நேர்வழி

தமிழர் சமயம் 

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுல காள்வர்
புயங்களு மெண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. திருமந்திரம் 1836.

(ப. இ.) ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; வான் உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால்; திருமுடி. வெளியில் திகழும் புறவண்டங்களுக்கும் அப்பாலாம்.

இஸ்லாம் 

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் நம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான்; இன்பமயமான சுவர்க்கபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். (குர்ஆன் 10:9)

(பின்பு) நாம் சொன்னோம்: "நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." - (குர்ஆன் 2:38)

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே, எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான். (குர்ஆன்  3:4)

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்: அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்: உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (குர்ஆன் 3:103)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (குர்ஆன் 2:159)

 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் : 1:6)

மேலும், (உலகில் அவர்களுக்கு மத்தியில்) அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தையும் நாம் நீக்கிவிடுவோம்; அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்: இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "இ(ந்தப் பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்; எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே நிச்சயமாகக் கொண்டுவந்தார்கள்:" (அப்பொழுது) "இந்தச் சொர்க்கம் - (உலகில்) நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். (குர்ஆன் 7:43)

யூதம் 

என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். (1 சாமுவேல் 12:23)

கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார். -  (சங்கீதம் 25:12)

கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார். - (சங்கீதம் 32:8)

கிறிஸ்தவம் 

ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் என்று இயேசு கூறினார். -  (யோவான் 3:21)

அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார். -  (2 தீமோத்தேயு 1:10)


விதியின் தன்மை

தமிழர் சமயம்  

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி–தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். - (மூதுரை பாடல் 19)

பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது விதியை பொறுத்தது

இப்பாடலின் பொருள், பாத்திரத்தின் கொள்ளளவுதான் அது கொள்ளும் நீரின் அளவை தீர்மானிக்கும். அது போல ஒரு மனிதனால் எவ்வளவு தாங்க முடியுமோ (நன்மையோ, தீமையோ) அவ்வளவு தான் அவனுக்கு விதிக்கப்படும் என்பதாகும்.

இப்போது விதியின் தன்மையை பற்றி மற்ற சமயங்களின் விளக்கத்தை பார்ப்போமா?

கிறிஸ்தவம் 
 
உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். - (1 கொரிந்தியர் 10.13)

இஸ்லாம்  
 
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்  - (குர்ஆன் 23.62)

இறைவனை தவிர மற்றவைகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள். 
 
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல 
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (கடுவெளிச் சித்தர் 27) 

இஸ்லாம் 

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (குர்ஆன் 2:21)

(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

கிறிஸ்தவம் / யூதம் 

வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10) 

 முடிவுரை

கடவுள் ஒன்று என்று பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் வாங்குதல் என்று வரும் பொழுது அதில் சிலைகளையும், நல்ல மனிதர்களையும், மற்ற சில உயிரினங்களையும், இயற்கையும் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் நான்மறைகள் அதை வன்மையாக கண்டிக்கிறது.


மறுமை பிறப்பு

தமிழர் சமயம் 

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே. (திருமந்திரம் 2852)

பொருள்சீவனுக்கு கிடைத்த உடல் கெட்டுவிட்டால் மற்றொரு நல்ல உடலை வழங்குவதற்கு இறைவன் இருக்கின்றான். அதிக மழை அதிக வறட்சி நிலவும் நாட்டை விட்டு விட்டு வேறு நாடு சென்று பிழைப்பர் மனிதர்கள். குடியேறிய வீடு பழுது பட்டால் வேறு வீட்டுக்கு குடியேறுவது போல சீவன் ஓர் உடலை விட்டுவிட்டு வேறு ஓர் உடலை எடுத்துக் கொள்ளும். சிவஞானம் பெற்றவர்கள் இதனை நன்கு அறிந்து கொள்வார்கள்.

இஸ்லாம் 

மனிதன் - (மடிந்தபின் உக்கிப்போன) அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகிறானா? அன்று! அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (குர்ஆன் 753-4)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும், கத்னா செய்யப்படாதவராகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “ நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்.” (குர்ஆன் 21:104)

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கிறார்கள்: அப்படியல்ல! அவனது (உயிர்கொடுத்து எழுப்புவதான) வாக்கு மிக உறுதியானதாகும்; எனினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (குர்ஆன் 16:38)

கிறிஸ்தவம் 

3 அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.

4 அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.

5 இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6 ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. 7 நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ 8 காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார். (யோவான் 3)

இரத்தம் உண்ணப்பட கூடாது

தமிழர் சமயம் 

5. கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர் - (அகம் 309:1-6)

பொருள்: கொழுப்பு ஆ எறிந்து - கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் - உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட - அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய, வான் கண் அகல் அறை - உயரிய இடம் அகன்ற பாறையில், களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து - களிறு தன் புறத்தினை உரசிக்கொண்ட

குறிப்பு: தமிழர் உணவு பழக்கத்தில் இறைச்சியை பற்றித்தான் அதிகமாக குறிப்பிடடப்பட்டுள்ளதே தவிர ஒரு இடத்தில் கூட இரத்தம் உணவாக உட்கொள்ளப்படலாம் என்று குறிப்பிடவில்லை. மேலும் இரத்தைதை பற்றிய இந்த ஒரு பாடலும் இரத்தம் தூவப் படவேண்டும் என்றுதான் கூறுகிறது. எனவே இரத்தம் உண்ணும் வழக்கம் தமிழர் பயன்பாட்டிலும் இருந்திருக்கவில்லை.

யூதம் 

இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான். (லேவியராகமம் 17:14)

கிறிஸ்தவம் 

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள். (அப்போஸ்தலர் 15:29)

இஸ்லாம் 

(நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் தடுத்து இருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும், எதன்மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதோ அதுவுமேயாகும்; ஆனால், எவரேனும் வரம்பைமீறவேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம்செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (16:115