இல்லை. 

இஸ்லாம்

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் பகரா 44)

கிறிஸ்தவம் 

இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். “வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. (மத்தேயு 23:1-3)

அதிக தூக்கம்

தமிழர் சமயம்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (அதிகாரம்:மடிஇன்மை குறள் எண்:605)

பொழிப்பு (மு வரதராசன்): காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். 
 

வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றுள்

வீழ்நாள் இடர்மூப்பு மெய்கொள்ளும் - வாழ்நாளுள்

பல்நோய் கவற்றப் பரிந்து குறைஎன்னை

அன்னோ அளித்துஇவ் வுலகு. - (அறநெறிசாரம் பாடல் - 127)

விளக்கவுரை ஆயுள் காலத்தில் பாதியைத் தூக்கத்தில் கழித்து, மறு பாதியில் தளரும் காலத்தில் துன்பத்துக்குக் காரணமான முதுமையை உடம்பு அடையும். உறக்கமும் முதுமையும் போக எஞ்சிய வாழ்நாளில், பல துன்பங்கள் வருத்த, வணங்கிவழிபடாது வாழ்நாள் வீணாயிற்றே என்று வருத்தப்படுவதனால் என்ன பயன்?  

கிறிஸ்தவம் : சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து

சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? 1அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான்வன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக் கொண்டு போனது போல இருக்கும். (நீதிமொழிகள் 6 : 6-11)

இஸ்லாம் 

அல்-ஃபுதைல் இப்னு இயாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 
இதயத்தை கடினமாக்கும் இரண்டு குணங்கள் உள்ளன: அதிகமாக தூங்குவது மற்றும் அதிகமாக சாப்பிடுவது. 
 
இப்னுல்-கயீம் (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) கூறினார்:  
மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது, அதிக ஆசை, அதிகமாக அல்லாஹ்வைத் தவிர வேறு எதனுடனும் இணைந்திருத்தல், அதிகமாகி சாப்பிடுதல், அதிகமாக தூங்குதல். இந்த ஐந்தும் இதயத்தைக் கெடுக்க கூடியவைகள். (மதாரிஜ் அல்-சாலிக்கீன்)

சோம்பித் திரியாதே

தமிழர் சமயம் 

சோம்பித் திரியேல் - (ஆத்திச்சூடி 53)

(பதவுரை) சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு, திரியேல் - வீணாகத் திரியாதே.

(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

கிறிஸ்தவம் : சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து

சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? 1அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். வன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக் கொண்டு போனது போல இருக்கும். (நீதிமொழிகள் 6 : 6-11)

இஸ்லாம் 

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பல்  உடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (குர்ஆன் 4:142)

‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம்:புகாரி)