பெருமை

தமிழர் மதம்


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

பொருள்: யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும். தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது. 
 
அறிவுடைமை மீக்கூற்றம் ஆனகுலனே
உறுவலி நற்றவம் ஓங்கியசெல்வம்
பொறிவனப்பின் எம்போல் வார் இல்என்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்பு இல. - (அறநெறிச்சாரம் எட்டுவகையான செருக்கு பாடல் - 65)

விளக்கவுரை அறிவு உடைமையாலும், புகழாலும், உயர்ந்த பிறவியாலும், மிக்க வலிமையாலும், நல்ல தவத்தினாலும், உயர்வான செல்வத்தாலும், நல் ஊழாலும், உடல் அழகாலும் எம்மைப் போன்றவர் இல்லை எனச் சொல்லி மகிழ்ச்சி அடையும் எட்டு வகையான செருக்கும் இறுதியில் இன்பம் செய்யா. 

பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.  (முதுமொழிக் காஞ்சி 7:8)
 
பதவுரை: நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல் - 

பொருள்பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.

பலகற்றோம் யாம்என்று தற்புகழ வேண்டர்
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்;
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல். - (அறநெறிச்சாரம் தற்புகழ்ச்சி கூடாது பாடல் - 79)

விளக்கவுரை பரந்த கதிர்களையுடைய கதிரவனைக் கையில் உள்ள சிறிய குடையும் மறைக்கும். (ஆகவே) யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. (ஏனென்றால்) பல நூல்களையும் ஆராய்ந்து கற்றவர் கட்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களையே கற்றவரிடத்தும் இருக்கும்.

 

இஸ்லாம் 


இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம் : முஸ்லிம்) 
 

கிறிஸ்தவம் 


அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (1 பேதுரு 5:5)

இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் [யெகோவா, தி.மொ.] அறுத்துப்போடுவார்.”—(சங்கீதம் 12:2-4)

கர்வமுள்ள பார்வையும், பெருமையான எண்ணங்களும் பாவமானவை. ஒருவன் தீயவன் என்பதை அவை காட்டுகின்றன. - (நீதிமொழிகள் 214)

உன்னைப்பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும்.  - (நீதிமொழிகள் 30:32)

ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும். (நீதிமொழிகள் 22.10)

11 கருத்துகள்:

  1. ''யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி), நூல்: முஸ்­லிம் 147

    பெருமை என்றால் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம்மை அலங்கரித்துக் கொள்ளாமலும் விரும்பிய அழகிய ஆடைகளை அணியாமலும் இருக்கக் கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ''தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?'' என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­), நூல்: முஸ்லி­ம் 147

    பெருமையோடு ஆடையைத் தரையில் படுமாறு அணிந்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் கண்டு கொள்ள மாட்டான். அவர்களுக்குத் தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, ''(அவர்களில் ஒருவர்)தமது ஆடையை தரையில் படுமாறு அணிபவர்....'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­லிம் 171

    அரசியல்வாதிகளிடம் இந்த நடைமுறையை நாம் காணலாம். அழகிய வெள்ளை வேட்டியை அணிந்து வரும் இந்த அரசியல்வாதியின் வேட்டி ஊரை பெருக்கிக் கொண்டு வரும். இவ்வாறு இவர்கள் அணிவது பெருமையைக் கவனத்தில் கொண்டு தான். எனவே இதைப் போன்று அணியும் பழக்கத்தை யாரும் மேற்கொள்ளக் கூடாது.

    ''(முன் காலத்தில்) ஒருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­), நூல்: புகாரீ 3485

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)

    பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

    பதிலளிநீக்கு
  3. ..பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)

    பதிலளிநீக்கு
  4. ஜேம்ஸ் 4:6
    ஆனால் அவர் அதிக அருள் தருகிறார். எனவே, "தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்" என்று அது கூறுகிறது.

    பதிலளிநீக்கு
  5. “அல்லது, அத்தீயோர் தேவனிடம் உதவிவேண்டினால் தேவன் அவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார்.
    ஏனெனில் அவர்கள் மிகவும் பெருமை (அகந்தை) உடையவர்கள்.
    அவர்கள் மிகவும் முக்கியமானவர்களென்று இன்னமும் நினைக்கிறார்கள். யோபு 35

    பதிலளிநீக்கு
  6. யாக்கோபு 4:6 ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.”

    பதிலளிநீக்கு
  7. நீதிமொழிகள் 334 ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. நீதிமொழிகள் 112 வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. தொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த
    நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து
    வேந்துவப்ப வட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
    தாந்தம்மைக் கூறாப் பொருள். . . . .[திரிகடுகம் 08]

    விளக்கம்: பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.

    பதிலளிநீக்கு
  10. தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக்
    கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய
    பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும்
    செல்வம் உடைக்கும் படை. . . . .[திரிகடுகம் 38]

    விளக்கம்:
    தன்னைத் தானே வியந்து போற்றுதலும், அடக்கமில்லாமல் சினம் கொள்ளுதலும், பலவகைப் பொருட்களை விரும்புகின்ற சிறுமையும், இம்மூன்றும் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.

    பதிலளிநீக்கு
  11. 40:75. “இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).

    பதிலளிநீக்கு