தர்மம்



தமிழர் நெறி 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். - குறள் 19

விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் - நல்வழி வெண்பா : 18

விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே. - திருமந்திரம் முதல் தந்திரம் பாடல் எண் : 4

விளக்கம் : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

இஸ்லாம் 

தொழுகையை (தவம்) நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் (தானம்) கொடுங்கள்;  (2.43)

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். [திருக்குர்ஆன் 41:39 ]

 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (முஸ்லிம் 5047)

குறிப்பு : ரம்ஜான் பண்டிகை என்று அழைக்கப்படும் ஈகை பெருநாள் மற்றும் பக்ரீத் என்று அழைக்கப்படும் தியாக திருநாள் என இரண்டு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள். இப்பண்டிகைகள் கொண்டாட்டங்களாக சொல்வது தொழுகை மற்றும் தர்மம் மட்டுமே.

கிறிஸ்தவம் 


நன்மை செய்வதையும், உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதையும் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் இத்தகைய தியாகங்கள் கடவுளுக்குப் பிரியமானவை. – எபிரெயர் 13:16

யாருக்காவது பொருள் இருந்தால், ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேவைப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் கடவுளின் அன்பு எப்படி இருக்கும்? – 1 யோவான் 3:17

இலவசமாகக் கொடுப்பவர்கள் இன்னும் அதிகமாகப் பெறுகிறார்கள்; மற்றவர்கள் தாங்கள் செலுத்த வேண்டியதைத் தடுத்து நிறுத்தி, இன்னும் ஏழையாகி விடுகிறார்கள். – (நீதிமொழிகள் 11:24)

19 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 22
    9 தாராளமாகக்கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்வதால் அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

    பதிலளிநீக்கு
  2. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் இருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

    (திருக்குர்ஆன் 8:3)

    அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.

    (திருக்குர்ஆன் 22:35)

    தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

    நூல்: முஸ்லிம் (381)

    அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனுக்கு ஒருபோதும் இணைவைத்துவிடக் கூடாது என்று சொன்ன அளவுக்கு ஆரம்பம் முதலே நல்வழியில் செலவழிப்பது பற்றியும் அதிகம் போதிக்கப்பட்டுள்ளது. தமது நபித்துவத்தின் துவக்க காலம் உட்பட எல்லாக் கட்டத்திலும் நபிகளார் தர்மத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    அபூ சுஃப்யான் (ரலி) அறிவித்தார்கள்:

    (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபியவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

    நூல்: புகாரி (5980)

    நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது’ என்றும் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

    நூல்: புகாரி (1429)

    மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

    நூல்: புகாரி (2707)

    ‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்…?’ எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என்றனர். தோழர்கள், ‘அதுவும் முடியவில்லையாயின்’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் இயலாவில்லையாயின்’ என்றதும் ‘நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!’ எனக் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

    நூல்: புகாரி (1445)

    பதிலளிநீக்கு
  3. பொறாமை கொள்வதற்கு அனுமதி

    எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களைப் பார்த்துப் பொறமை கொள்வதோ, பேராசைப் படுவதோ கூடாது. இவ்வாறு போதுமென்ற தன்மையோடு வாழச் சொல்லும் மார்க்கம், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குகிறது. அதிலொன்று தர்மம் எனும் போது அதன் சிறப்பை அறிய முடிகிறது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

    நூல்: புகாரி (73)

    வெளிப்படையாக தர்மம் செய்யலாம்

    தர்மம் செய்வது பற்றி மக்களிடம் சில தவறான கண்ணோட்டங்களும் உள்ளன. பிறருக்குத் தெரியும் வகையில் தர்மம் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள். எப்படிச் செய்தாலும் அல்லாஹ்விடம் நற்கூலி பெறுவதற்காகச் செய்ய வேண்டும். இதன்படி ஒருவர் வெளிப்படையாக தர்ம்ம் செய்யும்போது அவரைப் பார்த்து எவரேனும் தர்மம் செய்தால் அவருக்குக் கிடைப்பது போன்றே இவருக்கும் கூலி கிடைக்கும்.

    அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.

    (திருக்குர்ஆன் 13:22)

    செழிப்பற்ற நிலையிலும் தர்மம்

    இனி தேவையே இல்லை எனும் அளவுக்கு செல்வம் குவிந்த பிறகு, தான தர்மம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை நம்மிடம் இருக்கக் கூடாது. வறுமை, நடுத்தரம், செழிப்பு என்று எல்லா நிலையிலும் தர்மம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

    (திருக்குர்ஆன் 3:134)

    ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தர்மத்தில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, ‘இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

    நூல்: புகாரி (2748)

    பதிலளிநீக்கு
  4. பாவங்களுக்குப் பரிகாரம்

    நமது வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் இருக்கவே செய்யும். அவை அனைத்தும் மன்னிக்கப்படும் நிலையில் படைத்தவனை சந்திக்கும் போதுதான் மறுமை வெற்றி கிடைக்கும். அவ்வாறு நமது பாவக் கறைகளைக் கழுவும் சிறந்த மருந்தாக தர்மம் திகழ்கிறது.

    தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

    (திருக்குர்ஆன் 2:271)

    முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

    (திருக்குர்ஆன் 33:35)

    நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ‘‘ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும்’’ என்றும் நான் விடையளித்தேன்.

    அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

    நூல்: புகாரி (525)

    நேர்ச்சை நிறைவேற்றாதவர்கள், சத்தியம் செய்து முறித்தவர்கள், நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்தவர்கள் போன்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களில் தர்மம் முக்கிய இடம் பிடித்திருப்பதைக் காணலாம். இதுபோன்ற சட்டங்கள் மூலம் நமது தவறுகள் மன்னிக்கப்படுவதற்கு தர்மம் நல்லதொரு வழியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

    நரகத்தை விட்டுத் தடுக்கும் தர்மம்

    தப்பித் தவறியும் நரகத்தில் விழுந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறோம். இத்தகைய மக்களுக்கு நபியவர்கள் சொல்லும் ஒரு முக்கிய அறிவுரை, முடிந்தளவு தர்மம் செய்யுங்கள் என்பதாகும்.

    (மறுமையில்) உங்களில் ஒவ்வொரு நபருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘ஒரு நற்சொல்லைக் கொண்டாவது’ என்று காணப்படுகிறது.

    அறிவிப்பவர்: என அதீ இப்னு ஹாத்திம் (ரலி)

    நூல்: புகாரி (7512)

    நன்மைகளை அள்ளித்தரும் தர்மம்

    நாம் மறுமையில் முழுமையான வெற்றி பெற வேண்டுமெனில், அதிகளவு நன்மைகளை செய்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கற்ற கூலிகளை அள்ளிக் கொள்வதற்குரிய அற்புதமான வழியே தர்மம் செய்வதாகும்.

    தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.

    (திருக்குர்ஆன் 57:18)

    அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

    (திருக்குர்ஆன் 2:276)

    நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும். -பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

    நூல்: புகாரி (7430)

    பதிலளிநீக்கு
  5. மறுமைக்கான முன்னேற்பாடு

    தர்மத்தின் முக்கியதுவத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், தர்மம் என்பது மறுமை வெற்றிக்குரிய முன்னேற்பாடு. இப்படியான தர்மத்தைச் செய்வதற்குரிய சந்தர்ப்பம் நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. இதை மனதில் கொண்டு அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக!

    (திருக்குர்ஆன் 14:31)

    உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான்.

    (திருக்குர்ஆன் 63:10)

    (இப்போதே) தான தர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தம் தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்து செல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி)

    நூல்: புகாரி (7120)

    இம்மையிலே வளம் அதிகரிக்கும்

    தோண்டத் தோண்ட சுரக்கும் மணற்கேணி என்று சொல்வது போல, நாம் தர்மம் செய்யும் காலமெல்லாம் இம்மையிலேயே செல்வ வளம் அதிகரிக்கும். அதற்காக மலக்குமார்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள்.

    தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

    நூல்: முஸ்லிம் (5047)

    ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’ என்று கூறுவார். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

    நூல்: புகாரி (1442)

    கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும்.

    கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அந்த அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.

    இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் இரண்டு அங்கிகள் என்பதற்குப் பதிலாக இரண்டு கவசங்கள் என்றுள்ளது.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

    நூல்: புகாரி (1443, 1444)
    https://eagathuvam.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

    பதிலளிநீக்கு
  6. முதுமொழிக்காஞ்சி 55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை

    தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.

    பதிலளிநீக்கு
  7. முதுமொழிக்காஞ்சி 6:10.

    இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.

    இரப்போர்க்கு - பிச்சையெடுப்பவர்கட்கு
    ஈதலின் - ஒன்று கொடுப்பதை விட

    ஈதலினால் வரும் சிறப்பைவிட வேறு சிறப்பில்லை.

    பதிலளிநீக்கு
  8. செல்வரின் கடமை அறநெறிச்சாரம் பாடல் - 178

    செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
    பல்கிளையும் வாடாமல் பார்த்துண்டு - நல்லவாம்
    தானம் மறவாத தன்மையரேல் அ·து என்பார்
    வானகத்து வைப்பதுஓர் வைப்பு.

    விளக்கவுரை பொருட் செல்வத்தைப் பெற்றவர்கள் சினத்தை அகற்றி காண்பதற்கு எளியராய்ச் சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாதபடி அவர்கட்கும் பகுத்துத் தந்து தாமும் உண்டு இம்மை மறுமைப் பயன்களை அடையச் செய்கின்ற கொடை அறத்தையும் மறவாமல் செய்யும் தன்மை உடையவராயின் அச்செயல் மேல் உலகத்தில் தமக்கு உதவும்படி வைக்கின்ற சேமநிதி என்று சான்றோர் உரைப்பர்.

    தானம் செய்பவரை வானம் வாயில் திறந்து வரவேற்கும் பாடல் - 179

    ஒன்றாக நல்லது உயிர்ஓம்பல் ஆங்குஅதன்பின்
    நன்றுஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் - என்று இரண்டும்
    குன்றாப் புகழோன் வருகஎன்று மேல்உலகம்
    நின்றது வாயில் திறந்து.

    விளக்கவுரை உயிர்களைக் கொல்லாமல் பாதுகாத்தல் என்பது தனக்கு ஒப்பாவது யாதுமின்றி உயர்ந்த அறமாகும்; அதனையடுத்து ஞான நூல்களை ஆராய்ந்து, ஐம்புலன்களும் அடங்கப் பெற்றார்க்கு உணவு முதலியன தந்து, தானும் உண்ணுதல் என்னும் இவ்விரண்டு செயல்களாலும் நிறைந்த புகழை உடையவனை 'வருக' என வாயிலைத் திறந்து அவனது வருகையை எதிர்நோக்கி, மேல் உலகமானது காத்து நிற்கும்.

    பதிலளிநீக்கு

  9. மறுமைக்கு ஏற்றது ஈகையே அறநெறிச்சாரம் பாடல் - 181

    ஈவரின் இல்லை உலோபர் உலகத்தில்
    யாவரும் கொள்ளாத வாறுஎண்ணி - மேவஅரிய
    மற்றுஉடம்பு கொள்ளும் பொழுதுஓர்ந்து தம்உடைமை
    பற்று விடுதல் இலர்.

    விளக்கவுரை தம் பொருளை உலகில் எவரும் கவராதவாறு காக்க வல்லதும், அப்பொருளை அடைவதற்கு அரிய மறு பிறவியைத் தாம் அடையும் காலத்தும் அதனைத் தம்பால் தரவல்லதும் அறமே என்பதனை ஆராய்ந்து அறிந்து, அப்பொருளின்மீது கொண்ட பற்று நீங்காதவராய் ஈதலால், இரப்பார்க்கு அவர் வேண்டுவதை ஈவார் போன்ற கடும் பற்றுள்ளம் உடையவர் வேறு எவரும் இல்லை.

    பதிலளிநீக்கு

  10. MAR
    24
    ஏலாதி 76 Elati 76
    ஒல்லுவ, நல்ல உருவ,வேற் கண்ணினாய்! வல்லுவ நாடி, வகையினால், சொல்லின், கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்; அடையாத் தவத்தினால் வீடு. 76

    ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்
    வல்லுவ நாடி வகையினால் - சொல்லின்
    கொடையினால் போகம் சுவர்க்கம் தவத்தால்
    அடையாத் தவத்தினால் வீடு. 76

    பொருந்தும் வகையால் நல்ல உருவமும் வேல் போன்ற கண்ணும் உடையவளே!

    வல்லமை உடையனவற்றை நாடி வகைப்படுத்திச் சொல்லப்போனால்,
    கொடை வழங்குவதால் மனத்துக்கு இன்பம் கிடைக்கும்.
    தவம் செய்வதால் மேலுலகம் கிடைக்கும்.
    இடைவிடாத் தவத்தினால் வீடுபேறு கிடைக்கும்.

    https://vaiyan.blogspot.com/2017/03/76-elati-76.html?sc=1662797009061

    பதிலளிநீக்கு
  11. கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும்
    பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும்
    ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால்
    வீழப்படுவார், விரைந்து. (ஏலாதி 36)

    பொருள்: நொண்டிகளுக்கும், குருடர்களுக்கும், ஊமைகளுக்கும், எவரையும் தம்பக்கம் துணையாக இல்லாதவர்களுக்கும், பதிந்த நூலறிவில்லாதவர்க்கும் நீரினாற் சமைக்கப்பட் டாழ்ந்த உணவை விரும்பி யளித்தவர், தேவர்களால் விரைவாக விரும்பப்படுவார்.

    கருத்து: முடவர் முதலாயினாருக்கு வயிறு நிறைய உணவு படைத்தல் வேண்டும்.

    பதிலளிநீக்கு

  12. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்
    (அதிகாரம்:ஈகை குறள் எண்:225)

    பொழிப்பு (மு வரதராசன்): தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

    பதிலளிநீக்கு
  13. லூக்கா 6:38 ESV / 6 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    கொடுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நல்ல அளவு, அழுத்தி, ஒன்றாக அசைத்து, ஓடி, உங்கள் மடியில் வைக்கப்படும். ஏனெனில், நீங்கள் பயன்படுத்தும் அளவின்படியே அது உங்களுக்கும் அளக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  14. மூதுரை பாடல் 28 :
    சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
    கந்தம் குறை படாது; ஆதலால்–தம்தம்
    தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
    மனம் சிறியர் ஆவரோ மற்று?

    பொருள்:

    தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம்
    குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த
    அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம்
    மாறுவதில்லை

    பதிலளிநீக்கு
  15. தானமும் தவமும் தான்செயல் அரிது
    தானமும் தவமும் தான்செய்வ ராயின்
    வானவர் நாடு வழிதிறந் திடுமே. - அவ்வையாரின் அரிது

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  16. "தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள். அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத்தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள். மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல) வில்லையென்றால்?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள். "இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.

    அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), புஹாரி -1445 & 6022.

    https://sites.google.com/site/mrlalbajilal/a-2

    பதிலளிநீக்கு
  17. பெரியார் பேசுகிறார்

    18. தர்மம் செய்வது அக்கிரமம்; அயோக்கியத்தனம்

    Periyarதர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

    எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

    அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

    அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
    செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

    இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
    ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

    எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

    இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

    ‘குடி அரசு' இதழின் தலையங்கம் 21.4.1945
    https://www.keetru.com/rebel/periyar/18.php

    பதிலளிநீக்கு
  18. எவர் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாது இருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த (இறப்புக்கு பிந்தைய மறுமை) நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக்காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இதுதான் நீங்கள் உங்களுக்காக சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்துப்பாருங்கள்" (என்றும் கூறப்படும்). (அல்குர்ஆன் 9:34 & 35)

    பதிலளிநீக்கு
  19. யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

    திருக்குர்ஆன் 9:60

    பதிலளிநீக்கு