புறநானூறு இஸ்லாமிய போதனைகள் ஒப்பீடு


1) யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

பொருள் : எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்

இஸ்லாம்: உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், (குர்ஆன் 4:1)

2&3) தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

பொருள் : தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

இஸ்லாம்: எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டுகொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டுகொள்வான் (அல்குர்ஆன் 99:6-8).
“எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்” (அல்-குர்ஆன் 17:15)

4) சாதலும் புதுவது அன்றே!

பொருள் : செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இஸ்லாம்: “நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.” (அன்பியா: 35)

5) வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!

பொருள் : வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இஸ்லாம் : “உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்;  (அல்-குர்ஆன் 10:70)

6) முனிவின் இன்னாது என்றலும் இலமே!

பொருள் : வெறுத்து துறப்பதும் தவறு;

இஸ்லாம் : ''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.'' - (அல்குர்ஆன் 57:27)                                                                                                   

7) மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது,

பொருள் : வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

இஸ்லாம்: “இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது;  (அல்-குர்ஆன் 10:24)

8) கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

பொருள் : கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

இஸ்லாம் : திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக இறைவன் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; - (குர்ஆன் 2:74)

9 & 10) நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

பொருள் : அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (விதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

இஸ்லாம் : பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள் - விதி எழுதப்பட்ட) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது இறைவனுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); - (குர்ஆன் 57 : 22-23)

11) காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,

பொருள் : அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

இஸ்லாம்:  எவர்கள் (உண்மையை அறிந்து) நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. - - (குர்ஆன் 95:6.)                               

12 & 13) மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

பொருள் : பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]. சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

இஸ்லாம் : சஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்’ என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’ எனக் கூறினார்கள். - (நூல்: புகாரி 5091)

-கணியன் பூங்குன்றன்
 (பாடல்192, புறநானூறு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக